10) விமர்சனம் 11
கிபி 8 வது நூற்றாண்டில் அரபு மொழி இலக்கிய நடைக்குக் கொண்டு வரப்பட்டது என்று அரபு சரித்திரம் கூறுகிறது. அதன் பின்னரே குர்ரானும் ஹதீஸும் இலக்கிய வடிவில் எழுதப்பட்டதாக இஸ்லாமிய சரித்திரங்கள் கூறுகிறது. அதாவது முஹம்மதுவின் காலத்தில் அரபு பேச்சு மொழியாக மாத்திரமே இருந்தது. எழுத்து இலக்கியங்கள் இருக்கவில்லை. முகம்மதுவின் சீடர்கள் உம்மிகள். முகமதுவிடம் மனனமாக அறிந்தவற்றையே கிபி 8 வது நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்டது. உம்மிகள் சொன்ன யாவுமே சரியானவை அல்ல என்பதை என் கையில் உள்ள குர்ரான் புத்தகத்தின் பக்கம் 13 ஆசிரியர் விவரித்துள்ளார் என்று ஜெபமணி கூறுகிறார். (பக்கம் 30)
நல்ல ஆராய்ச்சி தான் போங்கள்! ஒரு எழவும் தெரியாதவன் என்று கிராமப்புறத்தில் குறிப்பிடுவார்கள் அல்லவா அதற்குரிய முழுத் தகுதியையும் இதில் ஜெபமணி பெற்றிருக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் உடனுக்குடன் எழுதி வைக்கப்பட்டது. அவற்றை எழுதுவதெற்கென்றே வஹியை எழுதக் கூடிய எழுத்தர்கள் பலர் இருந்தனர் என்பதை புகாரி உட்பட பல நூல்கள் கூறுகின்றன.
குர்ஆனைத் தவிர வேறெதனையும் (குர்ஆனுடன் சேர்த்து) எழுத வேண்டாம் என்று நபிகள் (ஸல்) வலியுறுத்தி குர்ஆன் எழுதப்பட வேண்டுமென நபிகளே ஏற்பாடு செய்தது முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.
இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்வார் என்று அபுஹீரைரா (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நபிகளின் ஒரு போதனையை எழுதித் தருமாறு அபூ ஷாஹ் என்பவர் நபிகளிடம் கேட்ட போது இதை அபூஷாவுக்கு எழுதிக் கொடுங்கள் என்று நபிகள் உத்தரவிட்டது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
பலரும் தனித்தனியாக குர்ஆனை எழுதி வைத்திருந்தனர். நபிகள் மரணமடைந்த உடனேயே அவர்களின் மிக உற்ற தோழரும் இஸ்லாத்தின் முதல் கலீபாவான அபூபக்ரு (ரலி) ஒன்று திரட்டிய செய்தி புகாரி உட்பட எல்லா ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
உஸ்மான் (ரலி) என்ற மூன்றாவது கலீபா அவர்கள் அந்தப் பிரதியைப் பல பிரதிகளாக்கி அந்தப் பிரதியில் ஒன்று இன்றளவும் இஸ்தான்பூல் (துருக்கி) நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் நபிகள் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு நாட்டு மன்னர்களுக்கு நபியவர்களால் இஸ்லாம் பற்றி அறிமுகம் செய்யும் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிகழ்ச்சிகள் புகாரி உட்பட எல்லா ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
நபிகள் காலத்தில் மக்கத்துக் காஃபிர்களுடன் ஹுதைபியா உடன்படிக்கை எழுதப்பட்டது. இந்த விபரம் இடம் பெறாத ஹதீஸ் நூலே இல்லை எனலாம்.
இஸ்லாமிய வரலாறு இவ்வளளவு தெளிவாக இருக்க ஞான சூன்யம் ஜெபமணிக்கு இது தெரியாமலிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
ஏனெனில் ஆண்டவராலேயெல்லாமல் எந்த ஒரு மனிதரிடமும் வேத பண்டிதரிடமும் அவர்கள் எழுதிய நூல்களிருந்து ஒன்றையும் நான் கேட்டோ வாசித்தோ அறியவில்லை என்பதற்கு தேவன் மாத்திரமே சாட்சி என்று முன்னுறையில் ஜெபமணி குறிப்பிடுகிறார்.
ஐயா ஞான சூன்யமே தேவனுடன் சேர்ந்து நாங்களும் நீர் ஒன்றையுமே வாசித்தோ கேட்டோ அறியவில்லை என்பதற்குச் சாட்சிகளாக இருக்கிறோம். எதையும் வாசித்தறியாமல் விட்டு அடிப்பவர் என்று தன்னைப் பற்றி கூறிக் கொள்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இலக்கண இலக்கியங்கள் கற்ற பல கவிஞர்கள் நபிகளின் காலத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்திருக்கின்றதை அரபி வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இம்ரவுல்கைஸ், முதனப்பீ போன்ற கவிஞர்களையும் ஹஸ்ஸான், கஃபு போன்ற நபித்தோழர்களான கவிஞர்களையும் உதாரணமாகக் கூறலாம்.
நாம் அவரை பிலிப் கே ஹிட்டி, ரேன்ல்ட் நிக்கல்ஸன், புரோக்கல் மேன் போன்றார் எழுதிய அரபு வரலாறு அரபு இலக்கிய வரலாறு போன்ற நுல்களையும் படிக்குமாறு சிபாரிசு செய்கிறோம். அந்த நூற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆங்கிலம் தெரிந்த யார் துனையுடனாவது அவற்றைப் படித்தபின் ஜெபமணி இது போன்ற அபத்தங்களை எழுதத் துணிய மாட்டார் என நம்புகிறோம்.
முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயம் உம்மிகள் எனக் கூறப்பட்டது பெரும்பான்மையோரைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். அவர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கனிசமான அளவுக்கு இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
குர்ஆன் இறை வேதமல்ல அல்லது நபி காலத்திலேயே தொகுக்கப்படவில்லை என்று கூறி பொய்யான ஆதாரமற்ற தகவலைக் கூறியவர் இந்தக் குற்றச்சாட்டுக்குரிய பைபிளைப் பற்றி சிறிது எண்ணிப் பார்க்க வேண்டாமா?
குர்ஆனுக்கும் முந்தைய காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தான் அதிகம் இருந்திருப்பார்கள் என்பதும் உண்மை. ஏசுவின் காலத்தில் பைபிள் தொகுக்கப்படவில்லை என்பதும் உண்மை.
இதனால் மூஸாவுக்கு அருளப்பட்ட பழைய ஏற்பாட்டில் மூஸாவின் மரணம் பற்றிக் கூறப்படுகிறது.
மிகப் பழங்காலத்தில் தான் மனிதக் கற்பனைகள் கலந்து எழுதப்பட்டது. மூல மொழியும் செத்துப்போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன (இன்னும் பைபிளின் கதை அடுத்த விமர்சனத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளது) இந்த இலட்சனத்தில் நபிகள் காலத்திலேயே பாதுகாக்கப்பட்ட குர்ஆனைப் பற்றி தெளிவடைய வந்து விட்டார் ஜெபமணி
இதில் பெரிய தாமஷ் என்னவென்றால் இதே ஜெபமணி இதே நூலின் பக்கம் 62ல் கூறுவது தான் முஹம்மது குர்ஆன் (3:50 56)ல் ஏசுவை நிராகரியாது அவரைப் பின்பற்றும் படி குர்ரானில் எழுதி வைத்திருக்கிறார் என்கிறார் ஜேபமணி
எழுதத் தெரியாத காலத்தில் எப்படி எழுதி வைத்தார் என்று கேட்டு விடாதீர்கள்.
30ம் பக்கத்தில் கூறுவதை 62ம் பக்கத்தில் அவரே மறுத்துக் கெள்கிறார்.
முகம்மது குர்ஆனை எழுதினார் என்று கூறியவர் மற்றோரிடத்தில் 6:7 ல் கடிதத்தில் எழுதப்பட்டதையே தேவன் முகமதுவுக்குக் கொடுத்து அதை அவர்கள் தொட்டு பார்த்திருந்தும் நிராகரித்தனர் என்றும் கூறப்படுகிறது (பக்கம் 69) என்கிறார்.
6;7 வசனம் என்ன கூறிகிறது என்பதை முன்பே விளக்கி விட்டோம். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் முகமதுவுக்கு கடிதமாக இறைவன் எழுதிக் கொடுத்தான் என்று ஜெபமணி.
கூறுவதைத் தான். எழுதத் தெரியாத முஹம்மதும் அவர் சமுதயமும் இறைவன் எழுதிய கடிதத்தை எப்படிப் படித்திருக்க முடியும்.
முரண்பாடே உனக்கு மறு பெயர் ஜெபமணியா?