வறட்சியை நீக்குபவன் வல்ல அல்லாஹ்வே! மழை இறை அருள்
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
தமிழகத்தில் இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அது தீவிரமடையவில்லை. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்ன.
தற்போது தமிழகத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் 194 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் வெறும் 24 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீரைக் கொண்டு தமிழகத்தில் 2 மாதம் கூட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. இதனால், இப்போது முதலே பெரும்பாலான பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வாரியத்திற்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இது வெறும் செய்தி அல்ல! தமிழகம் சந்திக்கப் போகின்ற பயங்கர பஞ்சத்தைப் பற்றிய எச்சரிக்கை மணியாகும். வரப் போகும் வறட்சியை அறிவிக்கின்ற அபாயச் சங்காகும். தமிழகம் தற்போது மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. இரண்டு புயலைத் தவிர, பெரிதாக எந்த மழையும் பெய்யவில்லை.
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இயல்பை விட 62 சதவிகித மழை குறைவாகப் பெய்துள்ளது. இது கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மழை அளவாகும். இதற்கு முன்னர் கடந்த 1876ஆம் ஆண்டு 63 சதவிகிதம் பொய்த்துப் போனது தான் இதுவரையில் குறைந்த மழை அளவாக இருந்தது.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவான மழைதான் பெய்து உள்ளது. கடலூர், புதுச்சேரி, நாமக்கல்லில் 19 சதவிகித மழையே பெய்துள்ளது.
தமிழகத்தில்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேரள மாநிலம் இந்த ஆண்டு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகக்குறைந்த மழை அளவைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் 34 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழையில் 61 சதவிகிதமும் குறைவான மழையைப் பெற்றுள்ளது. கேரளாவில் வழக்கமாக, இந்த காலங்களில் அணைகளில் 90 சதவிகிதம் நீர் இருப்பு இருக்கும். ஆனால் தற்போது 47 சதவிகிதம்தான் உள்ளது.
கர்நாடகத்தின் நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. தொடந்து மூன்றாவது வருடமாக வறட்சியைச் சந்தித்து வருகிறது கர்நாடகம். அங்கு உள்ள 175 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை 20 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழை 62 சதவிகிதமும் குறைவாகப் பெய்துள்ளது.
தென் மாநிலங்களில் மழை அளவு குறைவால் தமிழகத்தின் அரிசித் தேவையில் மூன்றில் ஒரு பகுதியைத் தந்து வந்த காவிரிப் பாசனப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் பயிர் செய்யப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பருவ மழை பொய்த்துப் போனதால் தமிழகமும், கர்நாடகமும் காவிரிப் பிரச்சனையில் போர் மழையைச் சந்திக்க நேர்ந்தது. பல உயிர்கள் பலியாயின. பலகோடி ரூபாய் பொருளாதாரம் பாழாயின. இவ்விரு மாநிலங்களும் அதன் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
கேரளாவில் ரப்பர், தென்னை, காப்பி போன்ற நீண்டகாலப் பயிர்கள் கூட கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதே நிலை தான் கர்நாடகத்திலும்.
மேற்கு மாவட்டங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வேகமான வறண்டு வருகின்றன. மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர், பெரியார், வைகை, சிறுவாணி உள்ளிட்ட அணைகளில் 13 சதவிகித அளவு தண்ணீர்தான் உள்ளது.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது மேட்டூர் அணை. சுமார் 127 குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 மில்லியன் கனஅடி தண்ணீர் இந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நீர் அளவைக் கொண்டு இன்னும் இரண்டு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர்த் தேவை அதிகரிக்கும் என்பதால், இரண்டு மாதம் என்பதுகூட குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல கோயம்புத்தூருக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலும் இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. இதனால் கோவையில் குடம் நீர் பத்துக்கு விற்கின்றது.
தூத்துக்குடியில் குடிநீருக்காக குடங்களைத் தூக்கிக் கொண்டு அலைகின்ற தாய்க்குலத்தைப் பார்க்கின்ற போது கண்கள் குளமாகின்றன.
தென் மாவட்ட அணைகள் பாபநாசம், மணிமுத்தாறு, வைகை ஆகிய மூன்று அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் இல்லை. வைகையில் 4 சதவிகித தண்ணீர் தான் இருப்பில் உள்ளது. இது 10 நாள் குடிநீர்த் தேவைக்குதான் போதுமானதாக இருக்கும். தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் கடுமையான நீர்த் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டிவரும். முல்லைப் பெரியாரில் உள்ள நீரை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.
தமிழகத்தின் ஜீவநதி என்று வர்ணிக்கப்படும் தாமிரபரணி நீரைக் கொண்டு உள்ள பாபநாசம் அணையில் இருந்து இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்திக்க உள்ளனர்.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சாத்தனூர் அணையில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் உள்ளது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் சுமார் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது.
குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி…
தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் தற்போது உள்ள தண்ணீரின் மொத்த அளவின்படி பார்த்தால், சரியாக இன்னும் ஒரு மாதத்தில் மழை பெய்து, தமிழகத்தைக் காப்பாற்றா விட்டால், மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை தமிழகம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அணை மொத்தமாக வறண்டு விடும் என்பதால் தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் இந்தாண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர்ப் பஞ்சம் இன்னும் இரண்டு மாதத்தில் வர வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்னையை ஓரளவு சமாளிக்க 900 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கலாம் என அறிக்கை அளித்துள்ளோம். பொதுமக்களிடம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் கூறியுள்ளோம். மேலும், இப்போதிருந்தே குடிநீர் விநியோகிப்பதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார். பஞ்சத்திற்கு ஆழ்குழாய் தோண்டுவது மட்டும் தீர்வாகாது. ஏற்கனவே, பல இடங்களில் 500, 600 அடிகளை தாண்டி போர் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். போதிய நீர் வராமல் புகை தான் வந்துக் கொண்டிருக்கின்றது. காரணம், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருப்பது மழை தான்.
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.
இந்த வசனம் நீரை பூமியில் நாமே தங்க வைத்திருக்கின்றோம். என்று கூறுகின்றது.
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
மழை நீர் தான் பூமியில் சேமித்து வைக்கப் படுகின்றது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் வானத்திலிருந்து507 நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.
வான் மழை தான் பூமியில் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்று கூறுகின்றான். எனவே ஏற்கனவே, மழை பெய்து நிலத்தில் நீர் சேகரமாகியும், சேமிப்பாகியும் இருந்தால் தான் ஆழ்குழாய் மூலம் நீரை பெற முடியும். இல்லையென்றால், பூமியிலிருந்து பொங்கி வழியும் நீருக்குப் பதிலாகப் பொசுங்கி வரும் புகையைத் தான் பார்க்க முடியும். அதனால் இதற்குத் தீர்வு மழை தானே தவிர ஆழ்குழாய் கிணறுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லாம் இயற்கை! இயற்கை! இவ்வையகத்தை இயக்குகின்ற இறை சக்தி எதுவும் கிடையாது என்று எகத்தளமாகப் பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் பைத்தியம் வாதம் பேசுகின்ற அறிவிலிகளை நோக்கி, ‘தண்ணீர் பஞ்சத்தில் தகித்துக் கொண்டிருக்கின்ற தமிழகத்தை நோக்கி, தவிக்கின்ற வாய்க்குத் தண்ணீர் தரப் போவது இயற்கையா? அல்லது எல்லாம் வல்ல ஏகனும் தனி நாயகனுமான அல்லாஹ்வா?’ என்ற கேள்வியை திருமறைக் குர்ஆன் முன்வைக்கின்றது.
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
அரிசி விளைவிக்கின்ற தஞ்சை போன்ற வளம் நிறைந்த விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றனவே அந்த நிலங்களை வளங்கொழிக்கச் செய்வது இயற்கையா? அல்லது தன்னிகரற்ற தனி நாயன் நானா? என்று அடுத்தக் கேள்விக் கணையையும் அல்குர்ஆன் வசனங்கள் தொடுக்கின்றன.
நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்‘’ என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்
1878-ல் தமிழகம் அப்போதைய ஆங்கில ஆட்சியர் கீழ் இருந்த போது சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்டது. அந்த சென்னை மாகாணத்தில் இது போன்று பருவ மழை பொய்த்த போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் மைசூர், பம்பாய், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி என்று கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து அதன் கடுமையான பாதிப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம். அந்த பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மக்கள் இலங்கை, பர்மா, ஃபிஜி, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்த வம்சாவளியினர் இன்றும் அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பஞ்சம் தமிழகத்தைப் பிடிக்கவில்லை. கடந்த 1967 முதல் 1975 வரை தமிழகத்தில் விவசாயம் பாதித்ததால் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான உணவான அரிசி கிடைக்கவில்லை. பட்டினியின் பிடியில் தவித்த மக்கள் மரவள்ளிக் கிழங்கு, சோளம் ஆகியவற்றைச் சாப்பிட்டுக் காலம் தள்ளினர். ரேஷனில் கூட சோள மாவு கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் 1977லிருந்து 1989 வரை பருவ மழை பெய்து நிலைமை சீரானது. இதற்குப் பிந்தைய ஆண்டுகளும் பெரிய பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால், 2016ஆம் ஆண்டு போதிய மழையின்றி தமிழகம் 1878 பஞ்சத்தைப் போன்ற நிலையைச் சந்தித்து விடுமோ என்ற பயம் மக்களை ஆட்கொண்டு விட்டது.
இதிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன? வரலாறு காணாத வறட்சியை விட்டும் காக்கின்ற வான்மழை தான். வான் மழையைப் பெறுவதற்கு மக்கள் கொடும்பாவி எரித்தல், ஒப்பாரி வைத்தல், பெண்களை நிர்வாணமாக ஓட விடுதல், கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம் முடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த மூடப் பழக்க வழக்கங்கள் பிற மத சமுதாயங்களில் நடக்கின்றன என்றால், முஸ்லிம்கள் மழை பைத்து என்ற பெயரில் அரபி, தமிழ் கலந்த பாடல் ஒன்றை மழை வேண்டி வீதிகளில் ஓதி வலம் வருகின்ற மூடப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மழை என்பது அல்லாஹ்வின் தனி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது. தனி அதிகாரத்தைக் கொண்டது. அந்த வல்ல அல்லாஹ் தான் இந்த வறட்சியைப் போக்கவும், வாழ்வாதாரமான மழையைத் தரவும் வளத்தை வழங்கவும், ஆற்றல் பெற்றவன், அதிகாரம் படைத்தவன்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது (கிராமவாசி) ஒருவர் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே! மழை பொய்ந்துவிட்டது. (எங்களுக்கு) மழை வேண்டிய உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வானத்தை (அண்ணாந்து) பார்த்தார்கள். (அதில் மழை) மேகம் ஏதும் இருக்கவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் ஒன்றொடொன்று திரள ஆரம்பித்தது. பிறகு மழை பொழிந்தது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் (எல்லாம் நிரம்பி) வழிந்தோடின. இடையறாமல் அடுத்த ஜுமுஆ வரை அம்மழை நீடித்தது.
பிறகு ‘அந்த மனிதர்’ அல்லது ‘வேறொரு மனிதர்’ எழுந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஜுமுஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர், ‘(தொடர்) மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைவிட்டு மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப்புறங்களில் (உள்ள மானாவாரி நிலங்கள், நீர்நிலைக்கு ஆகியவற்றுக்கு இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! என்று இரண்டு அல்லது மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள். அந்த(த் திரண்ட) மேகம் மதீனாவிலிருந்து (விலகி) வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றது. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தன்னுடன் தூதரின் மதிப்பையும் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு (நேரடியாகக்) காட்டினான்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) (புகாரி: 6093) ➚
படைத்தவனின் இந்த அருளை வேண்டி அவனிடமே நாம் பிரார்த்திக்க வேண்டும். வறட்சியை நீக்கும் ஆற்றல் அந்த வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. அவனிடம் நாம் மன்றாடிக் கேட்பது மட்டும் இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாகும்.
இறைவனின் அருள் மழையை வேண்டுவதற்கு மார்க்கம் காட்டிய வழிமுறைகள் எவை என தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி வறட்சி நீங்க வல்ல அல்லாஹ்விடம் முறையிடுவோமாக!
எனவே மேற்கூறிய அனைத்து விஷயங்களும் நம் வாழ்கையில் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு வாழும் நன் மக்களாய் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!