04) வர்க்க பேதங்களை ஒழித்து கட்டியவர்

நூல்கள்: மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்

வர்க்க பேதங்களை
ஒழித்துக் கட்டியவர்
ஒன்றே குலம்!

அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் களத்தின் போது, அனைத்து மதத்தவர்களின், ஜாதிக்காரர்களின், பலதரப்பட்ட மொழி இன மக்களின், பல நிறத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ‘ஒன்றே குலம்’ என்ற வெற்றுக் கோஷத்தை எழுப்புவார்கள்.

ஆனால் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு தன் ஜாதியை, மதத்தை, இனத்தை, மொழியைச்
சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்களாகவும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்பவர்களாகவும்
நாடெங்கிலும் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு நேர் முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது சொல்லிலும் தமது ஆட்சிக் காலத்திலும் ‘ஒன்றே குலம்’ என்ற உண்மையைப் பறைசாற்றி, அனைத்துக் குலத்தவர்களையும், மதத்தவர்களையும், மொழியினரையும் சமமாக நடத்தினார்கள். அதுமட்டுமின்றி அன்றைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்பட்டவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பையும் வழங்கினார்கள்.
தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷி என்ற உயர்ந்த குலத்தவரின் குருட்டுக் கவுரவத்தை நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள்.
அடிமை இனமாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி)
அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப்
புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை
அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 3730)

மொழிவெறியை மாய்த்தவர்

மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப்பற்றும்,
மொழிவெறியும் திகழ்கின்றன.இலங்கை பற்றி எரிந்ததற்கும், இலட்சக் கணக்கான உயிர்கள் பலியானதற்கும் இந்த மொழிவெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழிவெறி தான் காரணம்.

இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து
கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்)அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
நூல்: (முஸ்லிம்: 3440)

இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம், மொழி உணர்வு! என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழிவெறியின் குரல்வளையைப் பிடித்துத் திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.
எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.

உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(அஹ்மத்: 22391)

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழங்கி, அனைத்து மக்களையும் சமநிலைப்படுத்தினார்கள்.
மத உணர்வுகளை மதித்தவர் ஒரு ஆட்சித் தலைவர் என்றால் அவருக்குக் கீழ் வாழும் மக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவராக
இருக்க வேண்டும். எல்லா மதத்தவர்களும் தங்களுடைய மதக் கோட்பாடுகளை உயர்வாகக் கருதுவார்கள்.அவர்களின் மத சுதந்திரத்தைப் பறிப்பதோ தனது மத நம்பிக்கையை அவர்களிடம் திணிப்பதோ கூடாது. அதுமட்டுமில்லாமல் அனைத்து மதத்தவர்களுக்கும் சமமாக உரிமை வழங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை அள்ளிக் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு தலைவன் செயல்பட வேண்டும். தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை, மற்ற மதத்தவர்களை பின்னுக்குத் தள்ளக் கூடிய பாரபட்சம் இருந்துவிடக்கூடாது. அடுத்த மதத்தவர்களை அடக்குமுறையில் ஆழ்த்தக்கூடாது.

அனைத்து மதத்தவர்களும் நிம்மதியாக எந்த ஆட்சித் தலைமையின் கீழ் வாழ்கிறார்களோ அந்த ஆட்சிக்குச் சொந்தக்காரனே தலைசிறந்த அரசனாவான். அதற்குச் சிறந்த முன்னோடி நபிகள் நாயகம் ஆவார்கள். முஸ்லிமல்லாதவர்களுக்கு வாரி வழங்கிய முஹம்மது நபி!

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள்
அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச்சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார்.
நூல்: (முஸ்லிம்: 4629)

மதங்களைக் கடந்த மனிதநேயம்

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல்: (திர்மிதி: 1866)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)யும் ஒருவர்.அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் ஸல்) அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார். இறந்தவர் வேறு மதத்தவர்! காதிஸிய்யா எனும் இடத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் ஸஃது (ரலி) ஆகிய இரு நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே அவ்விருவரும் எழுந்து நின்றார்கள். ‘இறந்தவர் வேறு மதத்தவர்’ என்று அவ்விரு நபித்தோழர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்விருவரும் பின்வருமாறு கூறினார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்’ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’ என்று கேட்டனர்.
நூல்: (புகாரி: 1313)

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி
சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டுக் குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.
உயிருடன் இருக்கும் போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த
உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு
செல்லப்படுகிறது. முஸ்லிம்களின் ஆட்சியில், அதுவும் முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாகப் பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களாக இருந்த யூதர்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை. முஹம்மதா? மூஸாவா? யார் சிறந்தவர்? முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும், யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டனர்.

அப்போது ‘அகிலத்தாரை விட முஹம்மதைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’
என்று முஸ்லிம் குறிப்பிட்டார். ‘அகிலத்தாரை விட மூஸாவைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’என்று யூதர் கூறினர். இதைக் கேட்டதும் முஸ்லிம், யூதருடைய முகத்தில் அறைந்து விட்டார். உடனே யூதர்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும், முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமை அழைத்து வரச் செய்து விசாரித்தனர். அவரும் நடந்ததைக் கூறினார்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மூஸாவை விட என்னைச் சிறப்பித்துக் கூறாதீர்கள். ஏனெனில் நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாவார்கள். அவர்களுடன் நானும்மூர்ச்சையாவேன். நான் தான் முதலில் மூர்ச்சையிலிருந்து விழித்தெழுவேன். ஆனால் அப்போது மூஸா அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் மூர்ச்சையடைந்து எனக்கு முன் விழித்தெழுந்தாரா? அல்லது அல்லாஹ் யாருக்கு விதிவிலக்கு அளித்தானோ அவர்களில் அவரும் ஒருவரா? என்பதை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 2411, 2412, 308, 6517)

யூதரும் முஸ்லிமும் தகராறு செய்த போது தனது மதத் தலைவரும், நாட்டின் அதிபருமான நபி (ஸல்)
அவர்களை முஸ்லிம் உயர்த்திப் பேசுகிறார். அவருக்குச் சற்றும் சளைக்காமல் அது போன்ற வார்த்தையை யூதரும் பயன்படுத்துகிறார். தனது நாட்டின் அதிபராக உள்ள நபிகள் நாயகத்தை விட, தனது மதத்தின் தலைவராகக் கருதப்பட்ட மூஸா நபியை அவர் சிறப்பித்து தைரியமாகக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமுக்கு உள்ள உரிமை தனக்கும் உண்டு என்று அவர்
நினைக்கும் அளவுக்கு நேர்மையான ஆட்சி அமைந்திருந்ததால் தான் இவ்வாறு அவர் கூற முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விசாரித்து விட்டு, பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் அனுசரித்து அல்லது அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக உடனே முஸ்லிமை அழைத்து வரச் செய்கிறார்கள்.

முஸ்லிம் தான் குற்றம் செய்திருக்கிறார் என்பது உறுதியானவுடன் தன்னை மூஸா நபியை விட சிறப்பித்துக் கூற வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது மட்டுமின்றி, ஒரு வகையில் மூஸா நபி என்னை விடச் சிறந்தவராக இருக்கிறார் எனக் கூறி யூதருடைய மனதையும் குளிரச் செய்கிறார்கள்.
மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிச் சொல்லிவிட்டு…

பசு அரசியல்

சமஸ்கிருத மொழித் திணிப்பு

யோகாசனம் செய்ய நிர்ப்பந்திப்பது

வந்தே மாதரம் சொல்லத் தூண்டுவது

பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை

மக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறித்தல்

இதுபோன்ற காரியங்களில் நபிகளார் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
ஒவ்வொரு மதத்தவர்களும் அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு வாழலாம். அதன்படி வணக்க
வழிபாடுகளை நிறைவேற்றலாம். திருமணம், விவாகரத்து உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்என்ற நிலை தான் அவர்களது ஆட்சியில் இருந்தது.