05) நிர்வாக திறன் நிறைந்தவர்

நூல்கள்: மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்
நிர்வாகத் திறன் நிறைந்தவர்

ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.பொருளாதாரம் தேசத்தின் முதுகெலும்பாகும். நாடும் நாட்டு மக்களும் முன்னேற, பொருளாதாரம் இன்றியமையாதது. உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நாட்டின் வளத்தைப் பெருக்கும்.

உள்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமான பாதையில் வழிநடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். நாட்டின் வளத்தின் மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பிப் பிழைப்பது நாட்டை அடைமானம் வைப்பதற்குச் சமம். இந்த நிலையில்தான் உலகின் பல நாடுகள் அடைமானத்தில் இயங்குகின்றன. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

விவசாயம் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த அடிப்படையாக இருக்கிறது என்பதை உணரும் ஒவ்வொரு அரசனும் அந்த விவசாயத்தை வளர்ப்பதற்கும் விவசாயிகளை மகிழ்விப்பதற்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் பல்வேறு திட்டங்களை வகுப்பான்.
விவசாயிகள் ஆர்வமாகக் களத்தில் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பதை உணர்ந்த அறிவுள்ள
ஒவ்வொரு அரசனும் இப்படித்தான் செயல்படுவான். ஆனால் நம்முடைய இந்திய நாட்டில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த நாட்டில் விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. விளைச்சலுக்கு ஏற்றவாறு அறுவடை செய்வதற்குப் பொருளாதாரம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

சுமார் 40 ரூபாய்க்கு மேலே விற்கப்படுகின்ற ஒரு கிலோ அரிசியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் பொழுது ஒரு விவசாயிக்குக் கிடைப்பது கிலோவுக்கு சுமார் எட்டு ரூபாய் தான். ஆனால் விவசாயி கேட்பதோ 12 ரூபாய். தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு, தன்னுடைய அத்தியாவசியத் தேவைக்கு நான்கு ரூபாய் ஒரு கிலோவுக்கு அதிகரித்துக் கேட்கும் இந்த விவசாயியின் எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

அரசாங்கத்திடம் கடன் வாங்கும் நிலையில் தள்ளப்படும் விவசாயிகளின் கடனுக்குத் தள்ளுபடி இல்லை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அதிகப்பட்ச சலுகைகள் இல்லை என்ற நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பங்கள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர நாட்டின் பிரதமரைச் சந்திப்பதற்காகப் பலகட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையே என்று எண்ணி வேதனையில் மூழ்கிய விவசாயிகள் தற்கொலை என்கின்ற தவறான முடிவில் விழுந்து விடுகிறார்கள்.
பசுமை இந்தியாவின் மூலதனம் விவசாயம்.விவசாயத்தை மேம்படுத்துவதிலும் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையும் கொள்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசு பசுமை இந்தியாவைப் பாலைவனமாக்கி வருகிறது.

இது ஒருபுறமிருக்க, நபிகளாரின் சிறந்த வழிகாட்டுதலால் பாலைவனமாக இருந்த அரேபியா
சோலைவனமாக மாறிய வரலாறு உலகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது.
செல்வச் செழிப்பில் சவுதி அரேபியா
தற்போது சவுதி அரேபியா என்று சொல்லப்படுகின்ற நபிகளார் வாழ்ந்த அரபு தேசம் பேரித்தம்பழம்,
கோதுமை ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் பூமி ஆகும்.

அன்றைய அரபுகள் பேரிச்சை, கோதுமை ஆகியவற்றின் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள்வாழ்வை அமைத்து இருந்தனர். விவசாயம் செழித்தால் தான் அரபு மண்ணில் வாழ்பவர்களுக்கு அன்றாட உணவு கிடைக்கும், அண்டை நாட்டில் உள்ளவர்கள் இந்த பேரீச்சம் பழங்களையும் கோதுமைகளையும் இன்னபிற விளைச்சல் பொருட்களையும் பெற்று அதற்கு மாற்றாகத் தங்கம், வெள்ளிக் காசுகளாக அல்லது உடைகளாகக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.

அன்றைய அரபுலக தேசத்தில் பேரிச்சம்பழங்களை விவசாயம் செய்தவர்கள், தாங்கள் அறுவடை செய்கின்ற பேரீச்சம் பழங்களின் விலை நிலவரங்களை விவசாயிகளே நிர்ணயித்தார்கள். கோதுமை கிலோ எத்தனை ரூபாய் எனவும் இன்னபிற விளைச்சலுக்கு என்னென்ன மதிப்பீடு எனவும் விவசாயிகளே முடிவு செய்து சந்தையில் விற்பனை செய்தார்கள்.

இதனால் அதை விலைக்கு வாங்கிய நுகர்வோர் அவ்வப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்றவாறு
விலையை நிர்ணயம் செய்து, உயர்த்தியும் கூறுகிறார்களே! இதை ஏன் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட
தொகையை நிர்ணயிக்கக் கூடாது என்று கேட்டு நபிகளாரிடம் முறையிட்டார்கள். அப்போது
விவசாயிகளின் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த நபிகளார், அதில் விலை நிர்ணயம் செய்வதில் அரசு தலையிடாது என்ற ஒரு அறிவிப்பைச் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விற்பவருடைய உரிமைகளையும் வாங்குபவருடைய உரிமைகளையும்
கூறியுள்ளார்கள்.
ஒரு தடவை சிலர் நபியிடத்தில் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! பொருட்களுடைய விலை கூடி விட்டது.
நீங்கள் விலையை நிர்ணயம் செய்யுங்கள்’’ என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘‘அல்லாஹ் தான் உணவை விசாலமாகக் கொடுக்கக் கூடியவன். நான் ஆதரவு வைக்கிறேன். அதே நேரம் (விவசாயிகளின் விலையை நான் நிர்ணயித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும் போது உங்களில் யாரும் என்னிடத்தில் பொருளுடைய விஷயத்திலோ அல்லது உயிர் விஷயத்திலோ அநீதிக்குள்ளாகி (கியாமத் நாளில்) நீதிவேண்டி வராமல் இருப்பதை விரும்புகிறேன்’’
(நூல் – (அபூதாவூத்: 340)

உற்பத்தி செய்பவனுக்கே அதன் அருமை பெருமைகள் தெரியும். எனவே விலை நிர்ணயத்தை அவனே
முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்கள். விவசாயிகளை அரபு தேசத்தில் நிம்மதியாக வாழ விட்டதன் விளைவாக, தனது நாடு முன்னேறிவிட்டது என விவசாயிகள் மகிழ்ந்தார்கள். விவசாயிகள் மகிழ்வுடன் அறுவடை செய்தார்கள்.

செழிப்பை நோக்கி சவுதிஅரேபியா மலர்ந்தது. வரி எனும் பெயரில் வழிப்பறி செய்யாதவர் நாட்டில் உள்ள அனைவருக்கும் தரமான கல்வி, வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கும் இலவச மருத்துவ சேவை செய்வதற்கும், ஏற்றுமதியைப் பெருக்கிட தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு வழங்குவதற்கும், தேசத்தை மற்ற நாடுகளிடமிருந்து ஏற்படுகிற பிரச்சினைகளிலிருந்து காப்பதற்கும் அரசாங்க நிதியாதாரம் போதுமானதாக இருக்க வேண்டும். அரசுக் கருவூலத்தில் பொருளாதாரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். தற்காலத்தில் அரசு மக்களிடம் நிதியை எவ்வாறு திரட்டுகிறது எனப் பாருங்கள்.

· முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு வசூலிக்கப்படும் வரி.

· கலால் வரி (விற்பனைக்குரிய உற்பத்திப் பொருட்கள் அல்லது விற்பனைக்குரிய சில பொருட்களின்
மீது வசூலிக்கப்படும் வரி).

· விற்பனை வரி (வியாபார பரிவர்த்தனைகளின் மீதான வரி, குறிப்பாக விற்பனை மற்றும்
சேவைகளுக்கு விதிக்கப்படும் வரி).

· மதிப்புக் கூட்டு வரி (விற்பனை வரியின் ஒரு வகையை சார்ந்தது)

· குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி.

· சாலை வரி, சுங்க வரி, வாகனக் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவை.

· பரிசுப்பொருட்கள் மீதான வரி.

· இறக்குமதி மீதான வரிகள், சுங்க வரி விதிப்பு

· பெருநிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி (ஒருங்கிணைந்த நிறுவனங்கள்).

· சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி

· தனி நபர் வருமான வரி (தனிநபர்கள், இந்தியாவில் இந்து கூட்டுக் குடும்பம் போன்ற குடும்பங்கள்,
இணைக்கப்படாத சங்கங்கள், போன்றவை மீது விதிக்கப்படும் வரி).

· உணவுப் பொருட்கள் மீதான வரி. உணவகத்தில் சென்று சாப்பிடும் பொருட்களுக்கும் வரி.

இத்தனை வகையான வரிகளின் பெயரால் செல்வம் சேர்க்கும் ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தால்
வழிப்பறி செய்யப்படுகிறான். அரசாங்கம் குடிமக்கள் மீது இத்தனை வகையான வரிகளைத் திணிப்பதால் தான் நாட்டில் வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். தனது சரியான பொருளாதார நிலையை வெளியுலகத்திற்குச் சொல்லாமல் மூடி மறைக்கிறார்கள்.

இதற்குத் தீர்வு பலதரப்பட்ட வரி என்ற பெயரால் மக்களிடம் வழிப்பறி செய்வதை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக, செல்வச் செழிப்புள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வரிவசூல் செய்து விட்டால் மிகச்சரியான முறையில் ஒவ்வொரும் தன்னுடைய வருமானத்தைச் சரியான முறையில் கணக்குக் காட்டி வரி கட்டுவார்.

இதன் முன்னோடியாக விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்
மக்களிடத்தில் பொருளாதார அளவில் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியவர்களிடம் ஸகாத் என்ற
பெயரில் சொத்தில் இரண்டரை சதவீத வரியைப் பெற்றார்கள்.
முஸ்லிமல்லாத மக்கள் மக்களிடம் ஜிஸியா வரி என்கிற பெயரில் நாட்டின் வளர்ச்சி நிதியாக வரி
வசூலித்தார்கள்.

ஜிஸியா வரி என்பது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று, ஏனைய முஸ்லிம் குடிமக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார்.

ஆனால், ஜிஸ்யா வரி வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் காப்பு வரி என்றும் கூறுவர்.

ஒரு அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில்
வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை
இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காகக் காவலர்களை நியமித்துக் கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் விரும்பினால் செய்யலாம்; விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.
மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக்
கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

· முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

· முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.

· முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல்
அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத்
தயங்குவர். மனரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.
ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில்
அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை
இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும்
எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை
வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி
சாத்தியமாகாது. இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.
முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது
ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு
விளைவாகும். ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துகளை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும்.
சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக
வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.
முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும்.

இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.
வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஜகாத் என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது. ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது.

பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த
வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி
விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை
வழங்கப்பட்டது. சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போதைய சூழலில் ஜிஸ்யா எனும் காப்பு வரியாக ஒரு தீனார் மட்டுமே நபியவர்களால் விதிக்கப்பட்டது.
ஆதாரம் (அபூதாவுத்: 3038)

பிறகு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியாவாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஒரு தீனார் என்பது மிக மிகச் சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் அன்றாடம் செலுத்தும் வரியை விடப் பல மடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனை வரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று
நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை
வாங்கினாலும் இந்தியக் குடிமகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விடப் பல மடங்கு
குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகை யாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது.

இதனால் நாட்டின் கருவூலம் நிறைந்தது நாட்டு மக்கள் பலன் அடைந்தார்கள். அவர்களின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது. இறந்தவருக்குப் போர்த்துவதற்குக் கூட கருவூலத்தில் நிதி இல்லாத நிலை மாறி, இறந்தவர் விட்டு சென்ற கடனுக்கே பொறுப்பேற்கும் நிலை வந்தது.
எவர் மரணிக்கும்போது கடனை வைத்து விட்டு அதை அடைக்காமல் விட்டுச் செல்கிறாரோ அல்லது அவர்திக்கற்ற மனைவி மக்களை விட்டுச் செல்கிறாரோ அவர் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்கு பொறுப்பாளன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1105)