12) யாஸீன் விளக்கவுரை-12

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

58 வது வசனம்

58. ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்று!.

(அல்குர் ஆன் : 36 : 58.)

இவ்வசனத்தின் துவக்கத்தில் கூறப்படும் ஸலாம் என்பது சொர்க்கவாசிகளுக்கு கூறப்படும் வாழ்த்தாகும். இதை பல வசனங்கள் விளக்குகின்றது.

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

(அல்குர் ஆன் : 33 : 44.)

அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள். ஸலாம் ஸலாம் என்ற சொல்லைத் தவிர.

(அல்குர்ஆன்: 56:25),26) ➚.)

லைாம் கூறுவதின் வகைகள்

ஸலாம் கூறுவதில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற ஒரு வாசகம் மட்டும்தான் உள்ளது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பல வாசகங்கள் உண்டு.

லைாம்

“ஸலாம்” என்ற வார்த்தையை மட்டும் கூறுவது கூடும் என்பதை மேற்படி வசனம் கற்றுத்தருகின்றது. பின்வரும் வசனமும் அதை உறுதி செய்கிறது.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார்.

(அல்குர் ஆன் : 11 : 69.)

இப்ராஹீம் நபியிடம் வந்த வானவர்கள் “ஸலாம்” என்று மட்டும் கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொண்டு இப்ராஹீம் நபியவர்களும் “ஸலாம்” என்று மட்டும் பதிலளிக்கிறார்கள். எனவே இவ்வாறு நாம் கூறுவதும் கூடும்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது “ஸலாம்’ எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:63) ➚.)

அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

(அல்குர்ஆன்: 43:89) ➚.)

நல்லடியார்கள் அறீவீனர்களை விரும்பாவிட்டாலும் அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். “எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’ எனவும் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 28:55) ➚.)

முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஸலாமுன் அலைக்க.

மேலும் “ஸலாமுன் அலைக்க” என்றும் கூறலாம்.

“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 19:47) ➚.)

இவ்வசனத்தின் அரபியில் “ஸலாமுன் அலைக்க” என்று உள்ளது. இதை கூறுவதும் கூடும்.

59 வது வசனம்

59. “குற்றவாளிகளே! இன்றைய தினம் பிரிந்து விடுங்கள்!” (என்று கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 36:59) ➚.)

மறுமையில் நல்லோரிலிருந்து தனித்து தெரியும் வகையில் குற்றவாளிகள் பிரிந்து நிற்குமாறு அவர்களுக்கு கூறப்படும். மற்ற சில வசனங்களும் இக்கருத்தை விளக்குகிறது.

அந்த நேரம் நிலை வரும் அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

(அல்குர்ஆன்: 30:14) ➚.)

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள்.

(அல்குர் ஆன் : 10 28,29.)

மறுமையில் குற்றவாளிகள் நல்லவர்களை விட்டும் பிரிந்து விடுவார்கள். அவர்கள் கடவுள் என்று நினைத்து வணங்கியவர்களும் அவர்களை கைவிட்டுவிடுவார்கள். இறுதியில் தனித்து விடப்படுவார்கள்.

60, 61 வது வசனம்

60, 61. “ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?”

(அல்குர்ஆன்: 36:60),61) ➚

இவ்வசனத்தில் கூறப்படும் உறுதிமொழியை முந்தைய சில வசனங்களில் நாம் விளக்கியுள்ளோம். முதல் மனிதராகிய ஆதம் நபியின் முதுகு தண்டில் நாம் இருந்தபோதே நம்மிடம் இந்த உறுதிமொழியை அல்லாஹ் எடுத்துவிட்டான்.

மேலும் இவ்வசனத்தின் துவக்கத்தில் “ஆதமுடைய மக்களே!” என்றழைப்பதின் மூலம் இவ்வுலக மக்களனைவரும் ஒருவரின் மக்கள்தான் என்பதை உணர முடிகிறது. இதன் மூலம் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது.

முஸ்லிமல்லாத பலர் தீண்டாமையை ஒழிப்பதற்கு பல வழிகளை கையாண்டார்கள். பேருந்துகளிலும் பொது சபைகளிலும் சாதி வேறுபாடின்றி ஒன்றாக அமரவேண்டும் என்று கூறினார்கள்.

மற்ற சிலர் “அனைவருக்கும் சிகப்பு நிற இரத்தம் ஓடுகிறது. எனவே நாம் சமமானவர்கள்” என்றும் மற்ற சிலர் “நாம் ஒரே மொழி பேசுவதால் சமமானவர்கள்” என்றும் கூறி சமத்துவத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். எனினும் இவ்வாறு கூறியதன் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. மக்களுடைய மனங்களிலிருந்து சாதி வேறுபாட்டை முழுவதுமாக அகற்ற முடியவில்லை.

ஆனால் இஸ்லாம் முஸ்லிம்களிடையே தீண்டாமையை அடியோடு அழித்துள்ளது. இதனால் முஸ்லிம்கள் சகோதரர்களாக திகழ்கிறார்கள். தங்கள் முன்னோர்கள் எந்த சாதியை சார்ந்தவர்கள் என்பதை கூட அறிந்திடாத அளவிற்கு சாதி பேதத்தை மறந்து சமத்துவமாக வாழ்கிறார்கள். தாழ்ந்த சாதியினர்களாக கருதப்படுவோர் தன் மீது உரசிவிடக்கூடாது என்று நினைக்கும் மக்களுக்கு மத்தியில் தொழுகையில் தனக்கு அருகில் நின்றவர் யார் என்பதையும் அறியாதளவிற்கு இனம் புரியாத சகோதரத்துவத்தை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் நாம் அனைவரும் ஆதமுடைய மக்களே என்ற குர்ஆன் ஏற்படுத்திய உணர்வே காரணமாகும். நாமனைவரும் ஒரு தாய் தந்தையின் மக்கள் என்பதை எப்போதும் நினைவில் வைக்குமளவு ஆதமுடைய மக்களே எனும் அல்லாஹ்வின் இத்தகைய அழைப்பு அமைந்திருக்கின்றது.

61 வது வசனம்

60,61. “ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?”

(அல்குர்ஆன்: 36:60),61) ➚

இவ்வசனத்தில் ஷைத்தானை வணங்காதீர்கள் என்று மனிதர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான். இதற்கு நேரடியாக ஷைத்தானை வணங்காதீர்கள் என்று பொருள் அல்ல. மாறாக ஷைத்தானுடைய தூண்டுதலால் ஏற்படுகின்ற இணைவைப்பு காரியங்களை செய்யாதீர்கள் என்பது பொருளாகும்.

எவரும் நேரடியாக ஷைத்தானை வணங்கமாட்டார். சிலை வணக்கம், தனிமனித வழிபாடு போன்ற காரியங்களை செய்வதன் மூலம் ஷைத்தானுக்கு கட்டுப்படுகிறார். இதுவே ஷைத்தானை வணங்குதல் என்ற வார்த்தையில் சொல்லப்படுகிறது. இதை விளக்கும் வகையில் குர்ஆனில் சில வசனங்கள் உள்ளன.

மனோ இச்சையை கடவுளாக்குதல்

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?

(அல்குர்ஆன்: 25:43) ➚.)

இவ்வசனத்தில் கூறுவது போன்று எவரும் மனோ இச்சையை கடவுளாக ஆக்கமாட்டார்கள்.

மாறாக அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காமல் தன் மனோ இச்சையின் பிரகாரம் செயல்படுவார்கள். மனதில் தோன்றியபடியே அனைத்து காரியங்களையும் செய்வார்கள், அல்லாஹ்விற்கு கட்டுபடுவதை விடுத்து இவ்வாறு மனோ இச்சைக்கு கட்டுப்படுவதால்தான் (அல்லாஹ்விற்கு பகரமாக) அதை கடவுளாக்காதீர்கள் என்று கூறப்படுகிறது. இது போன்றுதான் அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் ஷைத்தானுடைய தூண்டுதல்களுக்கு கட்டுப்படுவதால் ஷைத்தானை வணங்காதீர்கள் என்று கூறப்படுகிறது.

இப்ராஹீம் நபி தன் தந்தைக்கு செய்த உபதேசம்

யாசீன் அத்தியாயத்தின் 60வதுவசனம் போன்றே இப்ராஹீம் (அலை) அவர்களும் தன் தந்தைக்கு உபதேசம் செய்துள்ளார்கள்.

“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்.

(அல்குர்ஆன்: 19:44) ➚.)

இப்ராஹீம் நபியின் தந்தை நேரடியாக ஷைத்தானை வணங்கவில்லை. மாறாக ஷைத்தானுடைய தூண்டுதலால் சிலைகளைதான் வணங்கினார். இதையே ஷைத்தானை வணங்காதீர்கள் என்று கூறப்படுகிறது. இது போன்றே யாசீன் அத்தியாயத்தின் 60 வது வசனத்தையும் விளங்கவேண்டும்.

ஷைத்தான் பகிரங்க எதிரி

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 60 வது வசனத்தின் இறுதியில் ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க எதிரி என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு எதிரான செயல்களையே செய்து நம்மை நரகில் தள்ள ஷைத்தான் பாடுபடுகிறான். இதை பின்வரும் வசனங்கள் விவரிக்கின்றன.

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

(அல்குர் ஆன் : 35:6.)

இதற்காகவே ஷைத்தான் இறைவனிடம் அவகாசமும் கேட்டுள்ளான்.

“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

(அல்குர் ஆன் : 7:17.)

எனவேதான் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஏகத்துவம் மட்டும்தான் நேர்வழி.

யாசீன் அத்தியாயத்தின் 61 வது வசனத்தில் என்னையே வணங்குங்கள் என்று கூறிவிட்டு “அதுவே நேரான வழி” என்று கூறுகிறான். இதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவது மட்டுமே நேர்வழி என்பதை அறியலாம்.

62 வது வசனம்

62. உங்களில் பெரும் கூட்டத்தினரை அவன் வழி கெடுத்து விட்டான். நீங்கள் விளங்கியிருக்கக் கூடாதா?

(அல்(அல்குர்ஆன்: 36:62) ➚.)

நிதர்சனமான உண்மையை இவ்வசனம் கூறுகிறது. நமக்கு முந்தைய சமுதாயத்தவர்களை பல வழிகளில் ஷைத்தான் வழிகெடுத்துள்ளான். அதனால் அவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். அதை நினைத்து நாம் நல்லுணர்வு பெறவேண்டும்.

63, 64 வது வசனம்

63. இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம்.

64. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!” என்று கூறப்படும்.

(அல்குர்ஆன்: 36:63),64) ➚

நரகத்தை பற்றிய எச்சரிக்கை

63 வது வசனத்தில் நரகத்தை பற்றி நினைவூட்டுகிறான்.

சொர்க்கத்தின் இன்பங்களை இதற்கு முந்தைய சில வசனங்களில் கூறிவிட்டு மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் நரகத்தை பற்றியும் எச்சரிக்கை செய்கிறான்.

நரக நெருப்பு மிகவும் கடுமையானது. மறுமையில் இறைநிராகரிப்பாளர்களை அதில் வேதனை செய்வான்.

அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 104:4),5) ➚,6,7,8,9.)

நரக நெருப்பின் இத்தகைய கடுமையை கண்டு குற்றவாளி அதிலிருந்து தப்பிக்க விரும்புவான். அதற்காக தன் மனைவி, பிள்ளை என உலகில் உள்ள அனைவரையும் ஈடாக கொடுக்க முன்வருவான். எனினும் அவனால் தப்பிக்க முடியாது.

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.

(அல்குர்ஆன்: 70:11) ➚முதல் 18 வரை.)

மேலும் நரகிலுள்ளவர்களுக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக கொதிக்கும் நீர் வழங்கப்படும். அது அவர்களுடைய குடல்களை துண்டாக்கிவிடும்.

(இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?

(அல்குர்ஆன்: 47:15) ➚.)

மேலும் ஜக்கூம் எனும் கொதிக்கும் செம்பை போன்ற மரத்தையும் உண்ண கொடுக்கப்படும்.

ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும். உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.

(அல்குர்ஆன்: 44:43),44) ➚,45,46 .)

மேலும் கொதிக்கும் செம்பும் குடிப்பதற்கு வழங்கப்படும். அதை அருகில் கொண்டு செல்லும் போதே அவர்களுடைய முகம் கருகிவிடும்.

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 18:29) ➚.)

நரகத்தில் கொடுக்கப்படும் குறைந்தபட்ச தண்டனையை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதுவே இந்த உலகத்தில் தாங்க இயலாத பெரும் தண்டனையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6562)

சொர்க்கத்து இன்பங்களை நாம் நினைத்தால் நல்லறம் செய்வதில் ஆர்வம் ஏற்படும். மேலும் நரகத்து வேதனைகளை நினைத்தால் தீமை செய்வதிலிருந்து அச்சம் ஏற்படும்.

இதனால் நபி (ஸல்) அவர்கள் அதிகமான நேரங்களில் நபித்தோழர்களுக்கு மறுமையை பற்றி நினைவூட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன்.

அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?”என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம்.(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5305).

தர்மம் செய்து நரகை விட்டு தப்பித்து கொள்வோம்!.

இத்தகைய கொடூரமான நரகிலிருந்து எப்படியாவது நாம் தப்பிக்க முயற்சிக்க வேண்டும்.

சிறிதளவு தர்மம் செய்தாவது நரகைவிட்டு தப்பித்து கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு (மீண்டும்) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன் சொல்லைக்கொண்டேனும் (தப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

(புகாரி: 6563)

இது மட்டுமின்றி குர்ஆன் ஓதுதல் போன்ற பல நல்லறங்களை செய்து நன்மையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.