14) விமர்சனம் 15

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

இப்படியாக பதர் யுத்தத்தால் மெக்காவாசிகளை முகமது உடனிருந்து வெற்றிக் கொண்டார். இது முதல் முகமதுவின் புகழ் பரவ ஆரம்பித்தது. மெக்காவாசிகள் மதினாவிலுள்ள யூதர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு உஹித் என்ற போரில் முகமதுவின் படையினரை படுதோல்வி அடையச் செய்து விட்டனர். ஆயினும் மதினா நகரைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. யூதர்கள் இந்தப் போரில் மெக்காவாசிகளுக்கு வஞ்சகமாக உதவியதை அறிந்து முகமது யூதர்களில் 800 பேரைக் கொன்று அவர்களின் பெண்களைச் சிறைபிடித்து மனையாட்டிகளாக்கிக் கொண்டனர். இது மதினா மக்களுக்கு பெரும் மகிழச்சியையும் புதிய தெம்பையும் உண்டாக்கியமையால் யூதர்களை அழிப்பதையே தங்கள் மார்க்கக் கடமை சொல்ல ஆரம்பித்தனர். தானியேல்6:10ல் படி சமயம் வரை முகமது எருசலேமை உற்று நோக்கியே தொழுதார் என்கிறார் ஜெபமணி.

(பக்கம் 26)

எப்படியிருக்கிறது ஜெபமணியின் பிதற்றல்? உலக வரலாற்றில் போர்க்களத்தில் புதுநெறி புகுத்தியவரும் எதிரிகளையும், கைதிகளையும் நியாயத்துடன் நடத்தியவருமான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி வரலாற்றுக்கு முரணாகச் சித்தரிக்கும் இலரைப் பண்டைய வரலாற்றைக் கொஞ்சம் படிக்கச் சொல்கிறோம்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கியும், விளைநிலங்களை எரியூட்டியும், தோற்றவனின் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்ததும், தோற்றவரின் மனைவியரின் கூந்தலை வெட்டி அவமதித்ததும் தான் கடந்த காலப் போர் நெறிகளாகக் கருதப்பட்டு வந்தன.

இவற்றையெல்லாம் மாற்றி அமைத்த நபிகள் நாயகம் (ஸல்) பற்றி கொச்சையாக விமர்சிக்கிறார் ஜெபமணி. இதற்கு விளக்கம் தருவதற்கு முன் ஜெபமணியின் வேத நூலான பைபிள் சமாச்சாரத்தைக் கொஞ்சம் பார்ப்பது நல்லது.

யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரத்தங்களை அக்கினியால் சுட்டெரித்தான். அக்காலத்திலே யோசுவா திரும்பி ஆத்சோரைப் பிடித்து அதன் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப் போட்டான். ஆத்சோர் அந்த ராஜ்ஜியங்களூக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது. அதிலிருந்த நர ஜீவன்களையெல்லாம் பட்டாயக் கருக்கினால் வெட்டிச் சங்காரம் பண்ணினார்கள். சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை. ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான். அந்தப் பட்டணங்களில் உள்ள மிருக ஜீவன்களையும் மற்றப் பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்து தீருமட்டும் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டிப் போட்டார்கள் சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.

(யோசுவா 11:9 .11. 14)

அவர்களை நோக்கி ஸ்திரீகள் எல்லோரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?குழந்தைகளில் எல்லா ஆண்களையும் புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்? ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண்களையும் உங்களுக்காக உயிரோடு விட்டு வையுங்கள் ? என்கிறது பைபிள்

(எண்ணாகமம் 31:15 .17 . 18)

இது போல் இன்னும் அனேக வசனங்கள் பைபிளில் மலிந்து கிடப்பதைக் காணலாம். அதுவும் கர்த்தரின் கட்டளைப்படியே நடந்ததாகக் கூறப்படுகிறது. போரில் சம்பந்தப்படாத பச்சிளம் குழந்தைகளையும் வெட்டிக் கொல்லுமாறு சொல்லும் மதம் உலகத்தில் ஏதேனும் உண்டா? இவ்வாழ்வை அனுபவித்த பெண்களையெல்லாம் வெட்டிக் கொல்லுமாறு கடவுள் கூறுவாரா? கன்னி கழியாத பெண்களை மட்டும் நீங்கள் அனுபவிப்பதற்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கடவுள் கூறுவாரா?

கிறிஸ்துவம் கூறுகிறது; பைபிள் கூறுகிறது; கிறிஸ்தவர்களின் கர்த்தர் கூறியிருக்கிறார். இதை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஜெபமணியார் 800 யூதர்களைக் கொல்ல நபிகளார் உத்தரவிட்டதை விமர்சனம் செய்யும் அருகதையில்லாதவர். ஜெபமணிக்கு இந்த அருகதை இல்லை என்றாலும் அவரது விமர்சனத்திற்கு நாம் விளக்கம் தருவோம். அதற்கு முன்னால் முக்கிய விஷயம் ஒன்றை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

குற்றங்களையும், குற்றவாளிகளையும் இஸ்லாம் பார்க்கும் பார்வை வேறு. ஏனைய அரசியல் மத சித்தாந்தங்களின் பார்வை வேறு.

தொடர்ந்து குற்றங்கள் புரிவோருக்கு எந்த போதனையும் பயன் தராது. திருடுபவன் அதைத் தவறு என்று தெரிந்து தான் திருடுகிறான். விபச்சாரம், கொலை செய்தவனுக்கு அது தவறு என்று நன்றாகவே தெரியும். தவறு என்று நன்றாகத் தெரிந்தும் தவறு செய்பவனை திருத்தவும் அவனது தவறிலிருந்து சமுதாயத்தைக் காப்பதும் எப்படி?

இஸ்லாம் சொல்கிறது; இது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்; திருடினால் கையை வெட்ட வேண்டும்; விபச்சாரத்திற்குக் கல்லெறிந்து கொல்ல லேண்டும். இது போன்று எல்லா குற்றங்களுக்கும் இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் கடுமையானவை. குற்றவாளிகளிடம் இஸ்லாம் இரக்கம் காட்டுவதில்லை. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் சவூதி அரேபிய அரசாங்கம் தனது நாட்டில் குற்றங்களைக் குறைத்துள்ளது. உலகில் எந்த நாடுகளை விடவும் சவூதியில் மட்டும் தான் குற்றங்கள் குறைவு என்பது நிரூபணமாகி வருகின்றது

(மற்ற விஷயங்களில் சவூதி இஸ்லாத்தைப் பின்பற்றுகிறதா? என்பது தனி விஷயம்.)

குற்றவாளிகளுக்குரிய தண்டனை போதுமானதாக இல்லாவிட்டால் ஐம்பது முறை சிறை சென்றவர் மீண்டும் கைது என்ற செய்திகளைத் தான் படிக்க வேண்டும். ஐம்பது முறை ஒருவன் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறான்; மக்கள் வரிப்பணத்தில் அவனுக்கு சிறைச் சாலையில் வசதிகள் செய்யப்படுகின்றன. இதன் பிறகும் ஐம்பத்தி ஒன்றாவதாகவும் அதே தவறை செய்கிறான் என்றால் என்ன காரணம்? இந்தத் தண்டனை அவனை எச்சரிக்கப் போதுமானதாக இல்லை. இது அவனோட முடிந்து விடக் கூடியது அல்ல. இதைக் காணும் மற்றவர்களுக்கும் கூட குற்றம் செய்யத் துணிவைப் பெறுகிறார்கள்.

திருடுபவனின் கையைப் பகிரங்கமாக வெட்டினால் அவனும் திருட மாட்டான். திருடும் எண்ணம் வந்து விட்டாலும் மற்றவனும் இதற்கு அஞசி திருடுவதைத் தவிர்ப்பான், இதை இஸ்லாம் கூறுகிறது. இது கொடூரமாகத் தெரிந்தாலும் இது அவசியமான கொடூரமே.

நல்லவர்களையும், அப்பாவிகளையும் பாதுகாக்க இந்தக் கொடூரம் அவசியமே. உலகம் இன்றைக்கு இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று சிந்திக்கத் தலைப்பட்டு விட்டது.

இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு சில யூதர்களை இஸ்லாம் வெட்டிக் கொன்றதை அணுகுவோம். மதீனா என்பது தனி நாடு. அந்த நாட்டுப் பிரஜைகள் அந்த நாட்டிற்கு விசுவாசமாகவும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டும் நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்தக் கட்டத்தில் அந்த நாட்டு பிரஜைகள் அந்த நாட்டு ரகசியங்களை எதிரி நாடாகிய மக்காவுக்குச் சொன்னால்- படையடுத்து வருமாறு தூண்டினால்- கள்ள உறவு வைத்திருந்தால்- அதை விட துரோகச் செயல் எதுவும் இருக்க முடியாது. எதிரிகள் படை எடுத்து வந்து அங்குள்ள மக்களை கருவருப்பதற்கு இந்தத் துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்தியப் பிரஜை இந்நாட்டு இரகசியங்களை பாகிஸ்தானுக்குக் காட்டிக் கொடுத்தால் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? மாறாக தண்டிக்கும் கைது செய்யும் சிறையிடும்! நாடு கடத்தும்.

ஆனால் எல்லாக் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்குகின்ற இஸ்லாம் பல உயிர்கள் பலியாகும் வகையில் நாட்டைக் காட்டி கொடுத்தவர்களுக்கு மரண தண்டனையையே பரிசாக வழங்குகிறது. அப்போது தான் மற்றவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள்.

ஜெயிலில் போடுவதாலோ, கைது செய்வதாலோ இக்குற்றங்களைக் களையெடுப்பது சாத்தியமில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இது போன்ற தேசத் துரோகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இன்னமும் அந்தக் காரியத்தைச் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் தண்டனை போதவில்லை என்பது தானே இதன் பொருள் .

மதீனாவை ஒரு ஊர் என்று பார்க்காமல் ஒரு நாடு என்று புரிந்து கொண்டால் முகம்மது நபி மதத் தலைவர் மட்டுமின்றி ஆட்சித் தலைவராவும் இருந்தவர்கள் என்பதையும் புரிந்து கொண்டால் தன் நாட்டு விசுவாசமான பிரஜைகளைக் காப்பதற்காக எடுத்த நியாயமான நடவடிக்கையே இது என்பதை ஜெபமணியால் விளங்க முடியும்