ரமளானின் சிறப்புகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

மாதங்களில் மிகச் சிறப்பிற்குரிய மாதமாக ரமலான் மாதத்தைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஏனென்றால், அம்மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த ரமலான் மாதத்தில் இருப்பதை பின் வரும் செய்திகளில் அறியலாம்.

அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்

”ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:(புகாரி: 1898) ,(முஸ்லிம்: 1956)

”ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:(புகாரி: 1899) ,(முஸ்லிம்: 1957)

கூடுதல் நன்மைகளை பெற்றுத்தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.

”ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ! அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:(புகாரி: 1901) ,(முஸ்லிம்: 1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.’ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்:(புகாரி: 1782) ,(முஸ்லிம்: 2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

”சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்கள்:(புகாரி: 1896) ,(முஸ்லிம்: 2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

”நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1894)

”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1904)

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.(அல்குர்ஆன்: 97:1-5)➚

மேற்கூறப்பட்ட செய்திகளில் இருந்து ரமலான் மாதத்தால் பெறக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். மற்ற மற்ற காரியங்களுக்கெல்லாம் நோன்பு சிறந்து விளங்க காரணம் அல்லாஹ் கூறுகிறான், நோன்பு எனக்கே உரியது. அதற்கு நானே கூலி அளிப்பேன். மேலும், ஒவ்வொரு நன்மைக்கும் படத்திலிருந்து எழுநூறு மடங்கு நன்மைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. நோன்பு வைத்தவருக்கென்று பிரத்தியோகமாக சுவர்க்கத்தில் ரய்யான் என்ற தனி வாசல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளன. ஆகையால், நோன்பை பற்றிய சிறப்புகளையும் அதன் மூலம் பெறக்கூடிய பன்மடங்கு நன்மைகளையும் நாமும் செய்து பிறரையும் செய்யும்படி ஊக்குவிப்போம்.