வெறுக்கப்பட்ட குணங்கள்
வெறுக்கப்பட்ட குணங்கள்
கெட்ட எண்ணங்கள்
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
ஆதாரமில்லாமல் சந்தேகிப்பது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் :(புகாரி: 6066),(முஸ்லிம்: 5006)
அருவெறுக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்துதல்
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் நுழைய) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்; (இவர்) அந்தக் கூட்டத்தாரிலேயே (மிக) மோசமானவர்” என்று சொன்னார்கள். (வீட்டுக்குள்) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிடமும் கனிவாகப் பேசினார்கள்.
(அவர் சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே அந்த மனிதரைப் பற்றித் தாங்கள் ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவரிடமிருந்து ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர்” என்று கூறினார்கள்.
(புகாரி: 6131),(முஸ்லிம்: 5051)
கவனமற்ற மோசமான வார்த்தைகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 6477),(முஸ்லிம்: 5711)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ள(தான மர்ம உறுப்பி)ற்கும், தம் இரு தாடைகளுக்கிடையே உள்ள(தான நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ(ரலி)
இறந்தோரை ஏசுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் செய்த (நன்மை, தீமை ஆகிய) வற்றின்பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
அவதூறு சொல்லுதல்
உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.
இதைக் கேள்விப்பட்ட போது “இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு” என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒரு போதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.
இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
நம்பிக்கை கொண்ட வெகுளி களான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58) ➚
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 2766),(முஸ்லிம்: 145)
செய்த தர்மங்களை சொல்லிக்காட்டுதல்
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.
அபூதர் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன்.
அதற்கு, “தமது ஆடையை (தரையில்படுமாறு) கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும் தடுத்த விஷயங்களில் இருந்து விலகியிருப்போமாக! வல்ல அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!