07) விமர்சனம் 6,7,8

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

விமர்சனம் 6

(அல்குர்ஆன்: 25:48). 27:63 பரிசுத்த ஆவியானவரை மழை காற்றாக உவமிக்கின்றது 2;87 66;12ல் இந்த துய ஆவியால் ஏசு பிறந்ததாவும் கூறுகிறது. (பக்கம் 51) என்று ஜெபமணி எழுதுகிறார்.

நமது பதில்

ஆனால் இவ்வசனங்கள் கூறுவதென்ன? அல்லாஹ் நிழலைக் கூட்டிக் குறைப்பது பற்றியும் சூரியனை நிழலுக்கு முன்னோடியாக்கியது பற்றியும் இரவை சிரமபரிகாரத்திற்குரிய நித்திரைக்காகவும் பகலை நடமாட்டத்துக்காகவும் படைத்தது பற்றிக் கூறிவிட்டு அடுத்த வசனங்களில் அவன் தான் அருள் மாரிக்கு முன்னதாக காற்றை நன்மாராயமாக அனுப்பி வைக்கிறான் (25;48) என்றும்

மேகத்திலிருந்து பரிசுத்தமான தண்ணீர் தருவது பற்றியும் கூறுகிறான்.

அதே மாதிரி 27;93 வசனம் என்ன கூறுகிறது தெரியுமா?

கடலிலோ கரையிலோ இருள்களிலோ உங்களுக்கு வழிகாண்பிப்பவன் யார்? அவனுடைய அருள்மாரிக்கு முன்னதாகக் காற்றை நன்மாராயமாக அனுப்பி வைப்பவன் யார்? என்று கூறப்படுகிறது.

மழை பெய்யுமுன் காற்று வருவதை இறைவன் கூற இவர் அக்காற்றையே பரிசுத்த ஆவியாகக் கற்பனை செய்து கொள்கிறார்.

அதே மாதிரி 2;87 ல் பரிசுத்த ஆவி (ரூஹுல் குத்ஸ்) என்று சொல்லப்படும் ஜிப்ரயீலையும் 66;12ல் இறைவன் புறத்திலிருந்து மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பத்தில் ஊதப்பட்ட ஆவியையும் இறைவன் குறிப்பிடுகிறான். இதை நாம் மறுக்கவில்லை. கிறித்துவக் கொள்கையை நிலை நாட்டுவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறோம்.

(ஆவியில் இட்லி வேகும் என்றால் கூட பரிசுத்த ஆவியைத் தான் கூறுவதாக மக்களைக் குழப்புவது கிறித்தவ மத குருமார்களின் வழக்கம்)

விமர்சனம் 7

தூய ஆவியைக் குறித்து(அல்குர்ஆன்: 17:39)ல் மகாமே மஹ்மூத் என்றும் கூறுகிறது என்கிறார் ஜெபமணி. (பக்கம் 51)

நமது பதில்

ஆனால் 17:39 ல் இறைவன் கூறுவதென்ன?

இவை உம் இறைவனால் உமக்கு வஹி மூலம் அருளப்பட்டது. ஆகவே அல்லாஹ்வுடன் மற்றோரு ஆண்டவனை ஆக்காதீர். நீர் நிந்திக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் தூக்கி எறியப்படுவீர் என்பது தான் அந்த வசனம்.

ஆண்டவனுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் அவனுக்கு குமாரன் இருப்பதாகக் கற்பனை செய்தது போல் செய்யலாகாது என்று கடுமையான எச்சரிக்கை தான் இவ்வசனத்தில் இருக்கிறது. பரலோகத்தில் இருக்கும் பிதா தான் இவரது கையைப் பிடித்து இப்படி எழுதச் செய்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறதல்லவா?

மகாமே மஹ்மூத் பற்றி இவர் குறிப்பிடாத மற்றொரு வசனம் குறிப்பிடுவது உண்மையே. அதற்கும் பரிசுத்த ஆவிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நபியே உம்மை மகாமே மஹ்மூதில் (உயர்ந்த இடத்தில்) உம் இறைவன் எழுப்புவான் என்று அந்த வசனம் கூறுகிறது.

விமர்சனம் 8

(அல்குர்ஆன்: 17:85)ல் முகமது ரூஹிமின் அல்லாஹ்வைக் குறித்து மிகச் சொற்ப ஞானமே தமக்கு அருளப்பட்டதாக கூறுகிறார் என ஜெபமணி கூறுகிறார். (பக்கம் 54)

நமது பதில்

இந்த வசனம் எதைக் குறிக்கிறது என்பதை முன்னர் இரண்டாவது விமர்சனத்தில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். ஜெபமணி குர்ஆனில் ஈஸா (அலை) பற்றி வரும் ரூஹுல் குத்ஸ் என்ற சொல்லையும் பொதுவாக இறைவன் தன் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ரூஹு ஆவி என்ற சொற்களையும் ஒன்றாகக் கருதி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார். இவரை இப்படியே விட்டால் நீராவியைக் கூட பரிசுத்த ஆவு என்று சொன்னாலும் சொல்வார் போலும் என்று தெரிகிறது.