மனிதன் அல்லாஹ்வுக்கு உதவி செய்ய முடியுமா?
திருக்குர்ஆன் 22வது அத்தியாயம் 40வது வசனத்தில் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் அல்லாஹ்வுக்கு எப்படி உதவி செய்ய முடியும்?
பி.இதாயத்துல்லாஹ், மதுரவாயல்.
இதுதான் நீங்கள் குறிப்பிடும் வசனம்:
எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
இதே கருத்தில் பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.
அல்லாஹ் யாரிடமும் எந்த தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. முழுக் குர்ஆனும் இந்தக் கொள்கையைத் தான் போதிக்கிறது. அவன் தான் உதவக் கூடியவன்; யாரும் அவனுக்கு உதவிட முடியாது.
ஆயினும் சில வசனங்களில் அல்லாஹ்வுக்கு மற்றவர்கள் உதவுவது போல் அமைந்துள்ளன. இது போன்ற வசனங்களை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கல்விக் கூடத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர், மாணவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தால் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆர்வமூட்டுவார். நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் அது எனக்குச் செய்யும் உதவியாகும் என்பார். நல்ல மதிப்பெண் வாங்கியவருக்கு பரிசு வழங்குவேன் என்றும் கூறுவார்.
ஒரு மாணவன் அதிக மதிப்பெண் வாங்கினாலும், வாங்காமல் போனாலும் அது அந்த மாணவனுக்குத் தான் நல்லதாக கெட்டதாக அமையும். ஆசிரியருக்கு இதனால் அறிவு அதிகரிக்காது. ஆனாலும் இப்படி கூறுவதால் ஆசிரியரை மகிழ்விக்கவும் அவர் அளிக்கும் பரிசுகளைப் பெறவும் மாணவன் நன்றாகப் படிப்பான்.
எனக்காக நீ நன்றாகப் படி என்று ஒரு தாய் மகனிடம் கூறுவாள். இதனால் அந்தத் தாயின் அறிவு அதிகரிக்காது. மகனின் அறிவுதான் அதிகரிக்கும்.
ஆனாலும் இப்படிச் சொல்லும் போது நமது நன்மைக்காக நாம் படித்தாலும் நமது தாயை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று எண்ணி முழு கவனத்துடன் படிப்பான்.
இது போல் தான் அல்லாஹ்வுக்கு உதவுதல் என்பதும் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு உதவுங்கள் என்று கூறி விட்டு அல்லாஹ் சொல்லும் காரியங்கள் மனிதனுக்கு உதவும் காரியங்களாகவே உள்ளன. போர்க்களத்தில் கலந்து போரிட்டு வெற்றி பெற்றால் அதனால் கனீமத் எனும் லாபமும், புகழும் மனிதனுக்குக் கிடைக்கிறது. இதனால் அல்லாஹ்வுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
நாம் போரில் பங்கெடுப்பதால் அல்லாஹ் கூலி தருவான்; அதை அவனுக்குச் செய்த உதவியாக எடுத்துக் கொள்வான்; நமது தியாகம் வீண் போகாது. மாறாக அல்லாஹ் தனக்குச் செய்த உதவியாகக் கருதி மகத்தான கூலியை வழங்குவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். இதனால் மனிதன் நற்காரியங்களை அதிக முனைப்புடன் செய்வான்.
இதற்காகத் தான் அல்லாஹ் இப்படி கூறுகிறான். அவனுக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதற்காக அல்ல.