09) விமர்சனம் 10

நூல்கள்: கப்ஸா நிலைக்குமா?

ஜெபமணியின் கருத்து மோசடிகளைச் சொல்லிக் கொண்டே போனால் நீண்டு விடும். எனவே இறுதியாக மிக முக்கியமான மோசடி ஒன்றை குர்ஆனின் பெயரால் செய்திருப்பதை சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

19:19. 3:39 லும் ஏசுவை குலமன் சக்கியான் (பரிசுத்தர்) இப்னுல்லாஹ் (தேவ மைந்தர்) என்றும் கூறியுள்ளது (பக்கம் 55)

இஸ்லாம் எந்த தேவ மைந்தன் கொள்கையை ஆழமாகவும், அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் குர்ஆன் நெடுகிலும் மறுத்துரைக்கின்றதோ அந்தக் கொள்கையே குர்ஆனில் உள்ளது என்று கூறச் துணிந்து விட்ட இந்த மோசடிப் பேர்வழியை என்னவென்பது?

அவர் குறிப்பிட்ட வசனங்களிலோ, ஏனைய வசனங்களிலோ எவ்விடத்திலும் ஏசுவை தேவ மைந்தன் என்று சொல்லப்படவேயில்லை. மறாக இறைவனுக்கு மக்களில்லை என்பதை அல்குர்ஆன் தெளிவாகவே எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தேவன் ஜெபமணி கையைப் பிடித்து எழுதும் போது இவ்வசனங்கள் அவரது கண்களுக்குத் தென்படவில்லை போலும்.

19:19 வசனத்தில் ஏசுவைப் பரிசுத்தமான குழந்தை என்று கூறுவதை நாம் மறுக்கவில்லை.

விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்ததாக அன்றைய யூத சமுதாயம் மேரியைக் குற்றம் சாட்டினர். ஏசு அது போல் தவறான முறையில் பிறந்தவர் அல்லர். பரிசுத்தமான முறையிலேயே பிறந்தவர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டுமெண்பதற்காக இவ்வசனத்தைக் கூறுகிறான்.

விபச்சாரத்தின் மூலம் பிறவாத அனைத்துக் குழந்தைகளும் பரிசுத்தமான குழந்தைகளே. ஏசுவும் பரிசுத்தமான முறையில் பிறந்தவரே என்பதை முஸ்லிம்கள் மறுக்கவில்லை. இதனால் பரிசுத்தமான முறையில் பிறந்தவர்களெல்லாம் தேவனுக்குப் பிள்ளைகளாகி விட முடியுமா? ஜெபமணியின் தெளிவு இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது.

அடுத்து அவர் கூறக் கூடிய 3:37. 39 வசனங்கள் கூறுவதென்ன வென்பதையும் காண்போம்.

அவளை (மேரியை) அவளுடைய இறைவன் அழகிய முறையில் ஏற்று கொண்டான். அவளை அழகிய முறையில் வளந்திடச் செய்தான். அவளை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரியா ஏற்றுக் கொள்ளுமாறு செய்தான் (3:37)

இந்த வசனத்தில் அவளை மனவியாக இறைவன் ஏற்றுக் கொண்டதாக ஜெபமணி புரிந்திருக்கிறார் இதனாலேயே இப்னுல்லாஹ் என்று ஏசுவை இவ்வசனம் கூறுவதாக வாதிடுகிறார்.

அதற்கு முன்னுள்ள இரன்டு வசனங்களையும், இந்த வசனத்தையும் ஒழுங்காக அல்லது மேலோட்டமாக பார்த்தாலே ஜெபமணியின் முட்டாள்தனம் வெட்ட வெளிச்சமாகும்.

இம்ரானுடைய மனைவி (அதாவது மேரியின் தாய்) கர்ப்பமாக இருந்த போது தன் கர்ப்பத்தில் உருவான குழந்தையை இறைவனுக்காக நேர்ச்சை செய்கிறார் .

இவ்வாறு நேர்ச்சை செய்யும் போது கர்ப்பத்தில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பது அவருக்குத் தெரியவில்லை. அது மட்டுமல்ல அது ஆண் குழந்தையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறார். இதனாலயே பெண்ணாகப் பிறந்ததும் பெண்ணைப் பெற்று விட்டேனே என்று கூறுகிறார். இந்த விபரங்கள் அவர் எடுத்துக் காட்டிய வசனங்களின் முன்னுள்ள இரு வசனங்களில் கூறப்படுபவையாகும்.

அதாவது தன் கர்ப்பத்தில் ஆண் குழந்தை வளர்வதாக எண்ணிக் கொண்டு அக்குழந்தையை இறைவனுக்காக நேர்ச்சை செய்து அதை ஏற்குமாறு கேட்கிறார். அவர் நேர்ச்சை செய்ததை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக இறைவன் கூறுகிறான். இந்த வசனத்தின் மூலம் இறைவனின் மனைவி என்று மேரியைக் குர்ஆன் கூறுவதாக ஜெபமணி வாதிடுகிறார்.

இந்த வசனத்தில் உள்ள அபத்தம் எவருக்கும் புரியுமென்றாலும் ஜெபமணிகளுக்கு புரிய வைப்பதற்காக அதை நாம் விளக்குவோம்.

மேரியின் தாயார் தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்று எண்ணிக் கொண்டு அதை இறைவனுக்காக நேர்ச்சை செய்வதாக கூறினார். குழந்தையை இறைவனுக்கு நேர்ச்சை செய்வதென்றால் அதற்கு என்ன பொருள்?

இறைவனுக்கு மனைவியாக ஆக்குவது என்பது தான் பொருளா? அப்படியானால் தன் கருவில் வளர்வது ஆண் குழந்தை என்று எண்ணிக் கொண்டு அல்லவா அவர் நேர்ச்சை செய்கிறார். ஆண் குழந்தையை மனைவியாக்க முடியுமா? தன் குழந்தையை இறைவனுக்காக நேர்ச்சை செய்வதென்றால் அதை இறைவனுடைய மார்க்கத்தை நிலை நாட்டும் பணிக்கு அர்ப்பணிப்பது என்பதே பொருள்.

இந்தப் பணிக்கு ஆணே ஏற்றவன் என்று கருதியே அவ்வாறு நேர்ச்சை செய்கிறார். பிறந்தது பெண் குழந்தை ஆனாலும் அப்பெண்ணின் நேர்ச்சை அடிப்படையில் மார்க்கச் சேவைக்காக இறைவன் மேரியை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறான்.

மேலும் அவ்வசனத்திற்கு மனைவியாக ஏற்றான் என்று பொருள் கூறும் ஜெபமணி, அதே வசனத்திலேயே குழந்தை மேரியைப் பற்றித் தான் கூறப்படுகிறது என்பதைக் கவனிக்கவில்லை. கபருவப் பெண் மேரியைப் பற்றிக் கூறப்படவில்லை என்பதையும் சிந்திக்கவில்லை.

இறைவன் மனைவியையும் மகனையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று 6:101.72:33. 112:3 வசனங்களில் இறைவன் தெளிவாகக் கூறுவதையாவது ஜெபமணி கவனிக்க வேண்டாமா?

அடுத்து 3:39 வசனத்தையும் தன் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கிறார் ஜெபமணி.

ஜக்கரியாவுக்கு யஹ்யா என்ற குமாரர் பிறக்கவிருப்பது பற்றி அவ்வசனம் கூறுகிறது. மேலும் ஏசுவை இறைவாக்கு என்று அல்குர்ஆன் கூறுவது போலவே அவ்வசனத்தில் யஹ்யாவையும் இறைவாக்கு என்று கூறுகிறது.

ஜெபமணி கூறும் கருத்துக்கு இதில் என்ன சான்று இருக்கிறது. மாறாக ஜெபமணிக்கு எதிரான கருத்தே இவ்வசனத்தில் இருக்கிறது.

ஏசுவை இறைவனின் வாக்கு (கலிமத்துல்லாஹ்) என்று இறைவன் கூறுகிறான் அல்லவா? அதே வார்த்தையை யஹ்யா என்பவருக்கும் பயன்படுத்தியதன் மூலமும் எல்லா மாந்தருமே கலிமத்துல்லாஹ் தான்; இறைவனின் வாக்கால் உத்திரவால் உருவாக்கப்பட்டவர்கள் தான் என்று அவ்வசனம் கூறி கிருத்தவக் கோட்பாடுகளைத் தகர்க்கிறது. இதையும் அவர் இறை மகன் கோட்பாட்டுக்குச் சான்றாக்குவது விந்தையிலும் விந்தையே.