முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
முஸ்லிம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற வேண்டுமானால் எதை முதன்மையாக கொள்ள வேண்டும் ?
நமது அழைப்பும் உழைப்பும் எதை நோக்கியதாக இருக்க வேண்டும்? என்பதைத்தான் இந்தக் உரையின் மூலம் நாம் அறிய இருக்கின்றோம்.
இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஸ்லீம்களில் பலர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை ஜாஹிலிய்யா (அறியாமை) காலத்து முஷ்ரிக்குகள் அறிந்த அளவிற்கு கூட அறியவில்லை. மக்காவில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் ஷிர்க் (இணைவைத்தல்) என்ற நோய்க்கு தவ்ஹீத் என்ற மருந்தை நபியவர்கள் புகட்டினார்கள். இந்த தவ்ஹீதை முஸ்லிம் சமூகம் தங்களது உணர்விலும் உள்ளங்களிலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத வரை எழுச்சி மிக்க சமூகமாக மாற முடியாது .
அன்றையை அரபுகளின் வாழ்க்கையை வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு வரணிக்கின்றனர்
ஒற்மைக்கு ஊறாய், உறவுக்கு கேடாய், பண்புக்கு மாறாய், பகுத்தறிவுக்கு முரணாய், வளமான வளர்ச்சிக்கு தடையாய் மதுவிலும் மாதுவிலும் மூழ்கிக்கிடந்தார்கள்.
இப்படிப்பட்ட சமூகத்தை நபியவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமத்துத் தவ்ஹீதின் மூலம் சிறந்த சமூகமாக உயர்ந்த சமூகமாக மாற்றியமைத்தார்கள் . ஸஹாபாக்களுக்கு எந்த தவ்ஹீத் பாதுகாப்பையும் , நிம்மதியையும், இம்மை மறுமை வெற்றியையும் வழங்கியதோ அந்த தவ்ஹீதால் மட்டுமே இவை அனைத்தையும் நாமும் அடைய முடியும்.
சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலேயே தீர்வு இருக்கிறது. நபிமார்கள் சீர்திருத்த பணியை எதிலிருந்து தொடங்கினார்களோ அதிலிருந்து நாமும் தொடங்க வேண்டும் .
ஒரு சாரார் அரசியலில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர் ,இன்னும் சிலர் கல்வியில் முன்னேறுவதில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர் , இன்னும் சிலர் ஆர்பாட்டங்கள் போராட்டங்களில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர். இன்னும் சிலர் சமூகப்பணியில் ஈடுபடுவதின் மூலம் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர்
இஸ்லாமிய சமூகத்தின் அங்கத்தினராக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏகத்துவ கலிமா வை பிரசாரம் செய்வதில் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பதை அறியாமல் உள்ளனர் அல்லது அதில் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர் காரணம் நமது உள்ளங்களில் தவ்ஹீத் உள்வாங்கப்படவில்லை . فاقد الشيء لا يعطيه – ஒன்றை பெறாதவன் அதனை பிறருக்கு கொடுக்க முடியாது .
“என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!” என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.
“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவர்களும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!
நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.
“என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்” என்று அவர் கூறினார்.
பின்னர் அவர்களை நான் உரத்த குரலில் அழைத்தேன். பின்னர் அவர்களைப் பகிரங்கமாகவும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன்.
ஹூது நபியின் பிரச்சாரம்
ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார்.
ஸாலிஹ் நபியின் பிரச்சாரம்
ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சி வந்துள்ளது. அது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் அதை மேயவிட்டு விடுங்கள்! அதற்குத் தீங்கிழைக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்” என்று அவர் கூறினார்.
இப்ராஹிம் நபியின் பிரச்சாரம்
“அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று இப்ராஹீம் தமது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!
ஷூஐப் நபியின் பிரச்சாரம்
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார்.
ஈஸா நபியின் பிரச்சாரம்
“மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.
“மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்” என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக் கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான்.
இவ்வாறு அனைத்து நபிமார்களும் மக்களை அல்லாஹ்வை வணங்குவதின் பக்கம்தான் அழைத்தார்கள் . இந்த மகத்தான பணியை நிறைவேற்றுவதில்தான் முஸ்லீம்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர்களுக்கு அழைப்புவிடுங்கள் …
முஸ்லீம்களில் யார்தான் லா இலாஹ இல்லல்லாஹ்வை மறுத்தார்கள்? அனைவரும் ஏற்றுதானே உள்ளனர். என நம்மிலே பலர் கருதலாம். ஆனால் முஸ்லீம்களில் அதிகமானவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளையும், அதன் நிபந்தனைகளையும் , அதனை முறிக்கும் காரியங்களையும் அறியாதவார்களாக உள்ளனர். இந்த வார்த்தை வெறும் மந்திரச் சொல்லாகவே பார்க்கப்படுகிறது.
லா இலாஹ இல்லல்லாஹ்வில் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.
லா இலாஹ – மறுத்தல், நிராகரித்தல் அதாவது இந்த உலகில் மாற்று மதத்தவர்களால் வணங்கப்படக் கூடிய அனைத்து போலி தெய்வங்களையும் ஒரு முஸ்லிம் மறுக்க வேண்டும் நிராகரிக்க வேண்டும்.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
மேலே உள்ள வசனத்தில் தாகூத்தை நிராகரிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் அல்லாமல் இவ்வுலகில் வணங்கப்படும் அனைத்தும் தாகூத்தே.
இல்லல்லாஹ் – உறுதி படுத்துதல் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்க்கு தகுதியானவன் என்று உறுதிபடுத்த வேண்டும்.
லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று பொருள் கொள்வது தவறானது பிழையானது. வணங்குவதற்க்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதே சரியான பொருள்.
இதுவே மார்க்கத்தின் அடிப்படை, இந்தக் கலிமாவை பிரச்சாரம் செய்யவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள், இதனை அளவுகோலாகக் கொண்டே ஒருவனது அமல்கள் அங்கீகரிக்கப்படுமா? நிராகரிக்கபடுமா என்பதையும், ஒருவனது சுவன வாழ்வும் நரக வாழ்வும் தீர்மானிக்கப்படும். எனவே முஸ்லீம்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வை கற்றுக் கொள்பவர்களாகவும் இதன் பக்கம் மக்களை அழைப்பாவார்களாகவும் இதில் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும் மாறவேண்டும்.
இன்ஷா அல்லாஹ்……