ஸலாம் கூறுவதன் சிறப்பு

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து ஸலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும்.

யார் யாருக்கு சலாம்

திருமண வீடுகளில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் கூறலாம். இரு தரப்பினருக்கும் நிம்மதி அவசியமானது.

காலையிலும் கூறலாம். மாலையிலும் கூறலாம். இரவிலும் கூறலாம்.

பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் கூறலாம்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளுக்கும், நோயாளிகள் நோயற்றவர்களுக்கும் கூறலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம்.

எந்தவிதமான கேவலமோ, அவமரியாதையோ ஏற்படாமல் எல்லோருடைய மரியாதையையும் பேணும் சொல்லாக இந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொல் அமைந்துள்ளது.

இஸ்லாத்தில் சிறந்தது:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ ، وَعَلَى مَنْ لَمْ تَعْرِفْ»

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி),(புகாரி: 6236)

عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ: هَذَا مَا حَدَّثَنَا بِهِ أَبُو هُرَيْرَةَ،
عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلَقَ اللهُ عَزَّ وَجَلَّ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ النَّفَرِ، وَهُمْ نَفَرٌ مِنَ الْمَلَائِكَةِ جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُجِيبُونَكَ، فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، قَالَ: فَذَهَبَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ، قَالَ فَزَادُوهُ: وَرَحْمَةُ اللهِ، قَالَ: فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ بَعْدَهُ حَتَّى الْآنَ

”இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 5463)

அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுதல்

அல்லாஹ் கூறுகிறான்:

وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا۟ بِأَحْسَنَ مِنْهَآ أَوْ رُدُّوهَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَسِيبًا

“உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்”

(அல்குர்ஆன்: 4:86)➚

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்முக்கு செய்ய வேண்டிய கடமை
أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை:

  1. ஸலாமுக்குப் பதிலுரைப்பது.
  2. நோயாளியை நலம் விசாரிப்பது.
  3. ஜனாஷாவை பின் தொடர்வது.
  4. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது.
  5. தும்முபவருக்கு பதிலுரைப்பது ஆகியவை ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),(புகாரி: 1240)

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு:
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»

”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்‎” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹசைன் (ரலி),(அபூதாவூத்: 5195)

‘ஸலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்:
قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ ، وَتَشْمِيتِ الْعَاطِسِ ، وَإِبْرَارِ الْقَسَمِ ، وَنَصْرِ الْمَظْلُومِ ، وَإِفْشَاءِ السَّلَامِ ، وَإِجَابَةِ الدَّاعِي ، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ ، وَعَنْ آنِيَةِ الْفِضَّةِ ، وَعَنِ الْمَيَاثِرِ ، وَالْقَسِّيَّةِ ، وَالْاسْتَبْرَقِ ، وَالدِّيبَاجِ .

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி),(புகாரி: 5175)

வீடுகளில் நுழையும் முன் ஸலாம் கூறுவதன் அவசியம்:

அல்லாஹ் கூறுகிறான்:

فَإِذَا دَخَلْتُم بُيُوتًا فَسَلِّمُوا۟ عَلَىٰٓ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ ٱللَّهِ مُبَـٰرَكَةً طَيِّبَةً ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

“நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.

(அல்குர்ஆன்: 24:61)➚

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا۟ وَتُسَلِّمُوا۟ عَلَىٰٓ أَهْلِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

(அல்குர்ஆன்: 24:27)➚

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا»

”நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 6244)

ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்பவரே சிறந்தவராவார்
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوْلَى النَّاسِ بِاللَّهِ مَنْ بَدَأَهُمْ بِالسَّلَامِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதல் ஸலாம் கூறுபவரே ஆவார்”

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),(அபூதாவூத்: 4522)

மார்க்க ரீதியான எந்தக் காரணமுமின்றி (ஒருவரிடம்) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது தடை செய்யப்பட்டதாகும்.

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர்தான் என்று அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5003)

عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ، فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ، فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدِ اشْتَرَكَا فِي الْأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْإِثْمِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

மூன்று நாட்கள் கடந்துவிட்டால், அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் கூறவேண்டும். அவரும் பதில் ஸலாம் கூறிவிட்டால் இருவரும் நன்மையில் சமமாகிவிடுவார்கள். அவர் பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்தைச் செய்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (அபூதாவூத்: 4912)

சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தல்
عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ
قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே”

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),(முஸ்லிம்: 5122)

ஸலாம் கூறுவதின் முறைகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதல்) ஸலாம் சொல்லட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 6231)

சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்
عَنْ ثَابِتٍ البُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
«أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ» وَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»

அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்),(புகாரி: 6247)

மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: –

இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.