வானவர்கள் விசாரனை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அல்லாஹ் அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனால் செய்ய முடியாத காரியம் என்று எதுவும் இல்லை. ஆதலால், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவனுக்கு எந்தவொரு உதவியாளரும் தேவையில்லை. அவன் எந்தவொரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் “ஆகு’ என்று சொன்னால் மட்டும் போதும் அடுத்த கணமே அது ஆகிவிடும்.

அவனது கட்டளைப்படி அந்தக் காரியம் நடந்துவிடும். இருப்பினும் அல்லாஹ், வானங்களிலும் பூமியிலும் பல்வேறுப் பணிகளைப் புரியும் விதத்திலே மலக்குகள் எனும் இனத்தைப் படைத்திருக்கிறான். காரணம், அந்தக் காரியங்களை தன்னால் செய்ய இயலாது என்பதால் அல்ல. அவன் தான் நாடியதைப் படைப்பவன்.

தனது கட்டளைக்குக் கடுகளவும் மாறு செய்யாத படைப்பினம் இருக்கிறது என்பதை மாறு செய்யும் குணம் கொண்டிருக்கும் மனிதர்களாகிய நமக்கு புரியவைக்கும் விதமாக மலக்குகளைப் படைத்திருக்கிறான். இதன் மூலம், அவனது பழுதற்ற படைப்பாற்றலைப் புரிந்து கொள்ளும் பெரும் பாக்கியத்தை வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறான்.

அல்லாஹ், மலக்குகளுக்கு பலவிதமான தனிப்பட்டத் தன்மைகளைக் கொடுத்ததோடு அவர்களுக்கு ஏராளமான பணிகளையும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான். அந்த வகையில், மலக்குகள் எந்தெந்த பணிகளையெல்லாம் செய்கிறார்கள்? அவற்றை எப்படிச் செய்கிறார்கள்? என்பதைக் குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் இந்த உரையில் சிலவற்றை அறிந்துகொள்வோம்.

கருவறையில் விசாரித்தல்

நாமெல்லாம் தாயின் கருவறையில் கருக்கட்டியாக இருந்து மனிதத் தோற்றம் கொண்ட சிசுவாக வடிவம் மாறுவதற்கு தயாராக இருக்கும் போதே, நாம் பூமியில் பிறந்த பிறகு எப்படி இருப்போம்? என்ற நமது எதிர்கால சம்பந்தமான செய்திகள் முடிவாகிவிடும். அதன்படி, முதன் முதலி-ல் நம்மைப் பற்றிய மிக முக்கியமான நான்கு விஷயங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படும்.

கருவறையில் உருவாகவிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?, அதன் வாழ்க்கை துர்பாக்கியம் உடையதாக இருக்குமா? நற்பாக்கியம் உடையதாக இருக்குமா? அதற்கு எவ்வளவு வாழ்வாதாரம் கிடைக்கும்?, அக்குழந்தை எத்தனை ஆயுள் வரை இருக்கும்?” என்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கும் நான்கு விஷயங்களை எழுதுவதற்காக என்றே வானவர் ஒருவரை அல்லாஹ் தாயின் கருவறைக்கு நியமித்துள்ளான்.

நமக்காக கருவறையில் நியமிக்கப்பட்ட வானவர் நமது வருங்கால வாழ்க்கைப் பற்றிய தகவல்களை இறைவனின் கட்டளைக்கேற்ப துல்-லியமாக கவனமாகப் பதிவு செய்வார். இதைப் பின்வரும் செய்தியிலே நாம் தெரிந்து கொள்ளலாம்.

வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் (பெண்ணின்) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான். (அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும் போது) அந்த வானவர், “என் இறைவா! (இது ஒரு துளி) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என் இறைவா! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார்.

அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர், “என் இறைவா! (இது) ஆணா அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையணைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: (புகாரி: 318) , 3333, 6595)

உயிரைக் கைப்பற்றுதல்

மரணம் என்பது பொதுவான விஷயம். இதை மறுப்பவர் எவரும் எங்கும் இல்லை. நாம் எவ்வாறு மரணிக்கிறோம்? என்பதற்குச் சரியான உண்மையான பதிலை இஸ்லாம் மட்டுமே தெளிவாகச் சொல்கிறது. இந்த அவகாசமான வாழ்க்கையில் நமது செயல்களைச் சோதிப்பதற்காக தரப்பட்டிருக்கும் ஆயுள்காலம் தீர்ந்து போகும் தருவாயில் நமது உயிரைக் கைப்பற்றுவதற்கு என்றே மலக்குகளை அல்லாஹ் வைத்திருக்கிறான்.

இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட மலக்குகள் இருப்பார்கள். இந்தப் பணியில் இருக்கும் மலக்குகள் வாழ்நாள் தவணை முடிந்துவிட்ட ஆத்மாவைக் கைப்பற்றியதுமே அதை அல்லாஹ்விடம் எடுத்துச் சென்று விடுவார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் பெரும் சான்றுகளாக இருப்பதைக் காணலாம்.

 وَقَالُوْٓا ءَاِذَا ضَلَلْنَا فِى الْاَرْضِ ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ ؕ ‌بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ‏

 قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ

“பூமிக்குள் மறைந்த பின் புதுப்படைப்பை நாங்கள் பெறுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை மறுக்கின்றனர் .”உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 32:10),11.)

 اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ‌ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ‌ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا‌ؕ فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَسَآءَتْ مَصِيْرًا ۙ‏

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?” என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 4:97)

 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِىَ اِلَىَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَىْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ‌ؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ‏

அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். “உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றையதினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!’ (எனக் கூறுவார்கள்).

(அல்குர்ஆன்: 6:93)

 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்” என அவர்கள் கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:37)

الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَـعْمَلُ مِنْ سُوْۤءٍؕ بَلٰٓى اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, “நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை” என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 16:28)

الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ طَيِّبِيْنَ‌ ۙ يَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُۙ ادْخُلُوا الْجَـنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 16:32)

இறைநம்பிக்கையாளரின் உயிர் பிரியும்போது அதை இரு வானவர்கள் எடுத்துக்கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள். அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), “ஒரு நல்ல ஆன்மா பூமியி-லிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!” என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகிறது.

பிறகு அல்லாஹ், “இதை இறுதித் தவணைவரை (மறுமை நாள்வரை தங்க வைக்கப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்” என்று கூறுவான். ஓர் இறைமறுப்பாளர் உயிர் பிரியும்போது -அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்புவது பற்றியும் வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள் (என்பது பற்றியும் புதைல் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) -வானுலகவாசிகள், “ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது” என்று கூறுகின்றனர்.

அப் போது “இதை இறுதித் தவணைவரை கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படுகிறது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை “இப்படி’ கொண்டுசென்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: (முஸ்லிம்: 5510) 

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர் அவரது உயிரைக் கைப்பற்றிச் செல்லதற்கு வந்தார். அந்த மனிதரிடம், “(உன் வாழ்நாüல்) நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றாயா?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “(அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார். “(நன்மை ஏதாவது செய்திருக்கின்றாயா என்று) சிந்தித்துப்பார்” என்று கூறப்பட்டது.  அவர், “அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன்.

அப்போது, அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசதியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியில்லாதவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விடுவேன்” என்று பதிலளித்தார். அதன் காரணத்தால் அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் புகுத்தினான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)

ஆதாரம் : (புகாரி: 2077) , 3451

மண்ணறையில் விசாரித்தல்

முஸ்லி-ம்களாகிய நாம் மண்ணறை வாழ்க்கையை நம்பியவர்களாக இருக்கிறோம். மரணிப்பவர்கள் அனைவரும் உலகம் அழியும் வரை மண்ணறை வாழ்க்கை எனும் திரைமறைவு வாழ்க்கையிலேயே இருந்து கொண்டிருப்பார்கள். அதாவது, பிரேதத்தை மண்ணறையில் அடக்கம் செய்துவிட்டு மக்களெல்லாம் தூரமாக சென்ற பிறகு அந்த பிரேத்தை எழுப்பி மலக்குகள் விசாரிப்பார்கள்.

மலக்குகளால் விசாரிக்கப்பட்ட ஆத்மா நல்வழியில் வாழ்ந்ததாக இருந்தால் இன்பமான வாழ்க்கையிலும், தீயவழியில் வாழ்ந்ததாக இருந்தால் வேதனையான வாழக்கையிலும் மறுமை நாள் வரை இருந்து கொண்டிருக்கும். இவ்வாறு இறந்தவர்களின உயிரை விசாரிக்கும் பணியை திறம்பட செய்வதற்கு என்றே பிரத்யேகமாக மலக்குகளை அல்லாஹ் நியமித்துள்ளான். இதற்குரிய சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்ப(ட்டு கேள்வி கேட்கப்ப)டும்; பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சியம் கூறுவார்.

இதையே அல்லாஹ், “எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (14:27) எனக் குறிப்பிடுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல்: (புகாரி: 1369) 

ஓர் அடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவருடைய தோழர்கள், திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களது செருப்பின் ஓசையைச் செவியேற்பார். அப்போது இரு மலக்குகள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, ” இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருக்கிறாய்?” என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர்.

அவர் மூஃமினாக இருந்தால் “இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகிறேன்”” எனக் கூறுவான். அவரிடம் “(நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உனது இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்” எனக் கூறப்படும்.

இரண்டையும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார் – அவருக்கு அடக்கக்குழி (கப்ரு) விசாலமாக்கப்படும்’என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் “இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?”” என அவனிடம் கேட்கப்படும்போது “எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிலிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிலிக்கொண்டிருந்தேன்” என விடையளிப்பான்.

உடனே “நீ அறிந்திருக்கவுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: (புகாரி: 1338) , 1374

(ஒரு முறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ர-லி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ர-லிலி) அவர்களிடம், “மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கேட்டேன்.

(தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி (தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்த) “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது “(இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன்.

(தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இதோ) இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்).

மேலும் எனக்கு (பின்வருமாறு) இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலில் சோதனைக்கு “நிகரான’ அல்லது “நெருக்கமான’ அளவிற்கு சோதிக்கப் படுவீர்கள். அப்போது (கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும்.

அப்போது “இறை நம்பிக்கையாளர்’ அல்லது “உறுதிகொண்டவர்’ “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் (அன்னாரின் அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம்’ என்று மும்முறை கூறுவார்.

அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து) “(சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங் குவீராக!’ என்றும் “நிச்சயமாகவே நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்’ என்றும் கூறப்படும். “நயவஞ்சகனோ’ அல்லது “சந்தேகப்பேர்வழியோ’, “எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்-லிலிக்கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்” என்பான்.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)

நூல்: (புகாரி: 86) , 184 

செயல்களைப் பதிவு செய்தல்

அண்ட சராசரத்தில் அல்லாஹ்வை விட்டு அணுவும் மறைய முடியாது. அவன் அனைத்தையும் அறிந்தவன். எந்த நேரமாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும், எந்தக் காரியமாக இருந்தாலும் படைப்பினங்களின் நிலைகளை, நிகழும் சம்பவங்களை பரிபூரணமாக தெரிந்தவன். நமது செயல்களில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் அவன் அறிந்தவனாக இருக்கிறான். இருப்பினும், நமது நடவடிக்கைகளைக் கண்காணித்து செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகளை அல்லாஹ் படைத்துள்ளான்.

எந்நேரமும் நம்மை நெருங்கியிருக்கும் சூழ்ந்திருக்கும் அவர்கள் நமது காரியங்கள் எதையும் விடாமல் முழுமையாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பதிவு செய்யும் பணியை மலக்குகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் செய்திகள் போதுமான சான்றுகளாக இருக்கின்றன.

اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ‏

ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.

(அல்குர்ஆன்: 86:4)

 وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ‏  كِرَامًا كَاتِبِيْنَۙ‏  يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ‏

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

(அல்குர்ஆன்: 82:10),11,12)

وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا‌ ؕ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ‏

மனிதர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 10:21)

 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏
 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன்: 50:16),17,18)

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ‏

அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 43:80)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாண்பும் வலிலி-வுமிக்க அல்லாஹ் (நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் வானவர்களிடம்) கூறினான்: என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணிவிட்டாலே அதை நீங்கள் பதிவு செய்துவிடாதீர்கள். தான் எண்ணியபடி அவன் (அந்தத் தீமையை) செயல்படுத்திவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே பதிவு செய்யுங்கள்.

அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை ஒரு நன்மையாகவே பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அந்த நன்மையை அவன் செய்து முடித்துவிட்டால் அதைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: (முஸ்லிம்: 203) 

செயல்களை பதிவு செய்வதற்காக மலக்குமார்களை நியமித்திருக்கும் அல்லாஹ், குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் பதிவு செய்வதற்காகவும் மலக்குகளில் சிலரை நியமித்துள்ளான். அவர்கள் அக்காரியங்களை மட்டும் பதிவு செய்வார்கள்.

குறிப்பாக, வெள்ளிக் கிழமை தோறும் ஜும்ஆவில் கலந்து கொள்பவர்களின் பெயர்களை பதிவு செய்யும் பணி சில மலக்குகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் இமாம் உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் வரை பள்ளிக்கு வருபவர்களை பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸ் இருககிறது.

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாசலின் நுழைவாயிலில் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள்.

நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார்.

அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவராவார்கள். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம்: (புகாரி: 929) 

முடியுரை

கருவறையில் விசாரித்தல், உயிரைக் கைப்பற்றுதல், மண்ணறையில் விசாரித்தல், செயல்களைப் பதிவு செய்தல், இது போன்ற ஏராளமான பணிகள் செய்துக்கொண்டு இருகிறார்கள். ஒரு இறைநம்பிக்கையாளன் இவற்றை நம்பிக்கை கொள்வது ஈமானின் அம்சமாகும். அவ்வாறு ஈமானின் அம்சங்களை கடைபிடிப்போமாக! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.