வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வின் சட்டங்களை பேணி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்தக் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அழகிய வழிகாட்டுதலை நமக்கு நினைவூட்டினார்கள்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அந்த நினைவூட்டலை நமக்கு அறிவிக்க, இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

” نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ “

ஹதீஸின் கருத்து : அல்லாஹு தஆலா இரண்டு அருட்கொடைகளை நமக்கு வழங்கி இருக்கின்றான்.

அல்லாஹ்வுடைய அருட்கொடைகள் ஏராளம் இருந்தாலும், மனிதனுக்கு அந்த இரண்டு அருட்கொடைகளில் விசேஷமான இரண்டு அருட்கொடைகள் இருக்கின்றன.

பிறகு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைத்தொடர்ந்து மக்களுடைய நிலைமையை விவரிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய அந்த நிஃமத்தை பயன்படுத்திக் கொள்வதில், அதற்க்கு நன்றி உள்ளவர்களாக இருப்பதில், அந்த நிஃமத்தை அல்லாஹ் எப்படி விரும்புகிறானோ அப்படி செலவழிப்பதில் மக்களில் அதிகமானவர்கள் ஏமாந்தவர்களாக அலட்சியம் செய்வவர்களாக இருக்கிறார்கள்.

அந்த நிஃமத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ அந்த முறையில் அவர்கள் பயன்படுத்துவதில்லை.

அந்த இரண்டு நிஃமத்துகளில் முதலாவது, உடல் ஆரோக்கியம். இரண்டாவது, மனிதனுக்கு கிடைக்ககூடிய ஓய்வு.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுயல்லாஹு அன்ஹு

(புகாரி: 6412).

இந்த உலகத்தில் மனிதன் எந்தப் பொருளுக்கும் விலை நிர்ணயித்துவிடலாம். அதற்குண்டான மதிப்பை அவன் உறுதி செய்யலாம்.

ஆனால், நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மதிப்பு போட முடியாது. ஆகவேதான், நோயுற்றவர்களை பார்க்கிறோம். அந்த நோயிலிருந்து அவர்கள் குணம் ஆவதற்காக ஆயிரங்களில் ஆரம்பித்து, லட்சங்களில் சென்று, கோடிகளில் செலவு செய்வதாக இருந்தாலும் கூட அதற்கு அவர்கள் தயாராகி விடுகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு முன்னால், செல்வத்தை அவர்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வது கிடையாது. செல்வத்தை எல்லாம் அழித்தால்தான் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்றால், அதை அவர்கள் செய்வதற்கு தயாராக இருப்பதை பார்க்கிறோம்.

ஆகவே, அல்லாஹ் கொடுத்த உடல் ஆரோக்கியத்திற்கு முன்னால் இந்த உலக செல்வம் பெரிது கிடையாது.

அடுத்து, இந்த உலக வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருக்கக் கூடிய நேரம். அதைத்தான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓய்வு என்று சொன்னார்கள்.

இந்த உலக வாழ்க்கை நமக்கு எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது? இந்த உலக வாழ்க்கையை அல்லாஹுதஆலா நமக்கு கொடுத்ததன் நோக்கம் என்ன?

அதுபற்றி அல்லாஹ் சொல்கிறான்:

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏

(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (என்று கேட்பான்.)

(அல்குர்ஆன்: 23:115)

இந்த உலக வாழ்க்கையில் மனிதனுடைய மிகப்பெரிய மதிக்க முடியாத சொத்து, அவனுக்கு அல்லாஹு தஆலா கொடுத்திருக்கக் கூடிய இந்த உலக வாழ்க்கை. இதனுடைய நேரங்கள்.

அதுவும் குறிப்பாக, மாணவர்களாக இருக்கக்கூடிய, படிக்கின்ற பருவத்தில் இருக்கின்ற, கல்வியைத் தேடுகின்ற இந்த காலத்தில் இருக்கின்ற உங்களுக்கும் எனக்கும் இந்த நேரம் என்பது மிக முக்கியமான ஒன்று.

இதை வைத்துதான் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். உங்களை உருவாக்க முடியும். உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள முடியும். உங்களை ஒரு கல்வியாளராக, ஒரு சிந்தனையாளராக, ஒரு ஆராய்ச்சியாளராக, ஒரு திறமையானவராக, நீங்கள் உங்களை உருவாக்க வேண்டுமென்றால், அந்த லட்சியத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால், உங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிற இந்த காலத்தை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்களோ அதை வைத்துதான் உங்களுடைய வாழ்க்கை முடிவு செய்யப்படும்.

உங்களுடைய வருங்காலம் இன்னொருவருடைய கையில் இருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். உங்களுடைய வருங்காலத்தை அல்லாஹு தஆலா உங்களுடைய கையில் கொடுத்திருக்கிறான்.

உங்களது அமல்களை வைத்து உங்களது முயற்சிகளை வைத்து அல்லாஹ் அதை முடிவு செய்வான்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى (39) وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى (40) ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَى

‘‘இன்னும் நிச்சயமாக மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது.” நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும். பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப்படுவான்.

(அல்குர்ஆன்: 53:39-41)

சிலர் வாய்ப்புகளை தேடுவார்கள். சிலர் வேலைகளை தேடுவார்கள். சிலர் தங்களை அங்கே அழைக்க மாட்டார்களா? எனக்கு இந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்காதா? எனக்கு இந்த இடத்தில் வேலை கிடைக்காதா? என்றெல்லாம் சிலர் ஏங்குவார்கள்.

ஆனால், இன்னும் சிலருக்கு வாய்ப்பு அவர்களை தேடும். இடங்கள் அவர்களைத் தேடும். நாடுகள் அவர்களை தேடும். மக்கள் அவர்களை தேடுவார்கள்.

இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன என்றால், ஒருவர் தங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. ஒருவர் தங்களை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு கூட்டம் தங்களை உருவாக்காமல், எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு அதிகமாக இருந்தன. ஆசைகள் அதிகமாக இருந்தன. வாய்ப்புகளின் தேடல்கள் இருந்தன. ஆனால், அவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை.

இன்னொருவரோ, தன்னுடைய கவனத்தை சிதறவிடாமல், தன்னுடைய முயற்சிகளை வீணாக்காமல், அல்லாஹ் கொடுத்த அறிவு, நினைவாற்றல், சிந்தனை ஆற்றல் என்று அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஹலாலான வழியில், அல்லாஹ் அனுமதித்த கல்வியில், எந்தக் கல்வியைக் கொண்டு தன்னுடைய இம்மையையும் உருவாக்கிக் கொள்ள முடியுமோ, மறுமையை செழிப்பாக்கி கொள்ள முடியுமோ, அதில் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். தங்களை உருவாக்கினார்கள்.

எனவே, அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா வாய்ப்புகள் அவர்களை தேடி வரும்படி செய்தான். இடங்களை அவர்களை தேடி வரும்படி செய்தான். சூழ்நிலைகளை அவர்களை நோக்கி வரும்படி செய்தான். இதுதான் நம்முடைய முன்னோர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள், அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்றால், இந்த உலகத்தில் நாம் பிறந்தோம், ஏதோ கொஞ்சம் சம்பாதிக்க வேண்டும், திருமணம், குடும்பம் வாழ்க்கை. இப்படியாக ஒரு குறுகிய சிந்தனையில் ஒரு குறுகிய எண்ணத்துக்குள் அவர்கள் சிறையுண்டு தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை என்பது இது மட்டுமல்ல. வாழ்க்கை என்பது மிகப் பெரிய ஒரு கடல். மிகப்பெரிய ஒரு சமுத்திரம். வாழ்க்கை என்பது அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.

நீங்கள் ஜன்னத்துல் ஃபிர்தௌஸை தேட வேண்டுமா? இந்த வாழ்க்கையை தான் பயன்படுத்தி ஆகவேண்டும். நீங்கள் ஜன்னத்துல் அத்னை தேட வேண்டுமா? நீங்கள் ஜன்னத்துல் நயீமை தேட வேண்டுமா? இந்த வாழ்க்கையை தான் பயன்படுத்தி ஆகவேண்டும்.

இந்த உலகத்தில் உங்களுக்காக, உங்கள் உம்மத்துகளுக்காக, வருங்கால சந்ததிகளுக்காக, வருங்கால இஸ்லாமிய தலைமுறைகளுக்காக, நீங்கள் ஏதாவது ஒன்றை செய்துவைக்க விரும்புகிறீர்களா? சாதித்து வைக்க விரும்புகிறீர்களா? அதற்கும் இந்த உலக வாழ்க்கை தான். வேறு ஒரு வாழ்க்கை இல்லை.

நமக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசம், அவை தன்னுடைய தேவைகளோடு தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும். அவ்வளவுதான்.

ஆனால், நாம் அப்படி அல்ல. நாம் இந்த நஃப்ஸுக்காக படைக்கப்படவில்லை. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உண்பது திண்பதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோமா? அது மறுமையை நம்பாதவர்களுடைய செயல் என்று அல்லாஹு தஆலா சொல்கிறான்.

அவர்களுக்கு உண்பதைத் தவிர, குடிப்பதை தவிர, சுற்றுவதை தவிர, வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது.

அல்லாஹ் கூறுகிறான்:

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِ‏

மறுமையை நம்பாதவர்கள் இந்த ஊர்களில் ஆடம்பரமாக சுற்றித் திரிவது, நபியே! உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட வேண்டாம். உங்களை மயக்கி விட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 3:196)

எத்தனை வசனங்களை அல்லாஹு தஆலா நமக்கு வரிசையாக சொல்லிக்கொண்டே செல்கிறான். நபிக்கு சொல்வதின் மூலமாக நமக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا

நபியே! இந்த உலகத்தில் இறை மறுப்பாளர்களுக்கு, மறுமையை நம்பாதவர்களுக்கு, வகைவகையான வாழ்க்கையை கொடுப்பதின் மூலம், நீங்கள் ஏறிட்டு பார்த்து விடாதீர்கள். உங்களுடைய பார்வைகள் அந்தப் பக்கம் சென்று விட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 20:131)

மேலும், அல்லாஹ் சொல்கின்றான்:

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا

(நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது.

(அல்குர்ஆன்: 18:28)

மேலும், அல்லாஹ் சொல்கின்றான்:

فَأَعْرِضْ عَنْ مَنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا (29) ذَلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَى

(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக. இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.

(அல்குர்ஆன்: 53:29-30)

மேலும், அல்லாஹ் சொல்கின்றான்:

يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ

அவர்கள், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள வெளிப்படையான விஷயங்களை அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால், அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் பராமுகமாயிருக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 30:7)

இந்த உலகத்தினுடைய வாழ்க்கையைக் கொண்டு தான் நம்முடைய ஆகிரத்தை தேட முடியும். நாம் அல்லாஹ்வை சந்திக்க கூடிய அந்த நாளை சிறந்த நாளாக ஆக்கிக் கொள்ள முடியும்.

அதுபோன்றுதான், இன்று உலக வாழ்க்கையை நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்காக, நாம் பயன்படக்கூடிய ஒரு விதத்தில் நம்மை உருவாக்கி, அவர்களுக்கான பயன்களை விட்டு செல்ல முடியும்.

அல்லாஹு தஆலா நம்மை நம்முடைய நஃப்ஸுக்காக படைக்கவில்லை.

ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். வேதத்தையுடையவர்களும் (இவ்வாறே) நம்பிக்கைகொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகள்தான்.

(அல்குர்ஆன்: 3:110)

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு இறை நம்பிக்கையாளன், சுயநல வாதியாக இருக்க கூடாது. அவனால் பிறருக்கு ஒரு நன்மையை செய்யாமல், தான் உண்டு தனது வாழ்க்கை உண்டு, பிறரைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று ஒரு முஸ்லிமால் வாழ முடியாது. அப்படி வாழ்பவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது.

பிறர்நலம் விரும்புதலை பிறருக்கு நன்மை செய்வதை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்முடைய அடிப்படையாக ஆக்கினார்கள்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், ஈமானுடைய பாடத்தை குறிப்பிடும் பொழுது, ஈமானுடைய கிளைகளை சொல்லும் பொழுது,

أَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ

அதனுடைய உயர்ந்த கிளையாக லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறி, அதனுடைய இறுதி தாழ்ந்த ஒன்றாக, பாதையில் மக்களுக்கு எது இடையூறாக தெரிகிறதோ அதை அகற்றுவது ஈமான் -இறை நம்பிக்கை என்ற ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு

(முஸ்லிம்: 35)

இந்த ஹதீஸை நாம் சிந்திக்க வேண்டாமா? கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், அலட்சியமாக, இந்த சமுதாயத்தின் நன்மைகளை அலட்சியம் செய்தவர்களாக நம்மால் வாழ முடியாது.

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் புகாரி உடைய இந்த ஹதீஸிற்க்கு விளக்கம் எழுதுகிறார்கள்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்று, கல்வி உயர்த்தப்பட்டு விடும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு

(புகாரி: 100)

இமாம் கூறுகிறார்கள்: கல்வி என்பது, ஒரு முஸ்லிம் தேடி படித்து கொடுப்பது, கற்றுக் கொள்வது மட்டுமல்ல. தான் படித்த கல்வியை பிறருக்கு அவன் வாழ்நாள் எல்லாம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

தன்னுடைய திறமையை, தன்னுடைய அறிவை, தனக்குத் தெரிந்ததை பிறருக்கு கற்றுத் தராமல் இருப்பது, பிறருக்கு அதை போதிக்காமல் இருப்பது, இது அல்லாஹ் அவனுக்கு கொடுத்த கல்வி என்ற நிஃமத்திற்கு அவன் செய்யக்கூடிய மோசடி ஆகும்.

அல்லாஹ் இல்ம் என்ற அமானிதத்தை அவனிடம் கொடுத்தானே, அதற்கு அவன் மோசடி செய்து விட்டான் என்று எழுதிவிட்டு இதற்க்கு ஒரு உதாரணத்தை எழுதுகிறார்கள்.

உங்களில் ஒருவருக்கு ஒரு ஊசி செய்யும் தொழில் தான் தெரிகிறது. இதை அவருக்கு செய்யத் தெரியும். உருவாக்கத் தெரியும் என்று இருந்தால், இதை நான்கு பேருக்கு அவர் கற்றுக் கொடுக்காமல், அவர் இறந்து விடுவாரேயானால், அல்லாஹ் அவருக்கு கொடுத்த திறமைக்கு அந்த நிஃமத்திற்கு அவர் நன்றி கெட்டவராக இருப்பார்.

இந்த அளவு நம்முடைய முன்னோர்கள் கல்வியை பேணுவதிலும், கற்ற கல்வியை பிறருக்கு கொடுப்பதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

இன்று மறுமை விஷயத்திலும் நாம் பின் தங்கி இருக்கிறோம். நம்முடைய முன்னோர்கள் செய்த அமல்கள் நம்மிடத்தில் இல்லை. இந்த கல்வி விஷயத்திலும் நாம் பின்தங்கி இருக்கிறோம்.

நம்முடைய முன்னோர்கள் கல்வியில் எப்படி ஆர்வமும் முனைப்பும் உழைப்பும் இருந்தார்களோ, அது நம்மிடத்தில் இருக்கிறதா என்றால், பொருளாதாரத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவை படித்துவிட்டு, அதுதான் கல்வி என்பதாக இருந்துவிடுகிறோம்.

கல்வி என்பது அதற்கும் அப்பாற்பட்டது. அல்லாஹு தஆலா இந்த கல்வியைக் கொண்டு நமது சமுதாயத்தை உயர்த்தினான். உயர்த்திக் கொண்டே இருப்பான்.

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

(இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.

(அல்குர்ஆன்: 58:11)

ஆகவே, அல்லாஹு தஆலா கொடுத்திருக்கக் கூடிய வாய்ப்புகளில் மிக முக்கியமான ஒரு வாய்ப்பு, இந்த உலக வாழ்க்கை. அதிலும் குறிப்பாக, கல்வியைத் தேடி பயணிக்கக்கூடிய அந்த வாய்ப்பு. கல்வி பருவம் கிடைக்கப் பெறுவது. இந்த வாய்ப்பு தவறி விடும்போது தான் இதனுடைய அருமை தெரியும்.

அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய வழிகளில் நாம் அதிகமதிகம் நேரங்களை, வாழ்க்கையின் பகுதிகளை செலவு செய்வதோடு, நாம் உருவாக வேண்டும், நம்முடைய சமுதாயம் கண்ணியம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் நாம் வாழ்வோமேயானால், கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்மின் மூலமாக, நமக்கும் நன்மை செய்வான்; நம்முடைய சமுதாயத்திற்கும் நன்மை செய்வான்.

நாளை மறுமையில் வரும்பொழுது, லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்கள் உடைய நன்மைகளில் நீங்கள் பங்காளிகளாக கூட்டாளிகளாக அந்த நன்மைகளை நீங்களும் பெற்றவர்களாக இருப்பீர்கள்.

அந்த நேரத்தில் யோசிப்பீர்கள்; நான் இவ்வளவு தொழுகைகளை தொழவில்லையே? இவ்வளவு குர்ஆனை ஓதவில்லையே? இவ்வளவு அமல்களை செய்யவில்லையே? இவையெல்லாம் எப்படி கிடைத்தது என்று.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:

إِنَّ الدَّالَّ عَلَى الخَيْرِ كَفَاعِلِهِ

நன்மையை யார் அறிவித்துக் கொடுக்கிறாரோ அவருக்கு அந்த நன்மையை செய்தவருடைய கூலி கிடைக்கும்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

(திர்மிதீ: 2670)

அந்த அடிப்படையில், அந்த கூலியில் நாமும் பங்காளிகளாக வருவோம்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா  எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருக்கிற இந்த உலக வாழ்க்கையை அல்லாஹ்வுடைய பொருத்தத்தில், அவனுடைய மார்க்கக் கடமைகளை செய்வதில், மக்களுக்கு நன்மை செய்வதில் எளிதாக்கி கொடுப்பானாக! நம்மை அங்கீகரிப்பானாக!