மாநபி வழியில் மழைத் தொழுகை
நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மழையின்மையைப் பற்றி மக்கள் முறையிட்டார்கள். ஒரு மிம்பரை (மேடையை) அமைக்கக் கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாள மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று கூறி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு, மக்களே! உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழியும் காலம் தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள் முறையிட்டீர்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான். உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான் என்று கூறினார்கள்.
பின்னர் பின்வருமாறு கூறினார்கள்.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.
(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)
பிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.
பிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
அல்லாஹ் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. அல்லாஹ்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள் நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள். பிறகு அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் அல்லாஹ்வின் அடிமையும், அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (அபூதாவூத்: 1173) ➚
மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெறப்படும் மழைத் தொழுகை முறைகள்:
- பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வரவேண்டும்.
- திடலில் தொழ வேண்டும்.
- இமாமிற்கு மிம்பர் மேடை ஏற்பாடு செய்ய வேண்டும்.
- சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.
- இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று இறைவனைப் பெருமைப்படுத்தி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
- பிறகு இமாம் மக்களை நோக்கி மக்களே நமதூரில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் இந்த மழைத் தொழுகையை ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு மழைபொழிய வேண்டிய காலத்தில் மழை பொழியாமல் தாமதமாகிவிட்டது. நாம் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நம்முடைய பிரார்த்தனையை நிச்சயம் அவன் நிறைவேற்றுவான் என்றும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான் என்று கூறி பின்னர்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.
என்று மக்களை நோக்கி இமாம் கூறி பிறகு புறங்கைகளை வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.
- இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- இமாம் மக்களை நோக்கி இருந்தவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பி கைகள் உயர்ந்து இருக்கும் நிலையிலேயே மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
- பிறகு மிம்பரிலிருந்து இறங்கி பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
- அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.
இவற்றுக்கான ஏனைய ஆதாரங்கள் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)(முஸ்லிம்: 1631) ➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்திக்கும் போது தம்முடைய முன்கைகளின் வெளிப்பகுதியை தம்முடைய முகத்தை நோக்கியும் உள்ளங்கைகளை பூமியை நோக்கியும் ஆக்குவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) (அஹ்மத்: 12554) ➚
من أصحاب رسول الله صلى الله عليه و سلم قد شهد معه أحدا قال : قد رأيت رسول الله صلى الله عليه و سلم حين استسقى لنا أطال الدعاء وأكثر المسألة قال ثم تحول إلى القبلة وحول رداءه فقلبه ظهر البطن وتحول الناس معه
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக மழை வேண்டிய போது அவர்களை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் துஆவை நீட்டினார்கள். வேண்டுதலை அதிகப்படுத்தினார்கள். பிறகு கிப்லாவை நோக்கி திரும்பி தம்முடைய மேலாடையை மாற்றிப் போட்டார்கள். அதன் வெளிப்பகுதியை உள்பகுதியாக புரட்டினார்கள். நபியவர்களுடன் சேர்ந்து மக்களும் (தங்களுடைய மேலாடையை) மாற்றினார்கள். (அஹ்மத்: 16465) ➚
மேற்கண்ட ஹதீஸில் நபியவர்களுடன் சேர்ந்து மக்களும் மேலாடையைப் புரட்டிப் போட்டதாக இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து இமாம் மேலாடையை மாற்றிப் போடும் போது மக்களும் தங்களது மேலாடையை மாற்றிப் போட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் பெண்கள் இவ்வாறு மேலாடையை மாற்றிப் போடக் கூடாது
பெண்கள் தங்களின் முகம், முன்கைக்கும் சற்றும் கூடுதலான கைப்பகுதி, கால்பாதம் ஆகியவற்றைத் தவிர பிற பாகங்களை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவற்கு அனுமதியில்லை. இதனை நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
எனவே மழைத் தொழுகை என்பது ஆண்களும், பெண்களும் கூட்டாக நிறைவேற்றுகின்ற தொழுகையாக இருப்பதினால் பெண்கள் தங்களது மேலாடையை மாற்றிப் போட வேண்டியதில்லை என்பதே சரியான கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), (திர்மிதீ: 512) ➚,(அபூதாவூத்: 984) ➚,(நஸாயீ: 1491) ➚,(இப்னு மாஜா: 1256) ➚,(அஹ்மத்: 3160) ➚
அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.
(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (அபூதாவூத்: 1169) ➚
அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா
(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!) அறிவிப்பவர்: அனஸ் (ரலி), (புகாரி: 1013) ➚