14) யாஸீன் விளக்கவுரை-14

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

76வது வசனம்

76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.

(அல்குர்ஆன்: 36:76)

நபியவர்கள் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து கூறிய போது அவர்கள் அதை நம்ப மறுத்தது நபியவர்களுக்கு கவலையளித்தது.

மேலும் நபியவர்களையும் விமர்சனம் செய்ததும் கவலையளித்தது. இதிலிருந்து அவர்களை ஆறுதல் படுத்துவதற்காகதான் “(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்.” என்று அல்லாஹ் கூறுகிறான்.

மற்ற சில வசனங்களிலும் இவ்வாறு ஆறுதல் கூறுகிறான்.

(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்! கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவன் கேட்பவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 10:65)

மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிலர் மனதளவில் இஸ்லாத்தை ஏற்காமலேயே வெளியில் நடித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு நடிப்பதால் மக்களுக்கு தெரியாவிட்டாலும் அல்லாஹ் அறிவான். இவ்வாறு நடிப்பவர்களை எச்சரிப்பதற்காக “அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.” என்று கூறுகிறான்.

77வது வசனம்

77. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.

(அல்குர்ஆன்: 36:77)

மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டானா?

மனித படைப்பை பற்றி இவ்வசனம் பேசுகிறது. விந்து துளியிலிருந்து மனிதனை படைத்ததாக கூறுகிறான். மற்ற சில வசனங்கள் இதை விளக்குகிறது.

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 76:2)

யாசீன் அத்தியாயத்தில் விந்துத் துளி என்று மட்டும் உள்ளது. 76 வது அத்தியாயத்தில் கலப்பு விந்துத்துளி என்று கூடுதலாக உள்ளது. இதன் மூலம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பே குர்ஆன் அறிவியல் பூர்வமாக பேசுவதை அறியலாம்.

முஸ்லிமல்லாதவர்கள் இதை படிக்கும் போது ஆச்சரியப்படுவார்கள். ஏனெனில் விந்துத் துளி என்று மட்டும் கூறாமல் கலப்பு விந்துத் துளி என்று கூறுவதில் அறிவியல் பொதிந்துள்ளது.

கருவில் உயிர் உருவாவதற்கு ஆணுடைய விந்துத் துளி மட்டும் போதாது. பெண்ணுடைய சினைமுட்டையும் வேண்டும். இரண்டும் கலக்கும் போதுதான் கரு உண்டாகும் என்று அறிவியல் கூறுகிறது. இதை குறிப்பதற்கே கலப்பு விந்துத் துளி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலர் மேற்கண்ட கருத்தை குறைகூறுகின்றனர். ஒரு வசனத்தில் களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தோம் என்றும் மற்றொரு வசனத்தில் விந்துத்துளியிலிருந்து என்றும் மற்றொரு வசனத்தில் கலப்பு விந்துத்துளியிலிருந்து என்றும் முரண்பட்டு அல்லாஹ் பேசுகிறான் என்று கூறுகின்றனர். இது முரண்பாடல்ல. வெவ்வேறு முறைகளில் கூறப்பட்ட தகவலாகும்.

உதாரணமாக நாம் சாப்பிடும் இடியாப்பத்தை பற்றி கூறும்போது நெல் மணியிலிருந்து வந்தது என்றும் அரிசியிலிருந்து வந்தது என்றும் அரிசி மாவிலிருந்து வந்தது என்றும் பல வகைகளில் கூறுவோம். இது அனைத்தும் முரண்பாடல்ல. வெவ்வேறு தகவல்கள்தான். எனினும் மூலக்கூறு ஒன்றுதான். இது போன்றே இவ்வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டான் என்ற டார்வினிஸ்ட்களின் தத்துவத்திற்கு இவ்வசனம் மறுப்பாக அமைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் டார்வின் என்பவர் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளான். எனவே மனிதனின் துவக்கம் குரங்குதான் என்று கூறினார். இது தவறாகும். வெற்று அனுமானமாகும்.

ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய், தந்தையிலிருந்துதான் மனிதர்கள் தோன்றினர் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதிலிருந்து டார்வினின் கற்பனையான தத்துவம் தவறு என்பதை அறியலாம்.

78, 79, 80, 81 வது வசனங்கள்

78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

79. “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!

80. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.

81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 36:78-81)

மரணத்திற்கு பிறகு மீண்டும் எழுப்புவதை நம்பாதவர்கள் கேட்ட கேள்வியை 78 வது வசனத்தில் அல்லாஹ் கூறிவிட்டு, 79 வது வசனத்தில் அதற்கு மறுப்பை தெரிவிக்கிறான். முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைப்பது எளிது என்று விளக்குகிறான்.

மேலும் இதற்கு உதாரணமாக 80 வது வசனத்தில் பச்சை மரத்திலிருந்து நெருப்பு மூட்டுவதை கூறுகிறான். ஏனெனில் பச்சை மரத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். பொதுவாக நீர் சத்துள்ள பொருட்களில் நெருப்பு பற்றாது. இந்த பொது விதிக்கு மாற்றமாக பச்சை மரத்தில் மட்டும் பற்றிக் கொள்ளும். மழை நேரத்தில் மின்னல் தாக்கி பச்சை மரங்கள் தீப்பற்றுகிறது. இத்தகைய இயற்கைக்கு மாற்றமான காரியத்தை செய்யும் எனக்கு இறந்த பிறகு மனிதனை உயிர்பிப்பது எளிதுதான் என உதாரணத்துடன் அல்லாஹ் நிரூபிக்கிறான்.

மேலும் 80 வது வசனத்தில் “அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.” என்று கூறுகிறான். இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளது. அனைத்து பொருட்களுக்கும் மனிதனுடைய முதன்மையான கண்டுபிடிப்பாக நெருப்பு உள்ளது.

நாம் சாப்பிடும் உணவுகள் பல நெருப்பின்றி உருவாகாது. மிகவும் வீசக்கூடிய மீன் நெருப்பில் சமைத்தவுடன் மனம் கமழுகிறது. உணவு மட்டுமின்றி பல தேவைகளுக்காக நெருப்பு பயன்படுகிறது. இதை குறிப்பதற்குதான் இவ்வசனத்தில் நெருப்பு நினைவூட்டப்படுகிறது.

81 வது வசனம்

81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப்பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.

இறந்த பிறகு உயிர்பிப்பதை ஏற்காதவர்களுக்கு இவ்வசனத்தில் மறுப்பு உள்ளது. வானம் பூமியுடன் ஒப்பிடும் போது மனிதன் மிகவும் அற்பமான படைப்பினமாவான்.

வானம், பூமி பிரம்மாண்டமானதாகும். பிரம்மாண்டத்தை படைத்தவனுக்கு அற்பமானதை படைப்ப்பது மிகமிக எளிதுதான் என யாரும் மறுக்கமுடியாத வகையில் அறிவுப்பூர்வமாக இவ்வசனத்தின் மூலம் தெளிவுப்படுத்துகிறான்.

82 வது வசனம்

82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது “ஆகு’ என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.

(அல்குர்ஆன்: 36:82)

எந்த மூலக்கூறுமின்றி “ஆகு” என்ற வார்த்தையை மட்டும் கொண்டு பொருளை படைப்பது அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் சாத்தியமானதல்ல. மனிதன் எத்தகைய அறிவியல் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூலக்கூறின்றி ஒரு பொருளை உருவாக்க இயலாது. இதையே இவ்வசனம் குறிக்கிறது.

இவ்வாறு எந்த மூலக்கூறுமின்றி பொருளை படைப்பதும் அல்லாஹ்வின் வல்லமையாகும். மேலும் “ஆகு” என்றவுடன் ஆக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டும் உள்ளதாகும். சிலர் மனிதர்களுக்கும் இந்த ஆற்றல் உண்டு என்று நினைக்கின்றனர்.

உதாரணமாக சூனியக்காரன் இது போன்று கட்டளையின் மூலம் அவன் விரும்பியதை செய்வான் என்று நம்புகின்றனர். இது தவறாகும். இவ்வாறு நம்புதல் கூடாது.

“பெற்றோரை நோவினை செய்பவனும் சூனியத்தை உண்மையென்று நம்புபவனும் நிரந்தரமாக மது குடிப்பவனும் விதியை பொய்யென கருதுபவனும் சொர்க்கம் செல்லமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்: 26212)

எனவே ஆகு என்ற கட்டளை மூலம் செயல்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் உள்ளது என்று நம்பினால் சூனியம் போன்ற பல தவறான நம்பிக்கைகளிலிருந்து நாம் தவிர்ந்து கொள்ளலாம்.

வானம் பூமியை படைக்க ஆறு நாட்கள் ஏன்?

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(அல்குர்ஆன்: 50:38)

“ஆகு” என்ற ஒரு கட்டளையின் மூலம் அனைத்தையும் படைக்க சக்தி பெற்ற இறைவன் வானம் பூமியை படைப்பதற்கு ஆறு நாட்களை ஏன் எடுத்து கொள்ளவேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் சில தெளிவை பெற்றுக் கொள்ளவேண்டும்.

“ஆகு” என்பதன் மூலம் உருவாக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு உள்ளதால் அனைத்தையும் அதே வழியில்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில்லை. வேறு வழிகளிலும் செய்யலாம்.

உதாரணமாக விமானத்தில் செல்வதற்கு சக்தி பெற்ற ஒருவர் பேருந்தில் செல்வதை அவருடைய இயலாமையாக கருதமாட்டோம். மாறாக அவருடைய விருப்பத்தின்படி செல்கிறார் என்றே கருதுவோம்.

அது போன்றே உடனடியாக படைப்பதற்கு ஆற்றலிருந்தும் தன் விருப்பப்படியே ஆறு நாட்களை அல்லாஹ் எடுத்துக்கொண்டான் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக களைப்பின்றி பிரம்மாண்டமான பொருட்களை உருவாக்க வேலை செய்வது எந்த மனிதனுக்கு இயலாது. எனினும் அல்லாஹ்வுக்கு இயன்றுள்ளது. இதை 50 வது அத்தியாயம் 38 வது வசனத்தின் இறுதியில் “நமக்கு எந்த களைப்பும் ஏற்படவில்லை.” என்றும் கூறுவதிலிருந்து அறியலாம்.

83 வது வசனம்

83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன்: 36:83)

இறுதியாக மறுமையை பற்றிய சிந்தனை

இவ்வசனத்தின் துவக்கத்தில் தன்னை தூயவன் என்று அல்லாஹ் புகழுகிறான். பிறகு “ அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” என்று கூறி மறுமையை நினைவூட்டுகிறான்.

உலகில் எத்தகைய சுக போகத்தோடு வாழ்ந்தாலும் இறுதியில் அல்லாஹ்விடம் திரும்பி விடுவோம் என்பதை நாம் நினைவு கூறவேண்டும். மறுமை வாழ்வுக்காக நாம் நன்மைகளை தயாரித்து வைத்துள்ளோமா? என்று சிந்திக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “மறுமை நாள் எப்போது வரும்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக என்ன முன் முயற்சி செய்துள்ளாய்?” என்று கேட்டார்கள். அவர், “அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ தானதர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.

(புகாரி: 6171)

மறுமை நாளை பற்றி கேட்கும்போது அதற்கு என்ன தயாரித்துள்ளாய்” என்றுதான் முதலில் நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். எனவே மறுமைக்கான தயாரிப்புகளை செய்துகொண்டு, நபி (ஸல்) அவர்களையும் நேசித்து அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக.!