01) முன்னுரை
01) முன்னுரை
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக வாழ்க்கை பல கவர்ச்சிகரமான அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. நிலையில்லாத உலக வாழ்க்கையின் இன்பத்தில் மூழ்கி நிலையான மறுமை வாழ்க்கையை பலர் மறந்து விடுகின்றார்கள் இதனால் அவர்கள் நன்மையான காரியங்களை விட்டு விலகிச் செல்வதோடு தீமையின்பால் விரைந்து கொண்டிருக்கின்றார்கள்.
நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் தீமைகளை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறையச்சத்தை நினைவூட்டும் காரியங்களை அறிந்து கொள்ளாததால் இத்தகைய நிலை இவர்களிடத்தில் நீடிகிறது.
தடம் புரண்டு விடாமல் வெற்றிகரமான வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மரணத்தையும் அதற்கு பின்னால் இருக்கின்ற வாழ்க்கையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு; உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அல்லாஹ்வின் வேதனைக்கு அஞ்சுவது அவசியமென்றும் வேதனைக்கு அஞ்சுவது நல்லவர்களின் பண்பாக இருக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள். அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.(அல்குர்ஆன்: 70:27) ➚,28)
இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவை (இறைவனை நெருங்குவதற்கான வழியைத்) தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
மண்ணறையில் நடக்கின்ற நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெரிவுபடுத்தி உள்ளார்கள். இவற்றை நாம் தெரிந்து கொண்டால் இறைவனுடைய பயம் கண்டிப்பாக நமக்கு ஏற்படும். மண்ணறை வாழ்வில் தீயவர்களின் நிலையையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சீர்படுத்துவதே இந்நூலின் நோக்கம்.
S. அப்பாஸ் அலி MISC