வறுமை என்பதும் சோதனையே

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
வறுமை சிறப்பிற்குரியது,

வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல் இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவையெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து என்று எண்ணி கவலைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரை, வறுமை என்பது சிறப்பிற்குரியது.

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاء

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்.

அறி : இம்ரான் பின்ஹுஸைன் (ரலி),
நூல் : (புகாரி: 3241)  

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمِِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (திர்மிதீ: 2353) (2276)

எனவே, வறுமை என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறப்பிற்குரியது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரராக இருப்பதும் இழிவானது அல்ல.

ஏழ்மைதான் சிறந்தது என்பதற்காக செல்வந்தராக இருக்கக் கூடாது என்று பொருள் அல்ல. பணம் இருந்தால் நரகத்திற்கு தான் போவார் என்று இல்லை. அதைக் கொண்டு, தான தர்மம் செய்து சுவனத்திற்கும் செல்ல முடியும். தவறாக செலவு செய்து நரகத்திற்கும் செல்ல முடியும்.  

பொதுவாகவே, பணம் தீமையை அதிகம் தூண்டும். சினிமாவுக்கு போகச் சொல்லும். தண்ணி அடிக்கச் சொல்லும். கண்டதையும் பார்க்கச் சொல்லும். திமிர் பேசச் சொல்லும். பல தீமைகளின் பிறப்பிடமாக இந்த பொருளாதாரம் இருப்பதால், இது வைத்திருப்பது கத்தி மீது நடப்பது போன்றது. இல்லாதவனுக்கு கவலையில்லை. இதன் காரணமாகத் தான் நபியவர்கள் பணக்காரர்களை விட ஏழைகளைச் சிறப்பித்து பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.

عَنْ سَهْلٍ قَالَ
مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا تَقُولُونَ فِي هَذَا قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ وَإِنْ قَالَ : أَنْ يُسْتَمَعَ قَالَ ثُمَّ سَكَتَ فَمَرَّ رَجُلٌ مِنَ فُقَرَاءِ الْمُسْلِمِينِ فَقَالَ مَا تَقُولُونَ فِي هَذَا قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ وَإِنْ قَالَ : أَنْ لاَ يُسْتَمَعَ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا

சஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ”இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஸ்­லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்” எனக் கூறினார்கள்.

நூல்: (புகாரி: 5091) 

நபியவர்கள், பணக்காரர்கள் இந்த உலகம் நிரம்ப இருப்பதை விட ஈமானோடு வாழக்கூடிய ஒரு ஏழை சிறந்தவன் என சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

ஏழ்மை என்பது முஸீபத்தா?

ஏழ்மையை வெறுப்போமேயானால், முஸீபத்து என்று நினைப்போமேயானால் நபியவர்களும், ஸஹாபாக்களும், ஏழ்மையில் இருந்துள்ளார்களே! ஏன் சில நபிமார்களும் கூட இந்த வறுமையால் சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நபி யாகூப் (அலை) அவர்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் வாழ்ந்திருக்கிருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையின் காரணமாக தன்னுடைய மகன்களை அருகிலுள்ள நாட்டின் மன்னரிடம் சென்று உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பியதாக திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰٮةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ

அவர்கள், அவரிடம் (யூஸுஃபிடம்) வந்தனர். ”அமைச்சரே! எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்குகளையே கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக! எங்களுக்குத் தானமாகவும் தருவீராக! தானம் செய்வோருக்கு அல்லாஹ் வழங்குவான்”என்றனர்.

(அல்குர்ஆன்: 12:88)

நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அருமை ஸஹாபாக்களும் கூட வறுமையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர் (ரலி) அவ்வீட்டின் வறுமை நிலையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

 وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ مَا يُبْكِيكَ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللهِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الآخِرَةُ

அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன.  அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். 

நூல்: (புகாரி: 4913) 

إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّه صلى الله عليه وسلم نَارٌ

நபியவர்கள் வீட்டில் வறுமையின் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு மேல் அடுப்பு பற்ற வைக்க முடியவில்லை. 

நூல்: (புகாரி: 2567)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ طَعَامٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى قُبِضَ

நபியவர்கள் மரணிக்கின்ற வரை ஒரு தடவை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய குடும்பம் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

நூல்: (புகாரி: 5373) 

وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم دِرْعًا لَهُ بِالْمَدِينَةِ عِنْدَ يَهُودِيٍّ وَأَخَذَ مِنْهُ شَعِيرًا لأَهْلِهِ

நபியவர்கள் மரணிக்கும் போது கூட வறுமையின் காரணத்தினால் தமது உருக்குச் சட்டையை ஒரு யூதனிடம் கோதுமைக்காக அடகு வைத்த நிலையில் தான் சென்றார்கள். 

நூல்: (புகாரி: 2069) 

நபியவர்கள் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறே நபியவர்களோடு அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) அவர்களும் பசிக்கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள் என்ற சம்பவத்தை நாம் (முஸ்லிம்: 4143) இல் காணலாம்.

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ
أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا صَلَّى بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِى الصَّلاَةِ مِنَ الْخَصَاصَةِ وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ حَتَّى تَقُولَ الأَعْرَابُ هَؤُلاَءِ مَجَانِينُ أَوْ مَجَانُونَ فَإِذَا صَلَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- انْصَرَفَ إِلَيْهِمْ فَقَالَ « لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللَّهِ لأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً »

ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) ”இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்” என்று கூறுவார்கள்.

நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி ”அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்” என்று கூறுவார்கள். 

நூல்: (திர்மிதீ: 2368) (2291)

இது ஷைத்தானின் செயல்.

வறுமையைப் பற்றிய பயத்தையும், இறைவன் மீதே அதிருப்தியையும் ஏற்படுத்துவது ஷைத்தானின் செயல்.

اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ  ۙۖ‏

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:268)

செல்வம் வேண்டுமானால், துஆ செய்யுங்கள்.

அப்படி அந்த செல்வம் தான் உங்களுக்கு வேண்டுமானால், இறைவனிடத்தில் துஆச் செய்யுங்கள். தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தை தருவான்.

اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 30:37)

قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ؕ وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَىْءٍ فَهُوَ يُخْلِفُهٗ ۚ وَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:39)

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை. 

(அல்குர்ஆன்: 13:26)

எனவே, வறுமை குறித்த நமது பார்வையை மாற்றிக்கொண்டு இறைவனின் சோதனைக்கு கட்டுப்பட்ட மக்களாக நாம் அனைவரும் வாழ்ந்து மரணிப்போமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.