முயற்சித் திருவினையாக்கும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

முன்னுரை

இன்பங்களும் துன்பங்களும் இரண்டறக்கலந்த கலவை தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பருவமாற்றங்களைப் போல இடையிடையே எட்டிப்பார்க்கின்ற எதிர்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள இயலாமல் மக்களில் பலர், தங்களுடைய இலட்சிய இலக்கை விட்டும் பாதியிலேயே புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றார்கள். அரிதாக சிலர் பல்வேறான மாற்றுமுயற்சிகள், கடும் உழைப்புகள் மூலம் துயரங்கள் தூக்கிப்போடுகின்ற முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்துவிட்டு, தங்களது இலட்சிய எல்லையை திட்டமிட்டப்படி எட்டிப்பிடிப்பதைப் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றார்கள். உதாரணமாக அறிவியல் அறிஞர்கள், ஆய்வுகளில் ஈடுபடுகின்றபோது தங்களைத் தோல்விகள் தாக்கினாலும் தளர்ந்துவிடாமல் முயற்சித்ததால் தான், இன்று நாம் நவீனகருவிகளால் அலங்கரிகப்பட்ட நவீன வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதனாலேயே முயற்சித் திருவினையாக்கும்; மெய்வருதத்தக் கூலி தரும் போன்ற பழமொழிகள் சமுதாயவழக்கில் இன்றளவும் இருந்து கொண்டிருக்கின்றன. சுருக்கச் சொன்னால், இவ்வுலக வாழ்க்கையிலே ஆசைப்படுகின்றவற்றை அடைவதற்கேற்ப நம்மிடத்தில் ஆர்வமும், முயற்சியும் அவசியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய சுயதேவைகளையும், நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும் கூட நம்மால் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளமுடியும். இதை பின்வரும் வசனங்களில் நமக்கு அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது. (அல்குர்ஆன்:)
மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப் படவில்லையா? அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும். (அல்குர்ஆன்:)– 39)

மறுமைவெற்றிக்காக முயற்சிப்போம்

அற்பமான அகிலத்தின் வாழ்க்கையில் ஏதாவதொன்றை அடைவதற்கே நமக்கு அளப்பறிய ஆர்வமும் முயற்சியும் அவசியமாகத் தேவைப்படும் போது, மறுமையில் நாம் நினைத்தபடியெல்லாம் வாழ்வதற்கு வழிவகுக்கின்ற சுகமான சொகுசான சொர்க்க வாழ்வினை, எந்தவொரு கஷ்டத்தையும் இடையூறையும் சந்திக்காமல், அமல்செய்வதிலே எந்தவொரு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இல்லாமல் எளிதாகப் பெறமுடியுமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் கஷ்டப்படாமல் அதிலே வெற்றிக்கனியை சுவைக்கமுடியாது என்பதை அல்லாஹ் அருள்மறையில் சுட்டிக்காட்டியிருக்கின்றான். மேலும் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அறிவித்திருக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. (அல்குர்ஆன்:)
திரையிடப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல் : புஹாரி (6487)
மறுமையில் மகத்தான அந்தஸ்துமிக்க ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அடைய வேண்டும்; திருப்திகரமான தித்திப்பான சுவர்க்க வாழ்க்கையின் பேரின்பத்தில் திளைக்கவேண்டும் என்று நாம் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது. மாறாக அதற்கேற்ற வகையில் நமது அமல்களை அழகியமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். மார்க்கக் கடைமைகளை கடுகளவும் அலட்சியப்படுத்தாமல், அன்றாடம் அவற்றை நல்லமுறையில் நடைமுறைப்படுத்தவேண்டும். நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடிய காரியங்களை அதிகமதிகமாக அக்கறையோடு செய்யவேண்டும். இவ்வுலகில் நமது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றதோ அதனடிப்படையில் தான் நமது மறுமை வாழ்வின் முடிவு இருக்கும். இதை பின்வரும் வசனங்களில் இருந்து விளங்க முடிகின்றது.
(மறுமைநாள்) அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சி யுடையதாக இருக்கும். தமது உழைப்பிற்காக திருப்தி கொள்ளும். (அல்குர்ஆன்:)9)
அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப் படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான். இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும். (அல்குர்ஆன்:)

முயற்சியின் முக்கியத்துவம்

வாழ்க்கையிலே நமது சிறப்பான செயல்பாடுகளை சீர்குலைக்கின்ற வகையில் சிரமங்களும் சிக்கல்களும் வரும்போது, அவற்றைக் களைந்தெறியவும், மார்க்க கடமைகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றவும், நிச்சயமாக நம்மிடத்தில் முயற்சிக்கின்ற பண்பு இருக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, ஒரு நல்லடியாருடைய வாழ்க்கையை அல்லாஹ் திருமறையில் சுட்டிக்காட்டியுள்ளான்.

மர்யம் (அலை)

ஏகஇறைவனின் மாபெரும் கிருபையால் மர்யம்(அலை) அவர்கள் ஆண்துணையின்றி கர்ப்பமுற்றபோது, ”மர்யமே! உமது பெற்றோர்கள் மானக்கேடான காரியத்தை செய்தவர்களாக இருக்கவில்லை. இப்படி ஒழுக்கக்கேடான காரியத்தைச் செய்துவிட்டாயே!” என்று அவர்களைப் பார்த்து அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தூற்றிப்பேசினார்கள். வார்த்தைகளால் வேதனைப்படுத்தினார்கள். இவ்வாறெல்லாம் மற்றவர்களால் பழித்துரைக்கப்பட்ட போதும் கூட மர்யம் (அலை) அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறி பேரீச்சைமரத் தோட்டத்தின் வழியாக வந்து கொண்டிருக்கும் போது, மர்யம் (அலை) அவர்களுக்கு கடுமையான பிரசவ வலியும் பசியும் ஏற்படுகின்றது. அங்கேயே வேதனையால் துடிக்கின்றார்கள். அப்போது அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி மர்யம்(அலை) அவர்களுக்கு ஒரு கட்டளையிடுகிறான். அச்சம்பவத்தை அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான்.
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். பேரீச்சை மரத்தின் அடிபாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்! (என்றார்) . நீர் உண்டு பருகி மன நிறைவடைவீராக.
(அல்குர்ஆன்:)– 26)
இங்கு அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நாமெல்லாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அவனுடைய அனுமதியின்றி மண்ணிலிருந்து சிறுவித்தும் தானாக முட்டிமுளைத்து விடாது. மரக்கிளையிலிருந்து காய்ந்தஇலையும் கூட தானாக கீழே உதிர்ந்துவிடாது. இன்னும் சொல்லப் போனால் பனு இஸ்ராயில் சமுதாயத்தவர்களுக்கு மன்னு சல்வா என்ற உணவை அவன்தான் வானிலிருந்து இறக்கி வைத்தான். இத்தகைய ஆற்றல்மிக்கவன், தனக்கு கட்டுப்பட்டுவாழ்கின்ற நல்லடியார் மர்யம்(அலை) அவர்களுடைய பசித்தேவையை அவர்களே எதிர்பார்க்கவியலாத விதத்தில் போக்கியிருக்க முடியும். ஆகு என்று அவன் கூறினால் எதுவானாலும் அடுத்தநிமிடமே நடந்தேறிவிடும். எனினும் இவ்வுலகைப் பொறுத்தவரையில் எந்தவிதமான முயற்சியும் உழைப்பும் இல்லாமல், எந்தவொரு பிரதிபலனையும் மனிதன் தானாக ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்துகின்ற விதத்தில், பேரீச்சமரத்தின் கிளையைப் பிடித்து உலுக்குமாறு அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான்.
இதிலிருந்து இவ்வுலத்தில் சிறுதுரும்பு கூட வியர்வை சிந்தாமல் தானாக கிடைத்துவிடாது; சோம்பேறித்தனமாக வீட்டுமுற்றத்தில் முடங்கிக் கிடந்தால் தானாக வேலைவாய்ப்பும் வளமான வசதியும் வந்திறங்கி விடாது. வறுமை அணுஅளவும் அகன்றுவிடாது என்ற படிப்பினையை நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

வணக்கவழிபாட்டில் அதிகமுயற்சி

நமக்கு வாழ்வியல் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள், மார்க்கக் கடமைகளில் முனைப்புடன் செயல்பட்டார்கள். மறுமையில் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவதாகவும், அதற்காக இரவில் நின்றுவணங்குமாறும் அல்லாஹ் தனது தூதர் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு நாளும் இரவிலே பல நாழிகைகளைத் தியாகம் செய்து, வணக்கவழிபாட்டில் பேணுதலைக் கடைபிடித்தார்கள். இதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிய முடிகின்றது.
நபி(ஸல்) அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இருபாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுவிடும். இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே ? என்று கேட்டேன். நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல் : புஹாரி (1380)
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள்.
அறிவிப்பவர் : முகீரா(ரலி) நூல் : புஹாரி (1130)
தமது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் நல்லடியாராக இருக்க வேண்டும்; அருளப்பட்ட அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காக அதிகமுயற்சியை வணக்க வழிபாட்டிற்காக செலுத்தியிருக்கிறார்கள். மேலும் மறுமையில் வெற்றிபெற்று சொôக்கம் செல்ல வேண்டும் என்று பேராவலோடு வினாதொடுத்தவர்களுக்கு இவ்வாறே அதிகமாக வணக்கவழிபாட்டில் ஈடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுரையயையும் பகன்றிருக்கிறார்கள்.
மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான “ஸவ்பான்’ (ரலிலி) அவர்களைச் சந்தித்து, “என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை’ அல்லது “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை’ எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலிலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது “இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்” என்றார்கள்.
பின்னர் நான் அபுத்தர்தா (ரலிலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலிலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். நூல் : முஸ்லிம் (842)
இறுதி இறைவேதமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தின் கடைசிப் பத்துநாட்களில் நபி (ஸல்) அவர்கள், மற்றநாட்களைக் காட்டிலும் மிகத்தீவிரமாக நல்லமல்களில் ஈடுபடுவார்கள். தவிர, அக்காரியங்களின் பக்கம் தமது குடும்பத்தாரையும் தூண்டுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கüலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள், “குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புஹாரி (3220)
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலில) நூல் : புஹாரி (2024)
ஆனால் அறிந்தும் அறியாமலும், நாள்முழுவதும் நொடிக்கு நொடி கணக்கற்ற பாவங்களைச் செய்துகொண்டிருக்கின்ற நாம், கடமையான தொழுகைகளையாவது தவறாமல் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறோமா? என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மறுமையில் வெற்றியடைய வேண்டும் என விரும்பினாலும், அங்கு கேட்கப்படவிருக்கின்ற முதல்கேள்வியான தொழுகை விஷயத்தில் அதிகமான முஸ்லிம்கள் பொடுபோக்குத்தனமாகவே இருக்கின்றார்கள். தொழுகையை விட இவ்வுலகத்தின் பயன்களை அடைவதற்காகவே அவர்கள் அதிகமான முயற்சியையும் முக்கியத்துவத்தையும் செலுத்துகின்றார்கள் என்பதை நிதர்சனமாகக் காண்கிறோம். இதுவல்லாமல் மற்ற மற்ற அமல்கள் விஷத்திலும் நமது நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கின்றது.

மார்க்கத்தை அறிந்திட முயற்சித்தல்

நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அபூஹுரைரா(ரலி) அவர்கள் தான் அதிகமாக அறிவித்திருக்கின்றார்கள். மற்ற நபித்தோழர்களை விட இவர்களால் மட்டும் எப்படி அதிகமான ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது? என்ற கேள்வி நமக்குள் எழுவதைப் போன்றே அன்றைய மக்களுக்கும் வந்தது. இந்த கேள்வியை கேள்விபட்டபோது இதற்கான பதிலை அபூஹுரைரா(ரலி) அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றைக் காண்போம்.
அஃரஜ் என்பவர் கூறியதாவது :
அபூஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரே என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரு வசனங்கள் மட்டும் இல்லையென்றால், நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூஹுரைரா(ரலி) கூறிவிட்டு 2:159, 160 என்ற இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரித் தோழர்களோ தங்கள் விவசாயச் செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.ஆனால் இந்த அபூஹுரைராவாகிய நான் முழுக்க முழுக்க வேறு வேலைகளில் ஈடுபடாமல் பட்டினியாக நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகைத் தராத இடங்களுக்கெல்லாம் நான் சென்றேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறினார்கள். ஆதார நூல் : புஹாரி (118)
அபூஹுரைரா(ரலி) அவர்கள், தமக்குரிய அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாதவகையில் மிகவும் வறுமையால் வாடிக்கொண்டிருந்த திண்ணைத் தோழர்களில் ஒருவராவார். ஆயினும் தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் நபிமொழிகளை அறிந்து கொள்ளவதற்கு ஆர்வத்தோடு முயற்சியை மேற்கொண்டார்கள். அதன்பலனாக அவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகமான ஹதீஸ்களை அறிந்து மக்களுக்கு அறிவித்தார்கள். பிந்தைய காலங்களில் பல்வேறான இன்னல்களுக்கு மத்தியில் இமாம்கள் நபிமொழிகளை ஒன்றுதிரட்டினார்கள். இவ்வாறு அவர்களால் தொகுப்பட்ட மார்க்கம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தாங்கிய ஹதீஸ்கிரந்தங்கள், இன்று நம்முடைய தாய்மொழியிலேயே மொழிப்பெயர்க்கப் பட்டிருக்கும் நிலையில், அவற்றை தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிக்கின்றோமா?. மார்க்கத்தை ஆர்வத்தோடு அறிந்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதினால் தான், மார்க்கத்திற்கு மாற்றமான விரோதமான செயல்களெல்லாம் நமது சமுதாயத்தில் மலிந்துக்கிடக்கின்றன. மேலும் மார்கத்தின் பெயரால் ஆலிம்மார்கள் ஷேகுமார்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைகள் ஆதாரமற்ற செய்திகளையெல்லாம் நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் இந்த அறியாமையின் கோரவிளைவாகவே மாற்றுமதத்தவர்களுக்கு ஒப்பாக வழிகேட்டிலே வீழ்ந்துக்கிடக்கின்றார்கள்.

அறிந்ததை செயல்படுத்த முயற்சித்தல்

மறுமையில் எளிதாக வெற்றியைப் பெற்றுத் தருகின்ற, இன்னும் நமது பாவங்களை அழிக்கின்ற பல நற்காரியங்களை, அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் நமக்கு நற்செய்தியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவற்றைக் கடைப்பிடிப்பதில் அன்றைய மக்கள் எவ்வாறு ஆர்வம் காட்டினார்கள் என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறியமுடிகின்றது.
தர்மம் பற்றிய இறைவசனம் இறங்கியதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் கூலிலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் அதிகப் பொருளைத் தர்மம் செய்தார். மக்கள், “அவர், பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்” எனக் கூறினார்கள். பிறகு மற்றொருவர் ஒரு ஸாஉ தானியங்களைத் தர்மம் செய்தார். அப்போது மக்கள் “”இவரது ஸாஉ (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை” எனக் கூறலானார்கள். அப்போது “”இ(ம் முனாஃபிக்கான)வர்கள் நம்பிக்கையாளர்களில் தாராளமாகத் தர்மம் செய்பவர்களையும், (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பைத் தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு” என்ற (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ரலி) நூல் : புஹாரி (1415)
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என கட்ளையிட்டால் எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலிலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து)விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்ஹம்/தீனார்)வரை உள்ளன.
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி) நூல் : புஹாரி (1416)
பிரபஞ்சத்தின் இரட்சகனும், அவனுடைய இறுதித்தூதரும் தர்மம் செய்யுமாறு வலியுறுத்தியதுமே அன்றைய மக்கள், வியர்வை சிந்தி கூலிவேலைப்பார்த்து இறைவழியில் வாரிவழங்கக் கூடியவர்களாக திகழ்ந்தார்கள். இன்றோ வேலைக்கு பல ஆட்களை வைத்து வியாபாரம் செய்து வசதியாக வாழ்பவர்கள் கூட அதிகமான தானதர்மங்கள் செய்வதற்கு தயாராக இல்லாமல் தயங்கி கொண்டிருக்கிறார்கள்.

வீரமரணம் அடைதல்

உஹது போரின் போது நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், இறைத்தூதர் அவர்களே நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன்? என்று கேட்டார். சொர்க்கத்தில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே தன் கையில் உண்ணுவதற்காக வைத்திருந்த பேரீத்தம் பழங்களை கீழே போட்டுவிட்டு, பின்பு போரில் கலந்து கொண்டார். இறுதியில் கொல்லப்பட்டுவிட்டார்.
அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூல் : முஸ்லிம் (3518)
அறப்போரில் பங்கேற்றுக் கொல்லப்பட்டால் கேள்விக்கணக்கின்றி எளிதாகச் சொர்க்கம் சென்றடைந்துவிடலாம் என்று இறைத்தூதர் கூறிய மறுகணமே, அதை நடைமுறைப்படுத்த முயற்சியை மேற்கொண்டு, இறுதிமுடிவாக வீரமரணத்தை அடைகின்றார். இதைப் போன்றே மார்க்க வழிமுறையைக் கற்றதும் அடுத்தநிமிடமே அதை செயல்முறைப்படுத்த நபித்தோழர்கள் ஆர்வத்தோடு முயன்றதை எடுத்துரைக்கும் விதத்தில் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. ஆனால் மகத்துவமிக்கவனிடத்தில் வெகுமதியைப் பெறுவதற்காக நன்மையின்பால் முனைகின்ற விஷயத்தில் நமது நிலையோ எள்ளி நகையாடுகின்ற வகையில் தான் இருக்கின்றது.

முயற்சிப்பவர்களுக்கு மிகைத்தவனின் உதவி

நாமெல்லாம் நிரந்தரமான மறுமைவாழ்வில் வெற்றியாளராக தேர்ச்சிபெறுவதற்காக விரைந்து செயலாற்றும் போது, எவ்வளவுதான் குறுக்கீடுகள் தடுமாற்றங்கள் வந்தாலும் நாம் தளர்ந்துவிடாமல் துணிவோடு முயற்சிக்கவேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அதற்கேற்ப நமது காரியங்களையெல்லாம் எளிதானதாக மாற்றித் தருவதாக, அருள்மறையில் அல்லாஹ் நமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளான்.
நம்பிக்கைக் கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.
(அல்குர்ஆன்:)
நம் விஷயத்தில் முயற்சிப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன்:)
ஐவேளைத்தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத் போன்ற முக்கியமான மார்க்கக் கடமைகளை பேணுதலாக கடைபிடிப்பதோடு, சுன்னத் தொழுகை தஹஜ்ஜத் தொழுகை மாதந்தோறும் 13,14,15 நாட்கள் நோன்பு மற்றும் வாரந்தோறும் திங்கள் வியாழன் நோன்பு போன்ற அதிகமான உபரியான அமல்களையும் நிறைவேற்றவேண்டும்; ஏகஇறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்காக அளவற்ற நற்காரியங்களைச் செய்யவேண்டும் என்று உறுதியோடு மார்க்கப் பாதையில் நாம் முயற்சித்தால், அதற்கேற்ப அல்லாஹ் நமது நிலையை சீர்படுத்திக் கொடுப்பான். அப்பாதையில் தொடர்ந்து நடைபோடுவதற்குரிய புத்துணர்வை நமக்கு வழங்குவான். இதை பின்வரும் இறைச்செய்திகளிலிருந்து நாம் அறியமுடிகின்றது.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள கூறினார்கள் :
என் அடியான் என்னிடம் ஒரு எட்டு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் அவனிடம் நான் (விரித்த) இரு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். என்னிடம் அவன் நடந்துவந்தால் நான் அவனிடம் விரைந்து ஓடி வருகிறேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புஹாரி (7536)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கüல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அüப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவ தில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புஹாரி (6502)
இந்த போதனை தனிமனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகள் போன்றவற்றில் பின்தங்கியிருக்கின்றதா? இந்த மோசமானநிலையில் இருந்து மீண்டுவந்து வளர்ச்சியையும் வளத்தையும் பெறவேண்டுமெனில், அந்த சமுதாயம் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதோடு தம்மிடத்திலுள்ள திறமைகளையும் அருட்கொடைகளையும் சீரியவகையில் பயன்படுத்த முயற்றிக்க வேண்டும். அப்போது தான் அல்லாஹ் அச்சமுதாயத்தின் நிலையை மேலோங்க செய்வான்.
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான். (அல்குர்ஆன்:)

இனியாவது முற்சிப்போம்

மது, சூதாட்டம், போதைபழக்கம் போன்ற தீயக்காரியங்களில் ஈடுபடுபவர்கள் அதற்காக தங்களுடைய பொருளாதாரம் மற்றும் பொன்னான நேரத்தை செலவிட்டு அத்தீயக் காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் செலுத்தும் போது, நாளடைவில் அவைகளுக்கு அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். திருடுதல், மோசடி போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள், அந்த தவறான காரியங்களுக்காக கடினமான உக்திகளை கண்விழித்து கவனமாக கையாளுகிறார்கள். அசத்தியத்தில் இருப்பவர்கள் தங்களின் கொள்கைகளை வளர்க்கவும், சத்தியமார்க்கமான இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் பல வழிகளில் முயற்சித்து சதிவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறிருக்க நேர்வழி எது? வழிகேடு எது? மற்றும் நன்மை எது? தீமை எது? என்பதை அறிந்திருக்கின்ற நாம், வழிகேட்டை வெறுத்தவர்களாக நன்மை விளைவிக்கின்ற நேர்வழியின் பாதையில் பயணிக்கவேண்டுமெனில், அதற்காக பாடுபடவும் தயாராகஇருக்கவேண்டும். அதற்காக நம்மால் முடிந்தளவு உழைக்க உறசாகத்தோடு முன்வரவேண்டும். விதைக்கப்பட்ட சிறுவித்து மழை, புயல், வெயில் என்று நிலைமாறும் பருவநிலை மாற்றத்தோடு போராடியபிறகே, மற்றவர்களுக்கு பலனளிக்கின்ற விருட்சகமாக தலைநிமிர்ந்து நிற்கின்றது. இதனிடமிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே தூய்மையான முறையில் மார்க்கத்தை அறிவதற்கும், அதன்படி சரியான முறையில் வாழ்வதற்கும், அதை மற்றவர்களுக்கு தெளிவானமுறையில் எடுத்துரைப்பதற்கும் விரும்புகின்ற நாம், அதற்காக முழுமையான முயற்சியை மேற்கொள்வோமாக!