மாமியார் vs மருமகள்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

முன்னுரை

ஒரு குடும்பம் உருக்குலைந்து விடாமல் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருக்கக் கூடிய பெண்கள், குறிப்பாக மாமியார் மருமகள் இருவருமே இணக்கமாக, ஒற்றுமையாக, பரஸ்பர உறவுடன் வாழ வேண்டும். இல்லையேல் அக்குடும்பம் சீரழிந்துவிடும்.

மாமியார், மருமகள் ஆகிய இருவருக்குமிடைய கருத்து வேறுபாடு, பிணக்கு, சரியான புரிந்துணர்வு இல்லாமை, நீயா நானா என்ற போட்டி, ஈகோ போன்ற காரணங்கள் இறுதியில் கொலை செய்யும் அளவுக்குத் தள்ளிவிடுகின்றது. மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது இந்தியா, பாகிஸ்தான் போன்று நேரெதிர் துருவங்களாகவே இருக்கின்றது. முடிவுறாத தொடர்கதையாக இருக்கும் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதைப் பெண்களாகிய ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட்டால் நமது இல்லறம் நல்லறமாகும். குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் செழிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடக்கியாளும் அதிகார வர்க்கம்

மாமியாராக இருக்கும் ஒரு பெண், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மேற்பார்வையில் திருமணமாகி வாழ வரும் மருமகள் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்றாற்போல் இருக்க வேண்டும், தனது கட்டுப்பாட்டில், தான் கிழித்த கோட்டைத் தாண்டாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அதன் உச்சக்கட்டம் என்னவென்றால் மருமகளுடைய சுய தேவைகள் விஷயத்தில் கூடத் தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று மாமியார் எதிர்பார்க்கின்றார்.

திருமணமாகிப் புதிதாக வாழ வரும் ஒரு பெண், பல வருடங்களாக அவள் வாழ்ந்த சூழல், பழகிய உறவுகள், நடைமுறைகள் அனைத்தையும் விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கணவனின் வீட்டாருடன் பொருந்திப் போவது, அவர்களுக்கு ஏற்றாற்போல் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது சற்றுக் கடினம்தான். அதற்குச் சில கால அவகாசம் தேவைப்படும் என்ற புரிதல் மாமியார்களிடம் இருப்பதில்லை. இதுவே மாமியார் செய்யும் முதல் தவறு.

இவ்வாறாக மாமியாரின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும் போது அங்கிருந்தே இரு தரப்பினருக்கும் போர்ச்சூழல் ஆரம்பித்து விடுகின்றது.

மாமியார் உடைத்தால் பொன் குடமாக இருந்தாலும் அது மண் குடம் தான்; அதே சமயம் மருமகள் உடைத்துவிட்டால் அது மண் குடமாக இருந்தால் பொன் குடமாகி விடும் என்ற பழமொழிக்கேற்ப மருமகள் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூடப் பெரும் குற்றமாகப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

வழக்கத்திற்கு மாற்றமாகச் சிறிது நேரம் அசந்து தூங்கி விட்டாலோ, வீட்டு வேலைகளில் எதையேனும் செய்யாமல் விட்டு விட்டாலோ, எவ்வளவு நேரம் தூங்குகிறாள், ஒரு வேலை பார்ப்பதில்லை, இப்படி ஒரு மருமகள் எனக்கு வாய்த்திருக்கிறாள் என்று வீட்டிற்கு வந்து போகும் நபர்களிடமும், தனது மகனிடமும் குறைகூறி, சிறு தவறுகளையும் பெரிதாக்கி விடுகின்றனர்.

வாழ வந்தவளுக்கு இடமளித்து, நாம் கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று எண்ணாமல், மருமகளிடம் இறங்கிப் போய்விட்டால் நாம் இத்தனை காலம் கட்டிக் காத்த சாம்ராஜ்யம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்ற எண்ணத்தில், அன்பாக நடந்து கொள்ள வேண்டிய மாமியார்கள், ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விடுகின்றார்கள்.

அடக்கம், மரியாதை என்ற பெயரில் மருமகள் குறிப்பிட்ட ஆடையைத் தவிர வேறு ஆடைகளை அணியக் கூடாது, வீட்டில் சப்தமாகப் பேசி சிரிக்கக் கூடாது, அப்படி இருக்கக்கூடாது, இப்படி இருக்கக்கூடாது என்று பல்வேறு “கூடாதுகள்” போட்டு அவளது சுதந்திரத்தைப் பறித்து விடுகின்றனர்.

காலை விடிந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் அந்த வீட்டு மருமகளே செய்தாக வேண்டும். அப்பெண்ணுடன் கூட்டு சேர்ந்து உதவிக்கரம் நீட்ட மாமியாரோ, நாத்தனாரோ முன்வருவதில்லை. வெறுமனே வேடிக்கை பார்ப்பதும், மருமகள் செய்யும் வேலையில் குறைகூறுவதுமே அவர்களிள் வேலை.

பசித்தாலும் கூட, கணவன் வீட்டிலுள்ளவர்கள் சாப்பிடும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையும் பல குடும்பங்களில் உண்டு.

இவ்வாறாக, வீட்டிற்கு வாழ வரும் பெண் அங்குள்ள அதிகாரம் படைத்தவர்களால் அடக்கியாளப்படுகிறாள். தனது மகனின் மனைவி, தனது சகோதரனின் மனைவி என்று எண்ணாமல் ஏதோ வேலைக்காரியைப் போல் நடத்தப்படுகின்றாள். இதுவே மருமகளாக வாழக்கூடிய ஒரு பெண்ணுக்கு எழுதப்படாத விதியாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் இளவரசியைப் போன்று செயல்படுவது நாத்தனார்கள் தான். தனது சகோதரனின் மனைவிக்கு ஒரு தோழியாக. சகோதரியாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய நாத்தனார்கள், மாமியாருக்கு நிகராக அல்லது மாமியாரையே மிஞ்சும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். தான் பிறந்த வீடு என்பதால் தனக்கே அதிக உரிமை, எனவே எனக்குத் தான் அதிக மரியாதை தர வேண்டும், எனக்குத் தான் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், சேவகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணுகின்றனர். தாங்கள் புகுந்த வீட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களை, தனது பிறந்த வீட்டில் வந்து தன் சகோதரன் மனைவியிடம் காட்டுகின்றனர். ஒரு சிறு தீப்பொறி கிடைத்தாலும் அதைப் பெரும் தீப்பந்தமாக மாற்றி அதில் குளிர்காயும் நாத்தனார்களும் உண்டு.

என் வீட்டில் நான் படாத கஷ்டமா? என்று ஒவ்வொரு பெண்ணுமே தனது மனக்குமுறலைக் கொட்டுவாள். அப்படித் தனது கணவன் வீட்டில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாலும் கூட, தன் வீட்டிற்கு வாழ வரும் பெண்ணை அவள் விட்டுவைப்பதில்லை.

ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ நம்மைப் போன்றே சக மனிதர்களையும் மதிக்க வேண்டும் என்று போதிக்கின்றது.

சரி நிகர் சுதந்திரம்

‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் கூறினார்’ என மஃரூர் கூறினார்.

(புகாரி: 30)

உணவைக் குறை கூறக் கூடாது

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

(புகாரி: 5409)

சமைப்பவரும் நம்முடன் உணவருந்தல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.

(புகாரி: 5460)

கலந்தாலோசித்தல்

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) ‘தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 604)

வீட்டிற்கு வாழ வந்த மருமகள் என்பதல்ல! பொதுவாகப் பிற மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் செய்திகள் உதாரணமாக அமைந்துள்ளன. அப்படியானால் நமது குடும்பத்தின் அங்கமான மருமகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அடங்காத மருமகள்

மாமியாரையும் நாத்தனாரையும் மட்டும் குறிப்பிடுவதால் மருமகள்கள் அனைவருமே பத்தரை மாத்துத் தங்கம் என்று எண்ணிவிடக்கூடாது. மாமியாரையே அடக்கியாளும் மருமகள்களும் இருக்கிறார்கள். கணவன் மட்டுமே போதும், கணவனைச் சார்ந்தவர்கள் யாரும் தேவையில்லை. கணவனின் வீட்டாருக்குப் பணிவிடை செய்ய மாட்டேன் என்று பெரும்பான்மையான பெண்கள் எண்ணுகின்றனர். அதனால் திருமணம் ஆண குறுகிய காலத்திலேயே தனது கனவனைத் தன்வசப்படுத்தி, அவனது தாய், தந்தையரை விட்டுப் பிரித்து, தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர்.

மேலும், மாமியார் சொல்லக்கூடிய சிறு விஷயங்களைக் கூட ஒரு குறையாகவே பார்க்கின்றனர். பல நேரம் மாமியார் கூறும் அறிவுரைகளும் கெட்டதாகவே தெரிகின்றது. இல்லாததை இருப்பது போன்றும், கூடுதல் குறைவாகவும் கணவனிடம் கூறி, தாயின் மேல் வெறுப்பை ஏற்படுத்தும் பெண்களும் உண்டு!

மாமியார் சொல்லும் எதுவானாலும் தவறாகவே தெரியக் காரணம் என்ன?

அவர் யார் என்னைப் பேசுவதற்கு? அவர் சொன்னால் நான் கேட்க வேண்டுமா? என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுவதற்கு, சகிப்புத்தன்மை இல்லாமல் போனதே காரணம்.

அதிலும் மாமியார், மாமனார் வயதானவர்களாக இருந்தால் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களுக்கு இருக்கும் மதிப்பு கூட அந்தப் பெரியவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஒரு டம்ளர் டீக்காக ஒரு மணி நேரம் தனது மருமகளை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் மாமியார்களும் இருக்கிறார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட மருமகள்கள் இருக்கும் வீடுகளில், நான் மட்டும் தான் வேலை பார்க்க வேண்டுமா? மாமியார், மாமனாரைப் பார்த்துக் கொள்ளும் கடமை எனக்கு மட்டும் தானா? என்று தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். பல வீடுகளில் ஒரு மாதம் அங்கே! ஒரு மாதம் இங்கே என்று முறை வைத்து அனுப்புவது, அல்லது பெண் பிள்ளைகளின் வீட்டிற்கு அனுப்பி விடுவது போன்ற நிலைகளும் உண்டு!

கணவர் வெளிநாட்டிற்கோ, வெளியூருக்கோ சென்று விட்டால், கணவன் இல்லாத வீட்டில் எனக்கு என்ன வேலை என்று எண்ணி பிறந்த வீட்டிற்கே சென்றுவிடுகின்றனர். அவ்வப்போது விருந்தாளி போல் புகுந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர். மாமியாரும், மாமனாரும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு வேறு வழியின்றித் தங்கள் கடைசிக் காலத்தைத் தள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதற்கான காரணம் என்னவென்றால், வாழ வரும் ஒரு பெண் தனது மாமியார், மாமனாரை, தாய் தந்தையாகக் கருதாமல் எதிரியைப் போன்று பார்ப்பது தான்.

ஒரு குடும்பத்தின் ஆணிவேரே அவ்விருவரும் தான். அவர்கள் அனுபவக் காலம் நமது வயது என்பதை உணர்ந்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிடுகின்றர்.

திருமணமான ஒரு பெண்ணின் பொறுப்புகளில் கணவனின் உறவுகளைக் கவனிப்பதும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது குறித்தும் மறுமையில் கேள்விகள் உண்டு என்ற இறைபயம் இல்லாமல் போனது தான் இதுபோன்ற நிலைகளுக்குக் காரணம்.

என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், ‘திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘கன்னி கழிந்த பெண்ணையாக? கன்னிப் பெண்ணையா?’ என்று கேட்டார்கள். நான், ‘(கன்னிப் பெண்ணை) அல்ல கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)’ என்று கூறினேன். ‘உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் – ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களை விட்டுவிட்டு உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீ செய்தது சரிதான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

(புகாரி: 4052)

என்னை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்து பத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் பையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி)

(புகாரி: 5188, 5224)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

(புகாரி: 5188) (முஸ்லிம்: 3733)

உசுப்பேற்றும் உறவுகள்

குடும்பப் பிரச்சனைகளில் முக்கியப் பங்காளிகளாக இருப்பவர்கள் நம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள். எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல இரு தரப்புக்கும் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுக் குதூகலமாக இருப்பார்கள்.

உதாரணமாக, மாமியார் தனது மருமகளைப் பற்றி ஏதாவது குறைகூறினால், ‘சின்னப் பெண் தானே! கொஞ்சம் அனுசரித்துக் கொள்! எல்லாம் சரியாகி விடும்’ என்று சமாதானப்படுத்தாமல், ‘அப்படியெல்லாம் இடம் கொடுக்காதே! எந்த வீட்டிலாவது மருமகள் இப்படி நடக்கிறாளா? உன் கையை மீறிப் போக விட்டுவிடாதே!’ என்றெல்லாம் உசுப்பேற்றி விடுகின்றார்கள்.

அதே சமயம், இங்கே மாமியாரைப் பற்றி மருமகள் ஏதேனும் கூறினால், அவளிடம் நல்லுபதேசம் சொல்வதற்குப் பதிலாக, ‘குட்டக் குட்ட குனிந்து கொண்டே போகாதே! சுதாரிப்பாக இருந்து கொள்! எதிர்த்துப் பேசினால் தான் அடங்கிப் போவார்கள்’ என்றெல்லாம் ஏற்றி விடுவார்கள். நல்லது செய்வது போன்றே நடித்து இரு தரப்புக்கும் பிளவு ஏற்படப் பாலம் அமைத்துக் கொடுப்பது இவர்கள் தான். இத்தகையோரைக் குழப்பவாதிகள் என்று திருமறை கூறுகின்றது.

அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின்னரும் அதை முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். அவர்கள் பூமியில் குழப்பம் செய்கின்றனர். அவர்களே நஷ்டவாளிகள்.

(அல்குர்ஆன்: 2:27)

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் செய்யவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

(அல்குர்ஆன்: 47:22)

அவதிப்படும் ஆண்கள்

குடும்பத்திலுள்ள பெண்களிடையே நடக்கும் உரிமைப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டு முழிப்பது ஆண்கள் தான். நான் தான் பெற்றெடுத்தேன், எனவே எனக்குத் தான் உரிமை அதிகம் என்று தாயும், நான் தான் இறுதி வரை வாழப்போகிறவள், எனக்குத் தான் உரிமை அதிகம் என்று தாரமும் நீயா நானா என்று மோதிக் கொள்கின்றனர். இடையே மாட்டிக் கொள்ளும் ஆண்கள் யார் பக்கம் பேசினாலும் மறுதரப்பில் அநியாயக்காரனாகவே பார்க்கப்படுகிறான். சரி! எதிலும் தலையிடாமல் இருந்து விட்டால், பொறுப்பற்றவன் என்று பெயரெடுக்கிறான்.

வேலையை முடித்து விட்டு, அமைதியைத் தேடி வீட்டிற்கு வரும் ஆணிடம் இரு சாராரும் ஒருவருக்கொருவர் சரமாரியாகக் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இதனால் கொஞ்ச நஞ்ச அமைதியையும் இழந்து செய்வதறியாது தவிக்கிறான்.

இதனால்தான் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதனை என்று சொல்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களுக்கு, பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

(புகாரி: 5096)

நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அபசகுனம் என எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும் தான் இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

(புகாரி: 5094)

சகுனம் என்பது இல்லையென்றாலும், அப்படி ஒன்று இருந்தால் அது பெண்களாகத் தான் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

தேவை மன மாற்றம்

ஆண்களின் மன அமைதி கெட்டு, குடும்பம் சந்தோஷத்தை இழந்து தவிப்பதற்குக் காரணியாக இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைக்குத் தீர்வு நல்ல மன மாற்றம் தான். இருவரும் பரஸ்பரம் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

மாமியார், மருமகள் இருவருமே எது சொன்னாலும், எது செய்தாலும் அதை ஒரு குறையாக, தவறாகப் பார்க்காமல் சகித்துக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் குறையைக் காணும் போது, அவரிடமுள்ள நிறையைக் கண்டு திருப்தியடைந்து, குறையைக் கண்டும் காணாமல் விட்டு விட வேண்டும்.
ஒருவருக்கொருவர் மூன்றாம் நபரைப் போல் பார்க்காமல் மாமியாரை தாயைப் போன்றும், மருமகளைத் தன் மகளைப் போன்றும் கருதவேண்டும். மனம் விட்டுக் கலந்துரையாடுவது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது, அவரவர் உரிமையில் தலையிடாமல் உணர்வுக்கு மதிப்பளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல நேரங்களில் நமக்குப் பிடிக்காத செயல் நடக்கும் போது அல்லது தவறே செய்யாமல் விமர்சிக்கப்படும் போது அங்கே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பேசுவதால் பிரச்சனை எனும் போது மவுனம் காப்பதே சிறந்தது.
அதிகாரத்தால் அடக்கியாள்வதை விட அன்பால் ஆட்சி செய்ய முயற்சிக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் புத்தகம் நமக்கு அதையே கற்றுக் கொடுக்கின்றது.
நான்தான் பெரியவள், நான் யாருக்கும் அடங்கிப் போக மாட்டேன் என்றிராமல் பல இடங்களில் விட்டுப் பிடித்தும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும். நீயா நானா என்று வாதம் செய்ய இது பட்டிமன்றமல்ல! வாழ்க்கைப் பயணம். எனவே சூழ்நிலைக்குத் தக்க நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
முடிந்தவரை இரு தரப்பும் ஒருவர் மற்றவரைப் பற்றி அடுத்தவரிடம் குறை கூறாமல், வீட்டுப் பிரச்சனைகளை நமக்குள்ளே பேசித் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
நம்மைப் போன்றே பிறரையும் கருத வேண்டும். ஒரு காலத்தில் தன் மாமியாரால், நாத்தனாரால் தான் பட்ட கஷ்டத்தை, தனது மருமகள் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அதேபோல் மருமகளும், நாளை நாமும் மாமியாராக ஆகலாம், நமக்கும் மோசமான நிலை ஏற்படலாம் என்பதை உணர்ந்து மாமியார், மாமனாரை தாய் தந்தையரைப் போல் அன்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் பட்ட கஷ்டம் நம்மைப் போன்ற ஒருத்திக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதை ஒவ்வொரு கனமும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறரது குறையை ஆராயாமல் நமது குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சமுதாயமும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை அவன் மாற்றுபவனாக இல்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 8:53)

‘உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

(புகாரி: 13)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)

(புகாரி: 6065)

நமது செயல், பேச்சு என ஒவ்வொன்றைப் பற்றியும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்ற இறையச்சத்துடன், மார்க்கம் காட்டிய வழியில் வாழ்ந்தால் குடும்ப வாழ்வில் மட்டுமல்லாது மறுமை வாழ்விலும் வெற்றி பெறலாம்.