ரமளானுக்குப் பின்
கோடை வெயில் உக்கிரத்துடன் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் ரமலானை எதிர்நோக்கினோம்.
அப்போது வெயிலின் வெப்பத்துடன் ரமலானை எப்படி கடக்கப்போகிறோம்? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் கவலையாக தொற்றிக்கொண்டது.
ஆனால், மிக விரைவாக ரமலான் மாதம் கடந்துவிட்டது. அத்தகைய ஓர் உணர்வைக் கொடுத்து சிரமத்தை இறைவன் இலேசாக்கியுள்ளான்.
தற்போது ரமலான் மாதத்தை நிறைவு செய்துவிட்டு இருக்கும் நாம் என்ன மாற்றத்தை வாழ்வில் கண்டிருக்கிறோம்?
ரமலானுக்கு பிந்தைய வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம்? என்ற கேள்விகள் நம் அனைவரின் முன்னாலும் நிற்கிறது.
இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் பசி, தாகத்தை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காகவோ, வருடத்தில் பதினொரு மாதங்கள் உண்டு பருகியவர்கள் ஒரு மாத காலம் பசித்திருக்கும் போதுதான் உணவின் அருமையும் தாகித்து இருக்கும் போதுதான் நீரின் அருமையும் தெரியும் என்பதற்காகவோ ரமலான் மாதத்தின் நோன்பை இறைவன் கடமையாக்கவில்லை.
மாறாக, படைத்த இறைவனைப் பயந்து நடக்கின்ற இறையச்சம் எனும் பயிற்சிக்காகத்தான் கடமையாக்கியிருக்கின்றான்.
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆவீர்கள்.
(அல்குர்ஆன்: 2:183) ➚
இந்த ரமலான் மாதம் மூலமாக நம்மை நாம் பக்குவப்படுத்தி இறையச்சத்தை உள்ளத்தில் வார்த்தெடுத்துக் கொண்டு தீமைகளிலிருந்து விலகி நிற்கும் நன்மனிதர்களாக ஆவதற்காகவே இறைவன் நோன்பைக் கடமையாக்கியுள்ளான்.
அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பிற்கான முக்கிய விதிமுறையை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
‘‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 1903)
ரமலானில் உணவை, பானத்தைத் துறந்துவிட்டு இருப்பது நமக்கு இறைவனிடத்தில் பயனளிக்க வேண்டுமெனில் அத்துடன் சேர்த்து தீய காரியங்களையும் துறக்க வேண்டும்.
அப்போதுதான் இறைவனிடத்தில் நமக்கான கூலியைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லையேல் நாம் பசித்து, தாகித்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை.
ஒருவர் தவறுகளை விட்டு விலகாமலிருக்கும் போது பட்டினியாக இருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ளப்படுமே தவிர இறைவனுக்காக நோன்பிருந்தார் என்று எடுக்கப்படாது.
இதைப் பெரும்பாலும் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர். அதை நாம் மக்களிடம் ரமலானில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் காண முடியும்.
பொய், புறம், கோள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களாகத் தன் வாழ்க்கையைக் கழித்திருப்பார்கள்.
சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சினிமா படங்களிலும் சீரியல்களிலும் மூழ்கியிருந்திருப்பார்கள்.
சிலர் புகை பிடிப்பது, இன்னபிற போதைப் பொருட்கள் என்று தன் வாழ்க்கையை போதையுடன் கழித்திருப்பார்கள்.
இதுபோன்ற இன்னும் ஏராளமான தீமைகள் ஒவ்வொரு மனிதரிடமும் குடி கொண்டிருந்திருக்கும்.
இன்னும் பலர் பள்ளிவாசலுக்கு வழி தெரியாதோர் போல் இருந்திருப்பார்கள்.
ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றாதோராக இருந்திருப்பர்.
பயான் சொற்பொழிவுகளில் பங்கெடுக்காதோராக இருந்திருப்பர்.
சட்டைப் பையிலிருந்து சல்லிகளை எடுத்து தர்மம் செய்ய மனமில்லாதோராக இருந்திருப்பர்.
இன்னும் இதுபோல் மார்க்கத்தோடு எவ்விதத் தொடர்புமில்லாமல் வாழ்க்கையைக் கழித்திருப்பார்கள்.
இவ்வாறு குடி கொண்டிருந்த எல்லாத் தீமைகளையும் ரமலான் வந்துவிட்டது என்ற ஒற்றைக் காரணத்திற்காக மக்கள் துறந்தார்கள்.
பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றும் நிரம்பி இடப்பற்றாக்குறைக்கு உள்ளாகும்.
ஒவ்வொரு வீட்டிலும் குர்ஆன் தூசு துடைக்கப்பட்டு எடுக்கப்படும்.
மிஸ்கீன்களுக்கு உதவ சில்லறைகள் மாற்றி வைக்கப்படும்.
கடமையான தொழுகையை எண்ணியும் பார்த்திடாதவர்கள் கூட சுன்னத்தான இரவுத் தொழுகையில் பங்கெடுப்பார்கள்.
சொற்பொழிகளையும் கேட்பார்கள்.
இப்படி ஓராண்டு செய்த பாவத்திற்கு ஒரு மாதத்தில் பரிகாரம் செய்துவிடலாம் என்று முனைப்புக் காட்டுவார்கள்.
சிலர் ஸஹர் சாப்பிட்டு உறங்கியவர்கள் இஃப்தாருக்கு எழுவார்கள். இடையில் தொழுகைகளெல்லாம் கனவில் நிகழ்ந்திருக்கும்.
சிலர் இஃப்தார் முடிந்ததும் புகைபிடித்தல் எனும் கடமையான ஒரு வேலையைத் தவறாமல் செய்துவிடுவார்கள்.
சிலர் பசித்திருப்பார்கள், தாகித்திருப்பார்கள். மற்ற நாட்களுக்கும் ரமலானுக்கும் அவர்களிடமுள்ள வித்தியாசம் அதுவொன்றுதான்.
அல்லாஹ் தனது மன்னிப்பை அள்ளித் தரும் இம்மாதத்திலும் பசித்திருப்பதைத் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தாமலிருந்தால் அது நமக்கு மன்னிப்பைப் பெற்றுத் தருமா?
இஃப்தார் முடிந்ததும் தீமைகளைச் செய்வதன் மூலம், பசித்திருந்தால் தான் அல்லாஹ் பார்க்கிறான் என்று எண்ணுகிறோமா? இது இறையச்சமா?
இவ்வாறு இறைவனது மன்னிப்பை பெற்றுக் கொள்ளாமல் யார் தனது ரமலானைக் கடக்கிறாரோ அவருக்கு ரமலான் தரும் பரிசு இதோ!
‘‘ஒருவன் ரமலான் மாதத்தை அடைந்து, அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி 3468 (ஹதீஸின் சுருக்கம்)
இறைவனது மன்னிப்பு, அருள் மற்றும் ஒரு நன்மைக்கு எழுநூறு மடங்கிற்கும் மேல் எண்ணிலடங்கா நன்மைகளைப் பெற்றுத்தரும் நன்மைக் களஞ்சியமான ரமலான், நாம் தீமைகளை விட்டு விலகவில்லையென்றால் சாபத்தைப் பெற்றுத் தந்துவிடும் என்பதை நபிகளார் நமக்கு எச்சரிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி ரமலானில் பலதரப்பட்ட நோன்பாளிகளை நாம் கண்டோம்.
நோன்புக் காலம் என்பது நமக்கான ஒரு இறையச்சப் பயிற்சி என்பதையும் தீமைகளை விட்டு விலகுவதே அதன் வெளிப்பாடு என்பதையும் அவ்வாறின்றி தீமைகளுடன் வாழ்பவர் பசித்திருப்பதில் பலன் ஏதும் இல்லை என்பதையும் மேலே பார்த்தோம்.
ரமலானில் அமல்களில் மூழ்கி, தீமைகளிலிருந்து விலகிய மக்கள் ரமலான் முடிந்த மறுநாள் பெருநாள் அன்றே தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர்.
பெருநாள் அன்று ஏதோ மற்ற மதத்தவர்களது பண்டிகையைப் போல சினிமா தியேட்டருக்குச் சென்று வருகிறார்கள்.
மக்கள் அப்படியே மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகின்றார்கள்.
நோன்புக் காலங்களில் மட்டும் அமல்கள் செய்கிறோம், தீமைகளிலிருந்து விலகுகிறோம் என்றால் சரி செய்ய வேண்டியது நம் செயல்பாடுகளை மட்டும் அல்ல! ஈமானையும் தான்.
ஏனெனில் ஏதோ நோன்புக் காலத்தில் மட்டும்தான் இறைவன் கண்காணிக்கிறான் என்பதைப் போன்ற ஒரு அலட்சியம் நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளது. இறைவனின் மேலுள்ள அத்தகைய அலட்சிய நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அமல்களில் பிரதிபலிக்கிறது.
ரமலானில் சொற்பொழிவுகளில் நபித்தோழர்கள் நன்மையில் விரைந்தது பற்றியும் தீமைகளைக் கண்டால் வெகுதூரம் விலகியது பற்றியும் செய்திகளைக் கேள்விப்படுகிறோமே! அதுவெல்லாம் ரமலானில் மாத்திரம் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள் என்றா நமக்கு சொல்லித் தருகிறது?
எல்லா நேரங்களிலும் தான் அமல்களில் விரைந்தார்கள், தீமைகளிலிருந்து விலகினார்கள். அதனால் தான் அவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை சமுதாயத்தில் இறைவன் வழங்கினான்.
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித் தோழர்களில் சிலர் பள்ளிவாசலின் தூண்களை நோக்கி (அதை தடுப்பாக ஆக்கி சுன்னத் தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்) என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி: 625)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
(முஸ்லிம்: 1319)
இந்த நன்மைகளெல்லாம் நபித்தோழர்கள் தங்கள் வாழ்வில் செய்த்து நோன்புக் காலங்களில் மட்டும்தானா?
சுன்னத்தான வழிபாடாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு செய்திருக்கிறார்கள்.
இறைவனிடம் சுவன மாளிகையைப் பெறுவதற்கு அச்செய்தியைக் கேட்டதிலிருந்து அமலை விடாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
ரமலானோடு கடமையையும் சேர்த்து மறக்கின்ற நாம் எங்கே? ரமலான் அல்லாத நாட்களிலும் சுன்னத்தைக் கூட விடாமல் செய்த இவர்கள் எங்கே?
இவர்கள் ஒரு புறம் என்றால் இவர்களுக்கு இப்படிப் பயிற்சி கொடுத்த, பக்குவப்படுத்திய நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்.
இரவு கண் விழித்துத் தொழுவார்கள். நின்று வணங்கியதன் விளைவு அவர்களின் பாதங்கள் வீக்கம் பெறும் என்றால் எவ்வளவு தொழுதிருப்பார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் “தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)’’ என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’’ என்று கேட்டார்கள்.
(புகாரி: 4836)
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, சுவனம் உறுதி என்று நன்மாராயம் சொல்லப்பட்ட தலைவர் இவ்வாறு அமல்செய்கிறார்கள் என்றால் நாம் எப்படியிருக்க வேண்டும்.
நமது பாவங்கள் மன்னிக்கப்படுமா? சுவனத்திற்குச் செல்வோமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியோடு பயணிக்கும் நாம் எப்படி நன்மைகளில் விரைய வேண்டும்?
நபித்தோழர்களை அல்லாஹ்வுடைய தூதர் பக்குவப்படுத்துவதற்காகப் பயன்படுத்திய அதே உபதேசங்கள் தானே நமக்கும் தரப்பட்டுள்ளன.
ஆனால் அதை ஏற்றுள்ள நாம் ஒவ்வொரு நாளும் மார்க்க வழியில் பயணித்து தீமைகளிலிருந்து விலகி நிற்காமல் ரமலானில் மட்டும் விலகி நிற்பது எவ்விதத்தில் நியாயம்?
இறைவனும் மார்க்கமும் ரமலானிற்கு மட்டுமல்ல! ஒவ்வொரு நாளும் தான்.
ஒரு மாத காலம் இறைவன் கொடுக்கும் இறையச்சப் பயிற்சி, அம்மாதத்தாடு முடித்துக் கொள்வதற்கு அல்ல! காலம் முழுவதும் தொடர்வதற்கு!