வாக்குமீறுதல்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

வாக்குமீறுதல்

آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ.

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 33)

இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا ، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا عَاهَدَ غَدَرَ ، وَإِذَا خَاصَمَ فَجَرَ.

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (புகாரி: 2459) 

அல்லாஹ் முனாஃபிக்குகளின் தொழுகையை பற்றி குறிப்பிடும் போது …..

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 4:142)

 إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا 

நயவஞ்சகர்களுக்கு மிக சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவைகளின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1154) (1041)

நயவஞ்சகர்களின் மறுமை வேதனை பற்றி அல்லாஹ் குறிப்பிடும்…..

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا

நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.

(அல்குர்ஆன்: 4:145)

நபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். மதீனாவைச் சுற்றிவளைத்து எதிரிப் படைகள் நிற்கும் போது நபியவர்கள் தோழர்களிடத்தில் எதிரிகளை உளவு பார்ப்பதை பற்றி கேட்டார்கள்..

مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ يَوْمَ الأَحْزَابِ قَالَ الزُّبَيْرُ أَنَا ثُمَّ قَالَ مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ قَالَ الزُّبَيْرُ أَنَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَحَوَارِيَّ الزُّبَيْرُ.

அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

ஸுபைர் (ரலி) அவர்கள், ”நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ”அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டுவருபவர் யார்?” என்று கேட்க, ஸுபைர் (ரலி) அவர்கள், ”நான்” என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ”ஒவ்வோர் இறைத் தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல்: (புகாரி: 2846) 

அது போல நபியவர்களின் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நாளில் ”அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையநேசத்தையும் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.

அந்தக் கொடி தங்களில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்படவேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அலீ பின் அபீதாலிப் எங்கே?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், ”(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரலி)அவர்கள், ”நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது (அரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்: (புகாரி: 4210)