17) விமர்சனம் 24

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

உம்மிகள் சொன்ன யாவுமே சரியானவை அல்ல என்பதை என் கையிலுள்ள குர்ஆன் புத்தகத்தின் பக்கம் 13ல் இதன் ஆசிரியர் விவரித்துள்ளார். இங்கே 454 வசனங்கள் ஆயிஷாவின் வசனங்களுக்கு மாறுபாடாக உள்ளது. ஆயிஷா அவ்வசனங்களைத் திருத்தி சேர்த்ததாகவும் அறிவித்தது

என்று திருவாய் மலர்ந்துள்ளார் ஜெபமணி.

இவர் குறிப்பிட்ட புத்தகத்தில் என்ன உள்ளது என்பதைக் கூறும் முன் ஜெபமணியன் அறிவீனத்தைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகி விட்டது. முன்னர் கி பி எட்டாம் நூற்றாண்டிலேயே குர்ஆன் எழுதப்பட்டது என்று கூறியவர் இங்கே ஆயிஷா (ர லி) அவர்களின் காலத்திலேயே எழுதப்பட்டதாக ஒப்புக் கொள்கிறார். தான் என்ன சொல்கிறோம் என்று புரியாத மரமண்டையாருடன் தாம் நாம் மோத வேண்டிய நிலை.

அவர் குறிப்பிடுவது ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் வெளியிட்ட நீண்ட முன்னுரையுடன் கூடிய பழைய தமிழ் தர்ஜீமாவைத் தான். அதில் கூறப்படுவது என்னவென்றால் திருக்குர்ஆனின் வசனங்கள் எத்தனை என்பதில் உள்ள கருத்து வேறுபாடு கூறப்படுகிறது.

ஆயிஷா (ர லி) அவர்களின் கருத்துப்படி குர்ஆன் வசனங்கள் 6666 மற்றும் சிலரது கருத்துப்படி 6212 என்று பட்டியல் போடப்படுகின்றது. 6212க்கும் 6666 க்கும் இடையே உள்ள வித்தியாசம் 454 ஆக இந்த 454 வசனங்கள் ஆயிஷாவால் சேர்க்கப்பட்டன எனத் தெளிவடைந்துள்ளார் ஜெபமணி.

இந்த விஷயத்தில் அவருக்கு அறியாமை இருப்பதை மன்னிக்கலாம். ஏனெனில் வேண்டுமென்று அவர் இவ்வாறு கூறவில்லை. அவர் புரிந்து கொண்ட லட்சனம் இவ்வளவு தான். அதன் விளக்கத்தை இனி காண்போம்.

திருக்குர்ஆனில் எந்த ஒரு வார்த்தையும் யாராலும் கூட்டப்படவுமில்லை. குறைக்கப்படவும் இல்லை. இன்று எதனைக் குர்ஆன் என்றுக் கூறுகிறோமோ அது தான் 14நூற்றாண்டுகளாகக் குர்ஆனாக இருக்கிறது.

அப்படியானால் எதற்காக எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட வேண்டும். இதைத் திருக்குர்ஆன் முதல் அத்தியாயத்தைக் கூறி விளக்கலாம்.

அல்ஹம்து ல்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது ஒரு வசனம் அர்ரஹ்மானிற் ரஹீம் என்பது மற்றொரு வசனம். சில பேர் இவ்விரண்டும் ஒரு வசனம் என்பார்கள். அதாவது சிலருடைய கருத்துப்படி அவை இரண்டு வசனங்கள். வேறு சிலருடைய கருத்தின் படி இரண்டும் சேர்ந்து ஒரு வசனம்.

குர்ஆனுடைய வசனத்தின் முடிவு எங்கே? மறு வசனத்தின் ஆரம்பம் எங்கே? என்று எழுந்த கருத்து வேறுபாட்டினால் திருக்குர்ஆனின் வசன எண்கள் எத்தனை என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் இரு வேறு எண்களைக் கூறுவோரின் கருத்துப்படியும் குர்ஆனில் கூடுதல் இல்லை. குறைவும் இல்லை. இதையும் ஜெபமணியால் புரிந்து கொள்ள முடியவில்லை.