05) விமர்சனம் 4

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

இன்னும் திருக்குர்ஆனின் வசன எண்களைக் குறிப்பிட்டு இவர் செய்துள்ள தில்லுமுள்ளகள் ஏராளம். இவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக கூறும் மேற்கோள் நூலான தமிழ்க் குர்ரான் ஆ.கா.அப்துல்கமீது பாகவியின் மொழி பெயர்ப்பு ஆகும். (பக்கம்111)

நம்மிடம் அந்தத் தமிழ்க் குர்ரான் உள்ளது. இவர் எண்கள் எடுத்துக் கொடுத்திருக்கும் வசனங்களின் விளக்கத்தை அதே எண்ணில் தேடிப் பார்க்கும் போது இவரின் பித்தலாட்டங்கள் அப்பட்டமாக அம்பலமாகின்றன. சான்றுக்குச் சிலவற்றைக் காண்பிப்போம்.

20:90. 19:18. 19:87 ல் கியாமத் (நியாயத் தீர்ப்பு) நாளில் பரிந்து பேசுபவன் அந்த ரஹ்மான் என்றும் கூறுகிறது 3:164 ல் அந்த ரட்சகனை யூதரி லிருந்து எழும்பப் பண்ணுவதாகவும் கூறுகிறது (பக்கம் 49) என்கிறார்.

நமது பதில்

ஆனால் இவர் குறிப்பிட்ட எண்களுக்கும் இவர் குறிப்பிட்ட விவரத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. சரியான மொழி பெயர்ப்புகளோ தவறான கொள்கையின் மீது எழுதப்பட்டிருக்கும் கிருத்தவக் கோட்டையைத் தகர்த்தெரியும் சம்மட்டிகளாகவே இருக்கின்றன.

இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி என்னுடைய ஜனங்களே நீங்கள் வழி தப்பி விட்டீர்கள் நிச்சயமாக உங்கள் இறைவன் ரஹ்மான் தான். என்னைப் பின்பற்றுங்கள். என்னுடைய கட்டளைக்கு வழிப்படுங்கள் என்று கூறினார்

(அல்குர்ஆன்: 20:90)

இங்கே கியாமத் பற்றியோ பரிந்துரை பற்றியோ கூறப்படவில்லை இஸ்ரவேலர்களான யூதர்கள் மெய்வழி மறந்து பொய் வழி புகுந்ததையும் ஹாரூன் (அலை) கூறுவதாகவும் ஹாரூனுக்கு மேலே ஒரு ரஹ்மான் இருக்கிறான் என்பதையும் தான் கூறுகிறது.

நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன்

(அல்குர்ஆன்: 19:18)

இது தான் அவர் குறிப்பிட்ட வசனத்தின் பொருள் இதிலும் கியாமத் பற்றியோ பரிந்துரை பற்றியோ எதுவுமில்லை. மாறாக கிறித்துவர்கள் கடவுளாகவும் கடவுளைப் பெற்றெடுத்தாகவும் கன்னித்தாயாகவும் வணங்கும் மேரி என்ற மர்யம் (அலை) அவர்களின் கூற்றாக அந்த வசனம் அமைந்துள்ளது. கடவுளின் குமாரரோ கடவுளின் தாயோ தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியாமல் தனக்கும் கடவுளான ரஹ்மானிடம் பாதுகாப்பைத் தான் தேடியதைத் தான் 19:18 வசனம் கூறுகிறது.

ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் சிபாரிசு பேசச் சக்தி பெற மாட்டார்

(அல்குர்ஆன்: 19:87)

ஏசுவாக இருந்தாலும் அவரால் கூட கியாமத்தில் எதுவும் செய்ய முடியாது என்பது ஒரு புறமிருக்க பரிந்து பேசுவதற்குக் கூட இறைவனின் அனுமதியின்றி இயலாது என்று கூறி கிறிஸ்துவ நம்பிக்கையை இவ்வசனம் தகர்க்கிறது. இதிலும் இவர் கூறிய கருத்து எதுவுமே இல்லை.

3:164 ல் அந்த ரட்சகனை யூதரிலிருந்து எழும்பப் பண்ணுவதாகக் கூறுகிறது என்கிறார் ஜெபமணி (பக்கம் 49)

அல்லாஹ் விசுவாசிகளின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்தருளச் செய்தான். என்பது 3:164 வசனம்.

இங்கே ரட்சகனை எழும்பப் பண்ணுவதாக எதுவுமே இல்லை. ரட்சகன் தான் கூறக் கூடியதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே மக்களிடம் எடுத்துச் சொல்லும் தனது தூதரை அனுப்புவதாகவே கூறுகிறான். மேலும் யூதர்களிலிருந்து என்றும் இவ்வசனம் கூறவில்லை. அவர்களிலிருந்து என்று மட்டும் இறைவன் இங்கே கூறுகிறான். அவர்கள் என்றால் எவர்கள்?

ஜெபமணி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்தை உம்மிகள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். முஹம்மதுவின் சீடர்கள் உம்மிகள் (பக்கம் 30)

3:164 வசனத்திற்கு தொடர்பான மற்றொரு வசனம் 62:2 வசனமாகும்.

இந்த வசனத்தில் எழுத்தறிவில்லாத ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை அவன் அனுப்பி வைத்தான்(62:2)

இதன் மூலம் அவர்களிலிருந்தே என்பது யூதர்களைக் குறிக்கவில்லை. உம்மிகளை அதாவது அரபுகளைத் தான் குறிக்கிறது. அந்த உம்மிகளுக்கு தூதராக அனுப்பப்பட்டவர் முஹம்மது (ஸல்) அவர்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

திருக்குர்ஆன் மட்டுமல்ல. இவர் கூறும் முன்னறிவிப்பு உபாகமம் 18:18ல் கர்த்தர் மேசேயிடம் கூறிய விபரத்தில் இடம் பெற்றுள்ளது. உன்னைப் போல் ஒரு தீர்க்கத்தரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரில் இருந்து எழுப்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார் என்பது அந்த வசனம்.

இவ்வசனத்தில் அவர் சகோதரர் என்பது யாரைக் குறிக்கும்?

மேலும் உபாகமம் 34:12ல் முகமுகமாய் அறிந்த மேஸேயைப் போல் ஒரு தீர்க்கத்தரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும் என்று கூறப்படுவதில் இருந்து இதை அறியலாம்..

மேஸேயைப் போல் ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலரில் எழும்பவில்லை. ஆனால் அவர்கள் சகோதரராகிய இஸ்மவேலரில் எழுந்தார். உன்னைப் போல் ஒரு தீர்க்கததரிசியை என்பது முஹம்மது (ஸல்) அவர்களைத் தான் குறிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மோசேவுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் தெளிவான வாழ்க்கைச் சட்டம் அருளப்பட்டது. இருவரும் எதிரிகளைச் சந்தித்தனர். அற்புதமான வழிகளால் வென்றனர். இருவருமே இறைத் தூதர்களாகவும் இராஜ்ய நிர்வாகிகளாகவும் இருந்தனர். இருவரும் கொலைச் சதிக்குப் பயந்து நாடு துறந்தனர். இவற்றிற்கு மேலாக இருவரும் தந்தை தாய் இணைந்து பிறந்தனர். மணமுடித்தனர். மக்களைப் பெற்றனர். குடும்பத் தலைவர்களாயினர்.

ஆனால் யூதரில் எழுந்த இயேசு இப்படி எதிலுமே மோஸேயுடன் ஒத்துப் போகவில்லை. எனவே இங்கே இயேசுவைக் கூறுவது அபத்தத்திலும் அபத்தம்(அல்குர்ஆன்: 3:164)வசனத்தில் கூறப்படுவதும் உம்மிகளில் உதித்த முஹம்மது (ஸல்) அவர்களைத் தான்.

இந்த வசனத்தில் கூறப்படுவது ஈஸாவைப் பற்றியே என்று கூறுவதன் மூலமும் தூதரை இரட்சகராக ஆக்கியதின் மூலமும் இரண்டு மோசடிகளைச் செய்திருக்கிறார் ஜெபமணி.