வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்
வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்
வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
முழுமையான கல்வி நிறைந்த அத்தியாயம்
“ஆரம்பமானவர்களின் கல்வியையும், இறுதியானவர்களின் கல்வியையும் இவ்வுலக, மறு உலகக் கல்வியையும் அறிவது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் வாகிஆ அத்தியாயத்தை ஓதட்டும்” என்று மஸ்ரூக் என்பவர் கூறினார்.
நூல்: முஸன்னப் இப்னு அபீ ஸைபா (பாகம்: 7 பக்கம்: 148)
ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 2, பக்கம்: 95)
இந்த ஹதீஸை மஸ்ரூக் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே மஸ்ரூக் அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
வறுமை ஏற்படாது
யார் ஒவ்வொரு இரவிலும் வாகிஆ அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு வறுமை ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: ஷுஅபுல் ஈமான் பாகம்: 2, பக்கம்: 491
இதே கருத்து முஸ்னதுல் ஹாரிஸ், பாகம்: 2, பக்கம்: 729, பழாயிலுஸ்ஸஹாபா, பாகம்:2, பக்கம்:726ல் இடம் பெற்றுள்ளது.
ஷுஅபுல் ஈமானின் சில அறிவிப்புகளிலும், இன்னும் சில நூல்களிலும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தன்னுடைய பெண் குழந்தைகளுக்குக் கற்று கொடுப்பவர்களாக இருந்தார்கள் என்று கூடுதலாக இடம்பெறுகிறது.
இதன் எல்லா அறிவிப்புகளிலும் ஸுஜாவு என்பவரும் அஸ்ஸரிய்யு என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இந்தச் செய்தி மறுக்கப்பட வேண்டிய செய்தி என்றும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்இலலுல் முதநாஹிய்யா, பாகம்: 1, பக்கம்: 112)