05) பதறவைத்த பிரச்சாரம்
பதறவைத்த பிரச்சாரம்
குரைஷிகள் கடும் ஆத்திரம் கொண்டனர். முஹம்மதின் பிரச்சாரம் இவர்களை என்ன செய்துவிடப்போகிறது? அப்படியென்ன அடிநாதத்தை பெயர்த்தெடுக்கிற பிரச்சாரத்தை செய்துவிட்டார்?
ஒரு தெய்வ வழிபாட்டால் குரைஷிகளுக்கு என்ன நஷ்டம்? இதை தெரிந்து கொண்டால் தான் அவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வந்தது என்று புரியும். கஃபாவிலும் அதைச்சுற்றிலும் ஏராளமான சிலைகள் வழிபடப்பட்டு வந்தன என்பதை நாம் கடந்த தொடரில் கண்டோம்..
அந்த சிலைகள் தான் இவர்களது மூலதனம். சிலைகள் இருந்தால் தான் அங்கு பல மக்கள் வருவார்கள். வருமானம் பெருகும். சிலைகளை வைத்து தான் குலப்பெருமை பேச முடியும்.
சிலைகள் பெயரைச்சொல்லி தான் சில மக்களை அடித்தட்டு மக்களாக ஒடுக்க முடியும். சிலைகளின் பெயரால் தான் தங்கள் அரசியலை செய்ய முடியும். புரோகிதம் செய்ய முடியும்.
முஹம்மது நபி (ஸல்) என்ன சொன்னார்கள்? எந்த மனிதருக்கு மத்தியிலும் ஏற்றத்தாழ்வு கிடையாது. அனைவரும் சமம். பிறப்பாலோ பணத்தாலோ குலம் கோத்திரத்தாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ முடியாது.
சிலைகள் வெறும் சிலைகளே! அவற்றுக்கு சக்தி இல்லை. படைத்தவன் ஒருவனே! உங்கள் ஆதி தந்தையும் ஆதம் ஒருவரே! அனைவரும் சகோதரர்கள்
ஒன்றுபடுங்கள்! இறைவனுக்கு மாறு செய்யாதீர்கள். இப்படி சொன்னால் மக்காவாசிகளின் பிழைப்பு எப்படி ஓடும்? கோபம் வரத்தானே செய்யும்..
முடிந்த வரையில் முஹம்மது(ஸல்) அவர்களை ஒடுக்க நினைத்தார்கள். ஆனால் அவரது பெரிய தந்தை அபுதாலிப் மக்காவின் தலைவர்களில் ஒருவர். தன் பொறுப்பின் கீழுள்ள முஹம்மது(ஸல்) அவர்களை ஒன்றும் செய்ய விடாமல் அரணாக இருந்தார். அடக்குமுறையாளர்களின் சிந்தனைகள் உலகின் எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன..
இவர்கள் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆரம்பித்தார்கள் தங்கள் சித்திரவதைகளை. யாரெல்லாம் முஹம்மது(ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்றார்களோ அவர்களை குறிவைத்தார்கள்..
கட்டவிழ்க்கப்பட்ட கொடுங்கோள் தன்மை
ஒருபுறம், உமைய்யா பின் கலப் குரைஷி தலைவர்களில் ஒருவன். தன் அடிமையான பிலால்(ரலி) அவர்களை சுடும் பாலை மணலில் வெற்றுடலோடு கிடத்தி கொடுமைபடுத்துகிறான்..
கறுப்பு நிற அபீசினியா நாட்டு அடிமை அவர்
“முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு..”
“லாத் உஸ்ஸா வை வணங்கு..”
அவர் , “அஹத்(ஒருவன்), அஹத்” என்று பதிலளிக்கிறார். அவரது பதிலில் உறுதி தொனித்தது. அவர் மயங்கும் வரை சூடான மணலில் கயிற்றால் கட்டி இழுக்கப்படுகிறார். இனவெறியில் ஊறிப்போயிருந்த உமைய்யாவுக்கு அவரது இறைநம்பிக்கை எப்படி புரியும்?
பிறகாலத்தில் இஸ்லாமிய மக்களை தொழுகைக்கழைக்கும் தலைவராக மாறப்போகும் ஒருவரையா இப்படி வெற்றுடலாய் அசிங்கப்படுத்துகிறோம். என்பது உமைய்யாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உமைய்யா அறிந்ததெல்லாம் எப்படியாவது முஹம்மதின் மார்க்கத்தை ஒழித்து விட வேண்டும். மறுபுறம்
சுமையா யாசிர் (ரலி) குடும்பம்..
கணவன் மனைவி இருவரும் சித்திரவதைக்குள்ளாக்கபடுகின்றனர்.
முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடுங்கள்..
அவர்களிடம் இருந்த வைராக்கியம்
குரைஷி தலைவர்களை கோபப்படுத்தியது
விளைவு. தங்கள் மகன் முன்பே இருவரும் கொல்லப்பட்டனர். அதைப்பார்த்துக்கொண்டிருந்த மகன் அம்மாரை சித்திரவதைப்படுத்தி, முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு..லாத் உஸ்ஸாவை வணங்கு, அம்மார்(ரலி) வாயால் சொன்னார் , “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிட்டேன்..”உயிர்தப்பியது..
ஓடோடி வந்தார், அழுகையுடன்..”இறைத்தூதர் அவர்களே! நான் சித்திரவதை தாங்காமல் இன்னின்னவாறு சொல்லிவிட்டேன். ஆனால் என் மனம் ஒரு இறைவனையே வணங்குகிறது குற்றமா? “தேம்பினார். அப்போது இறைவன் தன் தூதருக்கு செய்தி அறிவித்தான்.
“”யாருடைய உள்ளத்தில் பரிபூரணமாக இறைநம்பிக்கை நிறைந்த நிலையில் நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ்வை மறுத்தவர் தவிர,..
அல்லாஹ்வை நம்பிய பின் மறுப்போர் மீதும் அதற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும் கடும் வேதனையும் உள்ளது.
அம்மார் (ரலி) நிம்மதியடைகிறார். இறந்து விட்ட சுமையாவும் யாசிரும்(ரலி) சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நற்செய்தி பெறுகிறார்கள், மற்றுமொரு இடத்தில்..
கப்பாப்(ரலி)..
அவரும் ஒரு இஸ்லாத்தை ஏற்ற அடிமை. நெருப்பு கங்குகளால் ஆன படுக்கையில் படுக்கவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்.
அவரது முதுகில் ஓட்டைகள் விழுகின்றன. நெஞ்சம் பதறுகிறதல்லவா, படிக்கவே சிரமமாயிருக்கிறதல்லவா? இவை உதாரணங்கள் மட்டுமே. இன்னும் ஏராளம் நடந்தது.
ஆனால் இத்தகைய சித்தரவதைகள் அவர்களது இறைநம்பிக்கையை அசைத்துபார்க்க கூட முடியவில்லை. இஸ்லாம் வாளால் பரவியது என்று கூறுவோர் சிந்திக்க வேண்டும். வாள்களால் இறைநம்பிக்கையை ஒருபோதும் வாங்க முடியாது. இத்தனை கொடுமைகள் நடக்கின்ற போது நபியவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
அசைக்கமுடியாத இறைநம்பிக்கை
வாள்களால் ஒருபோதும் இறைநம்பிக்கையை விதைக்கவும் முடியாது. அறுத்தெடுக்கவும் முடியாது…. சித்திரவதைகளைத்தாண்டியும் அவர்களது நெஞ்சங்கள் ஈமானால் நிரம்பி வழிந்தன. எப்படி?
- அடியும்
- வழியும் இரத்தமும்
- வலியும்
- வேதனைகளும்
- வாங்கிய வசைச்சொற்களும்
- பெற்ற அவமானமும்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உள்ளங்களை ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஏன்? குரைஷிகள் தங்கள் ஆத்திரத்தை தணிக்க எடுத்த ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாத்தை வளர்க்க போடப்பட்ட உரங்களாய் தான் அமைந்தன.
சஹாபாக்களின் உடலின் மேல் தீயால் சுட்ட வடுக்களும் அடிபட்ட தழும்புகளும் , அவர்களின் இறைநினைவை அதிகரித்தனவே ஒழிய அவர்கள் வெருண்டோடவில்லை. எங்ஙனம்?
இறைநம்பிக்கை தான் அதன் சூத்திரம். இறைவனே அவர்களது தாரக மந்திரம். உண்மை இறைவனின் நினைவை ருசித்த உள்ளம் …இறைவனின் வார்த்தைகளில் மூழ்கி மெய்சிலிர்க்கும் இதயம். படும் வலிவேதனைக்கெல்லாம் அசையாது….
கேட்கும் வசைமொழிகளுக்கெல்லாம் அஞ்சாது. அது வேண்டுவதெல்லாம் இறைவனின் அன்பை மட்டுமே. இறைத்தூதர் (ஸல்) என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்? நபியவர்களால் அந்த எஜமானர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை.
மாறாக..தன் தோழர்களிடம் பொறுத்துக்கொள்ளும்படி கூறினார்கள். நபியவர்கள் தன் மீது இழைக்கப்பட்ட எண்ணிலடங்கா துன்பங்களையும் பொறுமையுடன் தாங்கினார்கள். சகித்தார்கள்.
ஆனால் இந்த கொடுமைகளைக்கண்டு யாரும் இஸ்லாத்தில் இணைய மாட்டார்கள் என்ற எதிரிகளின் கணக்கு பொய்யானது..
இஸ்லாத்தின் வளர்ச்சி இனிமே இருக்காது என்ற அவர்களது எண்ணத்தில் மண் விழுந்தது. இஸ்லாத்தில் மக்கள் அசுர வேகத்தில் இணையத்தொடங்கினர். கொடுமைப்படுத்துவார்கள் என்று தெரிந்தும் கலிமாவை உரக்க கூறி தான் இறக்கும் அளவிற்கு அடிவாங்கிய அபுதர் (ரலி) போன்ற சஹாபாக்களும் அவர்களிலே உண்டு.
தன்னை யாரால் என்ன செய்து விட முடியும் என்ற தைரியத்தோடு கலிமாவை கர்ஜனை செய்த உமர்(ரலி) அவர்களும் உண்டு. இஸ்லாம் வேகமாக பரவ ஆரம்பித்தது. கொடுமைகள் வீரியப்படுத்தப்பட்டன. ஊர்க்கட்டுப்பாடுகள் குரல்வளையை நெறிக்கத்தொடங்கின. அப்போது நபியவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.