10) யாஸீன் விளக்கவுரை-10

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

42 வது வசனம்

41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.

(அல்குர்ஆன்: 36:41), 42) ➚.)

ஒட்டகமும் ஓர் அத்தாட்சி

42 வது வசனத்தில் அவர்கள் ஏறிச்செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.” என்று உள்ளது. இவ்வசனம் ஒட்டகம் பற்றி குறிப்பிடுகிறது. ஏனெனில் அது கப்பல் போன்றதாகும். ஒட்டகத்தை ஆய்வு செய்யும் போது இதை அறிய முடிகிறது.

கடல் என்பது மிகப்பெரும் பரப்பாகும். அதை நீந்தி கடப்பது சாத்தியமற்றது. எனவேதான் கப்பலின் துணையோடு அதை கடக்கிறோம். பாலைவனமும் கடல் போன்று நீண்ட மண் பரப்பாகும். நடந்து சென்று முழுவதுமாக கடப்பது மிகவும் சிரமமாகும். எனவே தான் ஒட்டகத்தின் துணையோடு அதை கடக்கிறோம். இவ்விரண்டிற்கும் இது போன்ற ஒற்றுமைகள் இருப்பதால்தான் அதை போன்றது” என அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் ஒட்டகத்தை பற்றி சிந்திக்குமாறும் பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

(அல்குர்ஆன்: 88:17) ➚.)

பாலைவனம் போன்ற வெப்பம் மிகுந்த பகுதியில் பயணம் செய்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றி உடல் விரைவாக சோர்ந்துவிடும். இதனால் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாது. ஆனால் ஒட்டகத்திற்கு இந்த நிலையில்லை. ஒரே நேரத்தில் நூறு லிட்டர் தண்ணீரை உடலில் தேக்கி வைக்குமளவிற்கு அதன் உடலில் நீர்ப்பை உள்ளது. அதில் நீரை தேக்கிவைத்து சிறிது சிறிதாக தன் உடலின் தேவைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அல்லாஹ் அதை படைத்துள்ளான்.

ஆனால் இது மனிதர்களுக்கு இயலாது. உதாரணமாக நோன்பு பிடித்திருக்கும் போது மாலை ஐந்து மணியை கடந்து விட்டாலே மிகவும் சோர்வடைகிறோம். அதனால் அதிகமான தண்ணீரை நோன்பு திறக்கும் போது குடிக்க முயற்சிப்போம். எனினும் சிறிதளவைத் தவிர குடிக்க முடியாது. இது ஒட்டகத்திற்கும் நமக்கும் உள்ள வேறுபாடாகும்.

மேலும் கடினமான வேலைகள் செய்யும் போது அதிக நேரம் உடலின் தசைகள் இயங்குவதால் நீர் சத்து விரைவாக குறைந்து விடும். எனவே மீண்டும் தேவையான நீரை குடித்தால் மட்டும்தான் இயங்க முடியும். உதாரணமாக ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஒருவர் வேலை பார்த்தால் சோர்வடைந்து தண்ணீரை தேடுவது போன்று. எனினும் ஒட்டகம் நூறு லிட்டர் தண்ணீரை தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு உடலில் இறைப்பை போன்றவற்றிற்கு நீர்ச்சத்து குறையும் போதெல்லாம் தண்ணீரை தசைகளுக்கு எடுத்து கொள்ளும். இதை அறிவியலும் நிரூபித்துள்ளது.

ஒட்டகத்தின் திமில்களில் கொழுப்பு உள்ளது. அந்த கொழுப்பில் ஹைட்ரஜன் உள்ளது. ஒட்டகம் சுவாசிக்கும் போது உள் இழுக்கின்ற ஆக்ஸிஜனும் திமிலில் உள்ள ஹைட்ரஜனும் சேரும் போது அதன் திமிலில் உள்ள கொழுப்பு, நீராக மாறி தசைகளுக்கு செல்கிறது என அறிவியல் ஆய்வு கூறுகிறது.

மேலும் பாலைவனத்தில் நடப்பதற்கு நம்முடைய கால்கள் ஏற்றதாக இல்லை. மணல் பரப்பில் புதைந்து கொள்ளும். ஆனால் ஒட்டகத்திற்கு அதன் கால்கள் ஏற்றதாக உள்ளது. அதன் கால் பாதங்கள் ரப்பர் போன்று உள்ளதால் இலகுவாக காலை எடுத்து வைத்து செல்ல முடியும். பாலைவனத்தில்

உடலின் நீர் சத்தை தக்க வைப்பது, காலை இலகுவாக எடுத்து வைப்பது போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்ட படைப்பினமாக இருப்பதால்தான் இதை பற்றி சிந்திக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

கடலில் செல்வதற்கென்றே கப்பல் உருவாக்கப் பட்டிருப்பது போன்றே ஒட்டகமும் பாலைவனத்தில் செல்வதற்கென்றே படைக்கப் பட்டுள்ளது போன்று உள்ளது. இதனால் “பாலைவன கப்பல்” என்று ஒட்டகத்திற்கு அழைக்கப்படுகிறது. எனவேதான் கப்பலோடு சேர்த்து ஒட்டகத்தை படைத்த்தையும் தனது சான்று என யாசீன் அத்தியாயத்தின் 42வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

43 வது வசனம்

43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காக குரல் எழுப்புவோர் எவரும் இருக்க
மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.

(அல்(அல்குர்ஆன்: 36:43) ➚.)

இது அல்லாஹ்வின் தண்டனை பற்றி கூறும் வசனமாகும். இறைவனின் தண்டனை குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளது.

44 வது வசனம்

44. நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும் தவிர (மூழ்கடிக்கவில்லை).

(அல்(அல்குர்ஆன்: 36:44) ➚.)

அல்லாஹ்வின் அருளிருந்தால் அழிவில்லை

முந்தைய வசனத்தில் அல்லாஹ் ஒரு கூட்டத்தை அழிக்க நாடிவிட்டால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறப்பட்டிருந்தது. எனினும் இரண்டு காரணங்களுக்காக மட்டும் அழிவிலிருந்து தப்பிக்க இயலும்.

ஒன்று அல்லாஹ் அருள் புரிந்து விட்டால் தப்பிக்க இயலும்.
மற்றொன்று குறிப்பிட்ட தவணை வரை தப்பிக்க இயலும் என 44 வது வசனத்தில் விளக்குகிறான்.
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணை வரைதான் வாழமுடியும் என மற்றொரு வசனம் கூறுகிறது.

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 10:49) ➚.)

தவணை வராவிட்டால் மரணம் இல்லை

ஒரு சமுதாயமாக இருந்தாலும் தனி மனிதராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையை அல்லாஹ் நிர்ணயித்திருப்பான். அந்த காலக்கெடு வரையிலும் அவர்கள் உயிர்வாழ்வார்கள். இறைவன் நிர்ணயித்த அக்காலக்கெடு வருமுன் பல தீங்குகள் நமக்கு ஏற்பட்டாலும் அதன் மூலம் நமக்கு மரணம் ஏற்படாது.

நடைமுறை வாழ்வில் இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

சில வருடங்களுக்கு முன் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள பெரும் கட்டிடம் இடிந்து விழுந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மரணித்தனர். இந்த விபத்து நடந்து 11 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒருவர் உயிருடன் வருகிறார்.

“நீங்கள் எவ்வாறு உயிருடன் இருந்தீர்கள்? என செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, “இத்தனை நாட்கள் எந்த உணவும் கிடைக்காமல் என்னுடைய சிறுநீரை குடித்து கொண்டுதான் நான் உயிருடன் இருந்தேன்” என்று பதிலளித்தார்.

இன்னொரு சம்பவத்தை பாருங்கள்

பதினோறு மாத குழந்தை மீன் தொட்டிக்கு அருகில் விளையாடி கொண்டிருக்கும் போது உயிருடன் உள்ள ஒரு மீனை எடுத்து சாப்பிட்டுவிடுகிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பிறகு மயக்கமடைந்தது. இதை பார்த்த மருத்துவர்கள் குழந்தை கோமா நிலையை அடைந்துவிட்டது.

எங்களால் காப்பாற்ற இயலாது என்று முதலில் கூறினர். பிறகு ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தையின் வயிற்றில் மீன் உயிரோடு இருப்பதை காண முடிந்தது. பிறகு லேசர் சிகிச்சையால் வயிற்றிலிருந்த படியே மீனை இரண்டு துண்டாக பிளந்து வெளியில் எடுத்தனர். இதனால் அந்த குழந்தை நிம்மதியாக சுவாசித்தது.

இது போன்ற நிகழ்வுகள் மருத்தவ உலகத்தில் அதிசயமான ஒன்றாகும். நமக்கே கூட இத்தகைய அரிதான நிகழ்வு நடந்திருக்கும்.

ஓர் இடத்தில் நாம் நின்று விட்டு பிறகு அங்கிருந்து ஏதேனும் தேவைக்காக விலகிச்செல்வோம். தீடிரென மேலிருந்து ஒரு கல் முன்பு நாம் நின்ற இடத்தில் வந்து விழும். இந்நேரத்தில் அங்கு நின்றிருந்தால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்திருப்போம்.

இது போன்று நூலிழையில் உயிர்பிழைத்த பல சம்பவங்களை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம். இவையனைத்தும் எத்தகைய சோதனைகள் வந்தாலும் குறிப்பிட்ட தவணை வராத வரை அவனுக்கு மரணம் நிகழாது என்பதையே வெளிப்படுத்துகிறது.

தவணை வந்துவிட்டால் மரணம் உறுதி

அதே நேரம் இறைவன் நிர்ணயித்த குறிப்பிட்ட தவணை வந்துவிட்டால் மரணம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

நம் வாழ்வில் எத்தனையோ எதிர்பாராத மரணங்களை கேள்விப்பட்டிருப்போம். நேற்று வரை நம்முடன் பேசிக் கொண்டிருந்தவர் தீடிரென்று மரணமடைந்துவிடுகிறார். உடல் நலத்துடன் இருந்தவர் திடீரென்று இறந்துவிடுகிறார். குறிப்பிட்ட தவணை வந்துவிட்டால் யாராலும் தப்பிக்க இயலாது என்பதை இவையனைத்தும் விளக்குகிறது. இதையே 44 வது வசனம் கூறியது.

45 வது வசனம்

45. உங்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது (புறக்கணிக்கின்றனர்).

(அல்குர் ஆன் : 36:45.)

அனைத்து செயல்களையும் அல்லாஹ் அறிகிறான்

“முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்” என இவ்வசனத்தில் கூறப்படுவது அல்லாஹ்வின் கண்காணிப்பாகும். இதை பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகிறது.

அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.

(அல்குர்ஆன்: 2:255) ➚.)

அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளதை அவன் அறிகிறான். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

(அல்குர்ஆன்: 22:76) ➚.)

நமக்கு முன்னும் பின்னும் அல்லாஹ்வுடைய கண்காணிப்பு உள்ளது. அனைத்து நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற கருத்தும் இதில் அடங்கும். மேலும் இதற்கு முன்பு நாம் செய்த செயல்களையும், இனி செய்கின்ற செயல்களையும் அல்லாஹ் அறிவான் என்பதும் இதில் அடங்கும்.

இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.

(அல்குர் ஆன் : 41 : 25.)

ஷைத்தான்களை தோழர்களாக நியிமிக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் நல்லதாகவே கருதுவார்கள். இவ்வாறு அவர்களை கருதவைப்பதே ஷைத்தானின் தந்திரமாகும்.

இதனால் கடந்த காலத்தில் செய்யும் தீமையையும் வருங்காலத்தில் செய்யும் தீமையையும் அழகானதாக நினைத்து தீமையில் மூழ்கிவிடுவார்கள். இதைத் தவிர்த்து கொள்வதற்காகதான் முன்னும் பின்னும் உள்ளதை அல்லாஹ் அறிகிறான் என எச்சரிக்கும் வகையில் 45 வது வசனத்தில் கூறப்படுகிறது.

46 வது வசனம்

46. அவர்களின் இறைவனது சான்றுகளில் எந்தச் சான்று அவர்களிடம் வந்த போதும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.

(அல்(அல்குர்ஆன்: 36:46) ➚.)

சான்றுகளை நம்ப மறுத்தல் கூடாது

எந்த சான்றுகளுமின்றி இறைவனை நம்புவது சிலருக்கு சிரமமாக இருப்பதால் நம்பத்தகுந்த சில சான்றுகளை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்குகிறான். எனினும் சிலர் அதையும் நம்ப மறுக்கின்றனர். இதை மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.

உங்களை நம்புவதற்கு சான்றுகள் வேண்டுமென்று மக்கள் இறைத்தூதர்களிடம் கேட்கும் போது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அதை பெற்றுத் தருவார்கள். அந்த சான்றுகளை பார்த்த பிறகும் சில மக்கள் அதை நம்பியதில்லை.

நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன்: 27:13),14) ➚.)

அற்புதத்தை மனதளவில் நம்பியிருந்தாலும் ஆணவம் கொண்டிருந்ததால் வெளிப்படையில் அதை நம்ப மறுக்கின்றனர்.

மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் இறைவனின் சான்றுகளை காட்டினர்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் சந்திரனை பிளந்து காட்டினார்கள். அப்போதும் அம்மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

யுகமுடிவு நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. அவர்கள் சான்றைக் கண்டால் “இது தொடர்ந்து நடக்கும் சூனியம்” எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.

(0அல்குர் ஆன் : 54:1,2,3.)

இதுவே அதிகமான இறைமறுப்பாளர்களின் இயல்பாகும் மூஸா நபி சமுதாயமும் இவ்வாறே செய்தது.

மூஸா நபி சமுதாயம் நம்ப மறுத்தது

தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை நீக்கிவிட்டால் உங்களை நம்புகிறோம் என்று மூஸா நபியிடம் அவரது சமுதாயம் கேட்டுக் கொண்டது. அல்லாஹ்வின் நாட்டத்தால் அவர்கள் அதை குணப்படுத்திய பிறகு நம்ப மறுத்துவிட்டனர்.

அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் “மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்” என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.

(அல்குர்ஆன்: 7:134),135) ➚.)

இவர்கள் அல்லாத இதர இணைவைப்பாளர்களும் இறைவனின் சான்றை ஏதேனும் விதத்தில் பார்த்தும் அதை புறக்கணித்துள்ளனர்.

உதவி செய்யப்பட்ட பின் இணைவைத்தல்

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.

(அல்குர் ஆன் : 29:65.)

கடுமையான சிரமத்தின் போது முறையாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு, தப்பித்த பிறகு அல்லாஹ்வை மறந்துவிடுகின்றனர். அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றனர்.

இவ்வாறு அல்லாஹ்வின் சான்றுகளை நினைவு கூறாமலிருப்பது தவறாகும்.

வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர்.

(அல்குர்ஆன்: 12:105) ➚.)

அன்றாடம் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக பல சான்றுகளை பூமியில் அல்லாஹ் வைத்துள்ளான். அவற்றை கவனிக்காமலிருப்பது தவறு என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது. எனவே அல்லாஹ்வின் சான்றுகளை முறையாக நம்பவேண்டும்.

47 வது வசனம்

47. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 36:47) ➚.)

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்!

மேற்கண்ட வசனத்தில் பல கருத்துகள் உள்ளன.

நம்மிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தும் அல்லாஹ் வழங்கியதுதான் என்பதை உணரவேண்டும். எனவேதான் உங்கள் செல்வத்திலிருந்து செலவழியுங்கள் என்று கூறாமல் “அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்!” என்று கூறுகிறான். இதை பின்வரும் வசனமும் உறுதி செய்கிறது.

அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்!

(அல்குர்ஆன்: 24:33) ➚.)

நபி (ஸல்) அவர்களும் ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறி இக்கருத்தை வலுப்படுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்’ என்று கூறினார்.

உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்… (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)’ என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.

அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்’ என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான்.

அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார்.

தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்’ என்று கூறினார்.

அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)’ என்றார். உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்’ என்று பதிலளித்தான்.

உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார்.

அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்’ என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்’ என்று கூறினார்.

உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்’ என்று கூறினார். இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.

ஸஹீஹ்(புகாரி: 3464).

இச்சம்பவத்தில் கூறப்படும் கண்பார்வையிழந்தவர் தம்மிடம் உள்ள பொருளாதாரத்தை அல்லாஹ் வழங்கியது தான் என்ற உணர்வுடன் நடந்துள்ளார். அந்த உணர்வே அவருக்கு தர்மம் செய்யும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நல்லுணர்வை நாம் பெறவேண்டும் என்பதற்காகவே “அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்!” என்று வசனத்தில் கூறப்படுகிறது.

உபதேசத்தை செவியேற்போம்!

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 47வது வசனத்தில் மேற்கண்ட கருத்தை கூறிய போது இறைமறுப்பாளர்கள் “(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழி கேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று கூறி தர்மம் வழங்க மறுத்தனர் என்று குறிப்பிடுகிறது.

இத்தகைய நல்ல கருத்துக்கள் தங்களிடம் கூறப்படும் போது அல்லாஹ் நாடியிருந்தால் என்று கூறி அலசியப்படுத்துவதே இறைமறுப்பாளர்களின் குணமாக இருந்தது.

“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்’ என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். “உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள் ! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

(அல்குர்ஆன்: 6:148) ➚.)

தங்களுக்கு துன்பம் வரும்போது இது அல்லாஹ்வின் விதி என்று பொருந்திக் கொள்ளாமல் நல்வழியை பிரச்சாரம் செய்யும்போது மட்டும் “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் வந்திருப்போம்” என்று விதியை காரணம் கூறி கேட்க மறுக்கின்றனர். இது ஒரு வகையான ஷைத்தானின் தூண்டுதலே என்பதை புரிய வேண்டும்.

48, 49 வது வசனம்

48. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று அவர்கள் கேட்கின்றனர்.

49. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும்.

(அல்குர்ஆன்: 36:48),49) ➚.)

இறைத்தூதர்கள் மறுமைநாளை பற்றி மக்களிடம் எச்சரித்த போது இறைமறுப்பாளர்கள் அதை பரிகாசம் செய்யும் விதமாக “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று கேட்டனர். இதற்கு 49 வது வசனத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான். அது எதிர்பார்க்காத விதத்தில் ஏற்படும் பெரும் சப்தம் என்று கூறுகிறான். அது அவர்களை அழித்துவிடும் என்று எச்சரிக்கையும் செய்கிறான். இது போன்று பல நேரங்களில் அவர்கள் கேட்டுள்ளதாக குர்ஆன் கூறுகிறது.

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிகழும்?)” என்று கேட்கின்றனர்.

நரகத்திலிருந்து தமது முகங்களையும், முதுகுகளையும் அவர்கள் தடுக்க முடியாத, உதவி செய்யப்படாத – நேரத்தை (ஏக இறைவனை) மறுப்போர் அறிய வேண்டாமா?

மாறாக, அது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

(முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே, கேலி செய்தோரைச் சுற்றி வளைத்தது.

(அல்குர்ஆன்: 21:38),39) ➚,40,41.)

மறுமைநாள் எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் திடீரென்று அது அவர்களிடம் வரும்போது திகைத்து, அழிந்து விடுவார்கள். எந்த அவகாசமும் அவர்களுக்கு அளிக்கப்படாது என்று அல்லாஹ் பதிலளிக்கிறான்.

மேலும் மறுமைநாளை அவசரமாக தேடினாலும் அது அவர்களை அடைந்தே தீரும் என்று பின்வரும் வசனத்தில் பதிலளிக்கிறான்.

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று அவர்கள் கேட்கின்றனர்.

“நீங்கள் அவசரமாகத் தேடுபவற்றில் ஒரு பகுதி உங்களை வந்தடையும்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 27:71),72) ➚.)

மறுமைநாளை பற்றிய அறிவு யாரிடம் உள்ளது?

மேலும் மறுமைநாள் எப்போது நிகழும் என இறைமறுப்பாளர்கள் கேட்டபோது அது எந்த நாளில் நிகழும் என நபி (ஸல்) அவர்களும் அறியமாட்டார்கள். அல்லாஹ் மட்டும்தான் அறிவான் என்றும் அல்லாஹ் பதிலளிக்கிறான்.

அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 67:26) ➚.)

(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.

(அல்குர்ஆன்: 79:42),43) ➚,44,45.)

எனவே மறுமைநாள் எந்த தினத்தில் நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

மறுமைநாளின் அடையாளங்கள்

மறுமைநாளை யாரும் அறியாவிட்டாலும் அது அருகில்தான் உள்ளது என குர்ஆன் அறிவிக்கிறது.

அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.

(அத்தியாயம் : 70 : 6,7.)

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்று துல்லியமாக நமக்கு சொல்லப்படாவிட்டாலும் அந்நாள் நெருங்கி வருவதற்கான சிறிய மற்றும் பெரிய அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். சிறிய அடையாளங்களில் பல இன்றைய காலத்தில் நிகழ்ந்தும் விட்டது.

கடைவீதிகள் பெருகிவிடும்

‘கடைவீதிகள் பெருகும் வரை மறுமைநாள் நிகழாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்: 10306)

அக்கிரமக்காரர்களும் ஆடையணிந்து நிர்வாணியான பெண்களும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 4316).

கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை மக்கள் அங்கீகரிப்பதில்லை. எனினும் தற்போதைய காலத்தில் இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். இதுவும் மறுமைநாளின் சிறிய அடையாளங்கள் நிறைவேறிவிட்டதை உணர்த்துகிறது.

தான் மரணிக்கவேண்டுமென மனிதன் விரும்புவான்

மற்றொரு அடையாளத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, “அந்தோ! நான் இவரது இடத்தில் (கப்றுக்குள்) இருக்கக் கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை யுக முடிவு நாள் வராது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5572).

இந்த முன்னறிவிப்பு இன்றைக்கு மெய்யாகிவிட்டது. அதிகமான மக்கள் மரணத்தை தேடி தற்கொலை செய்து கொள்கிறார்கள். வாழ்வில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லை இன்ன பிற கஷ்டங்களை தாங்க இயலாமல் தான் மரணித்து விட்டால் தனக்கு நிம்மதியாக இருக்குமே என பலரும் விரும்புகின்றனர். இதுவும் மறுமைநாள் நெருங்குவதை மெய்ப்படுத்துகிறது.

இப்படி பல அடையாளங்களை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.