வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?
வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்வதாக இருந்தால் தூரமாகச் சென்று விடுவார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள் :(அபூதாவூத்: 1),(நஸாயீ: 17)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துப் பெண்கள் மாலை மயங்கும் வரை கட்டுப்படுத்தி இருந்து விட்டு மாலை மயங்கியதும் திறந்தவெளி கழிப்பிடம் செல்வார்கள்.
இது பற்றி ஆயிஷா (ரலி) கூறும் போது
நானும், உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வது வழக்கம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் முற்கால அரபுகளின் வழக்கமே அப்போது எங்களது வழக்கமாயிருந்தது.
(புகாரி: 2661)(சுருக்கம்)
இதே கருத்து(புகாரி: 4141, 4750)ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது.
ஊருக்கு வெளியே மலஜலம் கழிக்கச் செல்வது அறியாமைக் கால மக்களின் வழக்கமாக இருந்தது என்பதையும், அதே வழக்கத்தை நபித்தோழர்களும் கடைப்பிடித்துள்ளனர் என்பதும், பின்னர் வீடுகளை ஒட்டி கழிவறை அமைக்கப்பட்டன என்பதும் மேற்கண்ட செய்தியில் இருந்து அறிந்து தெரிகிறது.
இன்று நாகரீகமான செயலாகக் கருதப்பட்டு ஐநா சபை மூலம் வலியுறுத்தப்படும் நாகரீகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தான் உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மலஜலத்தை அடக்கிக் கொள்ளக் கூடாது என்ற இஸ்லாத்தின் வழிகாட்டுதலை வீட்டில் கழிவறை இருந்தால் தான் செயல்படுத்த முடியும்.
மேலும் பிறர் பார்க்காமல் முடிந்த அளவு மறைத்துக் கொள்ள வேண்டும். இதைத் திறந்த வெளியில் நிறைவாகச் செய்ய முடியாது.
மேலும் மலஜலம் கழித்து விட்டு கழுவாமல் அப்படியே வந்து பின்னர் கழுவும் அநாகரீகமும் இதனால் தடுக்கப்படும்.
பெண்களைப் பொருத்த வரை கொடூரர்களின் திருட்டுத் தனமான ரசனையில் இருந்தும் வெட்ட வெளியில் பாதுகாப்பு பெற முடியாது.
எனவே வீடுகளில் கழிவறை அமைப்பது வரவேற்க வேண்டிய நபிவழியாகும்.
நான் ஒரு நாள் என் வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது வீட்டில்) இரண்டு செங்கற்கள் மீது பைத்துல் முகத்தஸை நோக்கி அமர்ந்து கொண்டு தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டுக்குள் கழிப்பறை அமைத்துக் கொண்டார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.