முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர். முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர். இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான்.

எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை. ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 2269, 1142)

நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

முடிச்சு என்றவுடன் நூலில் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர்.

மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள். எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

(திருக்குர்ஆன்: 20:26), 27)

நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.

ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(அபூதாவூத்: 651)

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண் பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அடுத்து மற்றொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

(அல்குர்ஆன்: 2:102)

ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான். ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள். கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.

ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

அதாவது இருவருடைய உள்ளத்திலும் சந்தேகத் தீயை மூட்டி அதனால் பிரிவை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, இருப்பதை இல்லாதது என்றோ மனித மனங்களில் ஐயத்தை ஏற்படுத்த முடியும். இது தான் ஸிஹ்ருடைய அதிகபட்சமான விளைவு.

ஒருவனது கை, கால்களை இந்தக் கலையின் மூலம் முடக்க முடியாது என்றாலும், தனது கைகால்கள் முடங்கி விட்டன என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்த முடியும். உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார் என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும்.

இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.

இந்த விளைவைக் கூட திட்டவட்டமாகச் செய்து விட முடியுமா? முடியாது என்கிறான் இறைவன்.

இதன் மூலம் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று மேற்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான். 2:102 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

சூனியம் என்பது தந்திரமான ஏமாற்று வித்தையாக இல்லாமல் உண்மையாக நிகழ்த்தப்படும் அதிசயமாக இருந்தால் என்ன நிகழ வேண்டும்? சூனியம் வைக்கிறேன் என்று ஏமாற்றும் பேர்வழிகள் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் நாத்திகர்கள் மற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு எதிராக சூனியம் செய்து வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். அப்படி அவர்களால் செய்ய முடிவதில்லை. ஒரு சில தந்திரங்களைக் கற்று வைத்துக் கொண்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். யார் அவர்களின் பித்தலாட்டத்தை உண்மை என்று நம்புகிறார்களோ, அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் செய்வது பித்தலாட்டம் தான் என்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.