ரமளானே வருக! வருக!
ரமளானே வருக! வருக!
இந்த உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்வாறு நல்லமல்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து வந்தால் நாளை மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான்.
மனிதர்களுக்கு, தங்களுடைய வாழ்க்கையில் காலத்தைக் கணக்கிடுவதற்காக சில மாதங்களை இறைவன் வழங்கியிருக்கின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மாதங்களில் சில மாதங்களை புனித மாதமாகவும், சில மாதங்களில் நாம் செய்கின்ற நல்லமல்களுக்கு மேலதிகமான நன்மைகளை வாரி வழங்கக் கூடியதாகவும் அமைத்திருக்கின்றான்.
அப்படிப்பட்ட மாதங்களில் நன்மைகளை வாரி வழங்கக்கூடிய அற்புதமான ஒருமாதம் தான் ரமலான் மாதம். ரமலான் மாதத்திற்கு என்று ஏராளமான தனிச்சிறப்புகளும், மகத்துவமும், சங்கையும் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். பொதுவாகவே ரமலான் மாதம் வந்து விட்டால் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒருவிதமான பரபரப்பும், ஆரவாரமும், மகிழ்ச்சியும் தானாகவே வந்து தொற்றிக்கொள்ளும்.
எந்தளவிற்கென்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள்கூட ரமலான் மாதத்தில் வாரி வழங்குவதையும், செலவு செய்வதையும், சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று விடுவதையும் பார்க்கின்றோம்.
இப்படிப்பட்ட நன்மைகளை வாரி வழங்கக்கூடிய, நன்மைகளை கொள்ளையடிக்கக் கூடிய ரமலான் இந்த வருடமும் நம்மை ஆரத்தழுவ காத்துக் கொண்டிருக்கின்றது. நம்மை அடையக் காத்துக் கொண்டிருக்கின்ற ரமலானை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு வரவேற்க வேண்டுமோ அவ்வாறு வரவேற்பதற்குத் தவறிக் கொண்டிருக்கின்றோம்.
எத்தனையோ வருட ரமலான் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கின்றது. ஆனால் ரமலான் மாதம் நம்மிடத்தில் எப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்பார்க்கின்றதோ அப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மில் பெரும்பான்மையோரின் வாழ்க்கையில் இல்லாமலேயே ரமலான் நம்மைவிட்டுக் கடந்து சென்றிருப்பதைப் பார்க்கின்றோம்.
ரமலான் மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? ரமலான் மாதத்தில் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும்? ரமலானில் நம்மை எவ்வாறு பண்படுத்திக் கொள்ள வேண்டும்? இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? குர்ஆனோடு தொடர்பை அதிகரித்துக் கொள்வது எப்படி?
ரமலான் மாதம் முழுக்க முழுக்க நன்மையின்பால் நம்மைத் திருப்பிக் கொள்வது எப்படி? என்பது போன்ற பல்வேறு நன்மையான காரியங்களைச் சிந்திக்காமலும், அந்த நன்மையில் ஈடுபடாமலுமே நம்மை ஆரத்தழுவிய ரமலான் மாதம், நம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுகின்றது.
ரமலானை அடைகின்ற ஒவ்வொருவரும் நம்மிடத்தில் வந்திருக்கின்ற ரமலான் மாதத்தை நம்மால் இயன்ற அளவுக்கு நன்மையான காரியங்களில் ஈடுபட முயற்ச்சிக்க வேண்டுமே ஒழிய வீணான காரியங்களிலும், தேவையில்லாத செயல்களிலும் ஈடுபட்டு நம்முடைய நன்மைகளைப் பாழாக்கி விடக்கூடாது. மேலும் ரமலான் மாதத்தை ஒருவர் அடைந்து நன்மையான காரியங்கள் செய்ய முயற்சிக்கவில்லை என்றால் அவனுக்கு நிகழும் கைசேதத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கையாகப் பதிய வைக்கின்றார்கள்.
இதோ! அந்த எச்சரிக்கை…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (திர்மிதீ: 3545) (3468) (ஹதீஸ் சுருக்கம்)
இந்தச் செய்தியை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! ஒருவர் ரமலான் மாதத்தை அடைந்து நன்மையான காரியங்கள் அதிகமதிகம் செய்வதின் மூலம் பாவம் மன்னிக்கப்படாமல் சொர்க்கத்தில் நுழையவில்லையென்றால், நன்மையான காரியங்கள் செய்யாமலேயே ரமலான் மாதத்தைக் கழித்து விட்டால் அப்படிப்பட்டவரை நோக்கி, சபிக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
இதிலிருந்து நாம் அறிவது, ரமலான் மாதம் நம்மை நோக்கி வருவதற்கான பிரதான நோக்கமே, நன்மைகளை நாம் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தினால் தான். எனவே ரமலானை நன்மைகள் செய்வதற்காக வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இறையச்சமே பிரதானம்
ரமலான் மாதம் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருகின்றது என்று சொன்னால், மிக முக்கியமான காரணம் நாம் அனைவரும் இறையச்சத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான். பொதுவாகவே இறையச்சம் ஒரு மனிதரிடத்தில் வந்துவிட்டால் எல்லாவிதமான தவறுகளிலிருந்தும் விடுபட்டு நல்லவர்களாக வாழ முடியும்.
ரமளானில் இறையச்சத்தோடு நாம் வாழ்ந்திருக்கின்றோம் என்ற திருப்தி கிடைக்க வேண்டுமானால், ரமளானில் பயணித்த அதே வேகத்தோடு, சிறிதளவு கூடத் தொய்வில்லாமல் மற்ற மாதங்களிலும் நம்முடைய வாழ்க்கையில் நன்மையான காரியங்கள் தொடருமானால் உண்மையாகவே நாம் ரமலானை நல்ல முறையில் வரவேற்றிருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ரமலானில் மட்டும் நல்லறங்களைச் செய்வதற்குப் போட்டி போடுகின்றோம். ரமலான் முடிந்து விட்டால் சோம்பேறிகளாகவும், வணக்க வழிபாடுகளில் அலட்சியப் போக்கையும் கடைப்பிடித்து, ரமலானில் இருந்த வேகம் அப்படியே தளர்ந்து விடுவதைப் பார்க்கின்றோம்.
அப்படியென்றால் இங்கே ஒருகேள்வி எழுகின்றது? ரமலானில் மாத்திரம் நன்மைகளை அதிகம் செய்ய முடிகின்ற நம்மால், ஏனைய மாதங்களில் நன்மைகளின்பால் ஆர்வம் இல்லையென்றால், நன்மைகளைச் செய்ய முடியவில்லையென்றால், ரமலான் மாதத்தில் மட்டும் இறைவனுக்குப் பயந்தது போல் நடித்தோமா? வேடம் போட்டோமா? ஒருமாதம் மட்டும் தான் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ண ஓட்டத்தில் வாழ்ந்தோமா? இதுபோன்ற ஏராளமான கேள்விக்கணைகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இறைநேசர்களைப் பற்றி இறைவன் அருமையான வார்த்தைகளில் குறிப்பிடும் போது,
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.
மேலும், இறைவன் குறிப்பிடும்போது;
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தால் இறைவன் நம்மை நேசிக்கின்றான் என்றும், இறைவனை அஞ்சுவோருடனே அவன் இருக்கின்றான் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றான்.
இறைவனின் நேசத்தைப்பெற வேண்டுமானால் நாம் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் இறைவனை அஞ்ச வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் அனைத்துக் காரியங்களிலும் இறைவனை அஞ்சினால் இறைவனின் உதவியும், அருளும் எப்போதுமே நமக்கு உதவிக்கரத்தை நீட்டிக் கொண்டே இருக்கும்.
இறைவன் எதிர்பார்க்கின்ற இறையச்சம் என்ற குணத்தைப் பற்றி நாம் பாடம்படிக்க வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவுமே ரமலான் நம்மிடத்தில் வருகின்றது. அந்த எதிர்பார்ப்போடு ரமலானை வரவேற்போம்.
நன்மைகளின் கேந்திரம் ரமலான்
ஒரு மாத காலம், கிட்டத்தட்ட 720 மணி நேரங்கள் முழுவதும் நன்மைகளை அருவியாகக் கொட்டித் தீர்க்கின்ற மாதமாகவும், மற்ற மாதங்களில் நன்மைகள் செய்வதை விட, இந்த மாதத்தில் செய்யக்கூடிய நன்மைகளுக்குப் பன்மடங்கு பரிசுகளை அள்ளித் தெளிக்கின்ற மாதமாகவும் இந்த ரமலான் இருக்கின்றது.
இந்த ஒரு மாதத்தில் ஒருவர் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் வெறிகொண்டு களத்திலே இறங்கினால் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த எல்லாப் பாவங்களையும் கழுவி, பரிசுத்தமான மனிதர்களாக மாறி விடலாம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
ஆதாரம்: (புகாரி: 38)
நாம் அனைவரும் ஈமான் கொண்டிருக்கின்றோம். ஆனால் நன்மையை எதிர்பார்த்தவர்களாக நோன்பு நோற்பதில் தவறிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையிலேயே நாம் அனைவரும் நன்மையை எதிர்பார்த்தவர்களாக 30 நாட்கள் நோன்பு நோற்றால், அந்த ஒரு மாதத்தில் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும், சிரமங்களையும் தணிக்கும் முகமாக முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பாவம் கலவாத மனிதர்களாக மாறி விடலாம்.
சொர்க்கம் உறுதி
ரமலான் மாதத்தில் இறைவனுக்காக உண்மையிலேயே நோன்பு நோற்பவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்றும், மேலும் தொடர்ந்து ஐவேளைத் தொழுது, ரமளானில் நோன்பு நோற்பவர் அறப்போரில் கலந்து கொள்ளவில்லையென்றாலும் சொர்க்கம் உறுதியாகக் கிடைக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி’’ என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: (புகாரி: 2790)
இறைநம்பிக்கை கொண்டு ஐவேளைத் தொழுகையைப் பரிபூரணமாக நிறைவேற்றினாலும், ரமளானில் நோன்பு நோற்றாலும் சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறுகின்றார்கள். ஒரு மாதம் இறைவனுக்காக நோன்பு நோற்று, சொர்க்கத்தை நம்மீது கடமையாக்கும் முகமாக ரமலானை வரவேற்போம்!
கஸ்தூரியும், இறைநேசமும்
நோன்பு காலங்களில் உண்ணாமலும், பருகாமலும் இருந்து வயிறும், குடலும் ஒட்டிப்போய் காலியாக இருக்கின்ற காரணத்தினால் ஒருவிதமான துர்வாடை வீசும். அருகிலிருப்பவர்களிடம் முகம்கொடுத்துப் பேச முடியாத அளவுக்கு வாடை வீசும். நோன்பாளிகளின் வாயிலிருந்து வருகின்ற துர்வாடையைக்கூட கஸ்தூரி வாடையாக மாற்றி இறைவன் சிறப்பிக்கின்றான். இதன் காரணத்தினால் ரமலானின் நோன்பு மூலமாக இறைநேசத்தை முழுமையாகப் பெற்ற மனிதர்களாக நாம் மாறிவிடலாம்.
முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.
ஆதாரம்: (புகாரி: 1904)
நோன்பு திறக்கின்ற நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம். கடுமையான வெயிலின் உஷ்ணத்தினால் கிட்டத்தட்ட 13-14 மணி நேரங்கள் இறைவனுக்காக பசித்திருக்கின்றோம்; தாகித்திருக்கின்றோம். நோன்பு திறக்கின்ற நேரத்தில் முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற உணவைப் பார்த்த மாத்திரத்திலே நாம் சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றோம்.
நோன்பு திறக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும், இறைவனைச் சந்திக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. இந்தக் கஸ்தூரி வாடையை எதிர்பார்த்து, ரமலானை நாம் முகமலர்ச்சியோடு வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பாவங்களிலிருந்து காக்கும் கேடயம்
ரமலான் மாதம் ஒரு மனிதரைப் பாவங்கள் என்ற அசுத்தத்திலிருந்து பாதுகாக்கின்ற கேடயம் என்றும், ரமலானில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு பிரத்தியேகமாக இறைவன் கூலி வழங்குகின்றான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘‘நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்!’’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் “நான் நோன்பாளி!’’ என்று அவர் சொல்லட்டும்!
ஆதாரம்: (புகாரி: 1904)
மேலும் சர்வ சாதாரணமான முறையில் இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கெட்ட வார்த்தைகளையும், அருவருக்கத்தக்க வார்த்தைகளையும், காதுகளால் கேட்கவே முடியாத நாராசமான வார்த்தைகளையும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோம். அப்படிப்பட்ட கேடுகெட்ட வார்த்தைகளிலிருந்து விடுபட்டு, அந்த வார்த்தைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான பாசறையாக இந்த ரமலான் இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர்க்களத்திலிருந்து ஒருவனை கவசம் எவ்வாறு பாதுகாக்குமோ அதுபோன்று நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாகும்.
ஆதாரம்: (இப்னு மாஜா: 1639) (1629)
போர்க்களத்தில் போரிடுகின்ற ஒருவனுக்கு நாலாப்புறங்களிலிருந்தும் தன்னை நோக்கித் தாக்குகின்ற ஆயுதங்களைத் துவம்சம் செய்கின்ற கருவியாகவும், உயிரையும், உடல் உறுப்புகளையும் பேணிப் பாதுகாக்கின்ற வேலையையும் போர்க்களத்தில் நாம் பயன்படுத்துகின்ற கேடயம் கன கச்சிதமாக செய்கிறது.
அதுபோல, அனைத்துப் புறங்களிலிருந்தும் நம்மை நோக்கிப் பாய்ந்து வருகின்ற பாவச் செயல்களை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளக்கூடிய கேடயமாக நோன்பு இருக்கின்றது. மேலும், நம்மை நரகநெருப்பிலே விழுந்து விடாமல் தடுத்து வேலி போடவும் இந்தக் கேடயம் துணை புரிகின்றது.
நன்மை செய்வதற்குச் சிறப்பு அழைப்பு
ரமலான் மாதத்தில் பிரத்தியேகமாக சிறப்பு அழைப்பாளர்கள் வந்து நாம் அனைவரும் நன்மைகளைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவும், தீமைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதற்காகவும் அன்பான அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தச் சிறப்பு அழைப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ரமலான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் அடைக்கப்படுவதில்லை.
அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவர் “நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்” என்று அறிவிக்கின்றார். அப்போது அல்லாஹ்வால் பலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகின்றது.
ஆதாரம்: (திர்மிதீ: 682) (618)
ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ‘நன்மையைத் தேடுபவர்களே! இன்னும் அதிக மதிகம் நன்மையைச் செய்வதற்கு விரையுங்கள்! தீமைகளைச் செய்பவர்களே! தீமைகளைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்றும் அழைப்பு விடுக்கின்றார்கள். இன்னும் ஒருபடி மேலாக, ரமளானில் ஒவ்வொரு நாள் இரவிலும் அல்லாஹ் நரகத்திலிருந்து பல பேரை விடுவித்துக் கொண்டிருக்கின்றான். இப்படிப்பட்ட அற்புதமான ஒரு அழைப்பை நம்மில் எத்தனை பேர் செவிமடுத்து, அந்த அழைப்புக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கின்றோம் என சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
எழுபது ஆண்டுகள் தூரமாக்கப்படுதல்
ரமளானில் இறைவனுக்காக நோன்பு நோற்கும் போது இறைவன் நமக்கு வழங்குகின்ற அளப்பரிய பொக்கிஷத்தை வார்த்தைகளாக வர்ணிக்கவே முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.
ஆதாரம்: (புகாரி: 2840)
அல்லாஹ்வின் பாதை என்பது போர்க் களத்தையும், மற்ற மற்ற காரியங்களையும் குறிக்கின்ற பொதுவான சொற்பிரயோகம். பொதுவாகவே இறைவனின் பாதையில் நாம் செய்கின்ற எல்லா நன்மைகளுக்கும் இறைவன் கூலி வழங்குகின்றான்.
குறிப்பாக ரமலான் மாதத்திலோ, போர்க்களத்திலோ இறைவனுக்காக நாம் ஒருநாள் நோன்பை நோற்றால் 70 ஆண்டுகள் நரகநெருப்பை விட்டு இறைவன் அப்புறப்படுத்தி விடுகின்றான். இப்படிப்பட்ட அற்புதமான ரமலானை எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நோன்பாளிகளே வருக! வருக!
நோன்பாளிகள் ரமலான் மாதத்தில் பட்ட சிரமத்தினாலும், கஷ்டத்தினாலும் நாளை மறுமையில் இறைவன் மகத்தான பரிசாக, நோன்பாளிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக ரய்யான் எனும் சொர்க்கத்தின் வாசல் வழியாக அழைக்கின்றான். ரமலான் எப்படி நம்மை ஒவ்வொரு வருடமும் ஆரத்தழுவி வரவேற்கின்றதோ, அதுபோன்று ரமலானில் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்ற நோன்பாளிகளை இறைவன் ரய்யான் என்ற சொர்க்கவாசல் வழியாக வரவேற்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் “ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
ஆதாரம்: (புகாரி: 3257)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்;
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்!
ஆதாரம்: (புகாரி: 1896)
சொர்க்கத்தில் ஏராளமான படித்தரங்கள் இருந்தாலும், நோன்பாளிகளுக்கென்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற ரய்யான் என்ற சொர்க்கவாசலுக்கு நோன்பாளிகளை இறைவன் அழைக்கின்றான். இன்னும் குறிப்பாக, நோன்பாளிகள் ரய்யானில் நுழைந்தவுடன் ரய்யானின் வாசல் அடைக்கப்பட்டு விடும்.
இப்படிப்பட்ட நன்மைகளைக் கொட்டித் தீர்க்கின்ற ரமலானை முறையான அடிப்படையில் நாம் வரவேற்றால், ரய்யான் என்ற சொர்க்கமும் நம்மை கட்டித் தழுவும்.
ரமளானை அலட்சியப்படுத்தாதீர்கள்
இஸ்லாமிய சொந்தங்களே! எத்தனையோ வருட ரமலான் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கின்றது. சென்ற ரமலானில் நம்மோடு பயணித்தவர்கள் இந்த ரமலானில் இந்த உலகத்தை விட்டே பிரிந்தும் கூட இருக்கின்றார்கள்.
இந்த ரமலானில் இருக்கின்ற நாம் அடுத்த ரமலானில் இருப்போமா? என்பது தெரியாது. ஆகவே இந்த ரமலானை அடைய காத்துக் கொண்டிருக்கின்ற நாம் மிகுந்த ஆர்வத்துடன், ரமலானில் முறையான நேரப்பட்டியலை அமைத்துக் கொண்டு, ரமலானைக் கழிக்க சபதம் ஏற்போம்!
- உளமாற இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி சரணடையுங்கள்!
- இரவுத்தொழுகையில் மிகவும் பேணுதலாக இருங்கள்!
- குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள்!
- இறை தியானம், பிரார்த்தனை, துதித்தலில் அதிகமாக ஈடுபட வேண்டும்.
- கடைசிப் பத்தில் பம்பரமாகச் சுழன்று, ஓய்வெடுக்காமல் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவைத் தேடப் பாடுபட வேண்டும்.
- அதிகமதிகம் தர்மம் செய்ய வேண்டும்.
- பொய்யான, கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்து விலகி விட வேண்டும்.
இறுதியாக,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
ஆதாரம்: (புகாரி: 1903)
இந்தச் செய்தியை உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தவர்களாக, தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு, அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்து ரமலான் மாதத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்தி விடாமல், ஒவ்வொரு முஸ்லிமும் இந்த வருட ரமலான் மாதத்தை, நல்ல ஒரு மனமாற்றத்தோடு, ரமலானே வருக! வருக! என்று ஆரத்தழுவி வரவேற்போம். இன்ஷா அல்லாஹ்!