ஸலவாத்து

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

ஸலவாத்

ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வாசலை அடைக்கின்றார்கள்.

”கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 3445)

நபிகளாருக்காக செய்யும் ஸலாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன்: 33:56)➚

நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி),(புகாரி: 4797)

”எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது?” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக(அஹ்மத்: 16455) ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.(நஸாயீ: 2728)

அருள்மிகு ஸலவாத்தும், அல்லாஹ்வின் அருளும்

”யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ! அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 577)

எடுத்துக் காட்டப்படும் ஸலவாத்

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே, அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது,

”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,(அபூதாவூத்: 883)

”நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),(நஸாயீ: 1265)

ஆகவே, நபிகள் நாயகத்திற்காக அதிகதிகமாக ஸலவாத்தை பரப்ப வேண்டும். அவ்வாறு நபிகளாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அருள் வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது அதற்கு பதிலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்காக மறுமையில் பரிந்துரை செய்வார்கள்.