04) குன்றின் மீது ஒரு குரல் 

நூல்கள்: முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு (கதை வடிவில்)

குன்றின் மீது ஒரு குரல் 

இறைவன் பணித்த தூதுப்பணியை நபியவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

முதன் முதலில் இஸ்லாத்தை தழுவும் பாக்கியம் கதீஜா(ரலி) அவர்களுக்கு தான் கிட்டியது. பிறகு நபியவர்களின் நெருங்கிய தோழர் அபுபக்கர்(ரலி) ..பிறகு ஒரு சில நெருங்கிய நண்பர்கள் முஸ்லிமாயினர். நபியவர்களின் குணம் தெரிந்த அவர்களால் அவரை நிராகரிக்க முடியவில்லை,  ஏற்றுக்கொண்டார்கள்.

‘முஸ்லிம்’ என்றால் இறைவனுக்கு கட்டுபட்டவர் என்று பொருள். விஷயம் பரவியது,பிரமுகர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறதாமே? இத்தனை நாட்கள் நல்லா தான இருந்தார்.

நல்ல நம்பிக்கையானவர் உண்மை பேசக்கூடியவர். திடீரென இவருக்கு என்ன ஆயிற்று.? குடும்பத்தில் சிலர் அதிருப்தியை வெளிப்படையாக வெளிக்காட்டினர். சில ஆண்டுகள் இப்படியே கழிந்தது.தெரிந்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் இவர்களிடமெல்லாம் நபியவர்கள் தமது செய்தியை எடுத்துரைக்கலானார்கள்..

  • இறைவனுக்கு நிகராக சிலைகளா?
  • இறைவனின் ஆற்றல் இவைகளுக்கா?
  • படைப்பினங்களுக்கு தலைவணங்கலாகாது.படைத்தவன் முன்பு மண்டியிடுங்கள்
  • உண்மை பேசுங்கள்
  • பொய் தவிருங்கள்
  • உறவை பேணுங்கள்
  • அண்டை வீட்டாருக்கு நலவு செய்யுங்கள்
  • கற்பொழுக்கம் பேணுங்கள்
  • பெண் குழந்தைகள் பேணி வளர்க்கப்பட வேண்டியவர்கள்

நபியவர்களின் இத்தகைய அறிவுரைகள் அந்த மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனினும் மறைமுகமாக ஜாடை பேசுவதும் கேலி செய்வதுமாக இருந்தார்கள். இந்த நிலையில் இறைவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது.

“உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக..”

(அல்குர்ஆன்: 26:214)

நபியவர்கள் பகிரங்கமாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்தார்கள். கஅபா அருகிலுள்ள ஸஃபா மலைக்குன்றில் ஏறினார்கள்…

“யா ஸபாஹா” என்று உரத்த குரலில் அழைத்தார்கள். ஒவ்வொரு குலத்தின் பெயரையும் உறவினர்கள் பெயர்களையும்  சொல்லி அழைத்தார்கள்.

யா ஸபாஹா என்பது அன்றைய அரபுலகத்தில் ஏதோ பெரிய ஆபத்தை குறித்து எச்சரிக்க கொடுக்கப்படும் அழைப்பாகும்.

என்னடா என்றுமில்லாமல் இவர் அழைக்கிறாரே என்று அழைக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடினர் அச்சத்துடனும், பரபரப்புடனும், என்ன சொல்லப்போகிறார் இவர் என்ற எண்ணத்துடனும்….

எட்டுத்திக்கும் எத்திவைத்தல்

ஸஃபா குன்றை சுற்றி கூடிய கூட்டம் ஆவலுடன் எதிர்நோக்கியது. முஹம்மது(ஸல்) அவர்கள் கேட்டார்கள்: இந்த மலைக்குன்றிக்குப்பின் உங்களை தாக்க குதிரைப்படை காத்திருக்கிறது என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

கூட்டம்: ஆம். ஏன் நம்ப மாட்டோம்? இதுவரை உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர  பொய்யை செவியுற்றதே இல்லையே!

நபி(ஸல்) அவர்கள்: அப்படியானால் , கடுமையான வேதனை வரும் முன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

என்று ஆரம்பித்து,  ஒரே இறைவனை வணங்க வேண்டும். அவனுக்கு இணையாக எவரையும் கருதலாகாது. தான் ஒரு இறைத்தூதர் என்றும், மறுமையின் விசாரணை பற்றியும் கூறினாரகள்.

ஒவ்வொரு கிளையாரையும் அழைத்து இறைவனிடமிருந்து அவர்களைக் காக்க தன்னால் இயலாது..மரணம் வரும் முன் இறைவனை ஏற்கும் படியும். நரக வேதனை பற்றியும் எடுத்துக்கூறினார்கள். உடனே,

நபியவர்களின் தந்தையின் சகோதரரான அபுலஹப் ” உமக்கு நாசமுண்டாகட்டும் இதற்கு தானா எங்களை அழைத்தாய்?” எனக் கூறி மண்ணை வாரி இறைத்தான். அப்போது  “அபுலஹபின் இரு கரங்களும் அழியட்டும்” என்று துவங்கும் அத்தியாயம் அருளப்பட்டது.

இதற்கு பின் நபியவர்கள் பகிரங்கமாக ஒவ்வொருவரிடமும் இஸ்லாத்தை எடுத்து சொல்ல ஆரம்பித்தார். கடைவீதியெங்கும் பிரச்சாரம் செய்தார். வீடுகளில் பிரச்சாரம். என அனைவரிடமும் எடுத்து சொன்னார்கள்.

ஊர் ஒன்றுகூடியது 

மக்காவின் தெருக்களெல்லாம் நபியவர்களைப்பற்றி தான் பேசின. “என்னது? நாம் இவ்வளவு நாள் வணங்கி வந்த தெய்வங்களையெல்லாம் வணங்க கூடாதா?”

” நாம் முன்னோர்களின் வழிமுறைகளை விட்டுவிட வேண்டுமா?” “அல்லாஹ்வை மட்டும் வணங்குவதா? இப்படியெல்லாம் இதற்கு முன் நாம் கேள்விப்பட்டதே இல்லையே”

“முஹம்மதுவுக்கு என்ன ஆயிற்று?”

“ஏதோ இறைவனிடமிருந்து செய்தி வருகிறதாம்..”

இப்படி பலவாறாக பேச்சுக்கள் எழுந்தன.

நபியவர்கள் தன் பணியைத் தொடர்ந்தார்கள்..

வீதியெங்கும் முழங்கினார்கள்.

படைத்தவன் ஒருவனேயன்றி வேறில்லை.

இறைவனை தவிற மற்றவைகளுக்கு சக்தியில்லை.

இறந்த பின்பு எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவோம்.

உங்கள் இறைவன் அன்பாளன். அருள் செய்யக்கூடியவன். அவனிடம் சரணடையுங்கள்.  வெளியூரிலிருந்து வரும் யாத்ரிகர்களிடம் எடுத்து சொன்னார்கள்..

ஊர்மக்களிடம் எடுத்து சொன்னார்கள். பலர் நபியவர்களின் கூற்றை ஏற்றார்கள்.. அதிலும் பெரும்பாலும் சாமானியர்களே ஏற்றனர். அடிமைகள் நிறைய பேர் இஸ்லாத்தை தழுவினர்..

அரபு எஜமானர்களின் முரட்டுத்தனத்தில் புண்ணாகி இருந்த அவர்களின் உடலும் உள்ளமும் நபியவர்களிடம் ஆறுதல் அடைந்தன.

ஏன் வாழ்கிறோம் என்று குழம்பிய உள்ளங்கள் தெளிவு பெற்றன. விரக்தியிலிருந்த நெஞ்சங்கள் வெளிச்சம் கண்டன. நிராசையடைந்திருந்த உயிர்கள் நிம்மதியினை நுகர்ந்தன. பொறுக்குமா அங்கிருந்த பிரமுகர்களுக்கும் தலைவர்களுக்கும்?

தங்கள் அடிமடியில் அல்லவா முஹம்மது (ஸல்) அவர்கள் கைவைக்கிறார், சும்மா விடுவார்களா என்ன? ஊர் முக்கியஸ்தர்களும் கோத்திரங்களின் தவைவர்களும் ஒன்று கூடினர். ஆலோசனை கூட்டம் ஆரம்பமாயிற்று.

யுக்திகள் பலிக்கவில்லை

ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இப்படி இறைவன் ஒருவனென்றும் சிலைகளை வணங்கக்கூடாதென்றும் தான் ஒரு இறைத்தூதரென்றும் நபியவர்கள் பிரச்சாரம் செய்வது மக்கா நகர தலைவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை.

இவரை எப்படி நிறுத்துவது என்று பலரும் பல ஆலோசனைகள் செய்தனர். பிறகு , நபியவர்களின் பெரிய தந்தை அபுதாலிபிடம் சென்றார்கள் குரைஷிகள். உங்கள் மகனை நிறுத்திக்கொள்ள சொல்லுங்கள் இல்லை என்றால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்… பயமுறுத்தினார்கள் கோத்திர தலைவர்கள்.

நபியவர்கள் கேட்கவில்லை. பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. நபியவர்களுக்கு மனநலம் பாதித்தப்பட்டு விட்டது என்றனர். சூனியம் செய்யப்பட்டு உள்ளது என்றனர். நபியவர்கள் காதில் கூட வாங்கவில்லை பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.

போகுமிடங்களிலெல்லாம் வசைமொழிகளும் கேலி கிண்டல்களும் செய்தார்கள். பல வகைகளிலும் தூற்றினார்கள். நபியவர்கள் நிறுத்தவே இல்லை. அவமானப்படுத்தினார்கள், அடித்தார்கள். நபியவர்கள் சகித்தார்கள்..பிரச்சாரம் நிற்கவில்லை.

ஆசைவார்த்தைக் கூறி மயக்க பார்த்தார்கள் தலைவர்கள். மக்கா நகரின் தலைவர் பதவி தருகிறோம். வேண்டிய மகளிரை திருமணம் செய்து தருகிறோம். பொன்னும் பொருளும் வேண்டிய அளவுக்கு தருகிறோம்.. பிரச்சாரம் செய்யாதீர்கள் என்றார்கள்.

நபியவர்கள் அசரவே இல்லை. இவ்வளவு கூறி தடுப்பதற்கு நபியவர்கள் அப்படி என்ன தான் தவறாக கூறி விட்டார்? ஒரே இறைவனை வணங்க தானே சொன்னார். ஏன் குரைஷிகள் இவ்வளவு முயற்சி செய்கின்றனர்..காரணம் இல்லாமல் இல்லை..

அவர்களது அடிநாதத்தை தகர்க்கின்ற பிரச்சாரம் அல்லவா அது எப்படி??