01) யாஸீன் விளக்கவுரை-1

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை

முன்னுரை

வருடந்தோறும் ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நல்லதொரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தில் தொடர் உரை நிகழ்த்தப்படுவது வழக்கம்.

கடந்த 2018 வருடம் ரமலான் உரையில் திருக்குர் ஆனின் 36வது அத்தியாயமாகிய யாஸீன் சூராவினுடை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அந்த தலைப்பில் தொடர் உரையாற்றுவதற்கான பொறுப்பு நிர்வாகத்தின் சார்பில் எனக்கு அளிக்கப்பட்டது.

எப்போதும் ரமலானில் ஆற்றப்படும் தொடர் உரைக்கான தலைப்பை தேர்வு செய்ய பல முறை ஆலோசிக்கப்படும் பல மாதங்களுக்கு முன்பே நிர்வாகிகளிடம் இதற்கான தலைப்புகள் கோரப்படும்

அவ்வாறு ஆலோசனையில் பெறப்படும் தலைப்புகளில் அப்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது என்று தெரிவு செய்யப்படும் தலைப்பே தொடர் உரைக்கான தலைப்பாக இறுதி செய்யப்படுவது வழக்கம். இம்முறை தலைப்பு தேர்வு செய்யப்படுவதின் பிண்ணனியில் திருக்குர் ஆன் மாநாடு என்ற எண்ணமே தலையாயிருந்தது.

திருக்குர் ஆனை முழு சமூகத்திற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஜனவரி 27, 2019 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர் ஆன் மாநில மாநாடு எனும் தலைப்பில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்துவதென அப்போதைய நிர்வாகத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மாநாட்டை மக்களிடையே பிரதானப்படுத்தும் விதமாக குர்ஆன் தொடர்புடைய தலைப்பு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருந்தது.

குர் ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை எடுத்துக் கொண்டு அதில் உள்ள வசனங்களுக்கான விளக்கவுரையை ரமலான் மாதம் முழுக்க மக்களுக்கு அளிப்போம் என்ற அடிப்படையிலேயே யாஸீன் அத்தியாயம் விளக்கவுரையாற்ற தேர்வு செய்யப்பட்டது.

இந்த அத்தியாயத்தில் மக்களுக்கு தேவையான பல அறிவுரைகளும் அடங்கியுள்ளது என்பது இதை தேர்வு செய்ய மற்றொரு முக்கிய காரணமாகும்.

அவ்வாறு ரமலானில் ஆற்றப்பட்ட யாஸீன் விளக்கவுரையை எழுத்து வடிவில் நூலாக்க விரும்பி எழுத்து நடைக்கு மாற்றித் தருமாறு எனது நண்பரும் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்றவருமான சுஜா அலீ எம்.ஐ.எஸ்.ஸி அவர்களிடம் கேட்டேன்.

அவரும் சிரமம் பாராது முழு பேச்சையும் நூல் வடிவத்திற்கேற்ப எழுத்து நடைக்கு மாற்றித்தந்தார். அவை சரிபார்க்கப்பட்டு, தேவையான மாற்றம் செய்து இறுதியில் நூல் வடிவமாக தங்கள் கைகளில் தவழ்ந்து
கொண்டிருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ்…

திருக்குர்ஆன் வசனங்களுக்கு எவ்வாறு விளக்கமளிக்கப்படுகின்றது என்ற புரிதலை மேம்படுத்திக் கொள்ள இந்நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இறைவன் நம் அனைவரது நல்ல நோக்கங்களுக்கு உரிய கூலியை தருவானாக..

அத்தியாயங்களின் பெயர்கள்

யாஸீன் அத்தியாயத்தின் வசனங்களுக்குரிய விளக்கத்தை பார்க்கும் முன் அத்தியாயங்களின் பெயர் தொடர்பான அடிப்படையை முதலில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனில் உள்ள அத்தியாயங்களுக்குரிய பெயர்கள் அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள்தான் வைத்தார்கள் என்று சிலர் நினைக்கின்றனர்.

குர்ஆனில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அத்தியாயங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சில அத்தியாயங்களுக்குதான் நபி(ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட அத்தியாயங்கள்.

1 சூரத்துல் ஃபாத்திஹா (முதலாவது அத்தியாயம்)

முதல் அத்தியாயமாகிய சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு நபி (ஸல்) அவர்கள்தான் பெயரிட்டார்கள் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருக்குர் ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 756)

இந்த அத்தியாயத்திற்கு மேலும் சில பெயர்களை நபி (ஸல்) அவர்கள் வைத்துள்ளார்கள். குர்ஆனின் தாய், மகத்துமான குர்ஆன் எனும் பெயரும் இந்த அத்தியாயத்திற்கு உண்டு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (“அல்ஃபாத்திஹா” அத்தியாயம் உம்முல் குர்ஆன்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும். என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ்(புகாரி: 4704)

இந்த அத்தியாயத்திற்கு ஸப்வுல் மஸானீ என்ற பெயரும் உண்டு என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். ஸப்வுல் மஸானீ என்றால் திரும்ப திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்று பொருளாகும். அதே போல அல்குர் ஆனுல் அளீம் (மகத்தான குர்ஆன்) என்ற பெயரும் உண்டு.

(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.

(அல்குர்ஆன்: 15:87) ➚.)

இது போன்று மற்ற சில அத்தியாயங்களுக்கும் நபி(ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளார்கள்.

2 அல் பகரா. (2 வது அத்தியாயம்)

குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமாகிய அல்பகராவிற்கும் நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரு (அல்குர்ஆன்: 02:285) ➚– 286) வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.

அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத்(ரலி

ஸஹீஹ்(புகாரி: 4008).

3 ஆலு இம்ரான். (3 வது அத்தியாயம்)

குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமாகிய ஆலு இம்ரானிற்கும் நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்.

“அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் வீணர்கள் செயலிழந்துபோவார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

ஸஹீஹ்(முஸ்லிம்: 1470).

மேற்கண்ட ஹதீஸில் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் பெயரையும் அதை ஓதுவதின் சிறப்பையும் நபியவர்களே எடுத்துக் கூறுகிறார்கள். இதிலிருந்து இந்த அத்தியாயத்தின் பெயரை நபியவர்கள் தான் சூட்டியுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.

4 அந்நிஸா (4 வது அத்தியாயம்)

குர்ஆனின் நான்காவது அத்தியாயமாகிய அந்நிஸாவிற்கும் நபி(ஸல்) அவர்கள் தான் பெயரிட்டுள்ளார்கள்

நான் எனக்குப் பின்னால் “கலாலா”வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்துகொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை.

எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். “உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?” என்று கேட்டார்கள்.

நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த “கலாலா” தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன். (என்று உமர் (ரலி) கூறுகிறார்கள்) ( ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் : மஃதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 980).

இது போன்ற சில பெயர்களை மட்டும்தான் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ்களில் காணப்படுகிறது. இதுவல்லாமல் சில அத்தியாயங்களின் பெயர்களை நபித்தோழர்கள் சூட்டியுள்ளார்கள்
நபித்தோழர்கள் பயன்படுத்தி பெயர்கள்.

சில அத்தியாயங்களுடை பெயர்கள் நபி(ஸல்) அவர்களால் வைக்கம்படாமல் நபித்தோழர்களுக்கு மத்தியில் மட்டுமே புழக்கத்தில் இருந்துள்ளது. அதன் விபரத்தை காண்போம்.

1 அல்மாயிதா (5 வது அத்தியாயம்)

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ” பெருந்துடக்கேற்பட்டு (குளியல் கடமையாகி) விட்ட ஒரு மனிதருக்கு ஒரு மாத காலம் வரை தண்ணீர் கிடைக்காவிட்டாலும் தயம்மும் செய்யாமலும் தொழாமலும் இருந்துவிட வேண்டியதுதானா? அப்படியானால் அல் மாயிதா அத்தியாத்தில் வரும் “நீங்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளாவிடில் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்துகொள்ளுங்கள்” எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இது விஷயத்தில் (மக்களுக்குப் பொதுவாக) அனுமதி கொடுக்கப்பட்டுவிடுமானல் தண்ணீர் அவர்களுக்கு குளிராகத் தெரிந்தால்கூட (உளூ/குளியல் ஆகியவற்றை விட்டுவிட்டு) தயம்மும் செய்யப்போய்விடுவார்கள்” என்றார்கள். (அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) கூறுகிறாற்கள்: ஷகீக் (ரஹ்) அவர்களிடம், “இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுக்கின்றீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு ஷகீக் (ரஹ்) அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 347)

இந்த அத்தியாத்தின் பெயரை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீசும் இல்லை.

நபித் தோழர்கள் காலத்தில் திருக்குர்ஆன் அத்தியாயத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது நபிகளார் காலத்தில் பயன்பாட்டில் இருந்து நபித்தோழர்கள் காலத்திலும் பயன்பாட்டில் வந்திருக்காலம். அல்லது நபித்தோழர்கள் காலத்தில் உருவாகியும் இருக்கலாம். இரண்டுக்கும் சாத்தியம் உள்ளது.
இருவேறு பெயர்கள்.

சில அத்தியாயங்கள் பெயர்கள் நபித் தோழர்கள் காலத்தில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.

தலாக் ( நிஸாவுல் குஸ்ரா) 65 வது அத்தியாயம்.

குர்ஆனில் உள்ள 65 வது அத்தியாயம் நம்முடைய காலத்தில் தலாக் என்று பெயர் சொல்லப்படுகிறது. ஆனால் இதே அத்தியாயத்திற்கு நபித்தோழர்களிடம் நிஸாவுல் குஸ்ரா என்று வேறு பெயர் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தொடர்பான சிறிய அத்தியாயம் என்பது இதன் பொருள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்:

நான் (மார்க்க அறிஞர்) அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) இருந்த அவையில் இருந்துகொண்டிருந்தேன். அவரின் நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியின் ‘இத்தா’ காலம் குறித்துப் பேசினார்.)

அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), ‘இரண்டு தவணைகளில் பிந்தியது’ என்று கூறினார்கள். உடனே நான், ‘அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) வாயிலாகக் கிடைத்த ‘சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்'(ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களின் நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர்.

அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். எனவே, நான் ‘அப்துல்லாஹ் இப்னு உத்பா (தற்போது) ‘கூஃபா’வில் தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவரின் மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன்’ என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தவர்) கூச்சப்பட்டார்.

மேலும், அப்துர் ரஹ்மான்பின் அபீ லைலா அவர்கள் ‘ஆனால், அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களின் தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்வூத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே!’ என்று கூறினார். எனவே, நான் அபூ அத்திய்யா மாலிக் இப்னு ஆமிர்(ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), ‘இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்.

(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் விஷயத்தில் ‘இத்தா’ காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர்களா? அவளுக்குச் சலுகை காட்டக்கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (‘அத்தலாக்’ எனும்) சிறிய , பெண்கள் தொடர்பான (‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது. (பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இதுதான்;) ‘மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும்’ (அல்குர்ஆன்: 65:04)

ஸஹீஹ்(புகாரி: 4910).

மேலும் பழைய பெயர்தான் உஸ்மான் (ரலி) அவர்களுடைய பாதுகாக்கப்பட்ட பரிதியிலும் உள்ளது.
யாஸீன் அத்தியாயத்திற்கு நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்களா?

நம் சமூக மக்களில் சிலர் யாஸீன் அத்தியாயத்திற்கு நபி (ஸல்) அவர்கள்தான் பெயரிட்டார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இல்லை. மாறாக இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் “யாஸீன்” என துவங்குவாதல் நம் முன்னோர்களால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.