01) பதிப்புரை

நூல்கள்: ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் எனும் கடமை அமைந்துள்ளது.

ஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன.

ஜகாத் கட்டாயக் கடமை என்பதில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லாவிட்டாலும் ஜகாத் உட்பிரிவுச் சட்டங்கள் பலவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

* எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்?

* தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஜகாத் கடமையில் விதிவிலக்கு உள்ளதா?

* குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை ஜகாத்திலிருந்து விதிவிலக்கு பெறுமா?

* அழுகும் பொருட்கள் மற்றும் இதர விளை பொருட்களில் எவற்றுக்கு ஜகாத் உண்டு?

என்பன போன்ற பல்வேறு சட்டங்களில் அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவை திறந்த மனதுடன் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுக் கருத்துடையவர்களை இஸ்லாத்தின் விரோதிகளாகப் பார்க்கும் மனப் போக்கு இருந்ததில்லை.

ஆனால் ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வத்துக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்று தக்க ஆதாரங்களுடன் நாம் விளக்கும் போது மட்டும் இந்தப் பார்வை அதிகமானவர்களுக்கு இல்லை.

எனவே தான் இது குறித்து விளக்கம் அளிக்கும் நோக்குடன் இந்நூல் வெளியிடப்படுகிறது,

இதில் சொல்லப்படும் செய்திகளை திறந்த மனதுடன் வாசித்தால் நாம் சொல்லும் கருத்து மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்