வஹீ இறங்கிய புனித மாதத்தில்…. வஹீயை மட்டுமே பின்பற்ற உறுதி ஏற்போம்

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

புனித ரமளான் மாதத்தில் புண்ணியம் தரும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? திருக்குர்ஆன் பதில் அளிக்கின்றது.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்!

(அல்குர்ஆன்: 2:185)➚

புனிதக் குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்று அது தெரிவிக்கின்றது.

தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் வழங்கிய (தவ்ராத் வேதத்)தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறையச்சம் உடையோர் ஆவதற்காக அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்” என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கியதை நினைத்துப் பாருங்கள்.

(அல்குர்ஆன்: 2:63)➚

பனூ இஸ்ரவேல் மக்களுக்கு அருளப்பட்ட தவ்ராத் வேதத்தைக் கடைப்பிடிக்கச் செய்வதற்காக, தூர் மலையை அவர்களின் தலைக்கு மேல் தூக்கி அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான் என்று இந்த வசனம் நமக்கு குறிப்பிடுகின்றது. ஆனால் அவர்கள் அதற்கு மாறு செய்து விட்டார்கள். இதைத் தான் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நாங்கள் செவியுற்றோம்; மாறு செய்தோம்” என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 2:93)➚

அவர்களுக்கு தூர் மலை தலைக்கு மேல் தூக்கி தவ்ராத்தைக் கடைபிடிக்குமாறு கட்டளையிட்டான். ஆனால் நமக்கோ ஒவ்வொரு வருடமும் நம்மை நோன்பு நோற்கச் செய்து, குர்ஆனை வலுவாகப் பற்றிப் பிடிக்கச் சொல்கின்றான். இந்த வகையில் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கும் வேளையில் நாம் குர்ஆனை வலுவாகப் பற்றிப் பிடித்திருக்கின்றோமா என்றால் இல்லை என்பது தான் நமது பதிலாக இருக்கின்றது. அந்தப் பதில்தான் நம்மிடம் செயல்பூர்வமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல! எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20)➚, 21

இறந்தவர்கள் எதையும் செவியேற்க மாட்டார்கள், அவர்கள் எதையும் அறிய மாட்டர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

ஆனால் சமுதாயத்தை வழிநடத்தும் உலமாக்களோ, கப்ரில் அடங்கப்பட்டிருக்கும் நல்லடியார்கள் வெளி உலகில் உள்ள மக்கள் கேட்கின்ற பிரார்த்தனைகளைச் செவியுறுகின்றார்கள்; அதை அறிகின்றார்கள்; அவர்களைப் பார்க்கின்றார்கள்; அவர்கள் கோரும் பிரார்த்தனைகளைக் கேட்டு பிரச்சனைகளைத் தீர்க்கின்றார்கள் என்று நம்புகின்றார்கள் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது? இவர்களில் றிலீ.ஞி முனைவர் பட்டம் பெற்ற சிலரும் இருக்கின்றார்கள். செத்தவன் உயிருடன் இருக்கின்றான் என்று சொல்வதற்கு டாக்டர் பட்டம் ஒரு கேடா? இறந்தவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாக நிறுத்தி இணைவைக்கும் காரியத்தைச் செய்யும் இவர்கள் குர்ஆனை விட்டு விலகிச் செல்கின்றார்கள்.

(இறந்த அடியார்களான) அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பு உள்ளது.

(அல்குர்ஆன்: 23:100)➚

இறந்தவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கின்றது. அதைத் தாண்டி அவர்கள் எதையும் செவியுறமுடியாது என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

இத்தனையையும் தாண்டி இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்று சொல்கின்றார்கள்; அதை நம்புகின்றார்கள். இது இணை வைப்பு மட்டுமல்ல! இறை மறுப்பும் ஆகும். அல்லாஹ் காப்பானாக!

இந்த அடிப்படையில் குர்ஆனுக்கு எதிராகவே இவர்கள் பயணிக்கின்றார்கள். சிந்தனையிலும் செயல்பாட்டிலும் செவியுற்றோம்; மாறு செய்தோம் என்று யூதர்களையே பிரதிபலிக்கின்றார்கள். அதனால் இந்தப் போலி உலமாக்களை விட்டும் சமுதாயத்தைக் காக்கின்ற வகையில் வஹீ இறங்கிய ரமளான் மாதத்தில் வஹீயை மட்டும் வாழ்வியலாக்குவோம் என்ற பிரச்சாரத்தை வீரியமாகக் கொண்டு செல்வோமாக!

இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனைப் பின்பற்றுங்கள்! (வேறு) வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அது அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அவன் இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.

(அல்குர்ஆன்: 6:153)➚

இந்த வசனத்தை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி, “எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!” என்று ஒவ்வொரு தொழுகையிலும் ஃபாத்திஹா அத்தியாயத்தில் நாம் கேட்கும் நேரிய பாதை என்பது வஹீயை மட்டும் பின்பற்றுவது தான் என்பதை எடுத்துக் கூறுவோமாக!

அல்லாஹ்வின் வஹீயைப் பின்பற்றாமல், மத்ஹபுகள், இமாம்கள், நபித்தோழர்கள் என்று மனிதக் கருத்துக்களைப் பின்பற்றினால் அது அவனது பாதையை விட்டும் விலக்கி விடும்.

மத்ஹபைப் பின்பற்றும் பள்ளிகளில் ரமளான் மாதத்தில் ஒரு கூத்து நடைபெறும். ஃபர்ளான தொழுகையையும், அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகையையும் ஒரே ஜமாஅத்தாகத் தொழுவார்கள். ஆனால் வித்ரு தொழுகையை மட்டும் ஹனஃபீ, ஷாஃபி என்று இரண்டு அணிகளாகப் பிரிந்து தொழுவார்கள். இதற்குக் காரணம் இறைச்செய்தியான வஹீயைப் பின்பற்றாதது தான் என்று அம்மக்களிடம் அடித்துச் சொல்வோமாக!