01) முன்னுரை

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

பித்அத் ஓர் வழிகேடு

ஷிர்க்கை பற்றி இருக்கும் விழிப்புணர்வு பித்அத்கள் விஷயத்தில் மக்களிடம் அதிகம் இல்லாமல் இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது வளர்ந்து திருமணமாகி பின்பு இறந்து அடக்கம் செய்யப்பட்டு ஓராண்டு கழிந்து ஒவ்வொரு வருடமும் என்று பித்அத் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் மரணித்தாலும் நிற்காமல் ஏராளம் ஏராளமாக மக்களால் செய்யப்படுகிறது.

இத்தகைய பித்அத் என்றால் என்ன? என்ற தெளிவை ஏற்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம். அல்லாஹ் நம் நோக்கத்தை நிறைவேற்றுவானாக!

பித்அத் என்பதின் அர்த்தம் என்ன?

பித்அத் என்பது அரபு வார்த்தையாகும். இதற்கு புதுமை, நவீனம் என்பது இதன் பொருளாகும்.

புதிய ஆடை, புதிய செருப்பு, புதிய மொபைல் என்பதை போல் பயன்படுத்தப்படும் புதுமையை மட்டும் குறிக்கும் ஒற்றை வார்த்தையுடன் இதன் அர்த்தம் நின்றுவிடாது. இந்த புதுமை என்பதின் கருத்து, முன்மாதிரியின்றி புதிதாக உருவாக்குவது என்பதாகும். அதாவது, ஒரு காலத்தில் அறியப்படாத ஒன்று புதிதாக தோன்றியிருக்கும் எனில் அதுவே பித்அத் ஆகும்.

உதாரணமாக, கை விசிறி என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் கை விசிறி உருவாக்கப்பட்ட போது அது பித்அத் ஆகும். கை விசிறி மட்டுமே தெரிந்த காலத்தில் மின் விசிறி உருவாக்கப்பட்ட போது அது பித்அத் ஆகும். இப்படி டெலிஃபோன், மொபைல், டீ.வி, ஏ.சி, ஃப்ரிட்ஜ், சைக்கிள், பைக், கார் என்று எதுவெல்லாம் ஒரு காலத்தில் அறியப்படாமல் புதுமையாக உருவாக்கப்பட்டதோ அந்நேரத்தில் அது பித்அத் ஆகும்.

இந்த அர்த்தத்தை குர்ஆனிலிருந்தே நாம் அறிந்துக் கொள்ளலாம்.

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ

(அல்லாஹ்வே) வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ‘ஆகி’விடும்.

(அல்குர்ஆன்: 2:117, 6:101)

இந்த வசனத்தில் இறைவன் தனது வல்லமையைப் பற்றி பதிவு செய்யும் போது தான் ஒரு பதீஃ என்று குறிப்பிடுகிறான். அதாவது, வானம், பூமி என எதுவுமே இல்லாத போதும் அதை புதிதாக முன்மாதிரியின்றி உருவாக்கியவன் நான் என்று சொல்கிறான்.

 قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ

(நபியே!) “நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். எனக்கு இறைச் செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 46:9)

இந்த வசனத்தில் நபிகள் நாயகத்திற்கு இறைவன் ஒரு மறுப்பை சொல்லிக் கொடுக்கிறான். இறை மறுப்பாளர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை ஏற்க மறுத்த போது, தான் இதற்கு முன் வந்த இறை தூதர்களிலிருந்து நான் புதுமையாகவோ வினோதமாகவோ இல்லை.

அவர்களை போன்றே நானும் இறைச் செய்திகளை எடுத்துச் சொல்லும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். நானும் மனிதனே என்ற கருத்தில் கூறச் சொல்கிறான்.

இங்கே புதுமை என்பதை குறிக்க இறைவன் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை பித்ஃ என்பதாகும். மேற்படி வசனங்களில் உள்ள பதீஃ , பித்ஃ என்பதும் பித்அத் என்பதும் ஒரே வார்த்தையின் வெவ்வேறு வடிவங்களாகும். இவை அனைத்திற்கும் பொருள் இல்லாத ஒன்று புதிதாக உருவாகுவது என்ற ஒன்றேயாகும்.

பித்அத் என்றால் என்னவென்று இப்போது ஒரு தெளிவு கிடைத்திருக்கும். ஆனால், இங்கே மேலே குறிப்பிட்ட இந்த ஃபேன், டீ.வி, ஃப்ரிட்ஜ் போன்றதற்கும் இந்த புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இதுவெல்லாம் பித்அத் என்ற அரபு வார்த்தையின் நேரடி பொருளை – அகராதி பொருளை அறிந்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட தகவல் தான். இங்கு நாம் மார்க்க அடிப்படையில் பித்அத் என்றால் என்ன என்பது குறித்து தான் அறிய இருக்கின்றோம்.

அதை அறிந்துக் கொள்ள வேண்டும் எனில் முதலில் பித்அத் என்பதின் அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேற்படி தகவல்கள் வழங்கப்பட்டது. அப்படியென்றால் மார்க்க அடிப்படையில் எது பித்அத்?

மார்க்க அடிப்படையில் எது “பித்அத்“?

இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவது தான் பித்அத் என்பதின் பொருள் என்று தெரிந்து கொண்டோம். மார்க்க அடிப்படையில் பித்அத் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதும் அதை மார்ககத்தில் உள்ளது என்றும் நன்மை என்றும் கருதுவது பித்அத் ஆகும்.

இதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(நஸாயீ: 1578).

இந்த செய்தியில் மார்க்கத்தின் அடிப்படையையும் இஸ்லாத்திற்கு எதிரான பித்அத்தையும் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

  • உண்மையான செய்திதான் பின்பற்றத் தகுதியானது. அது அல்லாஹ்வின் வேதமும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலும் தான்.
  • மிக மோசமான காரியம் என்பது அந்த இறை வேதத்திலும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலிலும் இல்லாததை மார்க்கத்தின் பெயரால் புதிதாக உண்டாக்குவதுதான்.
  • அத்தகைய புதிய காரியம் தான் பித்அத் எனும் வழிகேடு. அது நரகில் தள்ளும்.

எனவே, நாம் எந்தவொரு காரியத்தை மார்க்கத்தில் நன்மை என்று கருதி செய்வதாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு, ஆதாரம் ஏதுமின்றி காலம் காலமாக கடைபிடித்து வந்தாலும் அது பித்அத்தே ஆகும்.

மார்க்க அடிப்படையில் பித்அத் என்றால் என்ன என்ற இந்த அடிப்படையை இறைவன் குர்ஆனிலும் நமக்கு தெளிவுப்படுத்துகிறான்.

ثُمَّ قَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ابْنِ مَرْيَمَ وَآتَيْنَاهُ الْإِنجِيلَ وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَامَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ

பின்னர், அவர்களின் அடிச்சுவடுகளில் நம் தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் பின்தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் கழிவிரக்கத்தையும், கருணையையும் ஏற்படுத்தினோம்.

அவர்களாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதை அவர்கள்மீது நாம் விதியாக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவதையே (விதியாக்கினோம்.) அவர்கள் அ(த்துறவறத்)தையும் கடைப்பிடிக்க வேண்டிய முறைப்படி கடைப்பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களுக்கான கூலியை வழங்கினோம். எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே உள்ளனர்.

(அல்குர்ஆன்: 57:27)

இவ்வசனத்தில் கிறித்தவர்கள் எவ்வாறெல்லாம் மாறுசெய்தனர் என்பதில் ஒரு பகுதியை குறிப்பிடுகிறான். அவர்களுக்கு இறைத்தூதரும் இன்ஜீல் வேதமும் இருந்தும் அவர்கள் துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ அவர்களுக்கு விதிக்கவில்லை.

இங்கே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர் என்பதை குறிக்க இறைவன் பித்அத் என்ற வார்த்தையின் வினைச்சொல் வடிவத்தையே பயன்படுத்துகிறான். கிறித்தவர்கள் கடைபிடித்த துறவறம் என்பது எப்படி பித்அத்தாக ஆகிறது என்பதை ”அதை நாம் அவர்களுக்கு விதியாக்கவில்லை” என்ற வார்த்தையின் மூலம் இறைவன் விவரிக்கிறான்.

அதாவது, அல்லாஹ்வோ அவனது தூதரோ மார்க்கத்தின் ஒரு அம்சமாக சொல்லாத துறவறம் என்ற காரியத்தை மார்க்கத்தில் உள்ளதாக அவர்களே உருவாக்கி கொண்டனர் என்று இறைவன் குறிப்பிடுகிறான் எனில் இவ்வாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கம் என்று வரையறை செய்யாத ஒன்றை மார்க்கம் என்று நுழைவிப்பது தான் பித்அத் என இவ்வசனத்தின் மூலமும் தெளிவாகிறது.

கிறித்தவர்கள் துறவறத்தை – மார்க்க்கத்தில் இல்லாததை அதில் நுழைத்துக் கொண்டதை போல இன்றைக்கு இஸ்லாத்தில் இல்லாத மவ்லிது, மீலாது, பராஅத், கூட்டு துஆ, புர்தா, ஸலாத்துன்னாரிய்யா, இஷ்ராக் தொழுகை, தஸ்பீஹ் தொழுகை, ஈத் முபாரக் மற்றும் பல என்று சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பல புதுமைகளை மார்க்கம் என்ற பெயரால் நுழைத்து வைத்திருக்கிறார்கள்.

இவற்றை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னால் மார்க்கத்தை வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும். வஹியில் இல்லாத எதுவும் மார்க்கமாக ஆகாது என்ற வரையறையைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். மார்க்கத்தில் இத்தகைய வரையறை ஏன்? ஏனெனில், இது இறைவனுக்குச் சொந்தமான மார்க்கமாகும்.