01) பிரார்த்தனையைப் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்தனை
மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்

(ஏசு இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!

(அல்குர்ஆன்: 40:14)

அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள்! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

(அல்குர்ஆன்: 40:65)

படைத்தவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்யுங்கள்

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்”(என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன்: 2:186)

பிரார்த்தனை செய்யாதவன் பெருமையடிப்பவன்

“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன்: 40:60)

மிக சமீபத்தில் அல்லாஹ் இருக்கின்றான்

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

(அல்குர்ஆன்: 50:16)

அச்சத்துடனும் பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

(அல்குர்ஆன்: 55:56)

நபிமொழிகள் : பிரார்த்தனையே வணக்கம்

பிரார்த்தனையே வணக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்: எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன்: 40:60) என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி நூல் : (திர்மிதீ: 2895, 3170, 3294),(இப்னு மாஜா: 3816)

கண்ணியமிக்க வணக்கம்

அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வதை விட மிக கண்ணியம் வாய்ந்தது எதுவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : (திர்மிதீ: 3292), (இப்னு மாஜா: 3819), (அஹ்மத்: 8393), அல்அதபுல் முஃப்ரத் (712) (ஹாகிம்: 1801), தப்ரானீ அவ்ஸத், பாகம்: 3, பக்கம்: 73, ஷுஅபுல் ஈமான் பைஹகீ பாகம் : 2, பக்கம் : 38, இப்னுஹிப்பான், பாகம் : 3, பக்கம்: 58, முஸ்னத் ஷிஹாப் பாகம்: 2, பக்கம்: 214

பிரார்த்தனை செய்யாதவனின் மீது கோபம்?

அல்லாஹ்விடம் கேட்காதவர் மீது அவன் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : (திர்மிதீ: 3295), (இப்னு மாஜா: 3817), (அஹ்மத்: 9342, 7782)

இந்த செய்தியில் இடம்பெறும் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஸாலிஹ் பலவீனமானவராவார்.