01) முன்னுரை
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச்
சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனமற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது.
பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்தும் போது அவர்களின் நலம் நாடி,பொதுநல சேவை செய்யக்கூடிய சமூக ஊழியனாகவும் இருக்க வேண்டிய கடமை ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கிறது.
அனைவரையும் சார்ந்தும் இருக்க வேண்டும், அனைவருக்கும் தன்னளவில் ஒத்துழைப்பும் உதவிகளையும் வழங்குபவனாக இருக்க வேண்டும் என்றால் அவன் நல்ல குணம் படைத்தவனாக இருக்க வேண்டும்.அது மட்டுமில்லாமல் சமூகத்தில் அவன் சந்திக்கின்ற பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்ற வல்லவனாகவும் இருக்க வேண்டும்.
ஒரு நாணயத்தின் இரு பக்கத்தைப் போல நல்லவன், வல்லவன் என்கிற இரு தன்மைகளையும்
உள்ளடக்கியவனாக வாழ்ந்தால் தான் சமூகத்தில் அவனால் காலத்தைக் கடத்த முடியும்.
நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்க்கை தான் நமக்குப் பாடமும்
படிப்பினையுமாகும்.
இப்பொழுது அந்த முன்மாதிரியான வாழ்க்கையை எங்கிருந்து தேடுவது? யாரிடமிருந்து கற்றுக்கொள்வது? கடந்த கால ஆட்சியாளர்கள், ஆன்மிகவாதிகள், சீர்திருத்தச் செம்மல்கள், படித்த பட்டதாரிகள்,மாமேதைகள், அறிவியலாளர்கள் என்று பலதரப்பட்ட மக்களின் வரலாற்றை ஆய்வு செய்கிற பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பதைப் பார்க்க முடிகிறது.அதே நேரத்தில் ஒருவர் அறிவியலில் மிகப்பெரிய தேர்ச்சி உடையவராக இருந்தாலும் அவர் ஒரு தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவராக இல்லை.
ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் திறமைசாலியாக இருந்தாலும் தனது குடும்பத்தில் ஒரு சிறந்த தலைவனாக வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு விடை இல்லை. குடும்பத்தைக் கவனிப்பவராக இருக்கும் ஒருவர் ஆன்மீகவாதியாக, சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக வாழ்ந்தாரா? என்ற கேள்வி அவரை நோக்கி வருகிறது. ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கிறார் என்று வருகிறபோது அவர் சிறந்த ஒரு குடும்பத்தை வழி நடத்தினாரா? பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பொதுநல சேவைகள் புரிந்தாரா? என்ற கேள்வி அவரை நோக்கி வருகிறது. இப்படி ஒரு துறையில் கரை கண்டவர்கள் பல துறைகளைக் கண்டும் காணாதவர்களாக இருந்துள்ளார்கள். ஆனால் குடும்பம், ஆன்மீகம், ஆட்சி என அனைத்துத் துறைகளிலும் கரை கண்டு, அகில உலகத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்து விளங்கியவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தேடுபவர்களுக்கு விடைதான் முஹம்மது நபிகள் நாயகம் ஆவார்கள்.
இதை முஸ்லிம்கள் உயர்த்திச் சொன்னாலும் முஸ்லிம்கள் தங்கள் தூதரை முன்னிலைப் படுத்துவதற்காகச் சொல்கிறார்களோ என்ற ஒரு பார்வை பிற மத நண்பர்களுக்குத் தோன்றலாம்.
ஆனால் இதை நாம் சொல்வதை விட மைக்கேல் ஹார்ட் எனும் கிறிஸ்தவ அறிஞர் சொல்கிறார் இதோ
பாருங்கள்! சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.
இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து ‘த ஹன்ட்ரட்’ என்ற நூலை மைக்கேல் ஹார்ட் எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது ‘நூறு பேர்’ என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட ‘மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதலிடம் நபிகள் நாயகத்துக்குத் தான்’ என்று குறிப்பிடுகிறார்.நபிகளாரை முதன்மைப்படுத்தியமைக்கு அவர் கூறும் விளக்கம் இதோ!
இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில்
முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும் மற்றும் சிலருக்கு “ஏன் அப்படி?” என்று வினாவும் எழலாம்.
ஆனால் ஆன்மீகம், அரசியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கி, அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார். அவர் உயிர் நீத்து பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவரது தாக்கம் சக்திமிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. உலகத்தில் முஸ்லிம்களை விடக் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ இரு மடங்கினராக இருந்தாலும் கூட, ஏசு
நாதரை விட முஹம்மது நபியவர்களை முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது எடுத்த எடுப்பில்
புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை
உருவாக்கியதில் முதன்மையானவரும் அதன் பால் மக்கள் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரும் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான பவுல் தான். ஆனால் இஸ்லாத்தின் இறைமையியல் (ஜிபிணிளிலிளிநிசீ), அதன் அறநெறி, ஒழுக்கவியல் அனைத்தையும் எடுத்துரைத்தவர் முஹம்மது நபிதான். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்டாக அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனிதக் குர்ஆனின் போதகரும் அவர்தான்.
முஹம்மது நபியின் வாழ்நாளிலேயே இறைச்செய்திகள் பதிவுச் செய்யப்பட்டன. நபி அவர்கள் இறந்து சில ஆண்டில் அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துக்களும் போதனைகளும் கொள்கைகளும் குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) கிடைக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்குக் குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி ஏற்படுத்திய தாக்கம், மிகப்பெரும் அளவிலானதாகும்.
கிறிஸ்தவத்தின் மீது ஏசுநாதரும் தூய பவுலும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய தாக்கத்தை விட முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம்.
சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
மேலும், ஏசுநாதரைப் போன்று அல்லாமல் முஹம்மது நபி ஆன்மீகத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்குப் பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார், எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிக்கத் தலைவராக இடம் பெறலாம். இவ்வாறு அறிஞர் மைக்கேல் ஹார்ட் குறிப்பிடுகிறார்.
உலகளாவிய அளவில் 175 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாக முஹம்மது நபி அவர்களை நேசித்துக் கொண்டிருந்தாலும், அவர்களது ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை, அழகிய குடும்ப வாழ்க்கை, அதிலிருந்து உலகத்திற்கு அவர் எடுத்துச் சொன்ன போதனைகள், அதனால் ஏற்பட்ட எழுச்சி, புரட்சிகள், அதை 14 நூற்றாண்டுகளாகப் பின்பற்றுகின்ற தலைமுறையினர் இவற்றை எல்லாம் பார்த்து மைக்கேல் ஹார்ட் போன்ற பல கோடிக்கணக்கான மக்கள் முஹம்மது நபி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை உலகத்திற்குப் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கின்றது.
புரட்சி மிக்க, புத்துணர்ச்சி மிக்க ஒரு தலைமுறையினரை உருவாக்கிட முஹம்மது நபியவர்களின் ஆன்மீகத் தலைமை பற்றியும் ஆட்சித் தலைமை பற்றியும் குடும்ப வாழ்வைப் பற்றியும் உலகத்திற்குச் சொல்ல வேண்டிய ஒரு சில முக்கியக் குறிப்புகளை இடம் பெறச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.