வன்முறையை தூண்டுகிறதா வஹ்ஹாபியிஸம்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

வன்முறையை தூண்டுகிறதா வஹ்ஹாபியிஸம்

வஹ்ஹாபியிஸம்

இன்றைய சூழலில் அதிகம் விமர்சிக்கப் படுகின்ற, எதிர்க்கப்படுகின்ற ஒன்று. ஆனால் இதை எதிர்ப்போரில் பலருக்கும் வஹ்ஹாபியிஸம் என்றால் என்னவென்ற சரியான புரிதல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே அதற்கான நியாயமான பதிலாகும்.

வஹ்ஹாபியிஸம் வன்முறையைத் தூண்டுகிறது என்ற தவறான புரிதலைத் தாண்டி அது குறித்த விபரங்கள் எதையும் சரியாக உள்வாங்க இங்கே யாரும் தயாராக இல்லை.

வஹ்ஹாபியிஸம் என்று இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? அது உண்மையிலேயே பயங்கரவாதத்தைத் தூண்டுகிறதா? இந்த இரு கேள்விகளுக்குமான பதிலை அறிந்து கொள்ளும் முன் வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடலுக்கான வரலாற்று விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

சவூதியில் இன்றைக்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கப் புரிதல் இதற்கு முந்தைய காலத்தில் இருந்ததில்லை. சவூதியின் பரப்பளவு சிறுசிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த கால கட்டத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான ஏராளமான செயல்கள் அங்கு தலைவிரித்தாடின.

சிலை வழிபாடு, சமாதி வழிபாடு, மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் கைகள் வலுவாக ஓங்கியிருந்த காலமது! இந்தக் கால கட்டத்தில் பிறந்து, இஸ்லாமிய மார்க்கக் கல்வியை கற்றுத் தேர்ந்த ஒருவர் அம்மக்கள் செய்து வந்த சிலை மற்றும் சமாதி வழிபாடுகள் இஸ்லாத்தில் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்.

இஸ்லாத்தின் அடிப்படை முழக்கமான ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்ற ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கின்றார்.
நாடு முழுக்க அவரது பிரச்சாரம் பரவுகிறது. எதிர்வினையாக அவருக்கு எதிர்ப்பும் வலுக்கின்றது.
ஒரு கட்டத்தில் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான உயைனா எனும் பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் நேரிடுகிறது.

அப்போது அதற்கு அருகிலுள்ள அத்தரயிய்யா எனும் பகுதியின் ஆட்சியாளர் முஹம்மத் பின் ஸஊத் தம் ஊருக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுக்கின்றார். தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்யுமாறு ஊக்கமூட்டுகின்றார்.

இப்னு ஸஊதின் ஆட்சியதிகாரம் உறுதுணையாக இருக்க, நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்கிறார். அவரது பிரச்சாரத்தை நோக்கி பெருந்திரளான மக்கள் ஈர்க்கப்படுகின்றார்கள்.
பின்னாளில் சிறுசிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த பல நிலப் பரப்புகள், முஹம்மத் பின் ஸஊதின் தலைமையில் ஒருங்கிணைந்த ஒரு நாடாக உருமாறுகிறது.

இவரது உழைப்பைப் பறைசாற்றும் விதமாகவே அந்நாடு இப்போது ஸஊதி என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டில் மக்களால் கறை படுத்தப்பட்ட இஸ்லாத்தின் கறையை நீக்கி, தூய இஸ்லாத்தை மக்களுக்குத் தனது பிரச்சாரத்தின் மூலம் எடுத்துரைத்த அந்த அறிஞர் தாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஆவார். இவர் கி.பி 1702-ல் பிறந்தவர்.

சிறு துண்டுகளாகச் சிதறிக் கிடந்த பல பகுதிகளை சவூதி என்று ஒரு நாடாக இணைத்ததிலும், ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற தூய ஏகத்துவக் கொள்கையை அந்நாடு முழுக்கக் கொண்டு சேர்த்ததிலும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது.

வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடல் இவரது பெயரிலிருந்தே உருவாகிறது. இப்போது விஷயத்திற்கு வருவோம். முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப், தமது காலத்தில் ஏகத்துவக் கொள்கையை எடுத்து சொன்னார் அல்லவா? உடனே ஏகத்துவக் கொள்கைப் பிரச்சாரத்துக்கு வஹ்ஹாபியிஸம் என்று அடையாளமிட ஆரம்பித்து விட்டனர்.

மார்க்க அடிப்படையில் சவூதி நிறைவேற்றும் குற்றவியல் சட்டங்களைக் கூட வஹ்ஹாபியிஸத்தின் வெளிப்பாடு என்று கருதுகின்றனர்.

திருடினால் கையை வெட்டுவது

விபச்சாரம் செய்தோருக்குக் கசையடி அல்லது மரண தண்டனை விதிப்பது

கொலையாளிகளுக்கு எவ்வித இரக்கமும் காட்டாது மரண தண்டனையை நிறைவேற்றுவது

இதற்கெல்லாம் கூட இவர்கள் வைத்திருக்கும் பெயர் வஹ்ஹாபியிஸம் என்பதே! இப்போது தெரிகிறதா இவர்களின் அரைவேக்காட்டுத்தனம்?

இவர்கள் வஹ்ஹாபியிஸம் என்று பெயரிடும் இவை யாவும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் கற்றுத் தந்த இஸ்லாத்தின் கொள்கைகளாகும்.

ஒரு இறைவனை மட்டுமே வணங்குதல்

சிலை வழிபாடு, சமாதி வழிபாடு கூடாது

திருடினால் கையை வெட்டுதல்

கொலையாளிகளுக்கு மரண தண்டனை

என அனைத்துமே இஸ்லாம் கூறும் கொள்கை மற்றும் குற்றவியல் கோட்பாட்டு நெறிகளாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவனால் இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆனில் இது குறித்த விபரங்கள் தெளிவாக உள்ளது.

அந்தத் திருக்குர்ஆனைப் படித்தறிந்து தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் இந்தப் பிரச்சாரத்தையே முன்னெடுக்கின்றார். உண்மை இவ்வாறிருக்க முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ள ஒரு சித்தாந்தத்தை வஹ்ஹாபியிஸம் என்றழைப்பது எவ்விதத்தில் அறிவுடைமையாகும்?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏகத்துவக் கொள்கையை தத்தமது ஊர், நாடுகளில் பிரச்சாரம் செய்தவர்கள் இருக்கவே செய்வார்கள். அவை அனைத்திற்கும் வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடல் எப்படிப் பொருத்தமானதாக இருக்கும்?

இது வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடலுக்குப் பின்னுள்ள தவறான பார்வையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முதலாவது விஷயமாகும். அடுத்து வஹ்ஹாபியிஸம் வன்முறையைத் தூண்டுகிறது என்ற இவர்களின் பொய்யான குற்றச்சாட்டிற்கு வருவோம்.

நாட்டில் அல்லது உலகில் நடைபெறும் போர்கள், கொலைகள், தாக்குதல்கள் அனைத்திற்கும் வஹ்ஹாபியிஸம் தான் மூல காரணமாக உள்ளது என்றால் அதற்கான தரவுகள் என்னென்ன? ஆதாரங்கள் எங்கே?

ஏகத்துவக் கொள்கையை ஏற்றுள்ள ஒருவன் கொலை செய்தால் கூட, அவனும் அரசால் சட்டப்படிக் கொல்லப்பட வேண்டும் என்பதைத் தானே இவர்கள் புரிந்து வைத்துள்ள வஹ்ஹாபிஸம் போதிக்கின்றது? அப்படியானால் பயங்கரவாதத்தை வஹ்ஹாபியிஸம் தூண்டுகிறது என்ற வாதம் எப்படி உண்மையாகும்?

ஓரிறைக் கொள்கை என்று முழக்கமிடுவதே பயங்கரவாதத்திற்கு வித்திடுகிறது என்ற தவறான சமன்பாட்டை, சரியானதென நிலைநிறுத்த இவர்கள் முயல்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு என்று ஒரு வரையறை கிடையாது.

எல்லா கோட்பாட்டைச் சார்ந்தவர்களிலும் சில அரைகுறைகள் இருப்பார்கள். மனிதநேயமற்ற காட்டுமிராண்டிகள் இருப்பார்கள். அவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சித்தாந்தத்தை இப்படித்தான் என முடிவு செய்ய முடியாது.

பயங்கரவாதத்தின் மறுவடிவம் வஹ்ஹாபியிஸம் என்ற இவர்களின் சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது என்பதைப் புரிய வைக்க சில மேற்கோள்கள் அவசியமாகின்றது.
சிரியா நாட்டில் நடைபெறும் கோரச் சம்பவங்கள் யாருக்கும் நினைவூட்டத் தேவையில்லை என்ற அளவு அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.

அந்நாட்டு அதிபர் பஷருல் ஆஸாத் உள்நாட்டுப் போர் எனும் பெயரில் இலட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்துள்ளார். இதில் குழந்தைகள், பெண்கள் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர்.

இது பயங்கரவாதம் இல்லையா? இந்தப் பயங்கரவாதத்தை நிகழ்த்திய அதிபர் ஆஸாத் ஒன்றும் வஹ்ஹாபி இல்லையே! சொல்லப் போனால் வஹ்ஹாபியிஸத்திற்கு நேரெதிரான ஷியா மதத்தைச் சேர்ந்தவர். அப்படியெனில் இந்த பயங்கரவாதத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள்?

லெபனானின் ஹிஸ்புல்லா பல வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்கள் என்று பெரும் பட்டியலே உண்டு. ஹிஸ்புல்லா அமைப்பையும் இவர்கள் வஹ்ஹாபிகள் என்பார்களா?
1993-ம் ஆண்டில் 13 இடங்களில் குண்டு வெடித்து மொத்தமாக 257 நபர்களின் உயிரைக் காவு வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான தாவூத் இப்றாஹிம் வகையறாக்கள் யார்? வஹ்ஹாபிகளா? இல்லையே!

1988-ல் பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, முஹம்மது நபிகள் அவர்களைத் தூற்றும் வகையில் சாத்தானிக் வெர்சஸ் எனும் பெயரில் ஒரு நாவலை எழுதி வெளியிடுகிறார். உலகில் உள்ள பல முஸ்லிம்கள் இதற்கு ஜனநாயக பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், சல்மான் ருஷ்டியின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தாரே ஈரானின் அல்குமைனீ.

கற்பனையின் பெயரில் அநாகரீகமாக எழுதிய சல்மான் ருஷ்டியின் கருத்துக்கள் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக ஒருவரின் தலை கொய்யப்பட வேண்டும் என்று சொல்வது பயங்கரவாதமாகத் தெரியவில்லையா?

இந்த குமைனீ என்ன வஹ்ஹாபியா?

எல்லைப் பிரச்சனை காரணமாக 1980ம் ஆண்டு துவங்கிய ஈரான் – ஈராக் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டார்களே? இவர்கள் என்ன வஹ்ஹாபிகளா?

சிலை வணக்கத்தை அடியோடு எதிர்ப்பதே தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையாகும். இறைவனின் தூதர் முஹம்மது நபிக்குக் கூட சிலை வைக்கக் கூடாது எனும் நிலையில், தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்ட சதாம் ஹுசைன் எப்படி, எப்போது வஹ்ஹாபியானார்?

இந்தியாவில் உள்ள காஷ்மீர் போராட்டக் குழுவினர் வஹ்ஹாபிகளா? தமிழகத்தில் தவ்ஹீத் கொள்கை பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட 1980களின் கால கட்டத்தில் எத்தனை எதிர்ப்புகள், வன்முறைச் சம்பவங்கள், வெட்டுக் குத்துகள் எல்லாம் நிகழ்ந்துள்ளன.

நவீனவாதிகள் கூறும் வஹ்ஹாபியர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியதும் வஹ்ஹாபிகள் தாமா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே! அதுபோல் காணும் வன்முறை சம்பவத்திற்கெல்லாம் வஹ்ஹாபியிஸம் என்று பெயரிடுவதும் ஒரு வகை மனநோயின் வெளிப்பாடே!

சொல்லப்போனால் பயங்கரவாதத்திற்கு – வன்முறையாளர்களுக்கு எந்த மதமும் கிடையாது.
எல்லா மதத்தைச் சார்ந்தவர்களிலும் வன்முறையாளர்கள் இருப்பார்கள். விடுதலைப்புலிகள் நிகழ்த்திய இரத்த வெறியாட்டம் நாடு அறிந்த ஒன்றே!
நக்ஸல்கள் எனப்படுவோர் யார்?

இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படும் காந்தியைக் கொன்று தனது பயங்கரவாதத்தை துவக்கியது ஆர்.எஸ்.எஸ். 2006 மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய பயங்கரவாதிகளான பிரக்யா சிங், அசீமானந்தா இவர்கள் எல்லாம் யார்?

இதற்கும் இவர்கள் வஹ்ஹாபியிஸம் என முத்திரை குத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
பயங்கரவாதம் எந்த உருவில் வந்தாலும் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.

அதே நேரம் உண்மை இவ்வாறிருக்க, பல கோர முகங்களைக் கொண்டுள்ள பயங்கரவாதத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்க முயல்வதின் பின்னணியில் இரண்டில் ஏதேனும் ஒன்று தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று அறியாமை! இன்னொன்று இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி!

இதில் அறியாமை என்று சொல்வோமேயானால் அது நமது அறியாமையையே வெளிப்படுத்தும். எனவே இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இவர்களது வஹ்ஹாபியிஸ வெறுப்பு என்பதில் சந்தேகமில்லை.