மனைவியின் பெற்றோர் செய்யும் உதவிகள் வரதட்சனையாகுமா?

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

திருமணத்திற்கு முன்பும், திருமணம் நடக்கும் போதும் கொடுப்பது தான் வரதட்சணை ஆகும்.

திருமணம் நடந்து மருமகன் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆன பின்பு அவர்களின் தேவைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பெண்ணின் பெற்றோர் கொடுப்பது வரதட்சணையில் சேராது.

 

حَدَّثَنَا بَدَلُ بْنُ المُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي الحَكَمُ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا، وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا». حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ»

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்

என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்து கொண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், அல்ஹம்து லில்லாஹ்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.

(புகாரி: 3113)

ஃபாத்திமா (ரலி) தந்தையிடம் பணியாளரைக் கேட்டுள்ளார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும் அக்கோரிக்கையில் பங்கு உண்டு என்பதால் தான் நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விட .. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்/

மாமனாரிடம் மருமகன் கேட்கலாமா என்று அறிவுரை கூறவில்லை. மாமனாரிடம் எப்படி உதவி கேட்பது என்று அலீ (ரலி) அவர்களும் தயக்கம் காட்டவில்லை. திருமணம் செய்வதற்கு நேரடியான அல்லது மறைமுகமான நிபந்தனை என்ற அடிப்படையில் இந்த உதவி அமையவில்லை.

 حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، ثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ، ثَنَا يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ
عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أُسَارَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بِقِلَادَةٍ، وَكَانَتْ خَدِيجَةُ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ حِينَ بَنَى عَلَيْهَا، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ: «إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا، وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ “

பத்ருப் போரில் எதிரிகள் தரப்பில் போரிட்ட அபுல் ஆஸ் கைதியாகப் பிடிக்கப்பட்டு இருந்தார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மூத்த மகள் ஸைனபின் கணவராவார். கைதிகளை தண்டம் செலுத்தி அழைத்துக் கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தனர். கணவரை மீட்பதற்காக ஸைனப் அவர்கள் தன் தாயார் கதீஜா (ரலி) அணிவித்த கழுத்து மாலையைக் கொடுத்து அனுப்பினார்கள். அந்த மாலையைப் பார்த்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்காக கடுமையாக பச்சாதாபம் கொண்டார்கள். அபுல் ஆஸை எந்த இழப்பீடும் இல்லாமல் விடுவிக்கவும், இந்த மாலையை அவரிடமே திருப்பிக் கொடுக்கவும் நீங்கள் சம்மதிக்கிறீர்களா? என்று நபித்தோழர்களிடம் கேட்டார்கள். (அவர்கள் சம்மதித்த பின் விடுவித்தார்கள்.)

(ஹாகிம்: 6840)

மருமகன் என்ற உறவுக்காக அவருக்கான தண்டத் தொகையை விட்டுக் கொடுத்தார்கள். இது அவருக்கு கொடுத்த வரதட்சனையாக ஆகாது.

 

 حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي حُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ ”

ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள்.

(அஹ்மத்: 23001)

ஹஸன், ஹுஸைன் ஆகியோரின் தந்தையான அலி (ரலி) தான் அகீகா கொடுக்க கடமைப்பட்டவர் ஆவார். ஆனால் அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தது வரதட்சணையில் சேராது.

எனவே மகளும் மருமகனும் முன்னேற வேண்டும் என்பதற்காக திருமணம் முடிந்த பின்னர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்பந்தம் ஏதுமில்லாமல் கொடுக்கும் அன்பளிப்புகளும் செய்யும் உதவிகளும் வரதட்சணையில் சேராது.