வெட்கம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

பொதுவாக, வெட்கப்படுவது என்றாலே அது பெண்களுக்குரிய செயல் என்றுதான் நாம் அனைவரும் நினைத்திருக்கின்றோம். மாறாக, வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும். மேலும், வெட்க உணர்வைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய செய்திகளைப் பார்ப்போம்.

அழகும், அசிங்கமும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கெட்டவார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(திர்மிதீ: 1897)

நபிகளாரின் வெட்கக்குணம்

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: (புகாரி: 3562)

நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடுத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்றுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அல்முஹீரா பின் ஷ‎‎ஃபா (ரலி), நூல்: (நஸாயீ: 17)

குளிப்பதில் பேணுதல்

வெட்டவெளியில் (மறைக்க வேண்டியவை வெளிப்படுமாறு) ஒரு மனிதர் குளித்துக் கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே மெம்பரின் மீது ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்துரைத்துவிட்டு சங்கையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சகிப்புத்தன்மை மிக்கவன். (நாம் செய்யும் குறைகளை) மறைப்பவன், அவன் வெட்கத்தையும் மறைப்பதையும் விரும்புகிறான். உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக்கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஃலா பின் உமய்யா (ரலி), நூல்: (நஸாயீ: 403)

மறைவிடத்தை பார்க்க தகுதியானவர்

நான் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மறைக்க வேண்டியப் பகுதிகளில் எவற்றை மறைக்க வேண்டும். எவற்றை நாங்கள் மறைக்காமல் விட்டுவிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உன்னுடைய மறைவிடத்தை உனது மனைவி மற்றும் நீ அடிமையாக்கிய பெண்ணிடத்திலேத் தவிர மற்றவர்களிடத்தில் மறைத்துக் கொள் என்று கூறினார்கள். அப்போது ஒருவர் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருந்தாலுமா? (மறைக்க வேண்டும்) என்று கேட்டார். அதற்கு அவர்கள் அதை எவரும் பார்க்கமுடியாதவாறு உம்மால் (மறைக்க) முடிந்தால் நீ மறைக்க வேண்டும். நான் (அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தனியாக இருந்தால் (மறைக்க வேண்டுமா?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவர் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹய்தா (ரலி), நூல்: (திர்மிதீ: 2693)

அபூ சுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு, நபி (ஸல்) அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருந்தார். ரோம் நாட்டு மன்னரான ஹிர்கல் என்பவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அரபுக் கூட்டத்தைப் பார்த்து உங்களில் முஹம்மதைப் பற்றி யார் நன்கு அறிந்தவர்? என்று கேட்டார். உடனே அன்று பெருமானாரின் எதிரியாகத் திகழ்ந்த அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் பற்றி தவறானத் தகவல்களைத் தர வேண்டும் என்பதற்காக முந்திக் கொண்டு எனக்குத் தெரியும் என்று சொன்னார்.

ஆனால் மன்னர் இவர் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுபிடிக்க அவருக்குப் பின்னால் உள்ள மக்களைப் பார்த்து நான் இவரிடத்தில் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொய்யான பதில் கூறினால் என்னிடத்தில் தெரியப்படுத்திவிடுங்கள் என்று கூறினார். இப்போது பொய் கூறினால் நாம் சபையோர்களின் முன்னிலையில் அசிங்கப்பட்டுவிடுவோம் என்ற வெட்கத்தின் காரணமாக அபூசுஃப்யான் அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய உண்மைகளை சற்றும் மாற்றாமல் எடுத்துரைத்தார். இஸ்லாத்தை தழுவிய பின்பு இதைப் பற்றி அபூசுஃப்யான் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்விடுவார்கள் என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களைப் பற்றி நான் பொய்யுரைத்திருப்பேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 7)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டுவராது.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹ‎ஸைன் (ரலி), நூல்: (புகாரி: 6117)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள் என்பது.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: (புகாரி: 3483)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலி), நூல்: (புகாரி: 9)

அன்சாரிகளைச் சேர்ந்த ஒருமனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே அவரைக் (கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்வீட்டில் தன்னுடைய தொடைகளையோ அல்லது கெண்டைக்கால்களையோ திறந்தவராக படுத்திருந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்நிலையில் இருக்க அவருக்கு அனுமதி வழங்கினார்கள். பின்பு அவர்கள் (உள்ளே வந்து நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கோரிய போது நபி (ஸல்) அவர்கள் இந்த நிலையிலே அவருக்கு அனுமதி வழங்க (உள்ளே வந்து நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார். உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதி கோரியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து உட்கார்ந்து தனது ஆடையை சரிசெய்தார்கள்.

பின்பு அவர்கள் உள்ளே வந்து பேசினார்கள். அவர்கள் சென்ற பின்பு நான் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) அபூபக்கர் (ரலி) அவர்கள் நுழையும் போது அவர்களுக்காக நீங்கள் தயாராகாமலும் பொருட்படுத்தாமலும் இருந்தீர்கள். உமர் (ரலி) அவர்கள் நுழையும் போதும் அவருக்காக நீங்கள் தயாராகாமலும் பொருட்படுத்தாமலும் இருந்தீர்கள். பின்பு உஸ்மான் (ரலி) அவர்கள் வந்தபோது தாங்கள் எழுந்து அமர்ந்து ஆடையை சரிசெய்தீர்கள். (இதற்கு என்ன காரணம்) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் வானவர்கள் யாரைப் பார்த்து வெட்கப்படுகிறார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்படக் கூடாதா?. என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (முஸ்லிம்: 4414)

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் மக்களுடன் அமர்ந்துகொண்டிருந்த போது மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றுவிட்டார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவர் திரும்பிச் சென்று விட்டார். நபி (ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்ததும் கூறினார்கள். இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டுக் கொண்டு (கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

சபைக்கு வந்த இருவரில் ஒருவர் ஆர்வப்பட்டு முன்னால் வந்து அமர்ந்தார். ஆனால் மற்றொருவர் முன்னால் வர வெட்கப்பட்டுக் கொண்டு இறுதியில் அமர்ந்து கொண்டார். முன்னால் சென்று அமர்ந்தவருக்குக் கிடைத்த சிறப்பை பின்னால் அமர்ந்தவருக்கு கிடைக்கவிடாமல் செய்தது வெட்கம் தான். நபித்தோழியர்கள் மாதவிடாய் போன்ற சட்டங்களை அறிந்துகொள்வதற்காக கூச்சப்படாமல் நபி (ஸல்) அவர்களிடத்தில் கேள்விகளை கேட்பார்கள். இதை பின்வரும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச்சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்துகொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (முஸ்லிம்: 500)

உம்முசுலைம் என்ற பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம். அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக்கொண்டிருந்த) உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தமது முகத்தை (வெட்கத்தால்) மூடிக்கொண்டு பெண்களுக்கும் ஸ்கதம் ஏற்படுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நன்றாகக் கேட்டாய். ஆம். அப்படி இல்லையென்றால் அவளது குழந்தை (சில நேரங்களில்) எதனால் அவளைப் போன்றிருக்கிறது என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் பின்து உம்மு சலமா (ரலி), நூல்: (புகாரி: 130)

ஆதம், ஹவ்வா

அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.
(அல்குர்ஆன்: 7:22)➚

மேலும் மண்ணுலகத்திற்கு மனிதனை இறக்கி வைத்து, அவனுக்கு மரியாதை தரக்கூடிய, அலங்காரமான ஆடையையும் சேர்த்தே இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.
(அல்குர்ஆன்: 7:26)➚

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ”எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது” என்று அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1622)

மக்கா நகரம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் நபி (ஸல்) அவர்கள் நிர்வாணம் எனும் வாசலுக்கு நிரந்தர ஆடை அணிவிக்கின்றார்கள்
.ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் (ஆடை) அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன்: 7:31)➚

என்ற வசனம் வணக்கத்தின் பெயரால் உருவாகும் நிர்வாணக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன்: 24:31)➚

நாண உணர்வை நாசமாக்கும் நடிப்புலகம்

”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்” என்று சொன்னார்கள். ”ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்” என்றார்கள். ”ஒருவர் தனியாக இருக்கும் போது?” என்று நான் கேட்டதற்கு, ”அல்லாஹ் வெட்கப் படுவதற்கு மிகவும் தகுதியானவன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி),(திர்மிதீ: 2693)

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ”அவரை (கண்டிக்காமல்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓர் அம்சம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி),(புகாரி: 24)

இந்த ஹதீஸின் படி வெட்கம் தீமையைச் செய்வதை விட்டும் தடுக்க வேண்டும்? அவ்வாறு தடுத்திருக்கின்றதா என்றால் இல்லை. வெட்கம் இல்லையெனில் விரும்பியதையெல்லாம் செய் என்ற பழமொழிக்குத் தக்க, வெட்கங் கெட்ட எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றோம். இத்துடன் மட்டும் நாம் நின்று விடுவதில்லை. நம்முடைய சந்ததியினரை தலைமுறை தலைமுறையாய் படம் பார்க்க வைத்து வெட்கக் கேட்டில் வீழச் செய்கின்றோம். இதன் விளைவாய், ”யார் இஸ்லாத்தில் தீயதை நடைமுறைப் படுத்துகின்றாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின்னால் அதைச் செய்பவரின் பாவமும் அப்பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப் படாத அளவுக்கு உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி),(முஸ்லிம்: 1691)

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 17:32)➚

யாரும் எடுத்த எடுப்பில் விபச்சாரத்திற்குச் சென்று விடுவதில்லை. அதற்குக் காரணமாக அமைந்துள்ள புலன்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடக் கூறுகின்றார்கள்.
”விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது. அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 6243)

மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து வெட்கப்படுவது குற்றமில்லை. மேலும், வெட்க உணர்வு இருந்தால்தான் ஒரு சில பாவச் செயல்களை செய்வதிலிருந்து நம்மை காத்து கொள்வோம். அதே சமயத்தில், சத்தியத்தை சொல்வதில் வெட்கப்பட கூடாது.