04) யாஸீன் விளக்கவுரை-4

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

6 வது வசனத்தின் விளக்கம்

கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்று இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 36:06) ➚.)

இதில் 6 வது வசனத்தில் “முன்னோர் எச்சரிக்கப்படாமல் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக” என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் நபியின் சமுதாயத்திற்கு நபியவர்களுக்கு முன் எந்த தூதரும் வரவில்லை. சிலை வணக்கம் போன்றவை கூடாது என்றும் அதனுடைய தீமைகளும் அவர்களுக்கு விளக்கி கூறப்படவில்லை. அதனாலேயே முன்னோர் எச்சரிக்கப்படாத சமுதாயம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். இக்கருத்து மேலும் சில வசனங்களிலும் உள்ளது.

“இதை இவர் இட்டுக்கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

(அல்குர்ஆன்: 32:3) ➚.)

நாம் அழைத்த போது தூர் மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. மாறாக உமது இறைவனின் அருளால், இதற்கு முன் எச்சரிக்கை செய்பவர் வராத ஒரு சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது)

(அல்குர்ஆன்: 28:46) ➚.)

 

இறைத்தூதர் வராதவர்களின் மறுமைநிலை என்ன?

 

இதிலிருந்து நபியவர்களின் சமுதாயத்திற்கு நபி ஸல் அவர்களையே எச்சரிக்கும் இறைத்தூதராக அனுப்பி உள்ளான். நபிக்கு முன் எந்த தூதரும் அச்சமுதாய மக்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை அறியலாம். இந்நேரத்தில் நமக்கு ஒரு கேள்வி எழலாம். நபிகள் நாயத்தின் வருகைக்கு முன் தூதர் வராத நிலையில் அச்சமுதாய மக்களில் சிலர் இறந்திருப்பார்களே அவர்களின் மறுமைநிலை என்ன?

அவர்களுக்கு மறுமையில் கேள்வி கணக்கு உண்டா?

தூதர்களே வரவில்லையென்றால் இஸ்லாமிய சட்டங்கள் அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டிருக்காது. இவ்வாறு பிரச்சாரமே சென்றடையாத சமுதாயத்திற்கு எப்படி அல்லாஹ் கேள்வி கேட்பான்? இவ்வாறான கேள்விகள் எழலாம். இது தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

தூதர் விளக்கவேண்டியது பற்றி கேள்வியில்லை

நபி (ஸல்) அவர்களின் தாய், தந்தை போன்ற தூதர் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்து மரணித்தவர்களை பொறுத்தவரை அவர்களிடம் தூதரின் துணையில்லாமல் எவற்றை அறிந்து கொள்ளவே முடியாதோ அவைகள் பற்றி கேள்வி கேட்கப்படாது. உதாரணமாக தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், திக்ரு, தஸ்பீஹ் போன்ற வணக்கங்களை தூதர் வந்துதான் விளக்கவேண்டும்.

ஒருவர் தாமாக சிந்தித்து ஒரு நாளைக்கு எத்தனை ரக்அத் தொழுகைகள், எத்தனை மாதங்கள் நோன்பு நோற்பது? எப்படி நோன்பு நோற்பது? போன்றவற்றை பகுத்திறவு கொண்டு விளங்கமுடியாது. தூதரின் உபதேசமோ வழிகாட்டலோ இல்லாமல் இவற்றை விளங்க இயலாது என்பதால் இதை பற்றி அல்லாஹ் அவர்களிடம் கேட்கமாட்டான்.

தவ்ஹீதை பற்றி கேட்பான்

ஆனால் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு இணையாக யாருமில்லை. அவனை மட்டும்தான் வணங்கவேண்டும் என்ற ஏகத்துவ கொள்கையை இறைவன் வழங்கிய பகுத்தறிவால் அறிந்து கொள்வது அனைவர் மீதும் அவசியமான ஒன்றாகும்.

ஏனெனில் இவ்விஷயத்தை தூதர் வந்து விளக்கவேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பகுத்தறிவு போதுமானது. விளங்கத்தக்க சான்றுகளும் உலகில் உள்ளன. இவ்வாறுதான் அல்லாஹ் நம்மை படைத்துள்ளான்.

ஸாபியீன்கள்

ஸாபியீன்கள் என்ற சிலர் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்பே இருந்துள்ளனர். அல்லாஹ் அதை விவரிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும், கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 5:69) ➚.)

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணைகற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

(அல்குர்ஆன்: 22:17) ➚.)

மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்ற ஸாபியீன்கள் என்பவர்கள் தூதர்கள் தங்களிடம் வராவிட்டாலும் ஓரிறைக்கொள்கையை சிந்தித்து ஏற்று செயல்பட்ட மக்களாவர். அரபுகளின் சிலை வணக்கத்தை விட்டு தவிர்ந்திருந்தனர். இணைவைப்பு காரியங்களை செய்யாமல் ஓரிறைக் கொள்கையை ஏற்றிருந்தனர்.

நம்பத்தகுந்த அத்தாட்சிகளை நம்பியிருந்தனர். எனவே தூதர் வராவிட்டாலும் ஸாபியீன்கள் போன்று பகுத்தறிவு அடிப்படையில் சிந்தித்து, ஓரிறைக் கொள்கையை ஏற்று செயல்பட்டிருக்கவேண்டும்.

சிந்திக்க வைக்கும் ஒப்பந்தம்

தூதர் வராவிட்டாலும் நம்முடைய பகுத்தறிவே ஓரிறைக் கொள்கையை விளங்கப் போதுமானது என்பதற்கு பின்வரும் அல்லாஹ்வின் ஒப்பந்தம் ஒரு சான்றாகும்.

“ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்;

நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.) அவர்கள் திருந்துவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

(அல்குர்ஆன்: 7:172,173) ➚,174.)

இறைவனை நிராகரித்தவர்கள் மறுமையில் ஓரிறைக் கொள்கை பற்றி எங்களுக்கு தெரியாது என்று கூறிவிடக்கூடாது என்பதற்காகவும் இதை முன்னேற்பாடாக அல்லாஹ் ஆக்கிவைத்திருக்கிறான்.

நம்பத்தகுந்த சான்றுகள்

இதுமட்டுமின்றி ஓரிறைக்கொள்கையை விளங்குவதற்கு ஏராளமான நம்பத்தகுந்த சான்றுகளும் உலகில் உள்ளன. தூதர் வராவிட்டாலும் அத்தகைய சான்றுகளை சிந்தித்தாலே இறைவன் இருக்கிறான் என்ற முடிவிற்கே நமது பகுத்தறிவு நம்மை அழைத்து செல்லும்.

சூரியன், சந்திரன் இயக்கம்

சூரியன், சந்திரன் போன்ற கோள்கள் சீரான முறையில் இயங்குகின்றன. தானாக இயங்கினால் இவ்வாறு இருக்காது. இதை பார்க்கின்ற எவரும் இதை யாரோ இயக்குகிறார்கள் என்று விளங்கிக்கொள்வார். ஏனெனில் தானாக இயங்குகின்ற எந்த ஒன்றும் சீராக இயங்காது.

உதாரணமாக ஓட்டுநர் இல்லாத பேருந்து சிறிது தூரம் சென்றாலும் பிறகு நிலை தடுமாறிவிடும். தானியங்கி பேருந்தாக இருந்தாலும் யாராவது அதில் பதிவு செய்த தொழில்நுட்பத்தின் படிதான் இயங்கும். இது போன்று ஏராளமான சான்றுகள் உண்டு.

மரங்கள் முளைத்தல்

பொதுவாக மண்ணில் எந்த பொருளை புதைத்தாலும் அதை மண் அரித்துவிடும். உதாரணமாக ஆப்பிளை புதைத்தால் அதை மண் அரித்து தின்று விடும். இரும்பை புதைத்தால் அதையும் மண் அரித்து விடும். மனிதனை புதைத்தாலும் அவனுக்கும் இதே நிலை தான். இதில் நபிமார்களுடைய உடல் மட்டும் விதிவிலக்காகும். ஏனெனில் நபிமார்களின் உடலை மண் தீண்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிமார்களின் உடல்களை தீண்டக்கூடாது என பூமிக்கு அல்லாஹ் தடைசெய்துவிட்டான்.

இதை அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்

(நஸாயீ: 1357)

அத்தனையையும் அரித்து, தின்று தீர்க்கும் தன்மை கொண்ட மண், நெல் விதை, மா விதை போன்ற மனிதன் உண்பதற்காக விதைப்பவற்றை மண்ணில் புதைத்தால் அதை மண் அரித்துவிடாமல் மனிதன் பயன் பெறும் வகையில் நமக்கே திருப்பித்தருகிறது. இதை பார்க்கும் யாரும் தானாக நடப்பது என்று கூறமாட்டார்கள். திட்டமிட்ட நிகழ்ச்சி அதில் தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே இந்த நிகழ்வு சாத்தியமாகும்.

ஏனெனில் தானாக நடப்பது என்றால் அனைத்தையும் மண் அரிப்பதை போல மனிதன் உணவுக்காக எதை விதைக்கின்றானோ அவற்றையும் மண் அரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. எனவே இந்த குறிப்பிட்ட மாற்றங்களை பேராற்றல் கொண்ட ஒருவன் இயக்குகிறான் என்பதை அறியலாம்.

மேலும் மா, பழா, வாழை போன்றவற்றை ஒரே இடத்தில் விதைத்தாலும் அவற்றின் சுவைகள் வெவ்வேறாக இருக்கிறது. மேலும் நாம் விதைத்த விதையில் எவ்வித சுவையும் இல்லை. சுவைமிகுந்த நீரையும் அதற்கு பாய்ச்சவுமில்லை. சாதாரண நீரைதான் பாய்ச்சுகிறோம். ஆனால் பழங்களோ மிகுந்த சுவையுடையதாக இருக்கின்றன. இவை தானாக நடப்பது என்றால் அனைத்தும் ஒரே சுவையாக இருக்கவேண்டும். ஆனால் வெவ்வேறாக இருப்பது இவற்றை இயக்கும் பேராற்றல் கொண்ட இறைவன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது.

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்” என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?

நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?

இதனை ஒரு படிப்பினையாகவும், பயணிகளுக்குப் பலனளிப்பதாகவும் நாமே ஆக்கினோம்.

எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

(அல்குர்ஆன்: 56:64) ➚லிருந்து 74 வரை.)

மனிதர்களிலும் பல அத்தாட்சிகள் உண்டு

பூமி விளைவிப்பவற்றில் மட்டுமின்றி மனிதர்களிலும் பல அத்தாட்சிகள் உண்டு. மனித உடல்களில் உள்ள உறுப்புகளை பற்றி சிந்தித்தாலே இதை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கண், நாக்கு போன்ற உறுப்புகள்

நம் உடம்பில் உள்ள முக்கிய உறுப்பான கண் மிகப்பெரிய அத்தாட்சியாகும். ஏனெனில் நவீன கண்டுபிடிப்பாகிய கேமரா அனைத்தையும் படம் பிடித்தாலும் கண் போன்று தெளிவாக இருக்காது. ஆனால் நமது கண் அத்தகையதல்ல. நமது கண்ணானது எந்த திசையில் திரும்பினாலும் உடனடியாக துல்லியமாக பார்க்கக்கூடிய திறன் கொண்டதாகும்.

மேலும் மனிதனின் நாக்கு என்பதும் மிகப்பெரிய அத்தாட்சியே. ஏனெனில் பேசும் திறன் உள்ளவருக்கும் பேசும் திறனில்லாத ஊமைகளுக்கும் ஒரே நாக்குதான் உள்ளது. இரண்டும் ஒரே அளவுதான் உள்ளது. ஆனால் ஒருவருக்கு மட்டும் பேச்சு வரவில்லை. கட்டளையிட்டு இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதையே இந்த வேறுபாடு உணர்த்துகிறது.

ஐம்பது கிராம் எடையுள்ள நாக்கின் மூலமாக நாம் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை பேசுகிறோம். இவ்வாறு பேசுவதற்கு நாக்கின் எடைதான் காரணம் என்றால் எருமை மாட்டின் நாக்கு நம்மைவிட அளவில் மிகப்பெரியதாகும். அது நம்மைவிட அதிகமான மொழிகளை பேசவேண்டும் ஆனால் மனிதன் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அதற்கு ஒரு மொழி கூட பேசமுடிவதில்லை. ஏனெனில் படைத்த இறைவன் அதற்கு மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேசும் திறனை வழங்கவில்லை என்பதே காரணம்.

எனவே ஓரிறைக் கொள்கையை புரிந்து ஏற்றுக் கொள்ள இறைத்தூதர் வரவேண்டும் என்ற அவசியமில்லை.

இதுபோன்ற நுணுக்கமான வேறுபாடுகளையும் துல்லியமான இயக்கங்களையும் பகுத்தறிவு கொண்டு சிந்தித்தாலே இவற்றை இயக்கும் இறைவன் இருக்கிறான் என்பதை விளங்கி ஸாபியீன்கள் ஓரிறைக்கொள்கையோடு வாழ்ந்தது போன்று தூதர்வராத மக்களும் வாழலாம். ஆதலால் அவர்களுக்கு எவ்வித கேள்விகளும் இல்லை என விளங்கக்கூடாது. மாறாக தூதர் விளக்கவேண்டிய கேள்விகளை தவிர்த்து ஓரிறைக்கொள்கையை பற்றிய கேள்விகள் அவர்களுக்கும் உண்டு.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரின் மறுமை நிலை என்ன?

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த இணைவைப்பாளர்கள் நரகவாசிகள்தான் என்பதில் முஸ்லிம்களில் அனைத்து பிரிவினர்களும் ஒரே கருத்தை கொண்டுள்ளனர்.

எனினும் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் குறித்து மட்டும் சிலர் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். நபியின் பெற்றோர் நரகவாசிகள் அல்ல. சொர்க்கவாசிகள்தான். ஏனெனில் உலகத்தின் அருட்கொடையாகிய நபியை சுமந்து பெற்றெடுத்துள்ளனர். எனவே அவர்களை நரகவாசிகள் என்பது தகுதியானதல்ல என்று கூறுகின்றனர். ஆனால் இதைப்பற்றி நபி (ஸல்) அவர்களே தெளிவாக விளக்கிவிட்டார்கள்.

நபியின் தாயாருக்கு பாவமன்னிப்பு இல்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 1776)

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தன் தாயாருக்காக பாவமன்னிப்பு கோர இறைவனிடம் அனுமதி கேட்கும் போது அவர்களுடைய அடக்கத்தலத்தை சந்திக்கலாம் என்ற அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் பாவமன்னிப்பு கோர அனுமதி கிடைக்கவில்லை.

(பொதுவாக அடக்கத்தலங்களை சந்திப்பதை மார்க்கம் அனுமதிக்கிறது. மாறாக தர்கா போன்ற அனாச்சாரங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்லக்கூடாது என்றுதான் தடுத்துள்ளது.) இதற்கான காரணம் பிற வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்க அனுமதி கிடையாது என அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன்: 9:113) ➚.)

இணைகற்பிப்பபோருக்கு பாவமன்னிப்பு கிடையாது என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். நபியின் தாயார் இணைவைப்பாளராக இருப்பதால்தான் அவருக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என தடுத்துள்ளான். அவர் சொர்க்கவாசியாக இருந்திருந்தால் தாராளமாக அனுமதி வழங்கியிருப்பான். எனவே இத்தடை மூலமும் நபியின் தாயார் நரகவாசிதான் என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்களின் தந்தையும் நரகவாசி

மேலும் நபியவர்கள் தன் தந்தை பற்றியும் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 347).

கேள்வி கேட்ட மனிதரிடம் நபியவர்கள் தன் தந்தையின் மறுமை நிலையை விளக்கும்போது அவர் நரகவாசி என்று கூறுகிறார்கள். தாயைப்போன்று தந்தையும் இணைவைப்பாளராக இருந்ததால் அவரும் நரகவாசி என்று கூறுகிறார்கள். எனவே நபிகாலத்து மக்களைப்போன்று நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் இருவரும் நரகவாசிகள்தான். மேலும் இவர்களை ஸாபியீன்கள் போன்றவர்கள் என்று கூறுவதும் தவறாகும்.

தனது பெற்றோர் நிலை குறித்து நபிகளார் தெளிவாக விளக்கிய பின் இதில் கருத்து வேறுபாடு கொள்வதில் எவ்வித நியாயமுமில்லை.

7 வது வசனம்

7.அவர்களில் அதிகமானோருக்கு எதிராக கட்டளை உறுதியாகி விட்டது. எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

(அல்குர்ஆன்: 36:7) ➚.)

இவ்வசனத்தில் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான் இதே கருத்தை பின்வரும் வசனமும் கூறுகின்றது.

(ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

(அல்குர்ஆன்: 2:6) ➚.)

அல்லாஹ் யாரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று விதித்து விட்டானோ அவர்கள் ஒரு போதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் இறைவனே தீர்மானிக்கிறான் எனும் விதியை பற்றி இவ்வசனம் பேசுகிறது. எனவே விதி குறித்து விரிவாக காண்போம்

விதியை நம்புவது முஸ்லிம்கள் மீது கடமை

சிறு வயதில் மதரஸாக்களில் நாம் ஒதும்போது விதியை நம்புவது முஸ்லிம்களின் மீது கடமை என்று படித்திருப்போம் அதை இந்த ஹதீஸ்கள் கூறுகிறது.

அடுத்து அவர், “ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார். (ஹதீஸின் சுருக்கம்)…

(முஸ்லிம்: 1)

அல்லாஹ்வையும் தூதரையும் நம்புவது போன்று விதியையும் நம்பவேண்டும். இல்லையெனில் நாம் முழுமையான முஸ்லிமாக ஆக முடியாது.

நபிக்கு இடப்பட்ட கட்டளை

“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக

(அல்குர் ஆன்:9 : 51.)

எல்லாமே விதிப்படிதான்

அனைத்து ஜீவராசிகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளனைத்து விதிப்படிதான் என்பதை இக்குர்ஆன் வசனம் விளக்குகிறது.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

(அல்குர் ஆன்:57 : 22.)

இலை கீழே விழுவதும் விதிப்படிதான்

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காயந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை

(அல்குர்ஆன்: 6:59) ➚.)

மரத்திலிருந்து இலை கீழே விழுவதை யாரும் கவனிக்கமுடியாது. அத்தகைய மிகச்சிறிய விஷயம் கூட அல்லாஹ் அறிகிறான். அதுவும் அவன் விதிப்படிதான் நடக்கிறது.

சொர்க்கவாசி? நரகவாசி? அல்லாஹ்வின் விதிப்படியே!

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர் இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(அல்குர்ஆன்: 7:179) ➚.)

மேற்கண்ட வசனத்தில் நரகத்திற்கென்றே ஜின், மனித வர்க்கத்தில் பலரை படைத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இது மறுமைநாளின் போது தீர்மானிக்கப்படுவதில்லை அவர்களின் பிறப்பிற்கு முன்னரே விதியில் உள்ளதாகும். இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

தாயின் கருவறையிலிருக்கும்போதே விதி எழுதப்படுகிறது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது:

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது.

பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:)

அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது’ என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும்.

இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தா ன் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார்.

(அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

ஸஹீஹ்(புகாரி: 3208)

சிலர் சொர்கவாசியை போன்று செயல்பட்டாலும் அவர்களுடைய விதியில் நரகவாசி என்று உள்ளதால் இறுதியில அவர் நரகவாசியாகிவிடுகிறார். அதே போன்று நரகவாசினை போன்று செயல்பட்டாலும் விதியில் சொர்க்கவாசி என்று உள்ளதால் அவர் சொர்க்கவாசியாகிவிடுகிறார். இதை பின்வரும் ஹதீஸ் இன்னும் தெளிவாக விளக்குகிறது.

தற்கொலை செய்துகொண்ட உயிர்த்தியாகி!

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்குவிட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.

(அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்’ என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.

அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறிறீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்’ என்று சொன்னார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 2898).

இச்செய்தியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நபர் இவ்வாறு செய்வார் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவருடைய செயல் அவ்வாறு இருக்கவில்லை. ஆனால் இறுதியில் அவருடைய முடிவு நேர்மாறாக அமைந்துவிட்டது.

பின்வரும் செய்தியை பாருங்கள்

பராஉ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள்.

எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 2808).

இது போன்ற நிகழ்வுகளின் மூலமும் விதியின் படிதான் அனைத்தும் நடக்கிறது. நம் விருப்பப்படி இல்லை என்பது விளங்குகிறது.

ஆதம் நபிக்கு முன்னரே விதி எழுதப்பட்டுவிட்டது.

இவ்வுலகில் மறுமைநாள்வரை வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளின் வாழ்நாளைப் பற்றி முதல் மனிதராகிய ஆதம் (அலை) படைக்கப்படுவதற்கு முன்பே அல்லாஹ் எழுதிவிட்டான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட) ஆதமும் மூசாவும் தர்க்கம் புரிந்து கொண்டார்கள். ஆதமிடம் மூசா, “உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூசாவிடம், “நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிக்கின்றீர்களே!” என்று கேட்டார்கள்.

“இதைக் கூறிய பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆக, ஆதம் விவாதத்தில் மூசாவை வென்று விட்டார்கள்’ என்று இருமுறை சொன்னார்கள்” என இந்த நபி மொழியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(புகாரி: 3409)

ஆதம் நபி செய்த தவறைக் கூட அவரை படைப்பதற்கு முன்பே விதியில் அல்லாஹ் எழுதிவிட்டான் என்று இந்த செய்தி குறிப்பிடுகிறது மேலும் விதியை குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, “நீங்கள் இருவரும் (“தஹஜ்ஜுத்) தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது.

அவன் எங்களை எழுப்ப நினைத்தால்தான் எங்களால் எழமுடியும்’ என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே “மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்” (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.

(புகாரி: 1127)

மேற்கண்ட செய்தியில் அலீ (ரலி) அவர்கள் தாங்கள் தொழாமல் உறங்கியதற்கு விதியை தொடர்புபடுத்தி கூறும்போது, நபி (ஸல்) அவர்கள் அதை மறுக்காமல் அங்கீகரிக்கும் வண்ணமாக திரும்பி செல்கிறார்கள்.

இணைவைப்பதும் அல்லாஹ் விதிப்படியே!

அல்லாஹ் மன்னிக்காத செயலாகிய இணைவைப்பபு கூட அல்லாஹ்வின் விதிப்படிதான் நடக்கிறது.

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களுக்குக் நாம் காவலராக ஆக்கவில்லை. அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர்.

(அல்குர்ஆன்: 6:107) ➚.)

நாம் நினைப்பதும் விதிப்படி!

அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 76:30) ➚.)

நாம் மனதில் நினைப்பது உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படிதான் என்று இவ்வசனம் கூறுகிறது. எனவே நம்முடைய அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நடக்கிறது என்பதை இந்த ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.

விதியும் விளக்கமும்

மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களும் விதிப்படிதான் நடக்கிறது. அவர்கள் தன்னிச்சையாக செய்யவில்லை எனும் போது அவர்களை குற்றம் பிடிக்க முடியாதே? தவறு செய்பவர்களை தவறு செய்யாதீர்கள் என தடுக்க முடியாதே?

இணைவைப்பவர்கள் விதிப்படிதான் செய்கிறார்கள் என்றால் நாம் எதற்காக அதை தடுக்கவேண்டும்? எதற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்? நபிமார்கள் எதற்கு வர வேண்டும்? நாம் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் திருந்தமாட்டார்கள் என அல்லாஹ் விதித்துவிட்டால் அவர்கள் திருந்த மாட்டார்களே? என்பன போன்று விதி தொடர்பாக பல கேள்விகள் எழும்.

குர்ஆன் வசனங்களில் முரண்பாடா?

விதி பற்றி கூறும் குர்ஆன் வசனங்கள் இரண்டு விதமாக உள்ளது. ஒன்று மனிதர்களின் செயல்களுக்கு இறைவன் பொறுப்பல்ல, மனிதனே பொறுப்பு என்பது. மற்றொன்று மனிதர்களின் செயல்களுக்கு அல்லாஹ்வே பொறுப்பு, மனிதர்களுக்கு அதில் பங்கில்லை என்பது.

மனிதர்களே பொறுப்பு எனும் வசனங்கள்

(முஹம்மதே!) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 9:80) ➚.)

மேற்கண்ட வசனத்தின் இறுதியில் “குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்” என்று கூறுவதின் மூலம் அல்லாஹ் தானாக எதையும் செய்யவில்லை. மனிதர்கள் குற்றம் புரிந்த காரணத்தினால்தான் நேர்வழி காட்டவில்லை என்ற கருத்து வருகிறது.

சரியான முறையில் சாட்சியம் கூறவோ, தமது சத்தியம் (பிறரால்) மறுக்கப்படும் என்று அவர்கள் அஞ்சவோ இதுவே ஏற்ற வழி. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன்: 5:108) ➚.)

இவ்வசனத்தின் இறுதியிலும் மனிதர்கள் குற்றம் செய்ததால்தான் அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான் என்று கூறப்படுகிறது. இது போன்ற பல வசனங்கள் குற்றங்களுக்கு அல்லாஹ் பொறுப்பல்ல. மாறாக மனிதர்கள்தான் பொறுப்பாவார்கள் என்று கூறுகிறது.

அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 2:134) ➚.)

அவர்கள் செய்த தீவினைகள் அவர்களைப் பிடித்தன. இவர்கள் செய்த தீவினைகள், இவர்களில் அநீதி இழைத்தோரைப் பிடிக்கும். இவர்கள் வெல்வோராக இல்லை.

(அல்குர்ஆன்: 39:51) ➚.)

இது போன்ற எராளமான வசனங்கள் மனிதர்கள் தங்கள் செயல்களால்தான் தண்டிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. முதலில் விதி பற்றி நாம் பார்த்த சான்றுகள் யாவும் மனிதர்களின் செயல்களுக்கு இறைவனே பொறுப்பு என்ற கருத்தை வெளிப்படுத்தியதை கண்டோம்.

எனவே இவ்விரண்டு விதமான கருத்தை தருகின்ற வசனங்களும் குர்ஆனில் உள்ளது. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தெரியும். இதை நாம் சரியான முறையில் விளங்கவேண்டும். ஏனெனில் இவ்வசனங்களை சரியாக விளங்காததால் கடந்த காலங்களில் முஸ்லிம்களில் கத்ரிய்யா மற்றும் ஜிப்ரிய்யா எனும் இரண்டு பிரிவினர்கள் உருவாகினர்.

கத்ரிய்யா,

கத்ரிய்யா என்பவர்கள் விதியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எல்லாமே மனிதனின் விருப்பத்தில் தான் இருக்கின்றது எனும் கருத்தைக் கொண்டவர்கள்.

ஜிப்ரிய்யா.

ஜிப்ரிய்யா என்பவர்கள் விதியை ஏற்றுக்கொள்பவர்கள். எல்லா செயலுக்கும் இறைவனே காரணமாக இருப்பதால் உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றி ஓரளவு நம்பிக்கை இருந்தாலே போதும். மற்றபடி அவனுக்கு இறைவனின் புறத்திலிருந்து பெரிதான கேள்விகள் எதுவுமில்லை என்று கூறுவோர்.

இத்தகைய இரண்டு கூட்டங்களும் மார்க்க நிலைப்பாட்டில் மிகப்பெரிய தவறுகளை செய்தவர்கள். எனவே விதி தொடர்பான நடுநிலையான அதே நேரம் சரியான நிலைபாடு நமக்கு வேண்டும். மற்ற விஷயங்களைப் போன்று விதி தெளிவானதல்ல. நமது அறிவைக் கொண்டு அணுகும் போது சற்று குழப்பமானதுதான். எனவே விதியை அதன் முரண்பாட்டுடனே ஏற்கவேண்டும்.

விதி பற்றி நபி (ஸல்) அவர்கள்

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியது:

நபித்தோழர்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களிடம் வந்தார்கள். (அதை பார்த்துவிட்டு) கோபத்தால் மாதுளை பழத்தின் முத்தைப் போன்று முகம் சிவந்தவர்களாக “இவ்வாறுதான் (சர்ச்சை செய்யுமாறு) உங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதா? அல்லது இதற்காகதான் படைக்கப்பட்டீர்களா? நீங்கள் குர்ஆ(வசனங்களை)னை ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகிறீர்கள். இதனால்தான் உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தவர்கள் அழிந்தார்கள்” என்று எச்சரித்தார்கள்.

(இப்னு மாஜா: 82)

விதி குழப்பமானதாக தெரிந்தாலும் கூட அதைப் பற்றி சர்ச்சை செய்யக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் நம்மை தடுத்துள்ளார்கள்.

விதி பற்றி அறிவியல்

விதி முரண்பாடான ஒன்றுதான் என அறிவியலும் கூறுகிறது.

விதியை விமர்சிக்கின்ற பகுத்தறிவாளர்களும் இவ்வாறுதான் கூறுகிறார்கள். ஏனெனில் இது பற்றிய அறிவு உலகத்தில் நமக்கு வழங்கப்படவில்லை. மறுமையில் அல்லாஹ் தெளிவுபடுத்துவான். உதாரணமாக டியூப் லைட்டை சுற்றி நிர்கின்ற சுவற்று பல்லிக்கு தனக்கு அருகிலிருக்கின்ற லைட் எப்படி செயல்படுகின்றது, அதிலிருந்து எப்படி வெளிச்சம் உண்டாகிறது என புரியாது.

நாம் நினைத்தாலும் அதை, அதற்கு புரியவைக்கவும் முடியாது. ஏனெனில் அதை விளங்கும் ஆற்றல் சுவற்று பல்லிக்கு இல்லை. அதே போன்றுதான் மனிதனின் நிலையும். இவ்வுலகில் விதியை விளங்கும் ஆற்றல் நமக்கு வழங்கப்படவில்லை.

அறிவியல் ஆய்வு

விதி தொடர்பாக சுவாரசியான ஆய்வறிக்கை ஒன்று உண்டு.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஆய்வில் “மனிதன் தானாக இயங்கவில்லை. அவனுடைய உடலில் உள்ள மரபணுக்களால்தான் இயங்குகிறான். அவன் செய்யும் செயல்களை தன்னிச்சையாக செய்யவில்லை. மாறாக அவன் மூளையில் என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்கிறான். மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள்தான் அவனிடமும் ஏற்படும். அவன் செய்யும் செயல்களுக்கு அவன் பொறுப்பாளி அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

இதை பற்றி ஒரு ஆய்வாளர் கூறுகையில் “ஒருவன் திருடிவிட்டு குற்றவாளி கூண்டில் நிற்கும்போது தான் தப்பித்து கொள்வதற்காக தன்னுடைய மூளையின் புகைப்படத்தை காண்பித்து “நான் தானாக திருடவில்லை. என் மூளையில் இவ்வாறுதான் எண்ண ஓட்டங்கள் உள்ளது. இதற்கு மாற்றமாக நான் செயல்பட முடியாது. எனவே என்னை தண்டிக்கக்கூடாது” என்று கூட அவன் வாதிடும் நிலை ஏற்படலாம்” என்கிறார்.

(இது குறித்து 6-5-2012 அன்று தி ஹிந்து நாளிதழில் “Who am I? my brain or my mind?” என்ற தலைப்பில் நரம்பியல் துறை நிபுணரான டாக்டர் கணபதி ஆய்வுக்கட்டுரையில் விரிவாக காணலாம்)

உதாரணமாக விதி பற்றி கேள்வி எழுப்பும் பகுத்தறிவாளருடைய தந்தையை ஒருவன் கொன்றுவிட்டு “நான் சுயமாக செய்யவில்லை. என் மூளையில் தோன்றியது படிதான் செய்தேன். எனவே என்னை தண்டிக்காதீர்கள்” என்று கூற ினால் அவர் ஏற்கமாட்டார். அறிவியல் ஆராய்ச்சி கூறுவதையே கொலையாளி கூறினாலும், அதில் உண்மையிருந்தாலும் கொலையாளியை தண்டிக்காமல் இருப்பதில்லை.

உலகத்திலேயே முரண்பாட்டுடனே இத்தகைய விஷயத்தை ஏற்றுக் கொள்ளும் போது இஸ்லாம் கூறும் விதி நம்பிக்கையில் மனிதப் பார்வையில் முரண்பாடு போல் தோற்றமளித்தாலும் மறுமையில் இறைவன் அவற்றுக்கிடையில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை தெளிவுபடுத்துவான் என்று நம்புவதில் எந்த பிரச்சனையுமில்லை.

இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள வேறுபாடு?

விதி பற்றி மற்ற மதங்கள், கோட்பாடுகள் கூறுவது போன்ற இஸ்லாம் கூறவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என அனைத்தும் விதிப்படிதான். எனவே நீ செயல்படாதே உனக்கு விதிக்கப்பட்டது உன்னை வந்தடையும் என்று சிலர் கூறுகின்றனர்.ஆனால் இஸ்லாம் அவ்வாறு கூறாமல் விதியை நம்பவேண்டும் என்று சொல்வதோடு முயற்சியும் செய்யவேண்டும் என்றும் கூறுகிறது. மேலும் நடந்து முடிந்த செயல்களை விதியின்படி நடந்தது என்றும் வருங்காலத்தில் நடக்கப்போகும் செயல்களை விதி இல்லாதது போன்று நினைத்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

உதாரணமாக நமக்கு மிகப்பெரிய துன்பம் ஏற்பட்டால் அதை நினைத்து கவலைப்படாமல் அல்லாஹ் விதித்தது நடந்து விட்டது என்று விதியின் மேல் பலி போட்டுவிடவேண்டும். வருங்காலத்தில் நம்முடைய செயல்கள் விதிப்படி நடக்கும் என்று கூறி வேலைக்கு செல்லாலிருப்பது, வியாபாரம் செய்யாமலிருப்பது போன்று நாம் நடக்கக்கூடாது. மாறாக நம்மால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி(ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’ இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள்.

உடனே மக்கள், ‘அல்லாஹவின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள்.

பிறகு, எவர் ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சிவாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். கஞ்சத்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதிலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகின்றாரோ, அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கிவைப்போம்’ எனும் (அல்குர்ஆன்: 92:5-10) ➚ இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 4945).

இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சொர்கத்தையோ நரகத்தையோ அல்லாஹ் நமக்கு நாடிவிட்டான் என்று நினைத்த செயலாற்றாமல் விட்டு விடக்கூடாது. மாறாக நல்லறங்களை செய்தால் சொர்க்கத்திற்குரிய வழி இலேசாக்கப்படும் என்றும் தீயவைகளை செய்தால் நரகத்திற்குரிய வழிகாட்டப்படும் என்றும் விளக்கமளித்து விதியை நினைத்து முடங்கக்கூடாது என விளக்குகிறார்கள்.

விதியின் மீது பழிப்போட்டு நம்முடைய அன்றாட செயல்களை செய்யாமல் இருக்கக்கூடாது. நம்மால் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டு அதற்கு பிறகு இழப்புகள் ஏற்பட்டால் அப்போதுதான் விதியின் மேல் பழி போடவேண்டும்.

விதியை நம்புவதால் கிடைக்கும் நன்மைகள்

இவ்வாறு நம்புவதன் மூலம் மிகப்பெரிய நன்மையை அடைகிறோம். அதை அல்லாஹ் கூறுகிறான்.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 57:23) ➚.)

ஏதேனும் கஷ்டங்கள் அல்லது இழப்புகள் ஏற்படும்போது விதிப்படிதான் இது நடந்தது. இது எப்படியும் நடந்துதான் தீரும் என்று நினைக்கும் போது நாம் கவலை கொள்ளத்தேவையில்லை. மேலும் ஏதேனும் மகிழச்சியான நிகழ்வுகள் நடந்தால் அதுவும் விதிப்படிதான் நடந்தது. நம்முடைய திறமையால் அல்ல என்று நினைக்க வேண்டும். இக்கருத்தைதான் இவ்வசனம் நமக்கு போதிக்கின்றது.

உதாரணமாக பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்வுகளில் சரியான மதிப்பெண்கள் கிடைக்காவிட்டாலோ அல்லது தோல்வியடைந்து விட்டாலோ அதை நினைத்து வருந்துகிறார்கள். இரவெல்லாம் கண் விழித்து படித்தேன். மிகவும் சிரமப்பட்டேன் ஆனால் தோல்வியடைந்துவிட்டேனே என்று தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மாறாக தற்போது ஏற்பட்டிருக்கும் தோல்வி என்பது விதியின்படிதான் நடந்தது. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் இதுதான் நடக்கும் என்று நினைத்து விதியின் மேல் பழிபோட்டு விட்டால் மனதிற்கு ஆறுதலாக அமைந ்துவிடும். எனவே இஸ்லாம் கூறும் இத்தகைய விதி நம்பிக்கையின் மூலம் கஷ்டங்களை மறந்துவிட்டு மனிதர்கள் இயல்பாக, மன பாரத்தை இறக்கி இலகுவாக செயல்படமுடியும்.

உண்மைப்படுத்தும் உலக ஆய்வுகள்

இஸ்லாம் கூறுவதை உண்மைப்படுத்தும் வகையில் நம் அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஆய்வு அமைந்துள்ளது.

கேரள மாநிலத்தில் படித்தவர்கள் அதிகமாக இருந்தாலும் தற்கொலை அங்குதான் அதிகமாக நடக்கிறது. இதனால் சில வருடங்களுக்கு முன்னால் கேரள அரசாங்கம் மத ரீதியாக தற்கொலை எண்ணிக்கையை பற்றி ஆய்வு நடத்தியது. இந்து, கிறுத்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரிடத்திலும் தற்கொலை உள்ளது. ஆனால் முஸ்லிம்களிடம் மட்டும் மிகக்குறைவாக உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் கூறுகையில் “முஸ்லிம்களுடைய மத நம்பிக்கைதான் அவர்களை தற்கொலையை விட்டு தடுக்கிறது” என கூறியது.

இவர்களது கூற்று நபிகள் நாயகத்தின் பொன்மொழியைத்தான் நினைவுப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இந்தப் பாக்கியமானது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5726)