மலிந்துவிட்ட பாலியல் குற்றங்கள் இஸ்லாமிய சட்டமே தீர்வு!
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
சட்டத்தின் பிடி கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தேசத்திலும் குற்றச்செயல்கள் என்பது சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வுகளாக ஆகி விடுகின்றன.
செய்கின்ற தவறுக்கு எந்த விலையையும் கொடுக்க வேண்டியதில்லை என்கிற நிலை இருக்குமானால் எத்தகைய கொடூர குற்றங்களையும் தயக்கமின்றி செய்து விடக் கூடிய அசாத்திய துணிச்சல் மனிதனுக்கு வந்து விடுகின்றது.
தரமற்ற கல்விமுறை, கல்லாதவர்களுடைய சதவிகிதம் அதிகரித்தல், போதிய வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, சினிமா போன்ற ஊடகங்களின் தாக்கம் போன்ற பல காரணிகள் மனிதன் தவறு செய்வதற்கு தூண்டுதலாக இருக்கிறது என ஒரு பக்கம் நாம் காரணம் கற்பித்தாலும், நான் செய்கின்ற இந்த தவறுக்காக, இதற்கு நிகரான விலையை நான் கொடுத்தாக வேண்டும் என்கிற அழுத்தம் என் உள்ளத்தில் இருக்குமானால், அந்த எச்சரிக்கை உணர்வே என்னை கட்டுப்படுத்திக் கொள்ள போதுமான காரணியாகி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.
இன்று நம் நாட்டில் நடக்கின்ற, இதற்கு முன் நடந்து முடிந்த எண்ணற்ற குற்றச் சம்பவங்களை ஒருகணம் மனதினில் அசைப் போட்டுப் பாருங்கள். எந்தவொரு நிகழ்வுக்காவது, செய்த தவறுக்கு நிகரான தண்டனையை குற்றவாளிகள் அனுபவித்தார்களா? நிச்சயம் இல்லை.
நாட்டையே பரபரப்பாக்கிய புதுடில்லி மருத்துவக் கல்லூரி மாணவியின் படுகொலை.. அதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, சில மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு, தொடர்ந்து அவனுடைய வாழ்வாதாரத் தேவைக்காக தையல் இயந்திரத்தையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு விடுதலையான அவல நிலையை நாம் பார்த்தோம்.
சென்னையில் ஹாசினி எனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின் படுகொலையும் செய்த தஸ்வந்த் எனும் வாலிபர். இன்னமும் கடுமையான தண்டனை எதுவும் வழங்கப்பட்டதா?
தமிழகத்தில் ஆசிட் வீச்சினால் கொல்லப்பட்ட காரைக்காலை சார்ந்த வினோதினி எனும் பெண்ணின் மரணம் தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட செய்தி எனலாம்.
கைதான குற்றவாளி சுரேஷ் குமார் என்பவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு நமது வரிப்பணத்தில் இன்னமும் மூன்று வேளை உணவு தான் ஊட்டப்படுகிறதே தவிர, செய்த தவறுக்கு நிகரான தண்டனை வழங்கப்பட்டதா?
வினோதினியின் மரண சாசனத்தில் கூட, எனக்கு நேர்ந்தது போல அவனுக்கும் நேர வேண்டும், அது தான் எந்தவொரு ஆணுக்கும் பாடமாக அமையும் என்று சொன்னாளே, அதற்கு இந்த அரசியல் சாசனம் செவி சாய்க்கவில்லையே.
உங்கள் மகளை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா? என்று வினோதினியின் தந்தையிடம் பத்திரிக்கையாளர்களிடம் கேட்ட போது, “தூக்கு தண்டனையெல்லாம் ஒரு நொடி தண்டனை.. ஒரு நொடியில் செத்து விடுவான்.. ஆனால் என் மகள் இரண்டு மாத காலம் துடிதுடித்து செத்தாளே.
அதற்கு அது ஈடாகி விடுமா? என் மகள் எப்படி இறந்தாளோ அதே போல அவனும் துடிதுடித்து தான் சாக வேண்டும், அதே போல அவன் முகத்திலும் ஆசிடை வீசுங்கள்..” என்று அலறினாரே.. இது ஏதோ மூன்றாம் நபரின் கருத்தில்லையே..
இது போன்று இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
குளிரூட்டும் ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு, பாதிக்கப்பட்டவனின் நிலையையும் சிந்திக்காமல், சமூகத்தில் இந்த குற்றச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகளையும் புரியாமல் சட்டமியற்றுவோரின் கருத்து, குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுகின்ற கருத்தாக இருக்கிறது.
ஆனால், பாதிக்கப்பட்ட நிலையில் நின்று சிந்திக்கும் எவரும், குற்றவாளிக்காக பரிந்து பேசவே முடியாது.
அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.
பழிக்குப்பழி என்று இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிடுவது கடுமையன சட்டம் அதன் மூலம் குற்றம் செய்வதற்கான அச்சம் இவை இருந்தால் மட்டுமே அப்பாவிப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்றவற்றைத் தடுக்க முடியும். அதன் மூலம் நிம்மதியான அச்சமற்ற வாழ்க்கை இருக்கிறது என்பதாகும்.
இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தினை வெறுமனே மத ரீதியாக அணுகுவதால், பெரும்பான்மை சமூகம் அதனை ஏற்க ஒரு வித தயக்கம் காட்டுகிறது.
ஆனால், இஸ்லாமிய சட்டம் தான் தேவை என்பதை நேரடியான வார்த்தைகளுடன் தான் அவர்கள் சொல்வதில்லையே தவிர, “..நடு ரோட்டில் சுட்டுக் கொல்ல வேண்டும்”, “அவர்களை வெட்டிப் போட வேண்டும்”, “உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்”, “அரபு நாட்டு தண்டனை வேண்டும்”, என்றெல்லாம் இவர்கள் பயன்படுத்தும் சொல்லாக்கங்கள், இஸ்லாமிய சட்டத்தினை வலியுறுத்துவதாக தான் இருக்கிறதே அன்றிவேறில்லை.
கொலைக்கும் கற்பழிப்புக்கும் மரண தண்டனை தான் தீர்வு என்பதில் இஸ்லாமிய சட்டம் மிக உறுதியுடன் இருக்கிறது.
இரண்டு காரணங்களால் இதன் நியாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
முதல் காரணம், கற்பழிப்பில் ஈடுபட்ட ஒருவனை நடுரோட்டில் வைத்து மரண தண்டனை கொடுத்து, அதை நாடே பார்க்கின்ற வகையில் ஊடகங்களில் ஒளிபரப்பினால் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என எண்ணுகின்ற எவருக்கும் கனவில் கூட அதை செய்கின்ற துணிச்சல் வராது.
அல்லது, குற்றச்செயல்களின் எண்ணிக்கை பெருவாரியான சதவிகிதம் அளவிற்கு குறைவதற்கு இதுவே ஒரு காரணமாக அமையும்.
இரண்டாவது காரணம், பாதிக்கப் பட்டவர்களுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி..!
என் மகளை ஒருவன் சீரழித்துக் கொலை செய்தால், போன உயிரை திரும்பப் பெற்று தர இயலுமெனில் அதை செய்வது பாதிக்கப்பட்ட எனக்கு தரப்படுகின்ற நீதி. அது சாத்தியமில்லை எனும் போது, அதற்கடுத்த படித்தரத்திலிருக்கும் நீதி என்ன?
என் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அரசாங்க வேலை தருவதா?
என் மகளை சீரழித்தவனுக்கு தையல் மெஷின் வழங்குவதா? அல்லது, அவனை நடுரோட்டில் சுட்டுக் கொல்வதா?
பாதிக்கப்பட்ட ஒருவர் எதை தேர்வு செய்வார்கள் என்பதை பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து சிந்திக்கும் இஸ்லாமிய மார்க்கம், கொலைக்கும் கற்பழிப்புக்கும் மரண தண்டனை ஒன்று தான் பொருத்தமான, நீதமான தீர்வாக அமையும் என்பதை இவ்வுலகிற்கு உரக்கச் சொல்கிறது.
ஆனால் வேடிக்கை என்னவெனில், நமது நாட்டில் தான், குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களை விடவும் சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
சென்னை புழல் சிறையில் டிவி, சினிமா, பிரியாணி உணவு என கைதிகள் அனுபவிக்கின்ற ஆடம்பர வாழ்க்கை குறித்த அதிர்ச்சிகர செய்தி சமீபத்தில் ஊடகத்தில் வெளியாகியிருந்ததை நாம் பார்த்திருப்போம்.
அப்படியானால், நாட்டில் ஊதாரித்தனமாக சுற்றித் திரிகின்ற, வேலைவெட்டி இல்லா ஒருவன், தவறுகள் எதையேனும் செய்து புழல் சிறையில் இலவச சொகுசு வாழ்க்கை வாழ்வதை விரும்புவானா அல்லது தினசரி சோற்றுக்கு அல்லோலப்படுவதை விரும்புவானா?
பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலை அல்லது கற்பழிப்புக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் பிணையில் வெளியில் வரும் போது, பாதிக்கட்டவர்களே அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்வுகளாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்த அரசாங்கமோ நீதித்துறையோ தண்டிக்காது; தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது’ என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செயப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். முன்விரோத கொலை, பழிக்குப் பழி என்பதெல்லாம் இன்றளவும் கிராமப் பகுதிகளில் பரவலாக நடைபெறுவதற்கு இதுவும் முக்கிய காரணமாக உளது எனலாம்.
தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை குற்றங்கள் நம் மண்ணில் அதிகரிக்கவே செய்யும் என்பதற்கான அதிர்ச்சியூட்டும் சான்று தான் சில தினங்களுக்கு முன் நாட்டையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்முறை சம்பவங்கள்.
காதல் வலை வீசி பெண்களை மயக்கி தங்கள் காமப்பசிக்கு இரையாக்குகின்ற சதிச் செயலினை ஒரு குழுவாக, பல வருடங்களாக செய்து வந்திருக்கின்றனர் மனிதப் போர்வையில் இருக்கும் சில மிருகங்கள்.
கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோ பதிவும் செய்து, காமவெறியாட்டம் ஆடியிருக்கின்றனர்.
இவர்களின் வெறிக்கு ஏராளமான அப்பாவிப் பெண்கள் இரையாகியிருக்கிறார்கள் என்கிற செய்தியும், இது இன்றோ நேற்றோ நிகழ்ந்ததல்ல, பல வருடங்களாக இது தொடர்ந்து நிகழ்ந்தப்பட்டு வந்திருக்கிறது என்பதும், அதிகார வர்க்கத்தினரின் மறைமுக ஆதரவும் இந்த மிருகங்களுக்கு இருந்திருக்கிறது என்பதும், நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய செய்திருக்கின்றன.
இந்த மண்ணில் இன்னமும் மனித நேயம் மிச்சமிருக்கிறதா? மனிதர்களின் உள்ளங்கள் ஏன் இப்படி கல்லாகிப் போனது?? மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லையா? பெண்களுக்கு ஏன் இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் நம் தேசத்தில்??
ஒரு பக்கம், ஒழுக்க நெறிகள் போதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கள்.. பெண் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள், ஆண்களுக்கும் கற்பொழுக்கம் போதிக்கப்பட வேண்டும் என்பதாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள்.
இவையெல்லாம் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.
அதே சமயம், குற்றச் செயல்களை தடுப்பதற்கு இவை மட்டுமே போதுமான பரிகாரமா?
தவறு செய்வது மனித இயல்பாக ஆகி விட்டது என்கிற வகையிலும், இதனால் எந்த பெரிய பாதிப்பும் தமக்கு நேர்ந்து விடாது என்கிற துணிச்சல் மனிதனை தூண்டுவதாலும் தான் குற்றச் செயல்கள் நம் சமூகத்தில் குறையாமல் இருக்கிறது.
அதை கட்டுப்படுத்த ஒரே வழி, தவறுகளுக்கு கடுமையான தண்டனைகளை வகுப்பது ஒன்று தான். அதன் மூலம் மட்டும் தான், பிறிதொரு சமயம் இதே போன்றதொரு குற்றத்தினை செய்வதற்கு எவனும் துணிய மாட்டான்.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!115 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்.43 அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றப்படுவதை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற அளவிற்கு இஸ்லாம் குற்றத்திற்கான தீர்வை துல்லியமாக அளப்பீடு செய்கிறது.
குற்றவாளிகளுக்கு பரிவு கூட காட்டாதீர்கள் என்று சொல்வது ஏதோ இரக்க குணமே உங்களுக்கு கூடாது என்கிற பொருளில் அல்ல. காரணம், இஸ்லாம் எந்த அளவிற்கு மனிதநேயத்தை பேணக்கூடிய விஷயத்திலும், பிறர் மீது அன்பு செலுத்துகின்ற விஷயத்திலும் கவனம் செலுத்துகிறது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஏராளமான செய்திகளின் வாயிலாக நாம் அறிந்து தான் வைத்திருக்கிறோம். ஒரு மனிதனை வாழ வைப்பவர் ஒட்டு மொத்த மனித இனத்தையே வாழ வைத்ததற்கு சமம்.. என போதிக்கின்ற இஸ்லாம்.. தாகத்தால் தவித்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டியதன் மூலம் இறை மன்னிப்பைப் பெற்று ஒருவன் சொர்க்கம் செல்லக் கூட வாய்ப்புண்டு என்று போதிக்கின்ற மார்க்கம்.
அப்படிப்பட்ட நிலையில், குற்றமிழைத்த அந்த படுபாவிகளுக்கு இரக்கம் காட்டாதீர்கள் என்று இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிடுகின்றான் என்றால், இது தான் மனித குலத்தின் அமைதிக்கான ஒரே தீர்வு என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்விடம் குற்றம் செய்வதவன் மீது இரக்கம் காட்ட வேண்டிய தருணமல்ல, மாறாக பாதிக்கப்பட்டவன் மீது இரக்கம் காட்ட வேண்டிய தருணம்.
“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே! பாவம் அவனை தூக்கிலிடுகிறீர்களே” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மரணப்படுக்கையில் கிடக்கும் தன் குழந்தையின் உயிரை காப்பதற்காக தினக்கூலி ஒருவன் மருந்தை வாங்கச் கடைக்கு ஓடுகிறான்.
அவனிடமிருந்து ஒரு திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான் என்றால் அந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றி தன் குழந்தையின் உயிரையும் பறி கொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
தன் உயிரை விட மேலாக நேசித்த தன் மகளை காமக்கொடூரர்கள் கொடூரமாக கற்பழிப்பு செய்து, சின்னாபின்னமாக்கி கொலை செய்து வீசுகிறார்களே.. அந்த அப்பாவி தந்தைக்காக யார் பரிதாபப்படுவது?
நேர்மையையும், அமைதியான வாழ்வையும் விரும்பக் கூடியவர்கள் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்கின்ற அப்பாவிகளுக்காக பரிதாபப்படாமல், அவர்களை நடுத் தெருவில் நிறுத்திய கயவனுக்காக பரிதாபப்படலாமா?
ஆனால், இன்று மனித உரிமை கமிஷன் எனும் பெயரில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும் போது மாத்திரம் இரக்கம், கருணை எனும் வாதத்தை முன்வைக்கிறார்களே தவிர பாதிக்கப்பட்டவனுக்காக கருணை காட்ட அவர்கள் முன்வருவதில்லை.
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை (மக்களுக்கு) விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். (அல்குர்ஆன்: 5:45) ➚
கொலை செய்தனுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தால், கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள்.
பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.
நம் தேசத்தில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தழுவி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்..
எப்போது என்ன நடக்குமோ? என்று அஞ்சி அஞ்சியே மக்கள் வாழும் நிலை.. பெண் குழந்தைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்க்கையை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது..
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கமல்லவா இதை சொல்கின்றது, இதை அங்கீகரித்தால் இஸ்லாமிய மார்க்கத்தை அங்கீகரித்தது போல் ஆகி விடுமே.. என்கிற குறுகிய எண்ணத்தோடு இதனை அணுகாமல் இதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்த நம் அரசாங்கமும் நீதிமன்றங்களும் முன்வர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் கூறும் நீதியை நிலை நாட்டிய நீதி நாயகர், நியாய ஆட்சியாளர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். “அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசு வார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்கஜல் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர்.
(உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்ட தெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்;
அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையஜத்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்’’ என்று சொன்னார்கள்.
எனவே இது போன்ற இஸ்லாம் கட்டளையிட்ட காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழக் கூடிய நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.