முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-8

நூல்கள்: முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-8

“இவர் சரியாகத்தான் சொன்னார்!”

அன்று காலை, நபியவர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் முகத்தில் கவலை இழையோடியது. “மக்கள் தன்னை பொய்யராக்கி விடுவார்களோ?” என்று நபியவர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில்,

அபு ஜஹ்லின் வருகை அதனை உறுதிப்படுத்தியது. “என்ன?? ஏதேனும் புது செய்தி உண்டா?” அபு ஜஹ்லின் கேள்வியில் கிண்டல் தொனித்தது. “இன்று இரவு நான் அழைத்து செல்லப்பட்டேன்““எங்கே? ““பைத்துல் முகத்தஸ்” “அப்போது  இங்கே  எப்படி எங்களுடன் இருக்கிறீர்?”“ஆம்” (மக்காவிற்கும் பைத்துல் முகத்த்ஸிற்கும் இடையில் ஏரத்தாள ஆயிரம்  மைல்கள் தூரம் இருக்கும். குதிரையில் போனால் கூட போவதற்கே பல நாட்கள் ஆகிவிடும்)

இவர் நம்மிடம் சொன்னதை மற்றவர்களிடமும் சொல்வாரா?இல்லை மறுத்து நம்மை பொய்யனாக்கி விடுவாரா? என்ற சந்தேகத்துடனே அபு ஜஹ்ல், “என்னிடம் சொன்னதை மக்களிடமும் சொல்வீரா?” என்றான். “ஆம்”  என்றார்கள் நபியவர்கள்.

“பனு கஅப் பின் லுஅய் கூட்டமே! அபு ஜஹ்லின் இடிகுரல் வீதிகளில் நடமாடிக்கொண்டிருந்த மக்களை ஈர்த்தது. தெருவோரம் கதை பேசிக்கொண்டிருந்தவர்களை வரச்செய்தது. சிறிது நேரத்திற்குள் ஒரு திருவிழாவை பார்ப்பது போல் மக்கள் திரண்டனர். நன்றாக மாட்டிக்கொண்டார் என்று மனதிற்குள் கூறிக்கொண்ட அபுஜஹ்ல் , “என்னிடம் சொன்னதை உம்முடைய கூட்டத்தாரிடம் சொல்லும்.  பார்ப்போம்”

நபியவர்களிடம் எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை, “இன்று இரவு நான் அழைத்து செல்லப்பட்டேன்”

“எங்கே?” “பைத்துல் முகத்தஸ்” “அதற்குள் எப்படி இங்கே இருக்கிறீர்கள்?” “ஆம்” சிலர் கைதட்டி சிரித்தனர். சிலர் தலையில் கை வைத்தனர். அபு ஜஹ்ல் இதைத்   தான் எதிர்பார்த்தான் போலும். கூட்டத்தில் ஒருவர் எழுந்து,” நீர் அந்த பள்ளியைப் பற்றி எங்களிடம் வர்ணித்துச் சொல்ல முடியுமா?” என்றார். அந்த ஊருக்கு ஏற்கனவே பயணப்பட்ட நபர்கள் அந்த கூட்டத்தில் இருந்தனர்.

நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை வர்ணனை செய்ய ஆரம்பித்தார்கள். கண்முன்னால் காண்பது போல் அவரது வர்ணனை இருந்தது. கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! இவர் சரியாகத் தான் சொன்னார்” என்று கூறினர்.

சரியாகக் கூறுவதை உணர்ந்து மட்டும் என்ன பயன்? தவறான சிலைவழிபாட்டை விட்டு படைத்தவனை மட்டும் வணங்க ஒப்புக்கொண்டவர்கள் சிலர்  மட்டும் தான்.. சிந்தனை என்பது அனைவருக்கும் பொதுவானது அல்ல. அல்லவா? தான் முன்பு சென்று இருக்காத  இடத்தை பார்த்தது போன்று நபி ( ஸல்) அவர்கள் செய்த வர்ணனைகள்  அவர்களது தூதுத்துவத்தை நிருபனம் செய்தன. வானில் கண்ட காட்சிகளுக்கு அந்த வர்ணனைகள் சாட்சிகளாயின. பிரச்சாரங்கள் தொடர்ந்தன..

இரகசிய அகபா உடன்படிக்கை 

இந்த குறைஷிகள் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் தான் என்ன? நபியவர்களின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது , கடலைக் கண்ட நதியைப் போல இறைவனைத் தேடும் உள்ளங்கள் இஸ்லாத்தில் சங்கமித்தன. துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் பெருகின, மாதங்கள் ஓடின ..

ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுடைய காலத்தில் கஅபாவில் மக்கள் கூடுவார்கள் என்று அறிந்திருந்தோம் அல்லவா? அதே போல , நபித்துவம் பெற்ற பதினோராம் ஆண்டு ஒரு ஹஜ் தினம் வந்தது. மற்ற ஆண்டுகளைப் போலல்லாமல் இந்த ஆண்டு ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நிகழ்வு ஒன்றுக்கு விதை போடப்பட்டது .

அந்த ஆண்டு மதினாவில் இருந்து ஹஜ் செய்ய வந்த ஒரு ஆறு பேர் நபி ஸல் அவர்களின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தை ஏற்று ஊர் திரும்புகின்றனர். அடுத்த ஆண்டு அந்த ஆறு பேர்  பன்னிரெண்டு பேராக  திரும்பி வந்தனர் முஸ்லிம்களாக! இவர்கள் நபி ஸல் அவர்களை இரகசியமாக சந்திக்க ஏற்பாடானது.

மக்காவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மக்காவிற்கும் மினாவிற்கும் நடுவே அகபா என்று அழைக்கப்பட்ட ஒரு மலைக்கணவாய் பகுதி ஒன்று உள்ளது . அங்கே தான் எதிரிகளுக்கு தெரியாமல் சந்திப்பதாக திட்டம். திட்டமிட்டபடி அங்கே மதினாவில் இருந்து வந்திருந்த முஸ்லிம்கள் நபி ( ஸல் ) அவர்களை சந்தித்தனர். முக்கியமான ஆறு விசயங்களுக்கு நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்,

அந்த ஒப்பந்த விசயங்கள் :

  1. இணைகற்ப்பிக்க மாட்டோம்
  2. திருட மாட்டோம்
  3. விபச்சாரம் புரிய மாட்டோம்
  4. குழந்தைகளை கொள்ள மாட்டோம்
  5. அவதூறு கூற மாட்டோம்
  6. நல்ல விசயங்களில் தூதருக்கு மாறு செய்ய மாட்டோம்

“இந்த ஒப்பந்தம் செய்து அதன் மீது யார் நிலைத்திருக்கிறாரோ அதற்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். யார் இதில் ஏதேனுமொரு குற்றத்தை செய்து உலகிலேயே தண்டிக்கப்படுகிறாரோ அவருக்கு அதுவே பரிகாரம் ஆகும் அல்லது அல்லாஹ் மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார் . அவன் நாடினால் தண்டிப்பான் அவன் நாடினால் மன்னிப்பான்.” என்று ஒப்பந்தம் செய்தவருக்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(புகாரி: 18)

இது முதலாம் அகபா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது . அந்த அரபு மக்களிடம் குடிகொண்டிருந்த கெட்ட பண்புகளை விட்டு ஒழித்து அவர்களை தூய்மையான முஸ்லிம்களாக மாற்றுவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் .

ஒரு மனிதன் தன்னளவில் சரியானவனாக இருந்தால் தான் சமூகத்தில் உள்ள தவறுகளை களைவதற்குரிய தகுதியை அடைகிறான் .

இஸ்லாம் என்பது  உலகை ஆள்வதற்காக ஏற்றி வைக்கப்படும் ஜோதி அல்லவா? அதன்  நேரான இறைசட்டங்கள் உலகம் முழுக்க நீதி நிரப்ப காத்திருக்கின்றது என்பதை நபியவர்களுடன் இருந்த முஸ்லிம்கள் அறிந்தே இருந்தனர்.

ஹஜ் முடிந்து ஊர் திரும்புகையில் நபி (ஸல்) அவர்கள் மதினாவாசிகளுடன் முஸ்அப் பின் உமைர் என்ற தோழரை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அவருடன் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) (இவர் கண்பார்வை தெரியாதவர் ஆவார் ) என்பவரும் மதீனாவுக்கு பயணமானார்.

முஸ்அப் (ரலி) தன் பணியை மதினாவில் ஆரம்பித்து விட்டார். மக்களுக்கு இஸ்லாத்தை நோக்கி அழைப்பு கொடுப்பதும், குர்ஆனைக் கற்றுத் தருவதுமே அவரின் பணி. முஸ்அப் ( ரலி) அஸ்அது (ரலி) என்பவரது வீட்டில் தங்கினார். இருவருமாக இணைந்து  மதினாவின் கோத்திரங்களுக்கு தங்கள் அழைப்பை விடுக்கலாயினர்.

ஓர் ஆண்டு கழிந்தது . அடுத்த ஹஜ் காலம் வந்தது. நபித்துவம் கிடைத்து பதிமூன்று ஆண்டுகள் இதற்குள் கடந்துவிட்டிருந்தன. முக்கயமான ஒரு நிகழ்வை நபியவர்கள் எதிர்நோக்கி இருந்தார்கள்.

விரும்பியதெல்லாம் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த முறை மதினாவில் இருந்து ஒரு பெரும் கூட்டம் ஹஜ்ஜிற்கு வந்திருந்தது. அதில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை ஏற்ற விஷயம் அவர்களுடன் வந்த மற்ற இணைவைப்பாளர்களுக்கு தெரிந்திருக்கவில்லை .

நபி (ஸல் ) அவர்களை சந்திப்பதை மிக ஆர்வமாக எதிர்பார்த்து வந்திருந்தார்கள் . நபி (ஸல் ) அவர்களும் அவர்களைச்  சந்திப்பதை  எதிர்பார்த்திருந்தார்கள். ஹஜ் முடிந்த இரண்டாம் தினத்தில் அதே அகபா மலைக்கணவாயில் இரகசியமாக  சந்திப்பதாகத்  திட்டம். சென்ற முறையை விட இந்த முறை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

எதிரிகள் காதில் விழுந்ததென்றால் அவ்வளவு தான். ஹஜ் முடிந்தது. எதிர்பார்த்திருந்த பன்னிரண்டாம் நாள் இரவும் வந்தது. சப்தமில்லாமல் அங்கு வந்திருந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அகபாவை எதிர் நோக்கி தயாராக இருந்தார்கள்.

அபு ஜாபிர் என்பவர் ,மதினாவாசிகளின் தலைவர்களுள்  ஒருவர் . அவர் மிகவும் நல்ல மனிதர். அவரை விட்டுவிட்டு முக்கியமான இந்த காரியத்தில் கலந்து கொள்ள அங்கிருந்தவர்களுக்கு மனம் வரவில்லை .

“அபு ஜாபிரே ! “நீங்கள் எங்கள் தலைவர்களில் ஒருவர். எங்களில் மிகவும் மதிப்பு வாய்ந்தவர் … நாளை நீங்கள் நரகில் வேதனை செய்யப் படுவதை நாங்கள் விரும்பவில்லை “ என்று அவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அழைத்தார்கள். அல்லாஹ்வின் பேரருளால் அவருக்கு இறைநம்பிக்கை என்ற ஒளி கிடைத்தது .

அவர் இஸ்லாத்தை ஏற்றார். அவரையும் அழைத்துக்கொண்டு கிளம்ப முடிவு செய்தனர். அனைவரும் மினாவில் உறங்கிக்கொண்டிருந்தனர்; முஸ்லிம்களும் உறங்குவது போல் இருந்தனர். தம் உயிருக்குயிரான தூதரை, யாருமறியாத வகையில், அந்த இரவில் சந்திக்க காத்திருந்த கண்களுக்கு உறக்கம்  தான் வந்துவிடுமா என்ன? உள்ளங்கள்  குதூகலித்துக் கொண்டிருந்தன முஸ்லிம்களுக்கு ..

இரவின் பிந்தைய பகுதி தொடங்கியிருந்தது. மெது மெதுவாக , சப்தமின்றி அங்கிருந்து கிளம்பி கொஞ்சம் தூரத்தில் இருந்த அகபாவில் குழும ஆரம்பித்தனர். பன்னிரண்டாம் நாள் பௌர்ணமி நிலவின் குளிர்ந்த ஒளியில் அகபா கணவாயில் குழுமின கூட்டத்தை எதிரிகள் அவதானிக்கவில்லை. தூக்கம் அவர்களைப் போர்த்திக்கொண்டது.

சென்ற ஆண்டு பன்னிரண்டு பேர் வந்தார்கள். இந்த ஆண்டு எத்தனை பேர் வருவார்கள்? வந்தார்கள். மொத்தம் எழுபத்து இரண்டு பேர். அவர்களில் இருவர் பெண்கள். எப்போது நபி ( ஸல்) அவர்கள் வருவார்கள்? காத்திருந்த கண்கள் குளிர்ச்சி அடைந்தன. நபி ( ஸல்) வந்தார்கள், தமது சிறிய தகப்பனார் அப்பாஸ் அவர்களுடன்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்போது முஸ்லிமாக இல்லை, எனினும் தன் அண்ணன் மகனின் செயல்பாடுகளால், உள்ளூரில் கடும் எதிர்ப்புகளுக்கு ஆட்பட்டிருந்த வேளையில், வெளியூர்வாசிகள் இவரை அழைத்துக் கொண்டு சென்று காப்பாற்றுவார்களா? என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளவே அவர் நபியவர்களுக்கு துணையாய் வந்தருந்தார்.

வந்தவர் பேச ஆரம்பித்துவிட்டார்;

“கஸ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் கொள்கையைச் சார்ந்தவர்களிடம் இருந்து, இவரை இன்று வரை பாதுகாத்து வந்திருக்கிறோம் ; எங்களுடன் கண்ணியமாக, அதேசமயம் பாதுகாப்பாகவும் இருக்கிறார்;

என்றாலும் , அவர் உங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறார்; நீங்கள் அவருக்குத் தரும் வாக்குறுதியை காப்பாற்றி எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பீர்கள் என்றால் , அவரை அழைத்துச் செல்லுங்கள்; ஒருவேளை , நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள் அல்லது அழைத்துச் சென்றுவிட்டு கைவிட்டு விடுவீர்கள் என்றால் இப்போதே இவரை விட்டு விடுங்கள் .

இங்கே இவர் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் தான் இருக்கிறார்.” என்றார். இந்த விசயங்களையெல்லாம் நமக்கு ஹதிஸ்கள் வாயிலாக அறிவித்தவர் யாரெனில் கஅப் இப்னு மாலிக் (ரலி) என்ற சஹாபி ஆவார். (இவர் பிற்காலத்தில் பெரும் மன்னிப்பை பெறப் போகிறார் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க வில்லை) .

அந்த கஅப் ( ரலி) பேசிக்கொண்டிருந்த அப்பாஸ் ( ரலி) அவர்களிடம் , “நீங்கள் கூறியதை கேட்டுவிட்டோம் “ என்று கூறிவிட்டு, நபி ( ஸல்) அவர்கள் பக்கம் திரும்பி, “ அல்லாஹ்வின் தூதரே!இப்போது நீங்கள் பேசுங்கள். நீங்களும் உங்கள் இறைவனும் விரும்பியதெல்லாம் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் “ என்றார்.

அவரது பேச்சில் தொனித்த உறுதி , மதீனாவாசிகள் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு தான் ஒப்பந்தம் செய்ய வந்துள்ளார்கள் என்பதைக் காட்டியது.

நபி ( ஸல்) அவர்கள் பேசினார்கள்: குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்; அல்லாஹ்வின் பக்கமும் இஸ்லாத்தின் பக்கமும் அந்த மக்களை அழைத்தார்கள்; உங்கள் மனைவி மக்களைப் பாதுகாப்பது போல் என்னையும் பாதுகாக்க வேண்டும் என்று உறுதி மொழி கேட்கிறேன்” என்று கூறி தம் பேச்சை நிறுத்தினார்கள். அப்போது பராஉ இப்னு மஃரூர் (ரலி) நபி ஸல் அவர்கள் கையைப் பற்றினார்கள்.