ஷாகுல்ஹமீது மவ்லிது ஓர் ஆய்வு
தமிழக முஸ்லிம்களிலுள்ள மவ்லிது அபிமானிகளின் இதயத்தில் மூன்றாவது இடம் ஷாகுல் ஹமீது மவ்லிதுக்கு உள்ளது. நாகூரிலும் இலங்கையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற அப்துல் காதிர் எனும் ஷாகுல் ஹமீதைப் புகழ்ந்து எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த மவ்லிதிலும் ஏராளமான அபத்தங்கள் உள்ளன.
சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போலவே இஸ்லாத்திற்கு முரணான ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதிலும் காணப்படுகின்றன.
இதிலுள்ள அபத்தங்களை அறியாமல் அப்பாவி முஸ்லிம்கள் இதை பக்திப் பரவசத்துடன் ஓதி வருகின்றனர். எனவே இந்த மவ்லிதையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆராய்ந்து அம்பலப்படுத்தவே இந்தக் கட்டுரையை வாசகர்கள் முன்வைக்கின்றோம்.
ஷாகுல் ஹமீதைப் புகழ்வதாக எண்ணிக் கொண்டு அவரை இழிவுபடுத்துகின்ற ஏராளமான கதைகள், கப்ஸாக்கள் இந்த மவ்லிதில் உள்ளன. மேலும் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கருத்துக்களும் இடையிடையே புகுத்தப்பட்டுள்ளன.
இந்த மவ்லிதில் கூறப்பட்டுள்ள கதைகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
மலட்டுத் தன்மையுடைய நூருத்தீன் என்பவருக்கு வெற்றிலை எச்சிலால் நான்கு ஆண்மக்களை அவர் வழங்கியது அவரது அற்புதங்களில் ஒன்றாகும். அவர்களில் யூசுப் என்ற தலைமகனை தன்னிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்தனர்.
இது ஷாகுல் ஹமீது மவ்லிதில் உள்ள ஒரு கதை.
இந்தக் கதை குறித்து, மவ்லிதின் ஹிகாயத் எனும் உரைநடைப் பகுதியில் கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஷாஹுல் ஹமீது அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நாடிப் புறப்பட்டு லாகூர் எனும் ஊரை அடைந்தார்கள். அங்கே அவர்களை தலைசிறந்த முஃப்தி பெரியார் நூருத்தீன் அவர்கள் சந்தித்தார்கள். ஷாஹுல் ஹமீது அவர்களிடம் தமக்கு ஒரு குழந்தை வேண்டுமென வேண்டினார்கள். அதற்கு ஷாஹுல் ஹமீது அவர்கள் “காலம் சென்ற எனது மூத்த சகோதரர் யூசுப் அவர்களின் பெயரை முதல் குழந்தைக்குச் சூட்டி மறுப்போ கவலையோ இன்றி அக்குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குழந்தையை எனது மகனாக நான் ஆக்கிக் கொள்வேன். அக்குழந்தை எனக்குக் காணிக்கையாக வழங்கப்படும் அனைத்துக்கும் வாரிசாகத் திகழ்வார்” என்று நிபந்தனையிட்டார்கள். நூருத்தீன் இந்த நிபந்தனையை ஒப்புக் கொண்டபின் வெற்றிலை எச்சிலில் சிறிதளவு அவருக்குக் கொடுத்தார்கள். ஷாஹுல் ஹமீதின் மகிமையால் அல்லாஹ் அவருக்கு நான்கு ஆண்மக்களையும் பெண்மக்களையும் அளித்தான்.
இது ஹிகாயத் எனும் உரைநடைப் பகுதியில் கூறப்பட்டுள்ள கதை விளக்கம்.
இதில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்று பார்ப்போம்.
லாகூரில் ஷைக் நூருத்தீன் என்பவர் முப்தியாக இருந்தாராம். அவருக்குக் குழந்தை இல்லாததால் ஷாகுல் ஹமீதிடம் குழந்தை வேண்டினாராம்.
மாபெரும் முப்தியாக இருந்தவருக்கு யாரிடத்தில் குழந்தையைக் கேட்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லை. பிள்ளைப் பேறு பாக்கியத்தை எவருக்காவது யாராலும் கொடுக்க முடியுமா? இதுபற்றிக் குர்ஆன் கூறுவதென்ன?
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன்: 42:49) ➚, 50
குழந்தைகளை வழங்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்று இங்கே தெளிவுபடுத்துகிறான்.
குழந்தை வழங்கும் ஆற்றலை அல்லாஹ் யாருக்கேனும் வழங்குவதாக இருந்தால் நிச்சயமாக அந்த ஆற்றலை நபிமார்களுக்கு வழங்கியிருப்பான். ஆனால் எத்தனையோ நபிமார்கள் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்து இறைவனிடமே இறைஞ்சி அந்தப் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். தமக்கே கூட அவர்களால் குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். “என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” என்றார்.
தள்ளாத வயது வரை குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தும் ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்காக ஒரு வாரிசை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. படைத்த இறைவனிடமே இறைஞ்சியுள்ளனர்.
3:38, 37:100, 21:89,90 ஆகிய வசனங்களிலும் ஸக்கரியா (அலை) அவர்கள் குழந்தை பாக்கியத்துக்காக இறைவனிடம் இறைஞ்சியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.
இறைவனுக்கு மட்டுமே உரிய இந்தத் தனி அதிகாரம் ஒரு மனிதருக்கு உண்டு என்று ஒரு முப்தி நம்பினாராம். ஷாகுல் ஹமீதிடம் முறையிட்டாராம். இதை அறிவுடைய எவரேனும் நம்ப முடியுமா? இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணாக, மனிதனைக் கடவுளாக்கியவர் முப்தியாக இருக்க முடியுமா?
முப்திக்குத் தான் மார்க்கத்தைப் பற்றி அறிவு இல்லை. போகட்டும்! போலி முப்தியாக இருந்திருப்பார் என்று வைத்துக் கொள்வோம்.
இறைவனின் நெருக்கத்தைப் பெற்ற மகான் ஷாகுல் ஹமீது, குர்ஆனைப் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைகளைப் பற்றியும் அறிந்தவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
“முப்தியே! மனிதனிடம் குழந்தை பாக்கியத்தைக் கேட்க முடியாது. எந்த மனிதனுக்கும் எந்த மனிதனும் இத்தகைய பாக்கியத்தைக் கொடுக்க முடியாது” என்று போதனை செய்திருக்க வேண்டாமா? நாம் எடுத்துக் காட்டிய வசனங்களை அந்தப் போலி முப்திக்கு எடுத்துக் காட்டி இறைவனிடம் இறைஞ்சுமாறு வழிகாட்டியிருக்கலாம் அல்லவா?
தாமே இறைவன் போலவும், தாம் நினைத்தவருக்கு நினைத்த போது குழந்தையைக் கொடுக்க முடியும் என்பது போன்றும் ஒரு பெரியார் நடந்திருப்பாரா? இப்படி ஏராளமான கேள்விகளை இந்த மவ்லிதுப் பாடல் எழுப்புகின்றது.
அது மட்டுமின்றி முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்கிறார். தனது மூத்த சகோதரர் பெயரை முதல் ஆண் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்.
உண்மையிலேயே ஷாகுல் ஹமீது குழந்தை வரம் கொடுக்கும் ஆற்றலுடையவர் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம்.
அனைத்தையும் துறந்தவர் எனக் கூறப்படும் ஞானி ஒருவர் தமது சகோதரனின் பெயரைத் தான் அக்குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் ஒரு வியாபாரியின் பேரம் பேசும் மனப்பான்மை தான் வெளிப்படுகின்றதே தவிர ஒரு ஞானியின் மனப்பக்குவம் அதில் அறவே இல்லை.
மேலும் முப்தி நூருத்தீன் தனக்காக ஒரு குழந்தை வேண்டும் என்று தான் கோரினார். இவரோ குழந்தையையும் கொடுத்து விட்டு அதைத் தனக்கு மகனாகத் தந்து விட வேண்டும் என்கிறார். இங்கேயும் வியாபாரியைப் போன்று பேரம் பேசுகின்றார்.
குழந்தை வேண்டுமென்றால் இவர் இஸ்லாம் காட்டும் வழியில் மணமுடித்து குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர இன்னொருவரின் பிள்ளையைத் தன் பிள்ளையாக்குவது என்ன நியாயம்?
வளர்ப்பு மகன் என்ற போலித் தத்துவத்தை இஸ்லாம் முழுமையாகத் தகர்த்தெறிந்து விட்டது என்ற விபரம் கூடத் தெரியாதவராக ஷாகுல் ஹமீது இந்த மவ்லிதில் சித்தரிக்கப்படுகிறார்.
உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை.
அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது.
என்றெல்லாம் இறைவன் தன் திருமறையில் தெளிவாகப் பிரகடனம் செய்கிறான்.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் யாருக்கோ பிறந்த குழந்தையைத் தனது குழந்தை என்று உரிமை கொண்டாடுகிறார்.
ஒருவர் யாருடைய குழந்தையையோ எடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை வளர்த்தவரின் வாரிசாக முடியாது. இதுவும் இஸ்லாத்தின் கருத்து வேறுபாடில்லாத சட்டங்களில் ஒன்று.
இவருக்குக் கிடைக்கும் காணிக்கைகளுக்கு யாருடைய குழந்தையையோ வாரிசு என்று கூறுகிறார். குர்ஆன் பற்றிய அறியாமையை வெளிப்படுத்துகிறார்.
மேலும் முப்தி நூருத்தீன் அறியாமையினால் இவரிடம் வந்து குழந்தையைக் கேட்கிறார். இவர் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லாஹ்விடம் அவருக்காக துஆச் செய்திருக்க வேண்டும்.
இந்த வழியையெல்லாம் அவர் எண்ணிப் பார்க்கவில்லை. வெற்றிலையை மென்று அதை முப்தியிடம் கொடுக்கிறார். அதாவது குடுகுடுப்பைக்காரர்கள், மாயாஜாலப் பேர்வழிகள் ஆகியோரின் வழிமுறையை இவர் கடைப்பிடிக்கின்றார்.
இப்படி ஏராளமான அபத்தங்கள்! ஷாகுல் ஹமீதைப் புகழ்வதாக எண்ணிக் கொண்டு அவரை இகழும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது.
ஒரு பிள்ளை! இரு தந்தையர்!
ஷைக் நூருத்தீன் என்பவருக்கு வெற்றிலையை மென்றுக் கொடுத்து பிள்ளை வரம் கொடுத்த அந்தக் கதையின் தொடராக அடுத்து ஒரு சம்பவம் கூறப்படுகின்றது.
யூசுப் ஏழு வயதை அடைந்த போது தன்னந்தனியாக செருப்பணியாமல் கால்நடையாக “ஸன்ஆ” எனும் நகருக்கு வந்தார். இதையறிந்த ஷாஹுல் ஹமீது அவர்கள் தம்முடைய மாணவர்கள் சிலரை அவருக்கு பயணத்தோழர்களாக இருக்க அனுப்பி வைத்தார்கள். அவர் வந்து சேர்ந்ததும் “கண் குளிர்ச்சியே! நீர் தான் எனது கலீபாவாவீர்” எனக் கூறினார்கள்.
இதில் கூறப்படுவது என்னவென்பதை விளங்காதவர்கள், ஹிகாயத் எனப்படும் உரைநடை விளக்கத்தைப் பாருங்கள்.
(ஷாஹுல் ஹமீத் அவர்களின் வெற்றிலை வரத்தால்) யூசுப் பிறந்து ஏழு வயதை அடைந்தார். அப்போது “யூசுபே உன்மேல் அன்பு வைத்துள்ள, உனது வருகைக்காக மஸ்ஜிதில் ஹராமில் காத்திருக்கின்ற உனது உண்மையான தந்தையிடம் போய்ச் சேர்ந்து கொள்” என்று ஒரு அசரீரியைக் கேட்டார். உடனே தம் தந்தையிடம் வந்து, “எனது உண்மையான தந்தை யார்?” என்று கேட்டார். இதைக்கேட்டு தந்தை வியந்தார். திகைத்தார். சிந்தித்தார். பின்னர் நினைவு கூர்ந்தார். “இந்த இரகசியமான செய்தியை உனக்கு கூறியவர் யார்?” என்று கேட்டார். “யாவற்றையும் அறிந்த அல்லாஹ்தான் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்று யூசுப் கூறினார். “உனது உயிருக்குரிய தந்தை பைதுல் ஹராமுக்குப் பயணமாகிவிட்டார்” எனக் கூறினார்.
அதற்கு யூசுப், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரிடம் கால்நடையாகவே நடந்து செல்வேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரைச் சந்திப்பேன்” எனக் கூறினார். ஆயினும் அவர் தடை செய்யப்பட்டார். “நான் புறப்பட்டே ஆகவேண்டும்” என்று கூறிவிட்டுத் தனியாக நடக்கலானார். அதன் பிறகு தன் குடும்பத்தாரிடம் திரும்பிப் பார்க்கவில்லை. ஸன்ஆ கடற்கரையை அடைந்த போது ஷாஹுல் ஹமீத் இவரது வருகையைப் பற்றித் தம் சகாக்களுக்குக் கூறினார். அவரை வரவேற்பதற்காகத் தமது தோழர்களில் சிலரை அனுப்பினார். வந்து சேர்ந்ததும் அவரை வாழ்த்தி வரவேற்று மரியாதை செலுத்தினார். “நீர் தான் எனது உண்மையான மகன். எனது கலீபாக்களில் பெரியவரும் நீர்தான். மேலும் எனது நேர்ச்சை செய்யப்படும் பொருட்களுக்கு தலைமுறை தலைமுறையாக நீரே வாரிசாவீர்” என்று கூறினார்.
இதுதான் கதை! இந்தக் கதையில் தான் எத்தனை அபத்தம் என்று பாருங்கள்!
“உனது உண்மையான தந்தையுடன் சேர்ந்து கொள்” என்று இறைவன் யூசுபிடம் பேசியதாகக் கூறப்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இறைச் செய்தி வருவது நின்று விட்டது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அவ்வாறு இறைச் செய்தி வருவதாகக் கூறிய மிர்ஸா குலாம் என்பவனைப் பொய்யன், காஃபிர் என்று உலம் முழுதும் உள்ள முஸ்லிம்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
முஸ்லிம்களின் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக யூசுப் என்பாருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அல்லாஹ்விடமிருந்து இவருக்கு அப்படி என்ன செய்தி வந்துள்ளது?
“உனது உண்மையான தந்தையிடம் போய்ச் சேர்ந்து கொள்” என்பது தான் அந்தச் செய்தி!
“பெற்றெடுத்தவர் மட்டுமே தந்தையாக இருக்க முடியும்; பெற்றவர் அல்லாத எவரையும் தந்தை என்று அழைக்கக் கூடாது’ என திருக்குர்ஆன் அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை மேலே குறிப்பிட்டுள்ளோம்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் எதைத் தடை செய்துள்ளானோ அதற்கு மாற்றமாக ஒரு செய்தியை இறைவன் கூறுவானா? குர்ஆனுக்கு மாற்றமாக உள்ள ஒரு கருத்து அசரீரியாகக் கேட்டால் அது ஷைத்தானிடமிருந்து வந்திருக்க முடியுமே தவிர நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது.
பெற்ற தந்தையிடம் வந்து, “என் உண்மையான தந்தை யார்? அவர் எங்கே?” என்று யூசுப், தன் தாயின் கற்பின் மீது களங்கம் ஏற்படுத்தும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். பெற்ற தந்தைக்கு இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?
உமது உண்மையான தந்தை இன்னார் தான்; அவர் மஸ்ஜிதுல் ஹராமில் காத்துக் கொண்டிருக்கிறார் என்று அல்லாஹ்வே இவரிடம் தெரிவித்த பின், என்னுடைய தந்தை யார்? என்று இவர் எதற்காகப் போய் கேட்க வேண்டும்? அல்லாஹ் அறிவித்ததில் (?) இவருக்கு நம்பிக்கையில்லையா? மக்காவிலில் மஸ்ஜிதுல் ஹராமில் இருக்கும் ஷாகுல் ஹமீதிடம் போய்ச் சேர்வற்கு சரியான பாதையை அல்லாஹ் சொல்லியிருக்க மாட்டானா?
(பாகிஸ்தானிலுள்ள) லாகூரிலிருந்து மக்கா செல்லும் வழியில் ஸன்ஆ என்ற ஊரை யூசுப் அடைந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும் கால்நடையாகவே அவர் நடந்து சென்றதாகவும் இந்தக் கதையில் கூறப்படுகின்றது.
ஸன்ஆ என்ற ஊர் ஏமன் நாட்டில் உள்ளது. லாகூரிலிருந்து தரை மார்க்கமாக ஸன்ஆவுக்குச் செல்ல முடியாது. ஏனெனில் இரு ஊர்களுக்கும் மத்தியில் கடல் இருக்கின்றது.
தரை வழியாகச் செல்ல வேண்டுமெனில் லாகூரிலிருந்து ஈரான், இராக் வழியாகத் தான் செல்ல முடியும். இதுவும் சவூதிக்குள் நுழைந்து மக்காவைக் கடந்து தான் ஸன்ஆவுக்குச் செல்ல முடியும்.
கடல் தரையாக மாறி விட்டது என்று சொல்லப் போகிறார்களா? அல்லது கடல் மேல் நடந்து சென்று ஸன்ஆவுக்குப் போனார் என்று கூறப் போகின்றார்களா? அல்லது ஈரான் வழியாக சவூதிக்குள் நுழைந்து, மக்காவுக்குப் போய் அதைக் கடந்து ஸன்ஆவுக்குப் போய் மீண்டும் மக்கா வந்தாரா?
லாகூரிலிருந்து ஸன்ஆ வரை யூசுப் வந்து விட்டார் என்று ஷாகுல் ஹமீது தன் சகாக்களிடம் கூறியுள்ளதாக இந்தக் கதையில் கூறப்பட்டுள்ளது.
இவர் லாகூரிலிருந்து வெற்றிலை வரம் கொடுத்து விட்டு மக்காவுக்குச் சென்றிருக்கிறார். லாகூரிலிருந்து மக்காவுக்கு வரும் வழியை கராமத் அடிப்படையில் அறிய முடியாவிட்டாலும், தாம் சென்ற வழியை அனுபவப்பூர்வமாக அறிந்தாவது, லாகூருக்கும் மக்காவுக்கும் மத்தியில் ஸன்ஆ வராது என்பதை விளங்கியிருக்க வேண்டாமா?
இதிலிருந்து ஷாகுல் ஹமீது லாகூருக்கு வரவில்லை. அவ்வழியாக மக்காவுக்கும் வரவில்லை. பிள்ளை வரமும் கொடுக்கவில்லை. அந்தப் பிள்ளை நடந்தே மக்காவுக்கும் செல்லவில்லை. எல்லாமே கற்பனை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஷாகுல் ஹமீதிடம் யூசுப் போய்ச் சேர்ந்த போது, “இவர் தான் எனது வாரிசு, எனக்காக நேர்ச்சை செய்யப்படும் பொருட்களுக்கு இவரே வாரிசாவார்” என்று கூறியுள்ளார்.
நேர்ச்சை என்பது ஒரு வணக்கம். எந்த வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்காகவும் செய்யக் கூடாது. இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை!
இந்த அடிப்படைக் கொள்கையை சாதாரண மக்கள் அறியாமல் இருந்தால் பரவாயில்லை. அதில் ஆச்சரியமில்லை. ஆனால் ஒரு மகான், அவ்லியாவுக்கு இந்த அடிப்படை கூடத் தெரியாமல் இருக்குமா? எனக்காகச் செய்யப்படும் நேர்ச்சைகளுக்கு இவர் வாரிசு என்று கூறியிருக்க முடியுமா? மவ்லிது அபிமானிகளே! சிந்தியுங்கள்.
வறுமையைக் காரணம் காட்டி யூசுப் திருமணம் செய்ய மறுத்த போது ஷாகுல் ஹமீது வாக்களித்தார்.
என்னே மகிமை! துன்பங்களைப் போக்க இவரது உதவி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கவிதையில் கூறப்படுவது விளங்கவில்லையா? உரைநடைப் பகுதியில் இந்தக் கதை விரிவாக விளக்கப்படுகிறது.
ஒருநாள் இரவு யூசுபிடம், “உயர்ந்த குடும்பத்துப் பெண்ணை உனக்கு மணமுடிக்க இருக்கிறேன்” எனறு ஷாகுல் ஹமீது கூறினார். வறுமையைப் பயந்ததால் யூசுப் திருமணம் செய்ய மறுத்து விட்டார். “இரவில் விளக்குக்கு எண்ணையோ திரியோ நமக்கு இல்லாத நிலையில் நான் எப்படித் திருமணம் செய்ய முடியும்?” என்று யூசுப் கேட்டார்.
அதற்கு ஷாகுல் ஹமீது, “நான் நினைத்ததை நீ எவ்வாறு மறுக்கலாம்? எனக்கு மக்கள்களையும் பேரர்களையும் தருவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். பல்வேறு ஊர்களிலிருந்து என் வாசலுக்கு வரும் காணிக்கைகளுக்கு இன்றும் நாளையும் உலக முடிவு நாள் வரையிலும் அவர்கள் வாரிசாக இருப்பார்கள். இறைவன், மகன் மற்றும் பேரப்பிள்ளைகளைத் தருவதாக வாக்களித்தது உன்னையும் உன் சந்ததிகளையும் குறிப்பதாக இருக்கக் கூடும்.
எனவே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை! அவனே உனக்குப் போதுமானவன். உனது செல்வமோ உழைப்போ அல்ல! எனவே உனது உள்ளம் தடுமாறவோ, திடுக்கிடவோ வேண்டாம். உனது முதுகில் ஆறு ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் உள்ளனர். நீங்கள் வறுமையை அஞ்சினால் அல்லாஹ் தனது அருளால் உங்களைச் செல்வந்தர்களாக ஆக்குவான்.
எனக்காக மக்கள் நேர்ச்சை செய்து வருவதும், எனக்காக எழுதி வைப்பதும் அவனது அருட்கொடைகளில் உள்ளவையாகும். நீங்கள் அறியாத வகையில் நீங்கள் விரும்புவதையெல்லாம் உங்களுக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் நான் துஆச் செய்வேன். நீங்கள் உலகம் அழியும் நாள் வரை செழிப்பாகவும் வசதியாகவும் வாழ்க்கை நடத்துவீர்கள்” என்று யூசுபுக்கு ஷாகுல் ஹமீது அறிவுரை வழங்கினார்.
இதன் பிறகு யூசுப் ஒப்புக் கொண்டார். அவரும் அவரது சந்ததியினரும் கஷ்டப்படாமல் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் ஜும்ஆ உரைக்குப் பின் பெண் பேசுவதற்காக ஷாகுல் ஹமீது நாகூர் வீதிகளில் நடந்து கொண்டிருந்தார். ஹூருல் ஈன் போன்ற இரண்டு பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களின் மூத்தவளின் தலையில் தடவினார். அவரது பெயர் பீபி ஜஹ்ரா. “என் மகனுக்கு இவர் தான் மனைவி” என்று கூறினார். “இவளது தந்தை ஒப்புக் கொண்டால் தாமதமின்றி இது நடக்கும்” என்றார்.
பின்னர் அப்பெண்களின் தந்தை பற்றி விசாரித்தார். காஜா மக்தூம் என்பது அவரது பெயர் எனவும், அவருக்கு இரண்டு கப்பல்கள் ஓடுகின்றன என்றும் கூறப்பட்டது. அவரது வீட்டில் சென்று ஷாகுல் ஹமீது விசாரித்தார். அவர் வீட்டில் இல்லை, வெளியே சென்று விட்டார் என்று கூறப்பட்டது.
“அவர் வந்தால் நம்மிடம் வரட்டும்; நாம் கூறுவதைக் கேட்கட்டும்” என்று கூறிவிட்டு ஷாகுல் ஹமீது வந்து விட்டார்.
காஜா மக்தூம் திரும்பி வந்ததும் அவரிடம் நடந்தது பற்றிக் கூறப்பட்டது. அதற்கவர், “ஷாகுல் ஹமீது எதற்காக இங்கு வந்தார் என்பதை நாம் அறிவோம். நமக்கும் அவருக்குமிடையே பெரும் இடைவெளி உள்ளது. யூசுப், பிச்சைக்காரரின் வளர்ப்பு மகன். தலைவரின் மகளாகிய ஜஹ்ராவுக்கு அவர் நிகராக மாட்டார். இதை நாம் ஏற்றுக் கொண்டால் நமது புதல்விகளுக்கும் பக்கிரிகளின் புதல்வர்களுக்குமிடையே எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்? இவர்கள் தமது தேவைகளுக்காக தலைவர்களிடம் யாசிக்கின்றனர்” என்று கூறினார்.
அன்றிரவை அவர்கள் கழித்தனர். அவரது மகள் அன்றிரவு மரணித்து விட்டார். வந்தவர்கள் எல்லாம் அவரைப் பழித்தனர். விடிந்ததும் தனது மற்றொரு மகளான சுல்தானா பீபியை மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். ஷாகுல் ஹமீதிடம் சென்றார். கடுமையாக அழுதார். நல்லோர்களின் முன்னிலையில் நபிவழியில் நல்ல நேரத்தில் திருமணம் நடந்தது.
இதுதான் உரைநடையில் கூறப்படும் கதை.
இந்தக் கதையில் எத்தனை அபத்தங்கள்! திருக்குர்ஆனுக்கு முரணான எத்தனை கப்ஸாக்கள் என்று பாருங்கள்.
ஷாகுல் ஹமீதுக்குத் திருமணம் நடக்கவில்லை. இன்னொருவரின் மகனாகிய யூசுபைத் தான் இவர் மகன் என்று கூறி வந்தார். இது அனைவரும் அறிந்த உண்மை.
இவ்வாறிருந்தும் இவருக்கு மகனும் பேரப்பிள்ளைகளும் பிறப்பார்கள் என்று இறைவன் கூறினானாம். மகன் என்று இறைவன் குறிப்பிட்டது யூசுபைத் தான் என்று விளக்கம் தருகிறார்.
இதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா?
உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்!
வளர்ப்பு மகன்கள் ஒருபோதும் மகன்களாக முடியாது என்று இறைவன் தெளிவாக அறிவித்த பிறகு இதற்கு முரணாக ஷாகுல் ஹமீது கூறியுள்ளார். எனவே இந்தக் கதை பொய்யாக இருக்க வேண்டும். அல்லது ஷாகுல் ஹமீது இறைவனுக்கு மாறு செய்தவராக இருக்க வேண்டும்.
வறுமையில் இருந்தாலும் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் ஷாகுல் ஹமீது, திருமணத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டு வேண்டுமென்றே தனது திருமணத்தைத் தவிர்த்திருக்கிறார் என்பது இந்தக் கதையிலிருந்து தெளிவாகின்றது.
யூசுபுக்கு ஆறு ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் பிறப்பார்கள் என்று முன்னறிவிப்புச் செய்கிறார். இவ்வாறு எவராவது கண்டு பிடிக்க முடியுமா? இதற்கான ஞானத்தை அல்லாஹ் யாருக்காவது வழங்கியிருக்கின்றானா? நிச்சயமாக இல்லை.
எத்தனையோ நபிமார்களுக்குக் குழந்தை இல்லாமலிருந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். ஆயினும் இது குறித்து இறைவன் அறிவித்துக் கொடுப்பதற்கு முன் நபிமார்களால் இதை அறிந்து கொள்ள இயலவில்லை.
ஐந்து விஷயங்களை இறைவன் மட்டுமே அறிவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. கருவறையில் உள்ளதை அவனே அறிவான் என்பதும் அதில் ஒன்றாகும்.
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
ஒரு கருவறையில் எத்தனை குழந்தைகள் உருவாகும்? அவற்றில் ஆண் எத்தனை? பெண் எத்தனை? என்பதை நபிமார்களாக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இந்த விபரங்கள் எல்லாம் ஷாகுல் ஹமீதுக்குத் தெரிந்தன என்று கூறுவது பச்சைப் பொய் இல்லாமல் வேறென்ன?
இரண்டு பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனராம். அவர்களில் மூத்தவளின் தலையைத் தடவிக் கொடுத்தாராம்.
இவ்வாறு செய்வதை எந்த வசனம் அனுமதிக்கின்றது? எந்த நபிமொழியில் இதற்கு அங்கீகாரம் இருக்கின்றது? சாதாரண நிலையில் அந்நியப் பெண்ணைத் தொடவோ, தலையைத் தடவவோ அனுமதியில்லாத போது குளிக்கும் பெண்களைத் தொடலாமா? பெண்கள் குளிக்கும் பகுதிக்குச் செல்லலாமா?
ஷேக்மார்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்வதற்கு ஆதாரமாகத் தான் இவ்வாறு கதையைக் கட்டியிருக்க முடியும். நல்லடியார்கள் ஒருக்காலும் இத்தகைய ஈனச் செயலில் ஈடுபட மாட்டார்கள்.
தங்கள் மண வாழ்க்கையைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண் விரும்பினால் தான் அவளை யாரும் திருமணம் செய்ய முடியும். இதுதான் நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையாகும்.
ஏதோ ஆடு மாடுகளை வாங்குவது போல் குளத்தில் குளிக்கும் பெண்ணைப் பார்த்து விட்டு மணமுடித்துத் தருமாறு கேட்பது நம்பும்படியாக இல்லை.
ஒரு பக்கிரிக்கு, எந்த வசதியுமில்லாதவருக்குத் தன் மகளை மண முடித்துக் கொடுத்தால், கண் கலங்காமல் அவளைக் காப்பாற்ற மாட்டார் என்று ஒரு தந்தை நினைக்கும் போது அவருக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க மறுக்கலாம். இதில் எந்தத் தவறும் இல்லை.
ஷாகுல் ஹமீது விரும்பியதைச் செய்ய மறுத்தால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என்று பயம் காட்டுவதற்காக அவரது மகள் இறந்து விட்டார் என்று கற்பனை செய்துள்ளனர்.
ஏனைய மதங்களில் மனிதர்களுக்குக் கடவுள் தன்மை வழங்கி, அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை இருக்கின்றது. அதுபோன்று ஒரு நிலையை இஸ்லாமிய மார்க்கத்திலும் ஏற்படுத்துவதற்காகத் தான் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கெட்ட எண்ணத்துடன் மூடர்களான சில சீடர்கள் பசியின் காரணமாக அறுத்து உண்ட மாட்டின் எலும்புகளுக்கு இவர் உயிர் கொடுத்தார். மாட்டின் உரிமையாளர்கள் சண்டைக்கு வந்த போது இவ்வாறு செய்தார்.
இந்தக் கவிதையிலிருந்து விளங்காதவர்களுக்கு உரைநடைப் பகுதியில் பின்வருமாறு விளக்கம் கூறப்படுகின்றது.
ஷாகுல் ஹமீது அவர்களும், அவருடன் வந்த பக்கீர்களும் தென்காசியில் சில காலம் தங்கினார்கள். அதன் சுற்றுப்புறங்களிலெல்லாம் கடுமையான பஞ்சம் நிலவியது. அவர்களில் எவரிடமும் பசியைப் போக்கும் உணவு இருக்கவில்லை. அவர்களில் மனோ இச்சை மிகுந்த மூடன் ஒருவன் முன்வந்து அங்குள்ள கோவிலின் மாட்டை அறுத்தான். சீடர்கள் அனைவருக்கும் அதன் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுத்தான். கோவில் அறங்காவலர்கள் ஷாகுல் ஹமீது அவர்களிடம் கூட்டமாக வந்து வாதம் செய்தனர். உடனே ஷாகுல் ஹமீது மாட்டின் எலும்புகளைத் திரட்டக் கட்டளையிட்டார்கள். தமது கைத்தடியால் அதனை அடித்தார்கள். உடனே அல்லாஹ் அதற்கு உயிர் கொடுத்தான். மாடு உயிர் பெற்று எழுந்தது. கோவில் அறங்காவலர்கள் அவருக்கு சாஷ்டாங்கம் செய்தனர். ஸலாம் கூறினர். அவரிடமிருந்து மரியாதையுடன் திரும்பிச் சென்றனர். இரு உலகிலும் அல்லாஹ் அவரை நமக்கு இமாமாக ஆக்குவானாக!
இது தான் கதை! ஷாகுல் ஹமீதின் மதிப்பை உயர்த்துவதற்காகவும், அவருக்குக் கடவுள் தன்மையை வழங்குவதற்காகவும் இந்தக் கதை புனையப்பட்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
ஷாகுல் ஹமீத் அல்லாஹ்வின் நல்லடியாராக இருந்தால் தம்முடன் அழைத்துச் செல்லும் சீடர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவரது சீடர்களில் ஒருவர் கூட நல்லவராக இருக்கவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.
பிறருக்குச் சொந்தமான மாட்டை ஒரு மூடச் சீடர் அறுத்து விடுகின்றார். அத்துடன் அதன் இறைச்சியை ஏனைய சீடர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறார். அவர்களில் ஒருவர் கூட அதை ஆட்சேபிக்காமல் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஹராமான உணவை உண்ணக் கூடாது என்ற பாடத்தை இவரது சீடர்களில் ஒருவர் கூடப் படிக்கவில்லை. யாருக்கோ சொந்தமான மாட்டை அறுத்து அனைவரும் உண்கிறார்கள். அந்த அக்கிரமச் செயலைக் கண்டித்ததாகக் கூட இந்தக் கதையில் கூறப்படவில்லை.
அற்புதமான முறையில் மாட்டை உயிர்ப்பித்து (?) விட்டதால் அவரது சீடர்கள் சாப்பிட்ட அந்த உணவு ஹலாலாகி விடுமா?
செத்துப் போன மாட்டை மந்திர சக்தியால் உயிர்ப்பித்த ஷாகுல் ஹமீது, தமது சீடர்கள் பிறருக்குச் சொந்தமான மாட்டை அறுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து தடுக்க முடியவில்லை.
தமது சீடர்கள் பசியால் வாடுவதையும் அவர் உணரவில்லை. பிறரது மாட்டைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர் அதற்கு உயிர் கொடுப்பதை விடப் புதிய மாட்டை மந்திரத்தில் உருவாக்கி தம் சீடர்களுக்குக் வழங்கி அவர்களை ஹராமான உணவிலிருந்து தடுக்க இயலவில்லை.
இவ்வளவு பலவீனமான நிலையில் இருந்தவர், எலும்புகளை உயிராக்கினார் என்று கூறுவது பச்சைப் பொய் என்பதை இது விளக்குகின்றது.
முஆத் (ரலி) என்ற நபித்தோழர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலில் விழுந்து ஸஜ்தாச் செய்ய அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கால்களில் விழுவதற்கே அனுமதி இல்லை என்றால் மற்றவர்களின் கால்களில் விழுவது எவ்வளவு பெரிய தவறு என்பது தெரிய வரும்.
ஆனால் ஷாகுல் ஹமீது தம் கால்களில் விழுந்தவர்களைத் தடுக்கவில்லை. காலில் விழுவது தவறு என்பதையும் அவர்களுக்கு விளக்கவில்லை. நல்லடியார் ஒருவர் மார்க்கத்திற்கு முரணான இந்தச் செயலைச் செய்திருக்க முடியுமா? நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
இவரை இரு உலகிலும் இமாமாக ஆக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்படுகின்றது.
இந்த உலகில் இமாமாக, வழிகாட்டியாக ஏற்க வேண்டும் என்றால் என்ன பொருள்? யாருடைய மாட்டையாவது பிடித்து அறுத்து உண்ண வேண்டுமா? எலும்புகளைக் குவித்து வைத்து கைத்தடியால் அடிக்க வேண்டுமா? தமது காலில் விழ வருபவர்களைத் தடுக்காமல் அங்கீகரிக்க வேண்டுமா? இவரை வழிகாட்டியாக ஏற்க வேண்டும் என்றால் இது தான் பொருள்.
மறுமையில் ஒவ்வொரு நபிமார்களும் தத்தம் சமுதாயத்தவருக்கு இமாமாக வருவார்கள்.
அந்த நேரத்தில் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட்டு விட்டு இவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டுமா? அப்படியானால் இவர் ஒரு நபியா? இவருக்குத் தனியாக உம்மத் உண்டா?
இவரே இமாமாக நிற்பார் என்றால் நபிகள் நாயகத்தின் உம்மத்தில் ஒருவராக இவர் வர மாட்டாரா? தனித் தலைவராகத் தான் வருவாரா? மறுமையில் தலைவராக வருவார் என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன விளக்கம் கூறப் போகிறார்கள்?
ஷாகுல் ஹமீதுக்கு அல்லாஹ்வின் ஆற்றலை வழங்கி நபிகள் நாயகத்துக்குச் சமமாக அவரை ஆக்குவது தான் இந்த மவ்லிதின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது.
இத்தகைய அபத்தமான பாடல்களைப் புனிதம் என்று கருதி ஓதலாமா? இதற்கு மறுமையில் நன்மை கிடைக்குமா? அல்லது பாவம் சேருமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
வார் இல்லாத, விரலுக்குப் பிடிமானம் இல்லாத, மரத்தால் செய்யப்பட்ட காலணியை அணிந்து ஷாகுல் ஹமீது அவர்கள் நடப்பவர்களாக இருந்தனர்.
ஷாகுல் ஹமீது மவ்லிதில் கூறப்படும் அற்புதக் கதை இது! இதற்கு விளக்கமாக உரைநடையில் கூறப்படுவதையும் பார்ப்போம்.
ஒரு தச்சர் ஷாகுல் ஹமீதுக்கு ஒரு மரத்தால் செய்யப்பட்ட காலணியை காணிக்கையாக வழங்கினார். அந்தக் காலணிக்கு வாரும் இல்லை. கால் விரல்களுக்குப் பிடிமானமும் அதில் இல்லை. அதை அணிந்து தான் ஷாகுல் ஹமீது நடந்து வந்தார். அந்தக் காலணிகள் நாகூர் தர்காவின் ஐந்தாம் வாசலில், தங்கத் தட்டில் இன்றளவும் வைக்கப்பட்டுள்ளன. வேலைப்பாடுகளுடன் கூடிய, தங்கத்தால் செய்யப்பட்ட கால்களின் மீது அது நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளித் தகடுகளால் சுற்றப்பட்டுள்ளது. அதைச் சுற்றி விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திறந்த தலை மீது அதைச் சுமந்த வெற்றி பெற்றவர்களில் நம்மை அல்லாஹ் ஆக்குவானாக!
எந்தப் பிடிமானமும் இல்லாமல் அடிப்பாகத்தை மட்டும் கொண்ட செருப்பால் ஷாகுல் ஹமீது நடந்ததாக இந்தக் கதை கூறுகின்றது.
அதாவது ஷாகுல் ஹமீது காலைத் தூக்கி நடக்கும் போது எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தக் காலணி அந்தரத்தில் அவரது காலுடன் ஒட்டிக் கொண்டிருந்ததாம்.
பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் ஒரு பொருள் நின்றால் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அது கீழே விழுந்து விடும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு சக்தி இருந்தால் மட்டுமே அந்தரத்தில் நிற்க முடியும். அல்லது பாதங்களில் பெவிகால் தடவி அந்தக் காலணியை ஒட்டிக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆயினும் ஷாகுல் ஹமீது ஓர் அதிசயப் பிறவி, மனித நிலைக்கு அப்பாற்பட்டவர் என்று காட்டுவதற்காகவே இவ்வாறு கதை கட்டப்பட்டுள்ளது.
நபிமார்கள், தாம் இறைவனின் தூதர்கள் என்பதை நிரூபிப்பதற்காக இறைவனின் அனுமதியுடன் சில அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். ஒவ்வொரு நபியும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கவில்லை.
இவரோ எந்நேரமும் வார் இல்லாத செருப்பை அணிந்து அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார் என்று இந்தக் கதை கூறுகின்றது.
இறைத் தூதர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி அற்புதம் நிகழ்த்த முடியாது என்று திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.
எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.
ஈஸா நபியவர்கள் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி தமது தூதுத்துவத்தை நிரூபித்தார்கள். அல்லாஹ்வின் அனுமதி பெற்றே இதைச் செய்வதாக அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன்: 3:49) ➚
மூஸா நபியவர்களிடம் உள்ள கைத்தடியை அல்லாஹ் பாம்பாக மாற்றிக் காட்டினான். அந்த அற்புதங்களை அவர்கள் ஃபிர்அவ்னிடம் செய்து காட்டினார்கள். அதைப் பார்த்த ஃபிர்அவ்ன் அது போன்ற மந்திரத்தைச் செய்து காட்ட மந்திரவாதிகள் தன்னிடமும் இருக்கிறார்கள் என்று கூறி அவர்களுடன் போட்டியிட்டு வெல்ல மூஸா நபிக்கு அறைகூவல் விடுத்தான். அதன் அடிப்படையில் மூஸா நபியவர்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் போட்டி ஏற்படுத்தப்பட்டது.
மந்திரவாதிகள் தங்களிடமுள்ள கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்புகள் போன்று தோற்றமளிக்கச் செய்தனர். அதைக் கண்டவுடன் மூஸா நபியவர்கள் தமது கைத்தடியைப் போட்டு பாம்பாக மாற்றிக் காட்டவில்லை. மாறாக மந்திரவாதிகளின் அற்புதத்தைக் கண்டு திடுக்குற்றார்கள். “உமது கைத்தடியைப் போடுவீராக” என்று இறைவனது கட்டளை வந்த பின்பு தான் அந்தக் கைத்தடியைப் போட்டார்கள்.
ஏற்கனவே அந்தக் கைத்தடி பாம்பாக மாறியிருந்தும், நாம் போடும் போதெல்லாம் அது பாம்பாக மாறும் என்று மூஸா நபியவர்கள் நம்பவில்லை. அற்புதம் என்பது நிரந்தரமாக, நீடித்தத் தன்மை கொண்டவை என்று அவர்கள் நம்பவில்லை. மாறாக அல்லாஹ் எப்போது அதைப் பயன்படுத்தக் கட்டளையிடுகின்றானோ அந்த் நேரத்தில் மட்டும் தான் நிகழும் என்று நம்பினார்கள்.
இந்த விபரங்களைக் கீழ்க்காணும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
“மூஸாவே! அதைப் போடுவீராக!” என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. “அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்” என்று அவன் கூறினான்.
“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
“அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்” என்று கூறினோம்.
“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றனர்.
மூஸா நபியின் சமுதாயத்தவர்களும் மூஸா நபியும் ஃபிர்அவ்னால் விரட்டப்பட்ட போது சுயமாகத் தமது கைத்தடியால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக, “என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கிறான்; அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று தான் கூறினார்கள். “கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று இறைவன் கட்டளையிட்ட பிறகு தான் அவ்வாறு செய்தார்கள். அற்புதமும் நிகழ்ந்தது.
இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.
மூஸா நபியும் அவர்களது சமுதாயத்தினரும் பயணம் செல்லும் போது மக்கள் தாகத்தைத் தீர்க்க மூஸா நபியிடம் முறையிட்டனர். தமது கைத்தடியைப் பயன்படுத்தி அவர்கள் தண்ணீரை வரவழைக்கவில்லை. மாறாக அல்லாஹ்விடம் துஆச் செய்தனர். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் தமது கைத்தடியால் பாறையை அடித்தார்கள். தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது.
மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறை மறுப்பாளர்கள் பல்வேறு அற்புதங்களைக் கோரினார்கள். “நான் மனிதத் தூதர் தான்” என்று நபியவர்களைக் கூறச் செய்து மறுப்பாளர்களின் கோரிக்கையை இறைவன் நிராகரித்து விடுகின்றான்.
“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்” என்று கூறுகின்றனர்.
அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.
அல்லது நீர் நினைப்பது போல் வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.
அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
ஆனால் ஷாகுல் ஹமீது அவர்களோ எந்நேரமும் அற்புதத்தை நிகழத்துபவராகச் சித்தரிக்கப்படுகிறார். இவ்வாறு மிகைப்படுத்தி அவரது பெயரால் பொய்களை இட்டுக்கட்டக் காரணம் என்ன என்பதை அந்த உரைநடைப் பகுதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நாகூர் தர்காவில் அந்தச் செருப்பை வைத்திருக்கிறார்கள். அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியுமாம். செருப்பைத் தலையில் வைத்துக் கொள்ளத் தூண்டி, அதன் மூலம் வருவாயைப் பெருக்குவதற்காகத் தான் செருப்பின் மகாத்மியம் பற்றி அந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
காலில் அணிய வேண்டிய செருப்பைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதும், அதற்குத் தங்கத் தட்டும், வெள்ளிப் பேழையும், விளக்குகளின் அலங்காரமும், இவை அனைத்தையும் நியாயப்படுத்துவதும் தான் இஸ்லாமா?
நபி (ஸல்) அவர்கள் எந்தத் தீமையை ஒழிக்கக் காலமெல்லாம் பாடுபட்டார்களோ அந்தத் தீமைகளை இஸ்லாத்தின் பெயரால் நிலைநிறுத்த இந்த மவ்லிதுகள் முயற்சிக்கின்றன.
பொருள் தெரியாத நம்மவர்கள் பக்திப் பரவசத்துடன் இதை ஓதி வருகின்றனர். இதன் பொருளை அறிந்து கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் மவ்லிதின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டான்.
ஷாகுல் ஹமீது தமது மானுக்காகப் பால் கேட்ட போது தர மறுத்தவர்களுக்குப் பாலே கிடைக்காமல் போய் விட்டது.
இந்தக் கதைச் சுருக்கத்துக்கு ஹிகாயத் எனும் உரைநடைப் பகுதியில் பின்வருமாறு விளக்கம் தரப்படுகின்றது.
ஷாகுல் ஹமீது நத்தம் எனும் கிராமத்தில் ஓரிரவு தங்கினார். தமது மான் குட்டிக்காக ஒரு குடும்பத்தாரிடம் பால் கேட்டார். அவர்களிடம் பால் இருந்தும் அதைத் தர மறுத்தனர். ஷாகுல் ஹமீதை விருந்தாளியாக ஏற்க மறுத்து விட்டனர். அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குடும்பத்தினருக்கு இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ பால் கிடைக்காமல் ஆகி விட்டது. அவரது பெருந்தன்மையினால் சோதனைகளிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
இந்தக் கதை, உண்மை சிறிதளவும் கலக்காத பச்சைப் பொய் என்பதை அறிவுடைய எவரும் விளங்க முடியும்.
ஷாகுல் ஹமீது அனைத்தையும், குடும்ப வாழ்க்கையைக் கூடத் துறந்து விட்டு ஊர் ஊராகச் சுற்றி வநதவர் என்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள். இந்த மவ்லிதும் அவரைப் பற்றி அப்படித் தான் சித்தரிக்கின்றது.
அனைத்தையும் துறந்த ஞானிக்கு மான் குட்டி எதற்காக? தனக்கும் தன் தோழர்களுக்கும் மற்றவர்களிடம் உணவைப் பெற்று உண்பவர், வேண்டாத இந்தச் சுமையை ஏன் சுமக்க வேண்டும்?
தற்செயலாகக் கண்ணில் பட்ட மானுக்காகப் பால் கேட்டிருக்கலாம் அல்லவா? என்று யாரேனும் கேட்கக் கூடும்.
“தமது மானுக்காக” என்று இக்கதையில் கூறப்படுகின்றது. அவர் தமக்குச் சொந்தமாக இந்த மானை வளர்த்து வந்தார் என்பதை இது நிரூபிக்கின்றது.
வாயில்லா ஜீவனுக்கு உணவளிக்கச் சக்தியில்லாதவர் எதற்காக அதை வளர்க்க வேண்டும்? ஊர் ஊராக இவர் சுற்றிக் கொண்டிருந்தது போல் மான் குட்டியையும் சுற்றச் செய்து அதற்கு ஏன் சிரமத்தை ஏற்படுத்த வேண்டும்?
மனிதனுக்கு அவசியத் தேவையான, மார்க்கக் கடமையான திருமணத்தைக் கூட உதறித் தள்ளியவர், இறை வழிபாட்டில் மூழ்கித் திளைப்பதற்காகத் துறவறம் மேற்கொண்டவருக்கு மான் எதற்கு? அதைப் பராமரிப்பதால் முழு அளவில் இறை வழிபாட்டில் ஈடுபட முடியுமா?
இந்தக் கதை பொய்யென்பதை நிரூபிக்க இவையே போதும் என்றாலும் மேலும் பல காரணங்கள் உள்ளன.
ஒரு குடும்பத்தாரிடம் தமது மானுக்காக இவர் பால் கேட்டிருக்கிறார். இதை ஏற்றுக் கொள்வோம். அக்குடும்பத்தாரிடம் பால் இருந்தும் அதை வழங்க மறுத்து விட்டனர். அதையும் ஏற்றுக் கொள்வோம். அதற்காக அவர்களுக்குப் பாலே கிடைக்கக் கூடாது என்று சபிக்கலாமா? இது தான் இஸ்லாம் காட்டும் வழிமுறையா? இப்படித் தான் நபிமார்களும் நபித்தோழர்களும் நடந்திருக்கின்றார்களா?
மூஸா (அலை) அவர்களும், கிழ்ரு (அலை) அவர்களும் ஒரு கிராமத்துக்குச் சென்று உணவு கேட்டனர். அக்கிராமத்தினர் உணவளிக்க மறுத்து விட்டனர். கால்நடைகளின் பசியைப் போக்க உணவு கேட்கவில்லை. தமது பசியைப் போக்கிக் கொள்ளவே உணவு கேட்டனர். கிழ்ரு (அலை) அவர்கள் பல சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டிருந்தனர். ஆயினும் அவர்கள், விருந்து தராத மக்களைச் சபிக்கவில்லை. அம்மக்களுக்கு உணவு கிடைக்காமல் போகட்டும் என்று சாபமிடவில்லை. அல்குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்திலிருந்து இதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திற்குச் சென்றனர். அந்த மக்கள் அவர்களை உபசரிக்காதது மட்டுமின்றி அடித்துக் காயப்படுத்தி விரட்டினார்கள்.
“இறைவா! என் சமுதாயத்தினர் அறியாதவர்களாக உள்ளனர். அவர்களை மன்னித்து விடு” என்பது தான் நபியவர்களின் பிரார்த்தனையாக இருந்ததே தவிர அவர்களுக்கு உணவு கிடைக்கக்கூடாது என்று சாபமிடவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியில் நடப்பதன் மூலம் தான் ஒருவர் இறைநேசராக முடியுமே தவிர அவர்களின் வழிமுறைக்கு மாறு செய்வதன் மூலம் இறைநேசராக முடியாது. ஆனால் ஷாகுல் ஹமீது நபிவழியை மீறியவராக இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கதை பொய்யானது என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இன்னும் உள்ளன.
இவரது துஆவின் காரணமாக அந்தக் குடும்பத்தினருக்கு மட்டும் பால் கிடைக்காமல் போகவில்லையாம். தலைமுறை தலைமுறையாக இன்று வரையிலும் சாபம் தொடர்கிறதாம்.
அவர்கள் பால் தர மறுத்ததற்காக இவர் கோபப்பட்டு அவர்களைச் சபித்ததைக் கூட ஒப்புக் கொள்வோம். அது படுபயங்கரமான குற்றம் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அவர்களைத் தான் தண்டிக்க வேண்டுமே தவிர அந்தக் குற்றத்தில் எள் முனையளவு கூடச் சம்பந்தமில்லாத அவர்களின் வழித்தோன்றல்கள் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்?
ஆதம் (அலை) அவர்கள் செய்த பாவம் தலைமுறை தலைமுயைôகத் தொடர்கிறது என்ற கிறித்தவக் கோட்பாட்டை இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது.
ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இது அல்லாஹ்வின் நியதி மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியும் இது தான். தந்தை செய்த கொலைக்காக மகனைத் தண்டிப்பது உலகில் எங்குமே கிடையாது.
இந்த நீதி நெறியை மீறி ஒரு குடும்பத்தினர் செய்த தவறுக்காக (?) தலைமுறை தலைமுறையாகத் தண்டித்திருக்கிறார். ஒரு நல்லடியார் இவ்வாறு செய்திருக்க முடியாது என்பதால் இது கட்டுக் கதை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இப்படியெல்லாம் சபித்ததையும் கூட ஒப்புக் கொள்வோம். இவர் சபித்தால் அது நடந்து விடுமா? நிச்சயமாக நடக்காது.
உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, “நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும்” என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர்.
ஆனால் நடந்தது என்ன? “அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று இறைவன் கூறிவிட்டான். மேலும் உஹதுப் போரில் எதிரிகளுக்கு வெற்றியையும் வழங்கினான். முஸ்லிம்களின் தரப்பில் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தினான்.
உணவு அளிக்காமல் இருப்பதை விட நபிகள் நாயகத்தை அடித்துத் துன்புறுத்துவது கடும் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்காகக் கூட அவர்கள் விஷயத்தில் நபியவர்கள் முடிவெடுக்கக் கூடாது என்று இறைவன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தடை செய்த ஒன்றை ஷாகுல் ஹமீதுக்கு அல்லாஹ் அனுமதித்தானா?
நபிகள் நாயகத்தை விட இவர் ஆற்றலிலும் சிறப்பிலும் கூடுதலானவரா? நபிகள் நாயகத்தின் தரத்தைக் குறைத்துக் காட்டவே இதைப் புனைந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை.
நத்தம் என்ற கிராமத்தில் சபிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினர் யார்? இன்று வரை அந்தக் குடும்பத்துக்குப் பால் கிடைக்காமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள்? அந்தக் குடும்பத்தினரின் முகவரியை மவ்லிது அபிமானிகள் எடுத்துக் காட்டுவார்களா? அவ்வாறு காட்டினால் இரகசியமாக என்ன? பகிரங்கமாகவே அவர்களுக்குப் பால் கிடைக்கச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
இவை யாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால் இவர் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதாக ஒரு பக்கம் கூறி விட்டு, “இவரது பெருந்தன்மை காரணமாக அல்லாஹ் சோதனையிலிருந்து காப்பாற்றுவானாக” என்று கூறுகிறது இந்த மவ்லிது.
இது தான் பெருந்தன்மையா? இறை நேசருக்குரிய இலக்கணமா?
ஆகவே ஷாகுல் ஹமீதை அல்லாஹ்வுக்கு நிகராக்கியது மட்டுமின்றி அவரையும் இந்த மவ்லிது இழிவுபடுத்துகின்றது என்பது தான் உண்மை.
விருந்தளிக்க மறுத்தவர்களின் குடிநீர் உப்பு நீராக, கொதி நீரைப் போல் மாறி விட்டது.
இது ஷாகுல் ஹமீது மவ்லிதில் உள்ள கதையாகும். இந்தக் கதை ஹிகாயத் எனும் விளக்கவுரைப் பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஷாகுல் ஹமீதும், அவருடன் இருந்த பக்கீர்களும் கீழக்கரை வந்து அவ்வூராரிடம் உணவு கேட்டனர். அவர்கள் எந்த விருந்தையும் முன்வைக்கவில்லை. அவர்களுக்கு விளக்கு எரிக்கவில்லை. உப்புத் தண்ணீரையே கொடுத்தனர். அப்போது ஷாகுல் ஹமீதின் நாவில், “இவர்களின் கிணறுகளில் நல்ல தண்ணீர் ஒரு காலமும் ஊறாமல் போகட்டும்; தாகமாக இருந்தாலும் அந்தத் தண்ணீரை ஒருக்காலும் குடிக்க முடியாமல் ஆகட்டும்” என்ற வார்த்தை வெளியானது.
அன்றிலிருந்து சதக்கத்துல்லாஹ் காலம் வரை அவ்வூரின் தண்ணீர் கசக்கும் உப்பாக மாறியது. இத்தண்ணீரால் முகம் கழுவியவர் வெப்பத்தை உணர்வார். அவர்களின் பேரருளால் அவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் உதவிகள் செய்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவனாக!
நல்லடியார்கள் இதுபோன்று சாபமிட மாட்டார்கள் என்பதை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். மூஸா, கிழ்ரு ஆகியோருக்கு உணவளிக்க மறுத்த மக்களுக்காக அவர்கள் சாபமிடவில்லை. நபி (ஸல்) அவர்களை விரட்டியடித்த தாயிப் நகர மக்களுக்காக அவர்கள் இவ்வாறு சாபமிடவில்லை.
நபித்தோழர்களுக்கு ஒரு கூட்டத்தினர் உணவளிக்க மறுத்தனர். அந்தக் கூட்டத்தின் தலைவனுக்குத் தேள் கொட்டிய போது நபித்தோழர்கள் சூரத்துல் பாத்திஹாவைக் கொண்டு ஓதிப் பார்த்தார்களே தவிர அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபித்தோழர்கள் சாபமிடவில்லை.
நல்லடியார்கள் இதுபோன்ற சோதனைகளைச் சந்திக்கும் போது அதைச் சகித்துக் கொள்ள வேண்டுமே தவிர சபிக்கக் கூடாது. அதற்கான அதிகாரம் எவருக்கும் கிடையாது. இந்த அடிப்படையை மீறி ஷாகுல் ஹமீது நடந்து கொண்டார் என்று கூறுவது அவரை அவமதிப்பதாகும்.
மேலும் இந்தச் சாபம் பலித்திருக்க வாய்ப்புள்ளதா? என்றால் நிச்சயமாகப் பலித்திருக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் குடிக்காமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஷாகுல் ஹமீது சாபமிட்டதிலிருந்து சதக்கத்துல்லாஹ் காலம் வரை தாகம் ஏற்பட்டாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியாமல் போய் விட்டது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் பல நூறு ஆண்டுகள் தண்ணீரே குடிக்காமல் அந்த மக்கள் செத்து மடிந்திருப்பார்களே!
“எக்காலத்திலும் தண்ணீர் குடிக்க முடியாமல் ஆக வேண்டும்’ என்பது தான் சாபம். ஆனால் சதக்கத்துல்லாஹ் காலம் வரை தான் அந்த நிலை ஏற்பட்டது என்று மவ்லிதே கூறுகின்றது. அப்படியானால் ‘எக்காலத்திலும்’ என்ற சாபம் பலிக்காமல் போய்விட்டது என்பது உறுதி.
பொதுவாகக் கடற்கரைகளில் அமைந்த ஊர்களில் கிணறுகளில் தண்ணீர் உப்பாகத் தான் இருக்கும். இதுபோன்று நூற்றுக்கணக்கான ஊர்கள் தமிழகத்தில் உள்ளன. அந்த ஊர்களுக்கெல்லாம் சாபமிட்டது யார்? சதக்கத்துல்லாஹ் காலம் வரை தான் சாபம் பலித்தது என்றால், அதற்குப் பிறகு அந்த ஊரில் கிணற்றுத் தண்ணீர் சுவையாக மாறி விட்டதா? அதைத் தான் கீழக்கரை மக்கள் இன்றளவும் குடிக்கிறார்களா?
இப்படி ஏராளமான கேள்விகள் இதில் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் மவ்லிது அபிமானிகள் பதில் சொல்ல மாட்டார்கள். பதில் சொல்ல முடியாது. ஏன் இப்படி இட்டுக்கட்டியுள்ளனர்? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்தக் கேள்விக்கான விடை இதே கதையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
தர்ஹாவுக்கும், அதை வைத்துப் பிழைப்பு நடத்துவோருக்கும் உதவிகள் செய்ய அல்லாஹ் அருள் புரியட்டும் என்று இந்தக் கதை முடிகின்றது. அதாவது இதுபோன்ற கதைகள் மூலம் “நினைத்தனை முடிப்பவர்’ என்று ஷாகுல் ஹமீது கருதப்பட வேண்டும். அதனால் உண்டியல் நிரம்ப வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.
கீழக்கரை மக்களுக்காக நாம் பரிதாபப்பட வேண்டும். யாரோ செய்த தவறுக்காக தலைமுறை தலைமுறையாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்ற இழிவையும், சாபத்தையும் உள்ளடக்கிய மவ்லிதை அவர்களையும் அறியாமல் ஓதித் தங்களை அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். பாவம் கீழக்கரையிலுள்ள மவ்லிது அபிமானிகள்!
தோல் வியாபாரியின் தோலை இவரது சீடர்கள் எடுத்துக் கொண்டனர். இதற்காக ஷாஹுல் ஹமீத் அவர்கள் மண்ணைக் காசாக மாற்றி தோல் வியாபாரியிடம் கொடுத்தனர்.
இதற்கு விளக்கவுரையாக உரைநடைப் பகுதியில் கூறப்படுவதையும் பாருங்கள்.
ஷாஹுல் ஹமீத் அவர்களும் அவர்களுடன் வந்த பக்கிரிகளும் ஆய்க்குடிவால் என்ற ஊரில் குளக்கரையில் தங்கினர். நிழல் தேடி அங்குள்ள மரங்களினடியில் அமர்ந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி ஆட்டுத் தோல், மான் தோல் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டு வருவதைக் கண்டனர். காசு வாங்காமல் ஷாஹுல் ஹமீதுக்கு காணிக்கையாகத் தரப்படும் பொருள் என்று எண்ணிய பக்கிரிகள் அந்தத் தோலை எடுத்துக் கொண்டார்கள். உடனே அந்தக் கிராமவாசி ஷாஹுல் ஹமீதிடம் முறையிட்டார். கடுமையாக அழுதார். இதனால் அவர் மீது இரக்கம் கொண்ட ஷாஹுல் ஹமீத் அவர்கள் உனது தோலின் விலையளவுக்குக் குளத்து மண்ணை பணமாக எடுத்துக் கொள் என்று கூறினார்கள். கட்டளையிடப்பட்டவாறே அவர் முழுமையாக எடுத்துக் கொண்டார். தனது குடும்பத்தாரிடம் மகிழ்ச்சியுடன் திரும்பினார். அவரது அருளால் நமது காரியங்களை அல்லாஹ் சிரமமானதாக ஆக்காமல் எளிதாக்கட்டும்.
இந்தக் கதையில் உள்ள அதிசயம் நடந்திருக்குமா? என்பது தனியாக இருக்கட்டும். இந்தக் கதையில் உள்ள முரண்பாட்டையும் குழப்பத்தையும் கவனித்தாலே இது கட்டுக்கதை என்பது தெளிவாகும்.
தோல் வியாபாரியான கிராமவாசி தோல் விற்றுக் கொண்டு வருகிறார். ஷாகுல் ஹமீதின் சீடர்கள், இது ஷாகுல் ஹமீதுக்கு வழங்கப்படும் காணிக்கை என்ற எண்ணத்தில் அதைப் பறித்துக் கொள்கின்றனர்.
கிராமவாசி ஷாகுல் ஹமீதிடம் முறையிட்டதிலிருந்தும், கடுமையாக அழுததிலிருந்தும் அவரது சீடர்கள் வலுக்கட்டாயமாகத் தோலைப் பறித்துக் கொண்டனர் என்பது உறுதியாகின்றது.
ஷாகுல் ஹமீதின் சீடர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல் நடந்திருக்கின்றனர் என்றால் அவர் எவ்வாறு தன் சீடர்களைப் பயிற்றுவித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. பாதிக்கப்பட்ட கிராமவாசி அழுது முறையிட்ட பின்பாவது தன் சீடர்களைக் கடுமையாகக் கண்டித்தாரா என்றால் அதுவுமில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை தான் என்பதற்கு இது போதுமான சான்றாக உள்ளது. இதை உண்மை என்று நம்பினால் சீடர்களின் வழிப்பறியில் ஷாகுல் ஹமீதுக்கும் பங்குண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். குளத்து மண்ணைக் காசாக மாற்றிக் காட்டும் வல்லமை (?) பெற்ற ஷாகுல் ஹமீது, தன் சீடர்களின் வரம்பு மீறலைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் எவ்வளவோ வறுமையில் உழன்று வந்தனர். யாராவது நம்மை விருந்துக்கு அழைக்க மாட்டார்களா? என்று ஏங்கும் அளவுக்குப் பல சந்தர்ப்பங்களில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனர். மதீனாவின் மண்ணை எடுத்து தங்கக் காசுகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை.
நபிகள் நாயகத்திடம் இறை மறுப்பாளர்கள் வந்து, தங்கத்தினாலான மாளிகையை உருவாக்கிக் காட்டுங்கள் என்று கேட்டனர். அவ்வாறு ஆக்கி விட்டால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். ஆனால் அதற்கு அல்லாஹ் கூறிய பதில், “நான் மனிதனாகவும், தூதராகவும் இருக்கிறேன் என்று கூறுவீராக” என்பது தான்.
நபிகள் நாயகத்தை விட ஆற்றல் மிக்கவராக ஷாகுல் ஹமீதைச் சித்தரித்து அதன் மூலம் அவருக்குக் கடவுள் தன்மையை வழங்கி இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதே இதன் நோக்கம் என்பதைச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.
ஷாஹுல் ஹமீது அவர்கள் சிலருக்குக் கீமியாவை வழங்கினார்கள். வேறு சிலருக்கு சீமியாவை வழங்கினார்கள். மற்றும் சிலருக்கு ரீமியாவை வழங்கினார்கள். அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு இருந்த ஞானத்தை என்ன வென்பது?
அது என்ன? கீமியா, ரீமியா, சேமியா என்று விளங்கவில்லையா? குழம்ப வேண்டாம். உரைநடைப் பகுதியில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
ஷாஹுல் ஹமீது அவர்கள் குதைமா என்ற மலையில் ஏறினார்கள். அங்கே பழமையான குகையைக் கண்டார்கள். அங்கே நாற்பது நாட்கள் தங்கினார்கள். அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்றார்கள். உடனே அவரது இறைவன் அவருக்குத் தனது அருளைச் சொரிந்தான். அவரது பங்குக்கு ஏற்றவாறு அவருக்குச் சில ஆற்றல்களை வழங்கினான். குகையிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த மலையில் இருந்த சிலருக்கு இரும்பைத் தங்கமாக்கும் கீமியா எனும் கலையைக் கற்றுக் கொடுத்தனர். சில துறவிகளுக்கு மற்றவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் ஹீமியா எனும் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் சில துறவிகளுக்கு மறைவாக உள்ள நல்லவை கெட்டவை அனைத்தையும் வெளிப்படுத்தும் சீமியா எனும் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள். வேறு சில துறவிகளுக்கு ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்கு உயிரை மாற்றுகின்ற ரீமியா என்னும் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள்.
இந்தக் கலைகள் உண்மையில் உள்ளனவா? இவ்வாறு இறைவன் வழங்கியதற்கு இஸ்லாமிய அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? நிச்சயமாக இல்லை.
இந்துப் புராணங்களிலும், விட்டாலாச்சாரியாரின் சினிமாப் படங்களிலும் தான் இது சாத்திமாகுமே தவிர நடைமுறையில் இது சாத்தியமே இல்லை.
மனிதன் தன்னை யாரும் காணாமல் உருவமற்றவனாக மாறி விடுவது என்பது அறவே நடக்க முடியாததாகும். எதிரிகளால் கடுமையாக ஆபத்துகளை எதிர்நோக்கியிருந்த எத்தனையோ நபிமார்களுக்கு இது தேவையாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் மறைந்து தங்களை அவர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். ஆனால் எந்த நபிக்கும் அப்படி ஒரு ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை. எத்தனையோ நபித்தோழர்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்கள். யாரும் காணாமல் உடலை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தால் தங்களை இந்தச் சித்ரவதைகளிலிருந்து காத்துக் கொண்டிருக்க முடியும். இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
போர்க் காலங்களில் எதிரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலரையும் பல பகுதிகளுக்கு உளவாளிகளாக அனுப்பினார்கள். யாருக்கும் தெரியாமல் உடலை மறைத்துக் கொள்வது இந்த உளவுத் துறைக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். உளவு பார்க்க அனுப்பியவர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுக் கொடுத்து அனுப்ப முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு கலையே உலகில் கிடையாது.
ஆனால் ஷாகுல் ஹமீதுக்கு மட்டும் அல்லாஹ் அந்தக் கலையைக் கற்றுக் கொடுத்தானாம். அதுமட்டுமின்றி அவர் தவமிருந்து பெற்ற இந்தக் கலையை மலையில் இருந்த சாமியார்களுக்குக் கற்றுக் கொடுத்தாராம்.
இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நாற்பது நாட்கள் தவமிருந்து இந்தக் கலையை இவர் பெறுகிறார் என்றால் அதை அவர் மட்டும் தானே பயன்படுத்த முடியும்? அவருக்கு மட்டும் தானே இறைவன் அதை வழங்கினான். அந்த வரத்தைத் தவறான கொள்கையில் உள்ள சாமியார்களுக்கு இவர் கற்றுக் கொடுக்கலாமா? மக்கள் கண்களிலிருந்து மறையும் இந்தக் கலை மூலம் இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் செயல்பட்டால் என்ன செய்வது?
இது பைத்தியக்காரனின் உளறலாக உள்ளதே தவிர பக்தியுடன் ஓதுவதற்கு ஏற்றதாக இல்லை.
மறைவானவற்றையெல்லாம் வெளிப்படுத்தக் கூடிய கலை என்று ஒன்று உள்ளதா? மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்; அறிய முடியும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். நபிமார்கள், மலக்குகள், ஜின்கள் யாராக இருந்தாலும் மறைவானவற்றை அறிய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
ஆனால் ஷாகுல் ஹமீதுக்கு மட்டும் மறைவானவற்றை வெளிப்படுத்தும் கலையை அல்லாஹ் கற்றுக் கொடுத்தானாம். அவர் அதைப் பெருந்தன்மையோடு சாமியார்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டாராம்.
அதாவது சாமியார்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று முஸ்லிம்களை நம்பச் செய்து அவர்களை இஸ்லாத்திலிருந்து அப்புறப்படுத்துவதே இதன் நோக்கம்.
கூடு விட்டுக் கூடு பாயும் கலையையும் அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தானாம். அவர் அதையும் சாமியார்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டாராம். திருக்குர்ஆன், நபிமொழிகளில் இதற்கு ஆதாரம் உள்ளதா? அல்லது நடைமுறையிலாவது யாரேனும் கூடு விட்டுக் கூடு பாய்ந்து காட்டியிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.
ஏனைய மதத்தவர்கள் இதுபோன்ற கட்டுக்கதைகளைக் கூறி வருகின்றனர். இவற்றையெல்லாம் களையெடுக்க அருளப்பட்ட இஸ்லாத்தில் இவற்றைத் திணிப்பது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம்.
இரும்பைத் தங்கமாக்குதல், கூடு விட்டுக் கூடு பாய்தல், மாயாவி வித்தை, மறைவானவற்றை அறிதல் இவையெல்லாம் சாமியார்களுக்குத் தெரியும் என்று நம்ப வைத்து, முஸ்லிம்களை அவர்களுக்கு அடிமையாக்கி இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது தான் இந்த மவ்லிதை எழுதியவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இதுபோன்ற கட்டுக்கதைகள், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கப்ஸாக்கள் அடங்கிய மவ்லிதுக் குப்பைகளைப் படிப்பதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!