மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 60:10)

இந்த வசனத்தில் இணை வைப்பவர்களிடமிருந்து விலகி சத்தியத்தின் பக்கம் வந்த பெண்களை மீண்டும் அந்த இணை வைப்பாளர்களிடம் அனுப்பி விடாதீர்கள்; இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று அல்லாஹ் கூறுகின்றான்.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தம் இல்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

(அல்குர்ஆன்: 24:26)

நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்குத் தகுதியானவர்கள்; கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்குத் தகுதியானவர்கள் என்று இந்த வசனத்தில் கூறுகிறான்.

இந்த இறைக் கட்டளையை நாம் ஏற்றுச் செயல்படுகிறோமா? இல்லை. அதனால் தான் இணை வைப்பிலிருந்து மீண்டு, ஏகத்துவத்திற்கு வந்த பெண்களை விட்டு விட்டு, எந்தப் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று இறைவன் கூறுகின்றானோ அந்த இணை வைக்கும் பெண்களைத் தேடிச் செல்கிறோம்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், ஏகத்துவ மாப்பிள்ளைக்காக காத்திருந்து முதிர் கன்னிகளாகி, ஊராரின் இழி சொற்களுக்கு ஆளாகி, கடைசியில் இறைவன் தடை செய்துள்ள கெட்ட ஆண்களிடத்தில் அந்த நல்ல பெண்கள் போவதற்குக் காரணமாக நாம் ஆகி விடுகின்றோம்.

60:10 வசனம் இறங்கியதும் உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான இரண்டு மனைவியரை விவாகரத்துச் செய்தார்கள். “இணை வைக்கக் கூடியவர்கள்; இவர்களுடன் வாழ்வதை இறைவன் தடை செய்துள்ளான்” என்று கூறி தன்னுடைய மனைவியரை தலாக் விட்டார்களே அந்த உமர் (ரலி) அவர்களிடம் இருந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? இல்லை.

அந்த உறுதி நம்மிடம் இருந்தால், மார்க்கம் என்று வருகின்ற போது சொந்தம், பந்தம் எதுவும் வேண்டாம்; நீ வேறு, நான் வேறு என்று கூறி, இணை வைக்கும் பெண்களைப் புறக்கணித்து விட்டு ஏகத்துவப் பெண்களைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஏகத்துவப் பெண்களும் தேங்கிக் கிடக்க மாட்டார்கள்.

ஏகத்துவ வாதிகள் என்று சொல்லிக் கொண்டு, இணை வைக்கும் பெண்களை சிலர் திருமணம் செய்கிறார்கள் என்றால், வேறு சிலர் அழகும், செல்வமும், குலப் பெருமையும் உள்ள பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏகத்துவக் கொள்கையுடைய பெண்களைத் தான் திருமணம் செய்வோம் என்று கூறிக் கொண்டு, மேற்கண்ட நிபந்தனைகளை இடுகின்றனர்.

நாங்களும் ஏகத்துவ வாதிகள் தான். பத்து, பதினைந்து வருடங்களாக ஏகத்துவத்தில் இருக்கிறோம் என்று கூறுவார்கள். மேலும் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் கூறுவார்கள். ஆனால் தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் என்று வந்து விட்டால் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் மணப் பெண்ணைத் தேர்வு செய்வார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது, அவள் நல்லவளா? பண்புள்ளவளா? மார்க்கப் பற்றுள்ளவளா? என்று கவனிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

“நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

1. அவளது செல்வத்திற்காக

2. அவளது குடும்பத்திற்காக

3. அவளது அழகிற்காக

4. அவளது மார்க்கத்திற்காக

மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5090)

அழகு, செல்வம், குடும்பப் பாரம்பரியம், மார்க்கம் ஆகிய நான்கு நோக்கங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள் எனவும், மார்க்கப் பற்றுள்ளவளை மணப்பவரே வெற்றியடைபவர் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர், பெண்ணைத் தேர்வு செய்யும் போது, பண்பானவளா? மார்க்கப் பற்றுள்ளவளா? என்று பார்ப்பதில்லை. மாறாக, நம்முடைய குடும்ப அந்தஸ்துக்கும், பாரம்பரியத்திற்கும் தகுதியானவளா? நல்ல அழகுள்ளவளா? தண்ணீர் குடித்தால் அது தொண்டையில் இறங்குவது தெரியும் அளவுக்கு நிறமுடையவளா? என்றெல்லாம் பார்க்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் எங்கள் ஊரில் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் பெண் வீட்டாரிடம், “நான் மஹர் கொடுத்து உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்கிறேன்; சீர் எதுவும் தர வேண்டாம்’ என்று கூறியுள்ளார். அந்தப் பெண் ஏகத்துவக் கொள்கை உடையவள் இல்லை. முழுக்க முழுக்க இணை வைப்பில் மூழ்கிய பணக்கார வீட்டுப் பெண். மாப்பிள்ளை வீட்டாரோ தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மஹர் கொடுத்து, சீர் வரிசைகள் வேண்டாம் என்று கூறி இணை வைப்பில் உள்ள இந்த பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவளது செல்வம் தான்.

இது ஓர் உதாரணம் தான். இன்னும் எத்தனையோ பேர் அழகையும் செல்வத்தையும் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள். அதைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், மணந்தால் ஏகத்துவ மாப்பிள்ளையைத் தான் மணப்பேன்; இல்லையேல் காலம் முழுவதும் கன்னியாகவே இருப்பேன் என்ற கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள். இந்தப் பெண்களை நீங்கள் புறக்கணிப்பதற்குக் காரணம் இவர்களிடம் அழகில்லை; அழகு இருந்தாலும் செல்வம் இல்லை என்பதால் தானே!

மஹர் கொடுத்து, பணக்காரப் பெண்ணைத் தேடிச் சென்று திருமணம் செய்வதற்குக் காரணம், நாம் கேட்கவில்லை என்றாலும் பெண்ணுக்குத் தாங்களாக நகை போடுவார்கள்; பிற்காலத்தில் சொத்து கிடைக்கும். சொந்த பந்தங்களைப் பகைத்துக் கொண்டு, அல்லாஹ்வுக்காக மட்டுமே காத்திருக்கும் இந்தப் பெண்களை மணந்து கொண்டால் என்ன சொத்தா கிடைக்கப் போகின்றது?

அன்று சத்திய மார்க்கத்திற்காக பிறந்த ஊரை விட்டு, தங்கள் தாய், தந்தையரை, மனைவி மக்களை, சொத்து சுகம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, எதுவுமே இல்லாத ஏழைகளாக ஹிஜ்ரத் செய்தார்களே! அந்த சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளை ஒவ்வொரு மேடைகளிலும் கேட்கும் நீங்கள் அந்த வரலாறுகளிலிருந்து படிப்பினை பெற்றீர்களா? அவ்வாறு படிப்பினை பெற்றிருந்தால் இன்று அழகிற்கும், செல்வத்திற்கும், குலப் பெருமைக்கும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்களா?

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்!