05) வணக்கம் என்றால் என்ன?

நூல்கள்: தர்கா வழிபாடு

‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது’ என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருகின்றனர்.

உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை. இவை அல்லாத இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.

அறுத்துப் பலியிடல் வணக்கமே!

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

(அல்குர்ஆன்: 108:2)

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

‘யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(முஸ்லிம்: 3657, 3658, 3659),

‘புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். ‘அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்கள்: அபூதாவூத், பைஹகீ

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்ச்சையும் வணக்கமே!

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்’ என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இவ்வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்ய மாட்டார்கள்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

(அல்குர்ஆன்: 2:270)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

(அல்குர்ஆன்: 22:29)

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

(அல்குர்ஆன்: 76:7)

நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் இந்த வசனங்கள் மூலம் கற்றுத் தருகிறான்.

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் நேர்ச்சை செய்யலாகாது. அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது.

‘யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 6696)

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

பிரார்த்தனை தான் வணக்கமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்கள்:(அஹ்மத்: 17629, 17660, 17665)(திர்மிதீ: 2895, 3170, 3294)(அபூதாவூத்: 1364)

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை எனத் தெளிவாக இந்த நபிமொழி அறிவிக்கின்றது.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணருவதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்’ (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன்: 2:186)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!  ‘அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:191)195)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 7:197), 198)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!  அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 10:106)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20), 21)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:22)

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:13), 14)

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?’ என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!’ என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 35:40)

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.

(அல்குர்ஆன்: 40:43)

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

(அல்குர்ஆன்: 46:6)

இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.