ஸகாத் கொடுப்போம் – 1

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

முன்னுரை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இந்த தொடர் உரையில்,

1. ஸகாத் கட்டாயக் கடமை

2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள்

3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம்.

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது.

அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான்.

ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதற்கான ஆதாரங்களைக் காண்போம். இஸ்லாத்தின் ஒரு தூண்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலை நிறுத்துவது.
3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).(புகாரி: 8)

இறை நம்பிக்கையின் அடையாளம்

ஒருவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்றான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று ஸகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஸகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்கல் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 7556)

கட்டாயக் கடமை

 

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:60)

இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் “இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

(அல்குர்ஆன்: 99:5)

நபியவர்களின் உபதேசம்

ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 1395)

ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மம் ஸகாத் மட்டும் தான். இதனை நிறைவேற்றாவிட்டால் அதற்குரிய தண்டனையை நாம் மறுமையில் அனுபவித்தாக வேண்டும். ஏனைய தான தர்மங்கள் நாம் நம்முடைய செல்வத்திலிருந்து விரும்பிச் செய்பவையாகும். செய்தால் நமக்கு இறையருள் அதிகம் கிடைக்கும். செய்யாவிட்டால் தண்டனை கிடைக்காது.

ஆனால் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டனை உண்டு. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸகாத் என்பது கட்டாய கடமை

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள்.

அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள்.

அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி),(புகாரி: 46)

ஸகாத் வழங்காதவர்களுடன் போர் தொடுத்தல்

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் ஸகாத் வழங்க மறுப்பவர்களிடம் போரிட்டாவது ஸகாத்தைப் பெற வேண்டியது ஆட்சியாளரின் கடமையாகும். ஒருவன் அல்லாஹ்வை நம்புகிறேன் என்று வாயால் மொழிந்த பிறகு தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் நிறைவேற்றும் போது தான் வெளிப்படையில் அவனை ஒரு முஸ்லிம் என்று இஸ்லாமிய அரசாங்கம் தீர்மானிக்கும்.

வெளிப்படையில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் நிறைவேற்றுபவர்கள் மீது போர் தொடுப்பதும், அவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதும் மாபெரும் குற்றமாகும். பின்வரும் வசனம் மற்றும் ஹதீஸ்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 9:5)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காத வரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),(புகாரி: 25)

நபிவழியை நிலைநாட்டிய அபூபக்ர்

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு சிலர் ஸகாத்தை மறுத்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்காக அவர்களுடன் போர் தொடுத்தார்கள். இது நபிவழியின் அடிப்படையில் மிகச் சரியான நடவடிக்கையாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்; தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்றார்கள்.

(புகாரி: 1400)

ஸகாத்திற்காகவே செல்வம் தரப்படுகிறது

 

وَالَّذِيْنَ فِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌ‏ لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِ‏

நாம் சம்பாதிக்கும் செல்வம் என்பது முழுவதுமே நமக்குரியதில்லை. நம்முடைய தேவைக்கும் அதிகமாகத் தான் இறைவன் செல்வத்தைத் தருகிறான். எனவே இறைவன் நமக்குத் தரும் செல்வத்தில் ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளை நாம் முறையாக வழங்கி விட வேண்டும். அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.

(அல்குர்ஆன்: 70:24), 25)

இறைவன் செல்வத்தை நமக்கு வழங்கியிருப்பதே ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் என்பதைப் பின்வரும் நபிமொழியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அபூ வாகிதில் லைஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மீது இறைச் செய்தி அருளப் பெற்ற (கால கட்டத்தில்) நாங்கள் அவர்களிடம் வருபவர்களாக இருந்தோம். அவர்கள் அதனை எங்களுக்கு அறிவிப்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்:

கண்ணியமானவனும், யாவற்றையும் மிகைத்தவனுமாகிய அல்லாஹ் கூறினான்: நான் செல்வத்தை வழங்கியிருப்பதே தொழுகையை நிலை நாட்டுவதற்காகவும், ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகவும் தான். ஆதமுடைய மகனிற்கு (செல்வத்தால்) ஒரு கணவாய் இருந்தாலும் அவன் இரண்டாவதும் தனக்கு இருப்பதற்கு ஆசைப்படுவான். அவனுக்கு இரண்டு கணவாய்கள் இருந்தால் அவன் அந்த இரண்டுடன் மூன்றாவதும் தனக்கு ஆவதற்கு ஆசைப்படுவான். ஆதமுடைய மகனின் வயிற்றை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. பிறகு யார் பாவ மன்னிப்புக் கோரி மீள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்குகிறான்.

(அஹ்மத்: 20900)

மலை உச்சியிலிருந்தாலும் ஸகாத் கொடுக்க வேண்டும்

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் அரசாங்கமே முஸ்லிம்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து விடும். ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடத்தில் இருந்தாலும், ஸகாத்தை வசூலிப்பதற்கு யாருமே இல்லையென்றாலும் அவனே முன்வந்து ஏழைகளுக்குரிய ஸகாத்தை வழங்கிவிட வேண்டும். இதிலிருந்து இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டில் வாழ்பவர்களுக்கும் ஸகாத் கடமை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். மலை உச்சியில் இருந்தால் கூட ஸகாத்தை கட்டாயம் நிறைவேற்றிவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும் வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 3838)

ஜகாத் தொடர்பாக இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன.  அவைகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!