வித்ரு குனூத் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானதா?
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
நாம் செய்கிற எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும், அது குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையை மார்க்கம் நமக்கு வழியுறுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அமைத்து கொள்ள வேண்டும்.
‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி)(புகாரி: 631) ➚
அந்த வகையில், வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு, இது நபிவழி என்ற அடிப்படையில் வித்ரு தொழுகையில் குனூத் ஓதிவருகின்றோம்.
ஆனால் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை என்று சிலர் கூறி வருகிறார்கள். எனவே அது குறித்து விரிவாக பார்போம்.
உண்மையில் வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக பலவீனமான சில ஹதீஸ்கள் இருந்தாலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.
அதில் நபி (ஸல்) அவர்கள் தனது பேரரான ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்களுக்கு வித்ர் குனூத்தின் வாசகங்களை சொல்லித்தரும் பின்வரும் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.
عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوَتْرِ اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ رواه أحمد
ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
(அந்த வார்த்தைகளாவன):
அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த.
பொருள்:- இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குத் தந்திருப்பவற்றில் பரகத் செய்வாயாக! நீ விதியாக்கியவைகளில் உள்ள கெடுதியை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன், உன் மீது எதையும் விதிக்க முடியாது. நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது, உன் மகத்துவம் மேலானது.
மேற்கண்ட ஹதீஸ் வித்ரில் குனூத் ஓதுவது குறித்து தெளிவாகப் பேசுகிறது.
இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடக்கூடியவர்கள் எடுத்து வைக்கும் விமர்சனங்களுக்கான பதில்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதலில் இந்த செய்தியின் அறிவிப்பு சரியாக உள்ளதா என்பதைப் பார்ப்போம்.
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றிய விபரம் வருமாறு:
1- ஹஸன் இப்னு அலி (ரலி)
2- அபுல் ஹவ்ரா
3- புரைத் இப்னு அபீ மர்யம்
4- யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக்
5- வகீவு
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் இதை அபுல் ஹவ்ரா என்பவருக்கு அறிவிக்கிறார்.
அபுல் ஹவ்ரா என்பவர் இதை புரைத் இப்னு அபீ மர்யமுக்கு அறிவிக்கிறார்.
புரைத் இப்னு அபீ மர்யம் இதை யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பவருக்கு அறிவிக்கிறார்
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பார் வகீவு என்பாருக்கு அறிவிக்கிறார்.
வகீவு என்பாரிடம் நூலாசிரியர் இமாம் அஹ்மத் அவர்கள் நேரடியாகக் கேட்டு பதிவு செய்துள்ளார்கள்.
மேற்கண்ட அறிவிப்பாளர்களில் பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றிருந்தால் இந்த ஹதீஸ் பலவீனமாகி விடும். அப்படி யாரும் இடம்பெறாவிட்டால் இந்த ஹதீஸ் பலவீனமாகாது.
இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளர்களில் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பவரை மட்டுமே பலவீனமானவர் எனக் கூறுகின்றனர். மற்றவர்களைப் பலவீனர்கள் எனக் கூறவில்லை. எனவே யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலவீனமானவரா? இல்லையா? என்பதை நாம் முடிவு செய்து விட்டால் இந்த ஹதீஸின் தரம் குறித்து சரியான முடிவுக்கு நாம் வந்து விடலாம்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பலவீனமானவரா?
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பவர் முஸ்லிம், நஸாயீ, திர்மிதி, அபூதாவூத் போன்ற பல நூல்களில் அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவரைப் பல இமாம்கள் நம்பகமானவர் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் பலவீனமானவர் என்று சிலர் விமர்சித்திருந்தாலும், அவை இவரது ஹதீஸை ஏற்க்க முடியாத அளவுள்ள எந்த பாரதூரமான குற்றச்சாட்டாகவும் இல்லை. பொதுவாக பெரும்பாலான பல புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர்கள் மீது கூட இது போன்ற சிறு விமர்சனங்கள் முன்வைக்கபட்டுள்ளது. அதனால் இந்த விமர்சனங்களின் உண்மை நிலை குறித்து காண்போம்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் நம்பகமானவர் என உறுதிப்படுத்தியுள்ளவர்கள்:
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை யஹ்யா இப்னு மயீன், இப்னு ஹிப்பான், இப்னு அதீ, இப்னு ஷாஹீன், இஜ்லீ, ஷாஜி, ஹாகிம், நஸாயீ, அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ, தஹபீ போன்ற பல அறிஞர்கள் பாராட்டிக் கூறியுள்ளனர்.
وقال عثمان الدارمي عن ابن معين: ثقة
யஹ்யா இப்னு மயீன் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 4/465)
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் உங்களுக்கு விருப்பமானவரா? அல்லது இஸ்ராயீல் உங்களுக்கு விருப்பமானவரா? என்று கேட்ட போது இருவருமே நம்பகமானவர்கள் தான் என்று யஹ்யா இப்னு மயீன் விடையளித்தார்கள்.
(தாரீக் இப்னு மயீன் 72)
இப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 4/465)
இவர் ஹஸன் எனும் தரத்திலமைந்த பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து (அதிகமான) அறிவிப்பாளர்களும் அவருடைய மகன்களான இஸ்ராயீல் இப்னு யூனுஸ், ஈஸா இப்னு யூனுஸ் ஆகியோரும் அறிவித்துள்ளனர். இவர்கள் கல்வியின் வீட்டினர் ஆவர். கூஃபாவாசிகளின் ஹதீஸ்களில் பெரும்பாலானவை இவர்களைத் தான் சுற்றுகிறது என இப்னு அதீ கூறுகிறார்.
(தஹ்தீபுல் கமால் 32/488)
இப்னு ஷாஹீன் இவரை நம்பகமானவர்களில் உள்ளவர் என்று கூறியுள்ளார்
(தஹ்தீபுத் தஹ்தீப் 4/465)
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பார் நம்பகமானவர் என்றும் மற்றொரு சந்தர்ப்பத்தில் இவரது ஹதீஸ்கள் செல்லத் தக்கவை என்றும் இஜ்லீ கூறுகிறார்.
(மஃரிஃபதுஸ் ஸிகாத் 2/377)
இவர் உண்மையாளர் என ஷாஜி கூறியுள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 4/465)
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களின் நம்பகத் தன்மையின் மீது ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்து வேறுபாட்டை நான் அறிந்ததில்லை என இமாம் ஹாகிம் கூறியுள்ளார்.
(முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் 2/187)
இவர் பரவாயில்லை என்று நஸாயீ கூறுகிறார்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 4/465)
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பவரை இவர் பரவாயில்லை என்று அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ கூறுகிறார்.
(தஹ்தீபுல் கமால் 32/488)
இவர் உண்மையாளர் என தஹபீ கூறியுள்ளார்.
(அல் காஸிஃப் 4/551)
இப்படி பல அறிஞர்கள் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களின் நம்பகத் தன்மையைப் பாராட்டியுள்ளனர்.
மேற்கண்ட இமாம்களின் கூற்றுகள் அனைத்தும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் என்பவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்பதற்குச் சான்றாக உள்ளது.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை பலவீனப்படுத்தும் சிலர், அதற்குச் சில இமாம்களின் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தும் தவறாக விளங்கப்பட்டவையாக உள்ளன. அது தொடர்பான விளக்கத்தைக் காண்போம்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பற்றி விமர்சனம் செய்த அறிஞர்கள்:
அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனம்:
இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
இவர் உண்மையாளர். என்றாலும் இவருடைய ஹதீஸ்களைக் கொண்டு ஆதாரம் பிடிக்கப்படாது.
(தஹ்தீபுத் தஹ்தீப் 4/465)
இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் அறிவிப்பாளர்களை குறைகூறுவதில் மிகவும் கடுமை காட்டக் கூடியவராவார் என்பதால் அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனத்தை கொண்டு ஒரு அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று நாம் முடிவு செய்ய இயலாது.
அபூ ஹாத்திம் அவர்களைப் பற்றி இமாம் தஹபீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அபூ ஹாத்திம் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை உறுதிப்படுத்தினால் அவருடைய கூற்றைப் பற்றிப் பிடித்துக்கொள். ஏனெனில் அவர் ஹதீஸ்களில் ஸஹீஹான அறிவிப்பாளரைத் தவிர (மற்றவர்களை) உறுதிப்படுத்த மாட்டார். இவர் ஒரு அறிவிப்பாளரை பலவீனப்படுத்தினால் அல்லது ஒருவர் விசயத்தில் “இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என்று அபூ ஹாத்திம் கூறினால் அந்த அறிவிப்பாளர் விசயத்தில் மற்றவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று நீ பார்க்கின்ற வரை (அபூ ஹாத்திமின் கருத்தை) நீ நிறுத்தி வை. அந்த அறிவிப்பாளரை வேறொருவர் உறுதிப்படுத்தியிருந்தால் அபூ ஹாத்திம் குறை கூறியதின் அடிப்படையில் நீ (எந்த முடிவையும்) அமைத்துக் கொள்ள வேண்டாம். அவர் அறிவிப்பாளர்கள் விசயத்தில் கடினப்போக்கு உடையவராவார்.ஸிஹாஹ் (என்று சொல்லப்படும் கிரந்தங்களின்) அறிவிப்பாளர்களில் ஒரு பிரிவினரையே “ஆதாரமாகக் கொள்ளத்தக்கவரில்லை”; “உறுதியானவர் இல்லை” என்றோ அல்லது இது போன்ற விமர்சனங்களையோ கூறியிருக்கிறார்.
(ஸியரு அஃலாமுன் நுபலா 13/260)
அபூ ஹாத்திம் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை “லா யுஹ்தஜ்ஜு பிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்)என விமர்சனம் செய்துள்ள கூற்றை எடுத்துக் காட்டிவிட்டு இமாம் தஹபீ அவர்கள் தமது “தத்கிரத்துல் ஹூஃப்பாள்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர்கள் விசயத்தில் அபூ ஹாத்திம் அவர்கள் கடும் போக்குடையவர் என்பது அறியப்பட்டது தான்.
(தத்கிரா 2/420)
ஸைலயீ அவர்கள் தமது நூலில் அபூ ஹாத்திம் அவர்களுடைய விமர்சனங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.
“லா யுஹ்தஜ்ஜுபிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என்ற அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனம் குறை ஏற்படுத்தக் கூடியது அல்ல. ஏனெனில் அவர் காரணத்தைக் கூறவில்லை. உறுதியான நம்பகமான அறிவிப்பாளர்களில் அதிகமானோர் விசயத்தில் அவர் இந்த வார்த்தையை காரணத்தைத் தெளிவு படுத்தாமல் திரும்பத் திரும்ப கூறியுள்ளர். உதாரணமாக ஹாலிதுல் ஹத்தா போன்றவர்களைக் கூறலாம். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
(நஸபுர்ராயா 2/317)
அபூ ஹாத்திம் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை “லா யுஹ்தஜ்ஜு பிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என விமர்சனம் செய்துள்ள கூற்றை எடுத்துக் காட்டிவிட்டு இமாம் இப்னு ஹஐர் அவர்கள் தமது “முகத்திமது ஃபத்ஹூல் பாரி” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“லா யுஹ்தஜ்ஜுபிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என்று அபூ ஹாத்திம் அவர்கள் விமர்சனம் செய்தால், அதன் விஷயத்தில் காத்திருக்க வேண்டும். அபூ ஹாத்திம் (விமர்சனத்தின்போது) கடினப்போக்கைக் கையாண்டிருப்பார். அந்த அறிவிப்பாளரை (ஹதீஸ்கலை அறிஞர்களில்) ஒரு கூட்டமே ஆதாரமாகக் கொண்டிருப்பார்கள்.
(முகத்திமா ஃபத்ஹில் பாரி 2/370)
அபூ ஹாத்திம் அவர்களைப் பற்றி இந்த அறிஞர்கள் கூறியுள்ள விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது, அபூ ஹாத்திம் அவர்கள் அறிவிப்பாளர்களைக் குறை கூறும் விசயத்தில் சிறிய குறைகளைக் கூட மிகப் பெரிதாக விமர்சனம் செய்துவிடும் கடும் போக்குடையவர் என்பதும், அதிலும் குறிப்பாக “லா யுஹ்தஜ்ஜுபிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என்ற அவரின் விமர்சனம் ஏற்புடையதல்ல என்பதும் தெரிகிறது.
ஆக, அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனத்தை மட்டும் வைத்து ஒரு அறிவிப்பாளரை நாம் பலவீனமாக்கிவிட முடியாது என்பதையும் தெளிவாக அறிந்துக் கொள்ளலாம்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை யஹ்யா இப்னு மயீன், இப்னு ஹிப்பான், இப்னு அதீ, இப்னு ஷாஹீன், இஜ்லீ, ஷாஜி, ஹாகிம், நஸாயீ , அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ, தஹபீ போன்ற பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று விமர்சனம் செய்திருக்கும் போது இத்தகைய அறிஞர்களின் விமர்சனங்களுக்கு மாற்றமாக அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனம் ஒரு பொருட்டாகக் கொள்ளப்படாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் விமர்சனம்:
இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
‘எனது தந்தை(அஹ்மத்)யிடம் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் ‘இப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர்’ எனப் பதிலளித்தார்கள்.
(அல்காமிலு ஃபி லூக்ஃபாவு ரிஜால் 8/526)
மேற்கண்ட இமாம் அஹ்மத் அவர்களின் இந்த கூற்றை சிலர் தவறாக புரிந்து கொண்டு, இந்த வார்த்தை இமாம் அஹ்மத் அவர்கள் ஒருவரை பலவீனமானவர் என்பதை குறிக்கத் தான் பயன்படுத்துவார் என்றும், எனவே இமாம் அஹ்மத் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக்கை பலவீனமானவர் என்று கூறிவிட்டதாக கருத வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில், ‘இப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர்’ என்ற இந்த வார்த்தையை இமாம் அஹ்மத் அவர்கள் நம்பகமான அறிவிப்பாளர் குறித்தும், பலவீனமான அறிவிப்பாளர் குறித்தும் பொதுவாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.
உதாரணமாக, புஹாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களின் அறிவிப்பாளர்கள் குறித்தும் கூட இமாம் அஹ்மத் அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பலமானவர்கள் என்று பல ஹதீஸ்கலை இமாம்கள் நற்சான்று கொடுத்துள்ள, வேறு எந்த இமாம்களும் விமர்சனம் செய்திடாத அல் முகீரத் இப்னு நுஃமான், சஹ்ல் இப்னு யூசுஃப், யஸீத் இப்னு அபூசயீத் போன்ற அறிவிப்பாளர்கள் குறித்தும் கூட இமாம் அஹ்மத் அவர்கள் ‘இப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர்’ என்ற கூற்றைக் கூறியுள்ளார்கள்.
ஆக, இமாம் அஹ்மத் அவர்களின் இந்த வார்த்தையின் மூலம் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை பலவீனமானவராக முடிவு செய்து விடமுடியாது என்பது உறுதியாகிறது.
அடுத்ததாக, இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
‘எனது தந்தை(அஹ்மத்)யிடம் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் ‘அவரது அறிவிப்புக்கள் குளறுபடியானவை’ என பதிலளித்தார்கள்.’
(இலல் வ மஃரிபதூர் ரிஜால் 2/519)
இப்படி பொதுவாக மட்டும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை அஹ்மத் அவர்கள் விமர்சனம் செய்திருந்தால், இவர் பலவீனமானவர் என்கிற முடிவுக்கு வந்து விடலாம்.
ஆனால் இமாம் அஹ்மத் அவர்கள் ஒட்டு மொத்தமாக இப்படி அவரைக் குறை கூறிவிடவில்லை. மாறாக, யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் தனது தந்தையாகிய அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிப்பதில் மட்டும் தான் குளறுபடி இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பவையே பலவீனம் என்பதே இமாம் அஹ்மத்தின் விமர்சனம்:
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் தனது தந்தை அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிப்பதில் மட்டும் தான் குளறுபடி உள்ளது மற்றவர்கள் வழியாக அறிவிப்பதில் அல்ல என்று அஹ்மத் இப்னு ஹம்பல் கூறியதை நான் கேட்டேன் என்று அபூபக்ர் அல் அஸ்ரம் அவர்களும் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹானீ அவர்களும் கூறுகிறார்கள்.
யூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் உடைய ஹதீஸ் அவரது ஹதீஸை விட எனக்கு விருப்பமானது எனவும் இமாம் அஹ்மத் கூற செவியேற்றதாக அபூபக்ர் அல் அஸ்ரம் கூறுகிறார்.
(தஹ்தீபுல் கமால் 32/488)
யூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் உடைய ஹதீஸ் அவரது ஹதீஸை விட எனக்கு விருப்பமானது எனவும் இமாம் அஹ்மத் கூற செவியேற்றதாக அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹானீ கூறுகிறார்.
(லுஅஃபாவுல் கபீர் 4/457)
மேற்கண்ட விமர்சனத்தின் மூலம் இமாம் அஹ்மத் அவர்கள் பொத்தாம் பொதுவாக யூனுஸ் அவர்களின் அனைத்து அறிவிப்புகளையும் பலவீனபடுத்தவில்லை. மாறாக, அவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்றவைகளை மட்டும் தான் பலவீனப்படுத்தியுள்ளார் என்பதையும், இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் அவர்கள் மீது பொதுவாக சொன்ன விமர்சனங்களும் இதனடிப்படையில் தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
அத்துடன் யூனுஸ் மற்றும் அவரது மகன் இஸ்ராயீல் என்கிற இருவர் அறிவிக்கின்ற ஹதீஸ்களில் இஸ்ராயீல் அவர்களுடைய ஹதீஸை தனக்கு விருப்பமானதாக கருதுவதாகவும் இமாம் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்கள். யூனுஸ் அவர்களை பலவீனப்படுத்தவில்லை. எனவே, யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பவைகள் மட்டும் தான் பலவீனமானது என்பது உறுதியாகிறது.
இந்த கருத்தை நாம் மட்டும் கூறவில்லை. மாறாக மேற்கண்ட கூற்றிற்கு விளக்கமாக தஹ்ரீருல் உலூமுல் ஹதீஸ் என்ற நூலாசிரியர் அப்துல்லாஹ் இப்னு யூசுஃப் (1959) போன்ற தற்கால அறிஞர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்கள்.
وقال أبو بكر الاثرم: سمعت أبا عبد الله، وذكر يونس بن أبي إسحاق فضعف حديثه عن أبيه. وقال: حديث إسرائيل أحب إلي منه
قلت : فهذا تضعيف ليونس مقارنة بابنه إسرائيل عن أبي إسحاق خاصة ، وليس ضعفاً مطلقاً ، فلايصح القول : يونس ضعيف عند أحمد مثلاً
யூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் உடைய ஹதீஸ் அவரது ஹதீஸை விட எனக்கு விருப்பமானது எனவும் இமாம் அஹ்மத் கூற செவியேற்றதாக அபூபக்ர் அல் அஸ்ரம் கூறுகிறார்.
மேற்கண்ட கூற்றிற்கு விளக்கமாக தஹ்ரீருல் உலூமுல் ஹதீஸ் என்ற நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:
யூனுஸ் அவர்களை அவருடைய மகன் இஸ்ராயீலுடன் ஒப்பிட்டு பலவீனப்படுத்துதல் என்பது அபூ இஸ்ஹாக் வழியாக வருகின்ற அறிவிப்புகளுக்கு மட்டும் தான். பொதுவாக பலவீனப்படுத்துதல் என்பது கிடையாது. (பொதுவாக அனைத்து அறிவிப்புகளிலும்) இமாம் அஹ்மதிடம் யூனுஸ் பலவீனமானவர் என்று கூறுவது சரியானது கிடையாது.
(தஹ்ரீரு உலூமுல் ஹதீஸ் 1/308)
யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பவையே பலவீனம் என்று இமாம் அஹ்மத் கூறுவதற்கான காரணங்கள்:
யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் மட்டும் தான் பலவீனமானவர் என்று அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுவதற்கு தனிப்பட்ட சில காரணங்கள் உள்ளது. இவர் அறிவித்த ஏராளமான அறிவிப்புகளை ஆய்வு செய்த அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் இவர் தனது தந்தை வழியாக அறிவிப்பவைகளில் மட்டுமே குளறுபடி உள்ளதைக் கண்டறிந்து தான் இவ்வாறு சொல்கிறார்கள்.
நாம் கூறியதற்கான ஆதாரம் தஹ்தீபுல் கமாலில் உள்ளது. அதைக் கீழே காண்க:
ஒரு பேரீச்சம்பழத்தின் சிறு பகுதியைத் தர்மம் செய்தாவது நரகில் இருந்து காத்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் தனது தந்தை வழியாக அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளாரை விட்டு விட்டு அறிவித்துள்ளார் என்பதே அஹ்மத் இப்னு ஹம்பல் இவ்வாறு விமர்சித்த்தற்குக் காரணமாகும்.
அதாவது இந்த ஹதீஸை யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பின்வருமாறு அறிவிக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்)
அதீ இப்னு ஹாத்திம் (ரலி)
அபூ இஸ்ஹாக்
என்ற அறிவிப்பாளர் வரிசைப்படி அறிவிக்கிறார்.
இதே ஹதீஸை சுஃப்யான் இப்னு உயைனா, ஷுஅபா ஆகிய இருவரும் பின்வரும் அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)
அதீ இப்னு ஹாத்திம் (ரலி)
அப்துல்லாஹ் இப்னு மஃகில்
அபூ இஸ்ஹாக்
இரண்டு அறிவிப்பாளர் வரிசைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.
அபூ இஸ்ஹாக் என்பவர் அதீ இப்னு ஹாதிமிடம் நேரில் கேட்டது போன்ற கருத்தைத் தரும் வகையில் யூனுஸின் அறிவிப்பு உள்ளது.
ஆனால் சுப்யான், ஷுஅபா ஆகியோர் அறிவிப்பில் அபூ இஸ்ஹாக் என்பவர் அப்துல்லாஹ் இப்னு மஃகில் என்பவரிடம் கேட்டு அப்துல்லாஹ் இப்னு மஃகில் என்பவர் தான் அதீ இப்னு ஹாதிமிடம் கேட்டார் என்று கருத்து தரும் வகையில் உள்ளது.
இதில் இருந்து யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளரை இடையில் விட்டு விட்டார் என்பது தெரிகிறது.
இந்தக் காரணத்தை வைத்து தான், இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் மட்டும் தான் பலவீனமானவர் என்று அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகிறார்.
தந்தை வழியாக அறிவிப்பதை மட்டும் பலவீனப்படுத்த வேறு காரணமும் உள்ளது. அதாவது யூனுஸ் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவிக்கும் போது தான் நேரடியாக கேட்டு அறிவிக்கிறார். ஆனால் தனது தந்தை வழியாக அறிவிக்கும் போது தந்தை எழுதி வைத்த நூலில் இருந்து அறிவிக்கிறார். அதில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட அதிகப்படியானவை இடம்பெற்றுள்ளது.
அபூதாலிப் கூறுகிறார் : யூனுஸ் உடைய ஹதீஸில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட சில அதிகப்படியான விசயங்கள் உள்ளன என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கூறினார்கள். அவர் தன் தந்தையின் புத்தகத்திலிருந்து செவியேற்றுள்ளார். அது முழுமையானது என்று அறிஞர்கள் கூறுகிறார்களே என நான் கூறினேன். அதற்கு இமாம் அஹ்மத் அவர்கள் அவருடைய மகன் இஸ்ராயீலும் அபூ இஸ்ஹாக்கிடமிருந்தும் அவருடைய புத்தகத்திலிருந்தும் செவியேற்றுள்ளார். அதில் யூனுஸ் அதிகப் படுத்தியிருப்பதை போன்று அதிகப்படியான விசயங்கள் இல்லையே என்று கூறினார்கள்.
(அல் ஜரஹ் வத் தஃதீல் 9/243)
யூனுஸ் உடைய ஹதீஸ்களில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட அதிகப்படியான வாசகங்கள் உள்ளது என பொதுவாகக் கூறிவிட்டு விட்டுவிடாமல், யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்புகளில் மட்டும் தான் என்று குறிப்பாக்கி கூறியிருப்பதை இமாம் அஹ்மத் அவர்களின் மேற்கண்ட விமர்சனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பவையே பலவீனம் என்ற பல ஹதீஸ் கலை அறிஞர்களின் விமர்சனங்கள்:
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் குறித்த அனைத்து விமர்சனங்களையும் ஆய்வு செய்து விட்டு இமாம் இப்னு ரஜப் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் தம் தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய ஹதீஸ்கள் தவிர மற்றவைகளில் ஹதீஸ் துறையில் நடுத்தரமானவர். இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் குளறுபடியாக அறிவித்துள்ளார்.
(ஷரஹ் இலலுத் திர்மிதி 1/382)
மாபெரும் ஹதீஸ்கலை மேதையான இமாம் அலியிப்னுல் மதீனீ அவர்கள் யூனுஸ் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை சரியான அறிவிப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
கபீஸா இப்னு உக்பா கூறுகிறார் : அலியிப்னுல் மதீனீ என்னிடம் வந்தார். (லா நிகாஹ இல்லா பி வலிய்யின் – பொறுப்பாளர் இல்லாமல் பெண் திருமணம் செய்யலாகாது – என்ற) அந்த ஹதீஸைப் பற்றி என்னிடம் கேட்டார். நான்
அபூ மூஸா
அபூ புர்தா
யூனுஸ்
என்ற அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஹதீஸை கூறினேன்.
அபூ மூஸா
அபூ புர்தா
அபூ இஸ்ஹாக்
யூனுஸ்
என்ற அறிவிப்பை நான் கூறவில்லை.
அதாவது அபூ இஸ்ஹாக்கை நான் குறிப்பிடவில்லை. அதற்கு அலியிப்னுல் மதீனீ அவர்கள்: அபூ இஸ்ஹாக் தொடர்பான கருத்து வேறுபாட்டிலிருந்து நாம் நிம்மதி பெற்று விட்டோம் என்று கூறினார்.
(தஹ்தீப் சுனன் அபீதாவூத் 1/286)
மேற்கண்ட ஹதீஸை யூனுஸ் இரு வழிகளில் அறிவித்துள்ளார். ஒன்று தன் தந்தை வழியாக அறிவித்தது. மற்றொன்று தன் தந்தை வழியாக இல்லாமல் நேரடியாக அபூ புர்தா வழியாக அறிவித்தது.
இந்த இரண்டு வழிகளில் யூனுஸ் தனது தந்தையாகிய அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிக்காத அறிவிப்பைக் கேட்ட போது நல்ல வேளை அபூ இஸ்ஹாக் வழியாக இதை அறிவிக்கவில்லை. இது நிம்மதியைத் தருகிறது என இமாம் அலிய்யிப்னுல் மதீனீ அவர்கள் கூறுவதிலிருந்து யூனுஸ் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை சரியான அறிவிப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் அவர்களின் விமர்சனம்:
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் விமர்சனம் செய்த, ஒரு பேரீச்சம்பழத்தின் சிறு பகுதியைத் தர்மம் செய்தாவது நரகில் இருந்து காத்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் அவர்களும் கூறி, அதில் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளாரை விட்டு விட்டு அறிவித்துள்ளார் என்பதை இமாம் அஹ்மத் போலவே சுட்டிக்காட்டிவிட்டு, தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரை விட்டுவிட்ட காரணத்தினால் யூனுஸ் அவர்களிடம் கவனமின்மை உள்ளது என யஹ்யா அல்கத்தான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
நாம் கூறியதற்கான ஆதாரம் தஹ்தீபுல் கமாலில் உள்ளது. அதைக் கீழே காண்க:
ஆனால் இந்த விமர்சனம் சரியானது அல்ல. குறிப்பிட்ட ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பாளரை ஒருவர் விட்டு விட்ட காரணத்தால், அந்த ஒரு ஹதீஸ் தான் புறக்கணிக்கப்பட வேண்டும். அவர் முற்றாகப் புறக்கணிக்கப்பட மாட்டார்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களின் மனன சக்தி, நம்பகத் தன்மை ஆகியவைகளுக்கு பல மேதைகள் நற்சான்று தந்திருக்கும் போது ஒரு ஹதீஸில் அவர் தவறாகக் கூறி விட்டார் என்பதற்காக அவரது அனைத்து ஹதீஸ்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது.
ஓரிரு ஹதீஸ்களில் கூட தவறாகக் கூறாத அறிவிப்பாளர்கள் அரிதாகவே இருப்பார்கள். இப்படி இருக்கும் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பலவீனர் பட்டியலில் சேர்ப்பது பல ஹதீஸ்களை பலவீனமாக்கிவிடும்.
எனவே யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஹதீஸில் தவறாகக் கூறி விட்டார் என்பதற்காக ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
இமாம் அபூ ஸுர்ஆ அவர்களுடைய விமர்சனம்:
இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்.
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் பற்றி கேட்கப்பட்ட போது : நான் (நபித்தோழர்) பராஃ விடம் செவியுற்றேன் என்று சொல்லும் வரை அவர் இறுதியடைய மாட்டார். அவரது விசயம் எப்படி மறுக்கப்படுகிறது என்று பார் எனக் கூறினார்.
(சுவாலாத்துல் பர்தஈ 2/329)
இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்கள் மீது இந்த விமர்சனத்தை முன்வைக்க தனிப்பட்ட காரணமும் உள்ளது. அதையும் மேற்கண்ட சுவாலாத்துல் பர்தஈ என்ற இதே நூலில் இமாம் அபூ ஸுர்ஆ அவர்களிடம் கேட்டு அவரது மாணவர் பர்தஈ அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபு இஸ்ஹாக் அவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் தான் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக், ஜக்கரிய்யா, ஜூஹைர் போன்றோர் அவரிடம் ஹதீஸை கேட்டறிவித்துள்ளனர்.
(சுவாலாத்துல் பர்தஈ 2/346)
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்கள் தனது தந்தை வழியாக அறிவிப்பவை அனைத்துமே தனது தந்தையான அபூ இஸ்ஹாக் அவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்ட பிறகுத்தான்.
ஆகையால், யூனுஸ் அவர்கள் தனது தந்தைக்கு மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் அவர் வழியாக கேட்டு அறிவிப்பதால் அவை மறுக்கப்படும் நிலை அடையும் என்பதையும், அதிலும் குறிப்பாக நான் நபித்தோழர் பராஃ இப்னு ஆசிபிடம் செவியுற்றேன் என்று யூனுஸ் கூறுவது அவருடைய தந்தை வழியாக அறிவிக்கின்றவை தான் என்பதாலும் அவை ஏற்க்கதக்கதாக இல்லை என்பதையும் இமாம் அபூ ஸுர்ஆ தெளிவுபடுத்தியுள்ளார்.
அதை பின்வரும் ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.
وَحَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْقُلُ التُّرَابَ يَوْمَ أُحُدٍ حَتَّى وَارَى التُّرَابُ شَعْرَ صَدْرِهِ، وَهُوَ يَرْتَجِزُ بِكَلِمَةِ عَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ، يَقُولُ:
اللَّهُمَّ لَوْلا أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلا تَصَدَّقْنَا وَلا صَلَّيْنَا
فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاقَيْنَا
இதில் கோடிட்டு காட்டப்பட்டபடி நபித்தோழர் பராஃ இப்னு ஆசிபிடம் செவியுற்றேன் என்று யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்கள் அறிவிப்பது தனது தந்தை வழியாக தான் என்பது தெளிவாகிறது.
ஆக இந்த விமர்சனமும் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பவை குறித்து தான் என்பது உறுதியாகிறது.
இமாம் ஷுஅபா அவர்களுடைய விமர்சனம்:
யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்களை இமாம் ஷுஅபா அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்.
ஸல்ம் இப்னு குதைபா கூறுகிறார் : ‘கூஃபாவிலிருந்த நான் ஊர் திரும்பிய போது‘ யாரையெல்லாம் சந்தித்தீர்கள்’என்று ஷுஅபா என்னிடம் கேட்டார். அதற்கு நான் ‘இன்னார் இன்னாரைச் சந்தித்தேன். யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகையும் சந்தித்தேன்’ என்று கூறினேன். யூனுஸ் எவைகளை உமக்கு அறிவித்தார் என ஷுஅபா கேட்டார். நான் சிலவற்றைச் சொன்னேன். சற்று நேரம் அமைதியாக இருந்தார். தொடர்ந்து நான் எனக்கு பக்ர் இப்னு மாஇஸ் அறிவித்தார் என்று யூனுஸ் கூறியதாக சொன்னேன். அதற்கு அவர்கள் ‘நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவருக்கு அறிவிப்புச் செய்ததாகச் சொல்வில்லையா? எனக் கேட்டார்கள்.
(லுஃபாவுள் கபீர் 4/457)
மேற்கண்ட ஷுஅபா அவர்களுடைய விமர்சனத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டு யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக்கை இமாம் ஷுஅபா பலவீனமாக்கி விட்டார் என்கிறார்கள். ஆனால் அது சரியல்ல. நுணுக்கமான பார்வையின்றி இந்த விமர்சனத்தை புரிந்து கொண்டால் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் அவர்கள் நபித்தோழரின் பெயரை பயன்படுத்தி அறிவிக்கும் பொய்யர் என்ற பாரதூரமான கருத்து கொள்ள வேண்டி வரும். இப்னு மஸ்ஊத் சொல்லாததை கூட அவர் பெயரில் இஷ்டத்திற்கு அடித்து விடுவார் என்ற கருத்து வரும். ஆனால் அவ்வாறு யாரும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக்கை விமர்சனம் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அப்படியெனில் இந்த விமர்சனத்தின் உண்மையான பொருள் என்ன? இதை நன்றாக கவனிப்போம்.
கூஃபாவிலிருந்து வரும் ஸல்ம் இப்னு குதைபாவிடம் அங்கு யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என ஷுஅபா கேட்கிறார். யூனுஸை சந்தித்தேன் என்று கூறும் போது அவர் அறிவித்த அறிவிப்புகளை பற்றி கேட்கிறார். யூனுஸ் அறிவித்த அறிவிப்புகளை பட்டியலிடும் வேளையில் தான் ‘நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவருக்கு அறிவிப்புச் செய்ததாகச் சொல்வில்லையா? என்று ஷுஅபா கேட்டறிகிறார்.
ஏனென்றால் , இப்னு மஸ்வூத் அவர்களுடைய ஹதீஸ்களை தனது தந்தை வழியாகவே யூனுஸ் அறிவிக்கின்றார். தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக யூனுஸ் செவியேற்றிருக்கிறார் என்பதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் வழியாக யூனுஸ் அவர்கள் அறிவிக்கின்ற அறிவிப்புகள் அனைத்தும் தனது தந்தை வழியாகச் செவியேற்றவை தான். ஆகவே தான் அவரின் பெயரை குறிப்பிட்டு அவர் வழியாக ஏதும் அறிவித்தாரா என கேட்கிறார். எனவே ஷுஅபாவுடைய விமர்சனமும் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளில் மட்டுமே பலவீனமானவர் என்பது தான்.
மேற்கண்ட விமர்சனத்தின் மூலம் இமாம் ஷுஅபா அதையே நாடுகிறார். பொத்தாம் பொதுவாக யூனுஸ் பலவீனமானவர் என்ற கருத்தை நாடவில்லை என்பதை தெளிவாக புரியலாம்.
(இப்னு மாஜா: 1019, 1892) ➚மற்றும் இன்ன பிற அறிவிப்புகள் அனைத்திலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அறிவிப்புகளை தனது தந்தை வழியாகவே யூனுஸ் அறிவித்திருக்கின்றார் என்பதற்குரிய சான்றுகள்)
]سنن ابن ماجه (2/ 146 ت الأرنؤوط)]
1019حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا نُسَلِّمُ فِي الصَّلَاةِ، فَقِيلَ لَنَا: إِنَّ فِي الصَّلَاةِ لَشُغْلًا.
[سنن ابن ماجه (3/ 87 ت الأرنؤوط)]
1892 حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدّثَنِي أَبِي يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ جَدِّي أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: أُوتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَوَامِعَ الْخَيْرِ، وَخَوَاتِمَهُ -أَوْ قَالَ: فَوَاتِحَ الْخَيْرِ- فَعَلَّمَنَا خُطْبَةَ الصَّلَاةِ وَخُطْبَةَ الْحَاجَةِ. خُطْبَةُ الصَّلَاةِ: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
மேற்கண்ட அறிவிப்புகளில் கோடிட்டு காட்டப்பட்டபடி யூனுஸ் தனது தந்தை வழியாகவே இப்னு மஸ்ஊத் செய்தியை அறிவித்திருக்கின்றார் என்பதைக் காணலாம்.
ஆக யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் தான் ஷுஅபா பலவீனப்படுத்துகிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.
இமாம் அபூ அஹ்மதுல் ஹாகிம் மற்றும் இமாம் இப்னு ஹர்ராஷ் ஆகியோரின் விமர்சனங்கள்:
சில நேரங்களில் இவருடைய அறிவிப்புகளில் சந்தேகமாக அறிவித்துள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 11/381)
இவருடைய ஹதீஸில் பலவீனம் உள்ளது
(மீஜானுல் இஃதிதால் 11/381)
இவர்களுடைய இந்த விமர்சனம் பொதுவானதாக இருந்தாலும் இமாம் அஹ்மத், இமாம் இப்னு ரஜப், இமாம் அலியிப்னுல் மதீனீ ஆகியோர் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பதில் மட்டும் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளதாலும், அபூ சுர்ஆ, ஷுஅபா ஆகியோரின் விமர்சனங்கள் தந்தை வழியாக அறிவிப்பவை மட்டும் தான் குறையுடையவை என்பதை உறுதிப்படுத்துவதாலும் இவர்களுடைய அந்தப் பொதுவான விமர்சனம் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய அறிவிப்புகளுக்கு மட்டும் தான் என்பதை உறுதிபடுத்துகிறது.
இமாம் திர்மிதி அவர்கள் கூட யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை ஹஸன் ஸஹீஹ் என்ற சரியான ஹதீஸிற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அதனுடைய தரத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். அதற்குச் சில சான்றுகளைத் தருகின்றோம்.
1628 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ عَنْ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ عَنْ أُمِّ الْحُصَيْنِ الْأَحْمَسِيَّةِ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَعَلَيْهِ بُرْدٌ قَدْ الْتَفَعَ بِهِ مِنْ تَحْتِ إِبْطِهِ قَالَتْ فَأَنَا أَنْظُرُ إِلَىعَضَلَةِ عَضُدِهِ تَرْتَجُّ سَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ وَإِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ مُجَدَّعٌ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا مَا أَقَامَ لَكُمْ كِتَابَ اللَّهِ قَالَأَبُو عِيسَى وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أُمِّ حُصَيْنٍ رواه الترمدي
1690 حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمدي
2730 حَدَّثَنَا سُوَيْدٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ حَدَّثَنَا مُجَاهِدٌ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّىاللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي جِبْرِيلُ فَقَالَ إِنِّي كُنْتُ أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ عَلَيْكَ الْبَيْتَ الَّذِي كُنْتَ فِيهِ إِلَّا أَنَّهُ كَانَ فِي بَابِالْبَيْتِ تِمْثَالُ الرِّجَالِ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي بِالْبَابِ فَلْيُقْطَعْ فَلْيُصَيَّرْ كَهَيْئَةِ الشَّجَرَةِوَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ وَيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مُنْتَبَذَتَيْنِ يُوطَآَنِ وَمُرْ بِالْكَلْبِ فَيُخْرَجْ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ ذَلِكَ الْكَلْبُ جَرْوًالِلْحَسَنِ أَوْ الْحُسَيْنِ تَحْتَ نَضَدٍ لَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَفِي الْبَاب عَنْ عَائِشَةَ وَأَبِي طَلْحَةَ رواه الترمدي
ஆக இதன் மூலம் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்புகள் மட்டும் தான் பலவீனமானவை என்பதும், ஏனைய அறிவிப்பாளர்கள் வழியாக அவர் அறிவித்தால் அந்த ஹதீஸ் பலமானதாகும் என்பதும் தெளிவாகிறது.
வித்ரு குனூத் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கவில்லை. எனவே அது ஸஹீஹான ஹதீஸாகும் என்று உறுதியாகிறது.
வித்ரு குனூது ஓதுவது தொடர்பான செய்தி ஷாத் என்ற பலவீனமான செய்தியா?
இதில் மற்றொரு கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். ஷுஅபா என்பவர் அறிவிக்கின்ற அறிவிப்பில் அல்லாஹும் மஹ்தினீ…. என்ற துஆவை கற்றுத் தந்துள்ளார்கள் என்று மட்டுமே இடம் பெற்றுள்ளது. வித்ர் என்ற வார்த்தையோ, குனூத் என்ற வார்த்தையோ இடம் பெறவில்லை.
ஷுஅபா என்பவர் மனனத் தன்மையில் மலை போன்றவர். அவருக்கு மாற்றமாக யூனுஸ் என்பவர் மேற்கண்ட துஆவை வித்ர் குனூத்தில் ஓத வேண்டும் என்று அறிவிப்பதால் யூனுஸ் உடைய அறிவிப்பு ஷாத் என்ற பலவீனமான நிலையை அடைகிறது எனக் கூறுகின்றனர்.
நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட கூடுதல் நம்பகத் தன்மை உடைய ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத் தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று கூறுவர்.
மேலும் ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து எல்லா மாணவர்களும் நம்பகத் தன்மையில் சமமாக இருந்து ஒருவர் மட்டும் ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியையும் ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.
ஆனால் இந்தச் செய்தி ஷாத் என்ற பலவீனமான வகையில் சேராது.
ஏனெனில், ஒருவரின் அறிவிப்பில் துஆவைக் கற்றுத் தந்தார்கள் என்றும் மற்றொரு அறிவிப்பில் வித்ர் குனூத்தில் ஓதுவதற்காகக் கற்றுத் தந்தார்கள் என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.
ஒருவரின் அறிவிப்பில் வித்ர் குனூத்தில் ஓதினார்கள் என்றம் மற்றொருவர் அறிவிப்பில் சுபுஹ் குனூத்தில் ஓதினார்கள் என்றும் அறிவித்திருந்தால் அதையே முரண்பாடு என்று சொல்லலாம்.
ஆனால் வித்ர் குனூத்தில் ஓதுவதற்கு கற்றுத் தந்தார்கள் என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் எங்கு ஓத வேண்டும் என்ற சரியான விளக்கம் இடம் பெற்றுள்ளது. எனவே வித்ரு குனூத்தில் ஓதுவதற்குக் கற்றுத் தந்தார்கள் என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல.
எனவே வித்ரில் குனூத் ஓத வேண்டும் என்று வருகின்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது தான் உறுதியாகின்றது